அறிய வேண்டிய அரிய தகவல் : போதிய தூக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 27, 2023

அறிய வேண்டிய அரிய தகவல் : போதிய தூக்கம்

 அறிய வேண்டிய அரிய தகவல் : போதிய தூக்கம்

தூக்கத்தை நம்மில் பலர் வெகுச் சாதாரணமாய்க் கருதுகிறோம். தூக்கம் இல்லாமல் இருப்பது, தூக்கம் வராமல் இருப்பது ஒரு வகையான மன உளைச்சல் அல்லது உடல் நோயின் அறிகுறிக்கான அறிவிப்பு என்பதை நம்மில் பலர் உணருவதே இல்லை.

மருத்துவர்கள் அத்தனை பேரும் மனிதனுக்கு 8 மணி அல்லது குறைந்தது 7 மணி நேரத் தூக்கம் உடல் நலனுக்கும், வளமான  வாழ்வுக்கும் மிகவும் இன்றியமையாதவை என்பதை வலியுறுத்தியே வருகிறார்கள்!

மருத்துவர்கள் நம் உடல் நிலையைப்பற்றி ஆராயும்போது அவர்கள் கேட்கும் கேள்விகளில், முக்கிய இடம் பிடித்திருக்கும் கேள்வி, "பசி", "தூக்கம்" எப்படி இருக்கிறது? என்ற கேள்விகள் தானே!

பல பணிகளைச் செய்வோர் - தனது தூக்கத்தைக் குறைத்து '4 மணி நேரம் தான் தூங்குகிறேன்' என்று சொன்னால், அவர்கள் தம் உடல் நலக்கேட்டிற்கு சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்பது தான் அதற்குப் பொருள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இதே "வாழ்வியல் சிந்தனைகள்" பகுதியில் தூக்கம்  - அதன் முக்கியத்துவம் பற்றி, ஏற்கெனவே நிறைய எழுதியுள்ளோம். 

"தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே!" என்பது குழந்தைகளுக்கான தாலாட்டு மட்டும் தான் என்று சிலர் நினைக்கக் கூடும். அது மூத்த முதியவர்களுக்கும் அதி முக்கியமானது என்பதை அவர்கள் மறக்கவே கூடாது! மன அழுத்தம் (Stress) காரணமாக தூக்கமின்மை ஏற்பட்டால் அது மேலும் பல உடல் தொல்லைகளை உருவாக்கியே தீரும். 

எடுத்துக்காட்டாக, செரிமானமும் தூக்க மின்மையால் வெகுவாகப் பாதிக்கப்படக் கூடும்.

இரவு 2 மணிக்கு மேலும் கண் விழித்துப் படித்தோ, எழுதியோ பிறகு படுக்கைக்குச் செல்வோருக்கு - இரவில் சுரக்க வேண்டிய மெல டோனின் (Melatonin) என்ற முக்கிய வளர்ச்சி ஆரோக்கியத்திற்கு தேவைப்படுவதற்குரியது - கிடைக்காமலேயே செய்யும் நிலை ஏற்பட்டு விடும் அபாயம் உண்டு - என்பதை மருத்துவ நிபுணர்கள் கூறுவதோடு பல வகை மறதி நோய் களுக்குக்கூட இது காரணியாக அமைந்துவிடும் ஆபத்தும் இதன் உள்ளடக்கமாகும்!

எனவே தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். 

8 அல்லது 7 மணி நேரத் தூக்கத்தை தவிர்க் கவே தவிர்க்காதீர்கள். மிகவும் கவனத்துடன் இருங்கள். 26.3.2023 'இந்து' ஆங்கில நாளேட்டில் சிரியாக் ஆபி பிலிப்ஸ் (Cyriac Abby Philips) என்பவர் தூக்கத்தின் 8 மணி நேர, 7 மணி நேர குறைந்த பட்சத்  தேவையை வலியுறுத்த அருமை யான அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளை அளித்துள்ளார். 

நமது வாசகர்கள் பயன் பெறவே அவற்றை இந்தக் கட்டுரையில் தருகிறோம்.

"நாம் நினைக்கிறோம் - நாம் தூங்கும்போது நமது மூளையும் தூங்கி ஓய்வு எடுத்துக் கொள் ளுகிறது என்று. அது தவறான எண்ணமாகும். அப்போதும் அது பல முக்கிய வேலைகளை ஓய்வெடுக்காமல் நமக்கு செய்து கொண்டேதான் இருக்கிறது. உடல் நலப் பாதுகாப்புக்காகவே அப்பணிகள்.

மூளை நமக்காக ஓய்வெடுக்காமல் வேலை செய்கிறது!

2018இல் டோக்கியோவில் (ஜப்பான்) உள்ள மருத்துவப் பட்டதாரிகள் கல்லூரியில் உள்ள உடற் கூறு ஆய்வாளர் (anatomist) முயற்சி எடுத்து ஆய்வினை நடத்திக் கண்டறிந்த பயனுறு தகவல்கள்.

வழமையாக சுண்டெலிகளை வைத்துத்தான் ஆய்வு செய்தார்கள்!

தூக்கமின்மை ஏற்படின் - அது மது அருந்தாத வர்களின் கல்லீரலில் (Livers) கொழுப்புச் சத்தினை அதிகமாக்கி உடல் நலத்திற்குக் கேடு செய்கிறது என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்!

முறையாக தூங்கி (7, 8 மணி நேரம்) எழும் பழக்கமுள்ளவர்களுக்கு கல்லீரலில் உள்ள கொழுப்பு வெறும் 6 விழுக்காடு தான்!

 6 மணி நேரம் மட்டும் தூங்குபவர்களுக்கு கல்லீரலில் சேரும் கொழுப்பு 14 விழுக்காடாக இருக்கும்.

மற்றொரு முக்கிய செய்தி.

பகலில் தூங்குவது - உணவு சாப்பிட்டு எடுக்கும் ஓய்வு  - தூக்கம் 'NAP' கூட ஒரு மணிநேரத்திற்கு மேல் போனால் இதே மாதிரி கொழுப்பாக மாறும் ஆபத்தும் உண்டாம்!

எனவே இவற்றில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து ஒவ்வொரு மணி நேர தூக்கக் குறைவும் இரவில் ஏற்பட்டு தூக்கம் குறையும்போது கல்லீரலில் சேரும் கொழுப்பு 24 விழுக்காடாக அதிகரிக்கிறது என்று கண்டறிந்து இவர் எச்சரிக்கை செய்துள்ளார்!

"தூக்கம்தானே - எப்போது படுத்தால் என்ன? அதை ஈடுகட்ட தொடர்ந்து பகலில் தூங்கினால் போச்சு" என்று அலட்சியமாக நினைத்து உங்கள் ஆரோக்கியத்தைத் தொலைத்து ஆயுளைக் குறைத்துக் கொள்ளாதீர்கள் நண்பர்களே!

உங்கள் நண்பர்களுக்கு இத்தகைய பயனுறு மருத்துவக் குறிப்பைப் பரப்பி, 7 அல்லது  8 மணி நேரத் தூக்கத்தை இழக்காமல் வாழ அறிவுறுத் துங்கள்!

போதிய தூக்கம் நமக்கு ஒரு வகை நோய்த் தடுப்பாக உள்ளது என்பது இதன் மூலம் புரிகிறது அல்லவா?

குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி குறிப்பிட்ட நேரத்தில் எழும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் உடல் நலம் நமக்கு மிகவும் சிறப்பாக அமையக் கூடும் என்பதையும் மறவாதீர் நண்பர்களே!

No comments:

Post a Comment