அய்.ஏ.எஸ். அதிகாரிகள் ஒரு நாள் ஊதியம் வழங்குகின்றனர் சென்னை, மார்ச் 12 நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' திட்டத்துக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்க உள்ளதாக தமிழ்நாடு கேடர் அய்ஏஎஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மேனாள் மாணவர்கள் மூலம் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' திட்டத்துக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்க உள்ளதாக தமிழ்நாடு கேடர் அய்ஏஎஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன் மூலம் மார்ச் மாதத்துக்கான ஒரு நாள் ஊதியம் அரசுக்கு அளிக்கப்பட உள்ளது.
நம்ம ஸ்கூல் திட்டம்
மேனாள் மாணவர்கள்,உள்ளூர் சமூகம் மற்றும் நிறுவனங்கள் ஆகியவை அரசுடன் இணைந்து செயலாற்றுவதற்கான தளத்தை உருவாக்குவது 'நம்ம ஸ்கூல்' திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் ஆகிய இரு தரப்பின் பங்கேற்பையும் பங்களிப்புகளையும் பெற்று அவற்றை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி தரமான கல்வியை வழங்குவதற்கான ஒரு தளத்தை உருவாக்க இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
அதேபோல, மேனாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியையும் உடன்பயின்ற நண்பர்களையும் தங்களுக்குக் கற்றுத் தந்த ஆசிரியர்களை தொடர்பு கொள்ளவும் இந்தத் திட்டம் உதவும்.
கூடுதல் திறன் வளர்ப்பின் அவசியம்
கல்வியின் தரம் என்பது பள்ளியின் உள்கட்டமைப்பு முதல் ஆரோக்கியம், சுகாதாரம், ஊட்டச்சத்து, கற்பித்தல், விளையாட்டு மற்றும் பண்பாடு, பாடத்திட்டம் சாரா செயல்பாடுகள் என்பது வரை பரந்து விரிந்துள்ளதாகும். நாளுக்கு நாள் நவீனமாகிக் கொண்டே செல்கின்ற, மாறிக்கொண்டே இருக்கின்ற உலகின் சவால்களை எதிர் கொண்டு வெற்றிபெற, கல்வி கற்பவர்கள் கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். இதைக் கருத்தில்கொண்டு, நம்ம ஸ்கூல் திட்டம் தொடங்கப்பட்டது.
செயல்பாடுகள் எப்படி?
அரசுப் பள்ளிகளில் பயின்று, தற்போது பல்வேறு நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் மேனாள் மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள் வழங்கக்கூடிய நிதியின் மூலம் அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அனைத்தையும் செய்யப்படும்.
அதேபோல சமூக அக்கறை கொண்ட தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி (சிஎஸ்அய்ஆர்) மூலம் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்கலாம்.
தத்தெடுப்பதன் மூலம், பள்ளிகளின் சுற்றுச்சுவர் அமைத்தல், வர்ணம் பூசுதல், நவீன கழிப்பறைகள், சுகாதாரமான குடிநீர் வசதி, தரமான ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற கட்ட மைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியும்.
அண்மையில் இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.5 லட்சம் நன்கொடையை வழங்கினார்.
இந்த நிலையில், ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' திட்டத்துக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்க உள்ளதாக தமிழ்நாடு அய்ஏஎஸ் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் தமிழ்நாடு அரசிடம் நம்ம ஸ்கூல் திட்டத்துக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தமிழ்நாடு கேடர் அய்ஏஎஸ் அதிகாரிகளின் மார்ச் மாதத்துக்கான ஒரு நாள் ஊதியம் அரசுக்கு அளிக்கப்பட உள்ளது. தன்னார்வ அடிப்படையில் வழங்கப்படும் நன்கொடையை, அரசு பிடித்த செய்து, நம்ம ஸ்கூல் அறக்கட்டளைக்கு அளித்துவிடுமாறு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment