பகுத்தறிவாளர் கழகம், நன்னன் குடி இணைந்து நடத்திய அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா-உலக உழைக்கும் மகளிர் நாள் விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 16, 2023

பகுத்தறிவாளர் கழகம், நன்னன் குடி இணைந்து நடத்திய அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா-உலக உழைக்கும் மகளிர் நாள் விழா!

சென்னை, மார்ச் 16- தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகமும் நன்னன் குடியும் கூடி அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழாவும், உலக உழைக்கும் மகளிர் நாள் விழாவும் புலவர் மா. நன்னன் அவர்களின் நூறாம் ஆண்டில் கருத்தரங்கமும் கடந்த மார்ச் 11 ஆம் நாள் பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. 

மாதந்தோறும் இரண்டாம் சனிக்கிழமைகளில் பகுத்தறி வாளர் கழகம் கூட்டங்களை நடத்தி வருகிறது. விழாவுக்கு வந்திருந்தோரை அவ்வை நன்னன் வரவேற்றார். உலக உழைக்கும் நாளும் - அன்னை மணியம்மையாரின் பிறந்த நாள் விழாவும் கொண்டாடும் போது அவற்றுடன் புலவர் மா.நன்னன் நூற்றாண்டு கருத்தரங்கமும் நடத்துவது எவ்வாறு பொருத்தமானது என்பதை விளக்கினார்கள்.

முனைவர் நா.சுலோச்சனா

இந்நிகழ்ச்சியை தலைமை ஏற்று நடத்திய பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் முனைவர் நா.சுலோச் சனா தலைமை உரை ஆற்றினார். அவரது தலைமை உரையில், உலக உழைக்கும் மகளிர் நாள் விழாவின் சிறப்பு பற்றியும், அன்னை மணியம்மையாரின் தொண்டறம் குறித்தும் எடுத்துரைத்தார்.புலவர் மா.நன்னன் தமிழைத் தமிழாக்கவும், பகுத்தறிவு கொள்கைகளைப் பரப்புவதற்கும் பல நூல்களை எழுதி உள்ளார் என்பது குறித்துப் பேசினார். அவர் தொலைக்காட்சியில் தமிழ் கற்பித்தலைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

ஆசிரியை பூங்கொடி

அடுத்து பேசிய ஆசிரியர் பூங்கொடி,  ''அன்னை மணியம் மையாரும் உலக உழைக்கும் மகளிர் நாளும்'' என்ற தலைப்பில்  மிகச் சிறப்பாக உரையாற்றினார். தந்தை பெரி யாரை 95 ஆண்டுகாலம் வாழவைத்தவர், விடுதலை பொறுப்பாசிரியராக 32 ஆண்டு காலம் பணியாற்றியவர். நெருக்கடி நிலை காலத்தில் இயக்கத்தைத் திறம்பட நடத்திச் சென்றவர். இராவண லீலா நடத்திக்காட்டிய வீரப்பெண்மணி என்று பேசினார். உழைக்கும் மகளிர் நாள் குறித்தும் இன்றைய பெண்கள் நிலை குறித்தும் எழுச்சி உரையாற்றினார்.

தோழர் இராகிலாதேவி

புலவர் மா.நன்னன் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராக எவ்வாறு திறம்பட செயலாற்றினார் என்பது குறித்து தோழர் இராகிலா தேவி உரையாற்றினார். புலவர் மா.நன்னன் எவ்வாறு பகுத்தறிவாளராக மாறினார் என்பதை விளக்கிய இராகிலா அவர் எவ்வாறு மூவாண்டு முனைப்புத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டு தமிழ் வளர்ச்சித் துறையில் மாற்றங்கள் கொண்டுவந்தார் என்பதை தெளிவாக விளக்கிப் பேசினார்.

பேராசிரியர் சுபா அருணாச்சலம்

‘புலவர் மா.நன்னன் ஆசிரியராக...’ என்ற தலைப்பில் பேராசிரியர் சுபா அருணாச்சலம் பேசினார். புலவர் நன்னன் தாம் ஒரு பகுத்தறிவாளராக இருந்தாலும் இலக்கியத்தைப் பாடமாக நடத்தும்போது மாணவர்கள் அழுதுவிடும் அள வுக்கு உருக்கமுடன் நடத் துவார் என்பதைத் தெரிவித்தார்.ஒவ்வொரு வகுப்பிலும் 4, 5 மாணவர்கள் அழுது விடுவார் களாம். அவர் வகுப்பில் குறும்பு மாணவர்கள் கூட அமைதியாக இருந்து கற்பார்களாம் என்பன போன்ற செய்திகளைச் சுவைபட விளக்கினார்.

தோழர் ஓவியா அன்புமொழி

அடுத்து தோழர் ஓவியா அன்புமொழி ‘புலவர் மா.நன்னன் ஒரு பகுத்தறிவாளராக...’ என்ற தலைப்பில் உரையாற்றினார். புலவர் நன்னன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது பேராசிரியர், நாவலர், போன்றவர்களும் படித்தார்கள். பேராசிரியர் புலவர் நன்னனை எவ்வாறு நாத்திகராக மாற்றினார் என்ற செய்தியைத் தெரிவித்தார். தம் வாழ்நாள் முழுவதும்  பெரியார் கொள்கைகளைக் கடைப் பிடித்து வாழ்ந்து வெற்றி கண்டார் என்பதை தெளிவாக விளக்கி உரையாற்றினார்.

வேண்மாள் நன்னன்

இணைப்புரையுடன் நன்றியுரையையும் வேண்மாள் நன்னன் வழங்கினார். அப்போது புலவர் மா.நன்னன் பகுத் தறிவாளர் கழகத்தின் தலைவராக சிறப்பாக செயல்பட்டவர். ஆகையால் பகுத்தறிவாளர் கழகம் இந்த கருத்தரங்கத்தை நடத்துவது பொருத்தமானது என்று தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், நெய்வேலி ஞானசேகரன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் வா.நேரு, பகுத்தறிவு எழுத் தாளர் மன்றச் செயலாளர் செல்வ.மீனாட்சி சுந்தரம், பகுத் தறிவு ஊடகப் பிரிவுத் தலைவர் மா.அழகிரிசாமி, தமிழ்நாடு மூதறிஞர் குழு பொருளாளர் திவாகர், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் போன்றோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment