ஆவடியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளுடன் புத்தகக் காட்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 12, 2023

ஆவடியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளுடன் புத்தகக் காட்சி

சென்னை மார்ச் 12  கடந்த ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் 10 நாட்கள் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு புத்தகம் விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு ஆவடியில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சியில் அதிக அளவில் விற்பனையை செய்துக்காட்ட உள்ளதாக அமைச்சர் சா.மு. நாசர் உறுதியளித்துள்ளார். 

ஆவடி மாநகராட்சியில் 2023ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சியின் ‘லோகோ’ அறிமுக நிகழ்ச்சி நேற்று (11.3.2023) நடந்தது. இதில், பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆல்பிஜான் வர்கீஸ் கலந்து கொண்டு 2023ம் ஆண்டின் புத்தகக் கண்காட்சி ‘லோகோ’ வை அறிமுகப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை  சந்தித்த அமைச்சர் நாசர் பேசியதாவது, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து வருகின்ற 17.3.2023 முதல் 27.03.2023 வரை 11 நாட்கள் ஆவடி எச்.வி.எஃப்  மைதானத்தில் நடைபெற உள்ளது. தினமும் காலை 11 மணிமுதல் இரவு 8.30 மணிவரை புத்தகக் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட் சியில் 100 அரங்குகளில் 10,000 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகவும், இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் ரூ.10 முதல் ரூ.1000 வரை புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.

மேலும், குவிக்கப்பட புத்தகங்கள் ஒரே கூரையின் கீழ் இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும்.  அனைத்து புத்தகங்களுக்கும் புத்தக விலையில் 10 சதவீதம் தள்ளுபடி செய்து வழங்கப்படும். அதோடு, 11 நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் பங்குபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ மற்றும் மாணவிகளுக்கு கண்காட்சியைக் காணவும், அவர்களுக்கான உணவுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு திருவள்ளுர் மாவட்டத்தில் முதலாவது புத்தகக் கண்காட்சி 2022இல் சிறப்பாக நடைபெற்று. அதில் சுமார் 1 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  அதை விட அதிகமாக விற்பனை செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை விட அதிக விற்பனை செய்து காட்டுவதாகவும் உறுதியளித்து பேசினார். இதில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆவடி மாநகர ஆணையர் தர்ப்பகராஜ், மேயர் உதயகுமார், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment