வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் (27.4.1852 - 28.4.1925) தியாகராயர் பற்றி தலைவர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 22, 2023

வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் (27.4.1852 - 28.4.1925) தியாகராயர் பற்றி தலைவர்கள்தியாகராயர் எப்போதும் தன்னிச்சையான குணமுடையவர். எவருடைய விருப்பு வெறுப்புகளையும் பொருட்படுத்தாது தமக்குப் பட்ட கருத்துக்களைத் தைரியத்துடன் கூறுபவர் 

- டாக்டர் சி. நடேசனார்.

('இந்து' நாளிதழ் -29.4.1925-  பக்கம் 4, தியாகராயர் மறைவு குறித்த இரங்கற் பேச்சு.) 

***

“தியாகராயர் ஒரு பெரிய மனிதர். நம் தலைமுறையில் வாழ்ந்து வரும் பெரிய மனிதர்களிலெல்லாம் பெரிய மனிதர். இன்றைய நவீன இந்தியாவில் வாழும் மனிதர்களையெல்லாம் இவருடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தியாகராயரே அவர்களையெல்லாம் விடப் பெரிய மனிதராக விளங்குகின்றார். முதலாவதாக அவர் தம்மிடம் அண்டிக்கிடந்த பெரும்புகழை அறியாதிருந்தார். இரண்டாவதாக அவர் தம்மை எவரும் பெரிய மனிதர் என்று நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஒரு சிறிதும் கொண்டிராமல் இருந்தார். சாதாரண ஒழுக்கமுடைய குடிமகனாகவே பணியாற்றி வந்தார். அவர் ஒருபோதும் கர்வமோ ஆணவமோ கொண்டதில்லை. 

- பனகல் அரசர் 

தியாகராயர் மறைந்த போது ஆற்றிய இரங்கல் உரை. 

‘இந்து' நாளிதழ் 29.4.1925) 

***

 “தியாகராயருடன் பல ஆண்டுகளாக மிக நெருங்கிப் பழகியவன் யான். அவரைப் போன்ற ஒரு உண்மை நண்பரையோ அல்லது உறுதுணையாளரையோ இதுவரை நான் கொண்டிருந்ததில்லை” 

- ராஜா சர். அண்ணாமலை செட்டியார் 

(தென்னிந்திய வர்த்தகக் கழகம் வெள்ளிவிழா மலர்)

***

“1921ஆம் ஆண்டு பொல்லாத ஆண்டு! தொழிலாளர் கதவடைப்பு! வேலை நிறுத்தம்! ஆறுமாத வேலை நிறுத்தம்! லார்டு வில்லிங்டன் நீலகிரியினின்றும் புறப்பட்டார். சென்னை என்ன பேசிற்று ? தொழிலாளர் தலைவர்களை நாடு கடத்த லார்டு வில்லிங்டன் வந்திருக்கிறார் என்று பேசிற்று.நாடு கடத்தல் செயலில் நடந்ததா? இல்லை. ஏன்? தியாகராயர் தலையீடு. ‘மலையாளக் குழப்பம் - ஒத்துழையாமை இவைகளிடையே நாடு கடத்தல் நிகழ்ந்தால் சென்னை என்ன ஆகும்? மாகாணம் என்ன ஆகும்? மந்திரிமார் பதவியினின்றும் விலகுதல் நேரினும் நேரும்‘ என்று செட்டியார் எடுத்துரைத்தாரென்றும், அதனால் லார்டு வில்லிங்டன் மனமாற்றமடைந்து நாடு கடத்தலை எச்சரிக்கை யளவில் நிறுத்தினாரென்றும் சொல்லப்பட்டன. இவைகளை எனக்குத் தெரிவித்தவர் டாக்டர் நடேச முதலியார், தியாகராய செட்டியாரைக் கண்டு நிகழ்ச்சிகளைக் கேட்டேன். ‘நீர் நல்லவர். உமது கட்சி வேகமுடையது. வேகம் அந்தரங்கத்தை வெளியிடவும் தூண்டும். ஆதலின் அந்தரங்க சம்பாஷணையை வெளியிடுதல் நல்லதன்று’ என்று கூறினார். ‘144 பலருக்கு வழங்கப்படுகிறது; எனக்கு வழங்கப்படுவதில்லை.காரணம் ‘நாடு கடத்தும் நாட்டம் என்று சொல்லப்பட்டது. அந்நாட்டத்தை நீங்கள் மாற்றி விட்டீர்கள். நீங்கள் எனக்கு நன்மை செய்யவில்லை! என்றேன். ‘நாடு கடத்தலால் உமது வாழ்வே தொலையும்; உமது எதிர்கால வாழ்க்கையைக் கருதியே யான் தடை செய்தேன்’ என்று செட்டியார் அன்று உரைத்தது எனக்கு மகிழ்ச்சியூட்டவில்லை.” 

(திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள். பக்கம். 446)


No comments:

Post a Comment