மூன்று வேளை சாப்பிட நேரம் இருக்கிறது...... ஆனால்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 22, 2023

மூன்று வேளை சாப்பிட நேரம் இருக்கிறது...... ஆனால்?

கோ.‌ஒளிவண்ணன்

60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் காடுகளில், மனிதர்கள் மற்ற உயிரினங்களை ஒப்பிடும்போது அப்படி ஒன்றும் மேலானவர்களாக இருந்ததில்லை.‌ சிங்கம், புலி போன்று வலிமையானவர்கள் அல்ல. மான், சிறுத்தை போல வேகமாக ஓடக் கூடியவர்களும் அல்ல. யானை போலப் பெரும்பலம் கொண்டவர்களும் அல்ல. ஒட்டகச்சிவிங்கி போல உயரமானவர்களும் அல்ல. காக்கை, குருவி போலப் பறக்கவும் தெரியாது.

காடுகளில் வேட்டையாடி திரிந்தவன், ஓர் இடத்தில் தங்கி விவசாயம் செய்து, பிறகு குழுக்களாக, ஊர்களாக, நாடுகளாக அமைப்புகளை உருவாக்கிக் கொண்டதும் பிறகு அறிவியல் வளர்ச்சி தொழில் புரட்சி எனப் பல முன்னேற்றங்களைக் கண்டும் என படிப்படியாக உயர்ந்து மனிதன் இன்றைக்கு உன்னத நிலைக்கு வந்திருக்கிறான்.  

மனிதன் மற்ற உயிரினங்களிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டு, பின் அவற்றையெல்லாம் அடக்கி, ஆதிக்கம் செய்யக்கூடிய நிலைக்கு வருவதற்கும், இயற்கை சீற்றங்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கும் மிக முக்கிய காரணங்களில் ஒன்று, அவன் தான் கண்ட, அறிந்த, பெற்ற செய்திகளை தன்னுடைய இனத்தாருடன் உடனுக்குடன் பகிர்ந்து கொண்டது. மற்ற உயிரினங்களுக்கு அத்தகைய ஆற்றல் இல்லாத காரணத்தினால் அவை பின்தங்கி விட்டன.

செய்திகளைப் பகிர்ந்து கொள்வதற்கு இரு முக்கிய வழிகளைப் பயன்படுத்தினான். ஒலிகள் எழுப்பியது, பின் அதை ஒழுங்கமைத்து மொழியாக்கிக் கொண்டான். பாறைகளில் கிறுக்கி, பின் ஓவியமாகத் தீட்டி, எழுத்துக்களை உருவாக்கி தன் தலைமுறைக்கும் பிற தலைமுறைகளுக்கும் செய்திகளைக் கொண்டு சேர்த்தான்.

செப்பு பத்திரம், கல்வெட்டு, ஓலைச்சுவடி என பல்வேறு பரிணாமங்களைக் கடந்து வந்த போதும், அடிப்படையில், தன்னுடைய அனுபவ அறிவை, கற்பனை வளத்தை எண்ண ஒட்டத்தைப் பிறருக்குப் பயனளிக்கும் வகையிலோ அல்லது தன்னுடைய சாதனைகளைப் பறைசாற்றிக் கொள்ளவோ அவை பயன்பட்டது.

மனிதக் குல வரலாற்றில் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் அதுவும் ஒட்டுமொத்த வாழ்வினைப் புரட்டிப்போட்ட ஒன்று என்று சொன்னால் அது 1450 ஆம் ஆண்டு ஜெர்மனியில் குட்டன்பார்க் அவர்கள் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தது. இந்திய மொழிகளில் முதலில் அச்சடிக்கப்பட்டது என்ற பெருமை தமிழ் மொழி கொண்டுள்ளது.

இந்த 500 ஆண்டுகளில் எத்தனையோ மாற்றங்களை அச்சு இயந்திரம் கண்டுள்ளது. ஈயத்தில் வாக்கப்பட்ட அச்சு எழுத்துக்களைக் கொண்டு அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் என்ற நிலையிலிருந்து இன்றைக்கு நாம் எங்கோ வந்து அடைந்திருக்கிறோம்.

ஒரு புத்தகத்தை உருவாக்கப் பல மாதங்கள் ஆகும் என்ற நிலைமை மாறி ஒரே வாரத்தில் ஏன் ஒரே நாளில் உருவாக்கக்கூடிய அளவிற்கு இன்றைக்குத் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. மணிக்கு ஆயிரக்கணக்கில் அடித்துச் தரக்கூடிய ஆப்செட், வெப் போன்ற இயந்திரங்கள் உருவாகின. கணினி தொழில்நுட்பத்தின் வாயிலாக அச்சு கோர்க்கும் கலை வந்த போது புத்தகம் உருவாக்குவது எளிமையாகி விட்டது. இன்றைக்கு அதையும் தாண்டி நீங்கள் பேசுங்கள் நான் எழுத்தாக உருவாக்கிக் கொள்கிறேன் என்கிற நிலையும் வந்துவிட்டது.

உலகின் ஒரு மூலையில் அடிக்கப்படும் புத்தகம் எந்த ஒரு இடத்திலும் நொடியில் தரவிறக்கம் செய்து கொள்ளக் கூடிய வகையில் கிண்டில் புத்தகங்கள் வந்தன.

டிஜிட்டல் புத்தகங்களின் வேகமான வளர்ச்சி, 500 ஆண்டுகள் நம்மோடு பயணித்த அச்சு புத்தகங்களின் கதி என்னவாகும் என்று யோசிக்கப்பட்டது. ஆனால் அப்படி ஒன்றும் நிகழாமல் இன்றைக்கு டிஜிட்டல் புத்தகத்தோடு வெற்றிகரமாக உலா வருகிறது அச்சு புத்தகங்கள். அதற்கு மிக முக்கிய காரணம் ஒரு புத்தகத்தைக் கையில் வைத்திருக்கும் போது, கைக்குழந்தையோ, அல்லது மனம் விரும்பிய ஒருவரைத் தாங்கி இருக்கும் உணர்வு நமக்குத் தருகிறது.

நவீனத் தொழில்நுட்பம் காரணமாக அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் உலகில் எந்த இடத்திலிருந்தாலும் உடனடியாக அச்சடித்துத் தரக்கூடிய வகையில் வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

சமூக வலைத்தளங்கள் இன்றைக்கு நம்மைப் பெருமளவுக்கு ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. தொடக்கத்தில் ஒருவருக்கு ஒருவர் உரையாடல் நடத்திக் கொள்ளவும், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையில் உருவானவை இன்று தங்கள் எண்ணங்களை, அனுபவங்களைக் கட்டுரை, கவிதை, கதை, படங்கள் என் பல வகைகளில் பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் வகையில் மாறி உள்ளது. பதிவிட்ட ஒரு சில நிமிடங்களிலேயே பல்லாயிரக்கணக்கானோரை சென்று அடையக் கூடிய ஆற்றல் சமூக வலைத்தளங்களுக்கு உள்ளது.

இன்றைக்கு நம் முன்னே உள்ள கேள்வி புத்தகம் படிப்பதற்குக் கணிசமான நேரத்தை ஒதுக்குகிறோமா என்பதுதான். ‘எனக்கு நேரமே இல்லை’ என்று சொல்பவருக்கு நாம் எழுப்பக் கூடிய கேள்வி, வயிற்றுப் பசிக்கு மூன்று வேளையும் தவறாமல் சாப்பிட நேரம் இருப்பது போல, அறிவு பசிக்கு நேரம் ஒதுக்குவது முக்கியம். இல்லையென்றால் மீண்டும் நாம் அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் காடுகளிலே திரிந்த அந்த வளர்ச்சி பெறாத மனித இனத்தின் நிலைக்குத் தள்ளப்படுவோம்.


No comments:

Post a Comment