அய்.அய்.டி.களில் ஜாதியப் பாகுபாடு விவாதிக்கப்படவேண்டியது அவசியம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 25, 2023

அய்.அய்.டி.களில் ஜாதியப் பாகுபாடு விவாதிக்கப்படவேண்டியது அவசியம்

மும்பை அய்அய்டி யில் வேதியியல் பொறியியல் மாணவர்  தர்சன் சோலங்கி பிப்ரவரி 12, 2023 அன்று தற்கொலை செய்துகொண்டார். அவர் ஒரு தாழ்த்தப் பட்ட சமூக மாணவர்.அந்தக் கல்வி நிறுவனம் அது பற்றி விசாரணை நடத்த 12 பேர் அடங்கிய ஒரு குழுவை அமைத்து அந்தக் குழுவும் மார்ச் 2 அன்று தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.அந்த அறிக்கை, தர்சன் சோலங்கி பல பாடங்களில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் பார்க்கும்போது அவரது செயல் திறன், குறிப்பாக  கடந்த செமஸ்டரின் இரண்டாவது பாதியில், சீர்கேடு அடைந்திருப்பது தெரியவருகிறது என்றும், தர்சனின் சகோதரியின் கூற்றைத் தவிர, அவர் அய்அய்டியில் இருந்தபொழுது ஜாதி அடிப் படையிலான பாகுபாடு  எதையும் எதிர்கொண்டதற் கான நேரடி ஆதாரம் எதுவும் இல்லையென்றும் தெரிவித்தது.

ஒரு தொடர் பாதிப்பு

ஜாதியப் பாகுபாடு  என்பது நிரூபணம் காட்ட அறிவியல் பாடங்கள் அல்ல.அதை ஆதாரங்களோடு  நிரூபிப்பது சவாலானது.ஆனால் ஆதாரங்களை நிரூ பிக்கச் சரியான வழிமுறைகள் இல்லாததனாலேயே, ஜாதியப் பாகுபாடு  எதுவும் இருக்கவில்லை என்று மறுக்கமுடியாது. 

ஓரங்கட்டப்படுவது பற்றி அறியும் பொழுது, பாதிக்கப்பட்டவர்களிடம் அனுதாபம் காட்டுவது  வாடிக்கையாக இருக்கிறது. அதைப் புரிந்துக் கொள் ளலாம். ஆனால் அனுதாபமே ஜாதியப் பாகுபட்டின் பல வடிவங்களை நீர்த்துப்போகச் செய்துவிடக்கூடாது. பாதிக்கப்பட்ட பலருக்கு தேவைப்படுவது அனுதா பமோ அல்லது ஒத்தடம் கொடுக்கும் ஆதரவோ அல்ல. எது தேவை என்றால் அவர்கள் பக்கம் நின்று அவர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பதே. ஏனென்றால் ஜாதியப் பாகுபாடு என்பது காயப்படுத்தும் கடுமையான வார்த்தைகளால் ஒருவரை வசைபாடும் ஒற்றை நிகழ்வல்ல. அது அடுக்கடுக்காய்,தினம் தினம் ஊட்டப்படும் வன்மம். அது மெல்ல மெல்ல  'நாம்' மற்றும் 'அவர்கள்' என்ற கசப்பான சூழலை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வன்மம் மென்மையான, வெளிப்படை யாக அவ்வளவு பாதிப்பில்லாதது போன்ற தோற்ற முள்ள பல வடிவங்களை எடுக்கிறது. அது கேலி கலந்த ஒரு புன்னகையாக, ஒரு கண் சிமிட்டலாக, கையால் காட்டப்படும் ஒரு சைகையாக அல்லது வெறுமனே பேசாமல் இருப்பது என்று பல வடிவங் களில் வெளிப்படுத்தப்படுகிறது. ஜாதிய வன்மத்தைப் பற்றி விவாதிக்க வேண்டுமென்றால் முதலில் 'மெரிட்' என்றழைக்கப்டும்  'தகுதி, திறமை'' பற்றி விவாதித்தாக வேண்டும். ஏனென்றால் தகுதி, திறமை என்ற வார்த் தைகளில் புதைந்து கிடக்கும் தவறான சிந்தனைகள் தான் ஜாதியப் பாகுபாட்டிற்கு உரிமம் வழங்குகிறது.

'தி டிரனி ஆஃப் மெரிட்' என்ற தனது நூலில் அரசியல் தத்துவமேதை மைக்கேல் சாண்டல், சமூக நேர்மையாக சித்தரிக்கப்படும் 'மெரிடோகிரசி' என்ற 'தகுதி, திறமை'  பற்றிக் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார். அகம்பாவத்தால் மேல்தட்டு மக்கள்  சிலர் அழிந்துபோவதற்கும், அரசியலில் பலர் அவ மானத்தைச் சந்திப்பதற்கும் இந்த மெரிடோகிரசி சிந்தனைதான் இயற்கையானக் காரணமாக இருக்கிறது என்பது அவரது வாதம்.இப்படிச் சொல்வதால் அய் அய்டி களில் படிக்கும் ஒவ்வொரு உயர்ஜாதி மாண வனும் ஜாதியப் பாகுபாட்டைக் காட்டுவதாகவோ அல்லது ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட ஜாதி மாணவனும் பாதிக்கப்படுவதாகவோ கூறுவது ஆகாது. ஆனால் சில உயர் ஜாதி அய்அய்டி மாணவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ தகுதி, திறமை ஆணவத்தின் அடை யாளமாக, சாண்டல் கூறுவதுபோல் தாங்கள் பெற்ற கூடுதலான மதிப்பெண்களை  மனதில் வைத்துக் கொண்டு மற்றவர்களைத் தாழ்வாகப் பார்ப்பதைத் தங்களது குணமாகக் கொண்டுள்ளனர். இது மேல்தட்டு வர்க்கத்தினர் பின்தங்கியவர்களை இகழ்வாகப் பார்ப்பது போலத்தான். இவர்களது இப்படிப்பட்ட அணுகுமுறை இந்தக் கல்வி அமைப்பு வழங்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் பின்னால் இருப்ப வர்களின் சமூக அங்கீகாரத்தையும் கவுரவத்தையும் தகர்த்துவிடுகிறது.

படிநிலை சமத்துவமின்மையின் வேறுபாடுகளும், அதனால் ஒருவரின் ஆற்றலின் மீது உருவாகும்   பாகுபாட்டுப் பார்வைகளும் அய்அய்டி களில் தகுதி, திறமை யின் மேல் பூச்சாக படிந்துவிடுகிறது.

அய்.அய்.டி. வளாகத்தில்

ஒருவர் அய்அய்டி வளாகத்தில் நுழைந்தவுடன், தெளிவாக எல்லைக் கோடுகள் போடப்பட்ட படி நிலைப் பகுதிகள் அவரது கண்களில் தென்படும். இதில் முதல் படிநிலை வேறுபாடு நீங்கள் பட்டப்படிப்பு மாணவரா அல்லது முதுகலை மாணவரா என்பதுதான். இவர்கள் ஒருவரோடு ஒருவர்  ஒன்றிணைந்து உற வாடுவது அபூர்வமே. ஏனென்றால் பட்டப்படிப்பு மாணவர்கள் முதுகலை மாணவர்களைவிடத் தங் களை உயர்வானவர்களாகக் கருதிக்கொள்வதுதான். (முதுகலை மாணவர்கள் நுழைவுத் தேர்வு மூலம் அய்அய்டியில் சேர்ந்தவர்களல்ல) பட்டப்படிப்பு மாணவர்களிடம் அவர்கள் நுழைவுத் தேர்வில் பெற்ற 'ரேங்க்' தான் அவர்களது திறமைகளின் அளவுகோலாக அவர்கள் மனங்களில் பச்சை குத்தப்பட்டுள்ளது. ஒருவரின் பிறப்பு எப்படி ஒரு விபத்தோ, அதேபோல் ஒரு அய்அய்டி மாணவருக்கு ஒதுக்கப்படும் துறையும் அவரது ரேங்கினால் ஏற்பட்ட விபத்தே.இந்தத் துறை பிறகு அவரின் தகுதி,திறமை என்ற ஆவியின் தனித்த அடையாளமாக ஆகிவிடும்.

(வளரும்)

Authors: Rajesh Golani and  Rajendran Narayanan

நன்றி :  The Hindu 22-3-2023

தமிழில்: சு.பழநிராசன்


No comments:

Post a Comment