பிற இதழிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 26, 2023

பிற இதழிலிருந்து...

சமூகநீதி காவலருக்கு சென்னையில் சிலை

இன்று இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத் தப்பட்ட இளைஞர்கள் மத்திய அரசாங்க வேலை வாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை பெற் றுள்ளார்கள் என்றால், அதற்குக் காரணம் மண்டல் கமிஷன் அறிக்கையும், அதை அமலுக்கு கொண்டு வந்த முன்னாள் பிரதமரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் பிதாமகனும், சமூக நீதி காவலருமான மறைந்த வி.பி.சிங்தான்.

இந்தியாவில் ஆரம்ப காலத்தில் தாழ்த்தப் பட்ட பழங்குடியினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சமுதாயத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்தவித இட ஒதுக்கீடும் அமலில் இல்லை. தமிழ்நாட்டில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., கி.வீரமணி உள்பட பல தலைவர்கள் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் ஏராளமான தலைவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடி வந்தனர்.

இதன் அடிப்படையில், 1979-ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது, முன்னாள் பீகார் முதலமைச்சர் பி.பி.மண்டல் தலைமையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆராய்ந்து அறிக்கை தர ஒரு ஆணையத்தை அமைத்தார். 'மண்டல் கமிஷன்' என்று இந்தியா முழுவதும் பேசப்பட்ட இந்த ஆணையம், பிற்படுத்தப்பட் டோரின் சமூக, பொருளாதார நிலை குறித்து இந்தியா முழுவதும் சென்று ஆராய்ந்து, 11 அளவு கோல்களின் அடிப்படையில் ஒரு அறிக்கையை தயாரித்து, 1980-இல் அரசிடம் தாக்கல் செய்த போது, இந்திரா காந்தி பிரதமராக இருந்தார்.

இந்த ஆணையம் ஆறு பரிந்துரைகளை செய்து இருந்தது. முதல் 2 பரிந்துரைகள், பிற் படுத்தப்பட்டோருக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதாகும். பிற்படுத்தப்பட்ட மக்கள் 52 சதவீதம் இருந்தாலும், 27 சதவீதமே கொடுக் கப்பட்டு இருந்தது. இந்த அறிக்கை இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி காலத்தில் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. 1989-இல் நடந்த தேர்தலில் வி.பி.சிங் பிரதமரானவுடன், 1990-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ஆம் தேதி பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் ஒரு புரட்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு, அடுத்த வாரமே அதற்கான அரசாணையையும் பிறப்பித்து, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றினார்.

ஆரம்பத்தில் வேலைவாய்ப்பில் மட்டும் அளிக்கப்பட்டு வந்த 27 சதவீத இட ஒதுக்கீடு, அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசில் கல்வி யிலும் வழங்க அரசியல் சட்டம் திருத்தப்பட்டது. ராஜ குடும்பத்தில் பிறந்த வி.பி.சிங், பிறப்பால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் அல்ல. இந்த அறிவிப்பு 11 மாதங்களில் அவரை பதவியிழக்க வைத்துவிட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒளிவிளக்கான வி.பி.சிங்குக்கு எந்த மாநிலமும் அளிக்காத கவுரவமாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது, எல்லோருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை அளித் துள்ளது. வி.பி.சிங்கின் மனைவியும், குடும்பத்தின ரும் மனம் நெகிழ்ந்து நன்றி தெரிவித்துள்ளனர்.

சமூக நீதிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும், அவர் இந்த பணியை தொடர வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளனர். வி.பி.சிங்தான் சென்னையில் உள்நாட்டு விமான நிலையத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்துக்கு பேரறிஞர் அண்ணா பெயரையும் சூட்டி பெருமை சேர்த்த ஒப்பற்ற தலைவர். இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு வாழ்வளித்த வி.பி.சிங்குக்கு, நன்றி மறவாத தமிழ் நாடுதான் பெருமை சேர்த்துள்ளது.

நன்றி: 'தினத்தந்தி'  தலையங்கம் 26.4.2023


No comments:

Post a Comment