தமிழர் தலைவரின் பரப்புரைப் பயணத்தில்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 11, 2023

தமிழர் தலைவரின் பரப்புரைப் பயணத்தில்...

கண்டதும்! கேட்டதும்! - 2

திராவிடர் நாயகனும்-திராவிட நாயகனும்!

”சமூக நீதி பாதுகாப்பு”, ”திராவிட மாடல் விளக்கம்”, ”மீண்டும் சேது சமுத்திரத் திட்டம் தொடங்கப்பட வேண்டும்” போன்ற  தமிழ்நாட்டின் அதி முக்கியமான மூன்று விசயங் களில் மக்கள், சனாதனவாதிகளின் சூழ்ச்சிக்கு ஆளாகி விடாமல் தெளிவுபடுத்துவதற்காக, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில், தமிழ்நாடு தழுவிய அளவில் சுற்றுப்பயணம் செல்ல திட்டம் தீட்டப்பட்டது. இந்த மகத்தான பணியினை ஆசிரியர் தன் மேற்போட்டுக்கொண்டு, பயணத்தை நான்கு கட்டங்களாகப் பகுத்துக் கொண்டார். முதல்கட்டம் பிப்ரவரி 3ஆம் தேதி, ஈரோட்டில் தொடங்கி, பிப்ரவரி 10ஆம் தேதி சென்னை பல்லாவரத்திலும், இரண் டாம் கட்டம் பிப்ரவரி 13 இல்  சென்னை மயிலாப்பூரில் தொடங்கி, பிப்ரவரி 21 அன்று மன்னார்குடியிலும், மூன்றாம் கட்டம் பிப்ரவரி 22 இல் ஆண்டிப்பட்டியில் தொடங்கி, பிப்ரவரி 28 இல் அறந்தாங்கியில் முடிவடைந்து, பயணக்குழு சென்னை திரும்பியது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்

அதற்கு அடுத்த நாள் மார்ச் ஒன்றாம் நாள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 ஆம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சி. தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறை அமைச்சரும் தி.மு.க. சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளருமான மாண்புமிகு பி.கே. சேகர்பாபுவின் வழி காட்டுதலில், தாய்க்கழகத்தின் பிறந்த வீடான ’பெரியார் திடல்” விழா கோலம் பூண்டிருந்தது. நாடெல்லாம் திராவிட மாடலை மக்களுக்கு விளக்கிக் கொண்டிருக்கின்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் குறித்த நேரத்திற்கு பெரியார் நினைவிடத்திற்கு வந்துவிட்டார். அதைத் தொடர்ந்து, திராவிட மாடலின் முதலமைச்சரும் மற்ற அமைச்சர்கள் புடை சூழ வருகை தந்தார். தாய்க்கழகத்தின் உரிமையுடன் ஆசிரியர் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றார். பிறகு, திராவிடர் நாயகன், திராவிட நாயகனுடன் பேசிக் கொண்டே, பெரியார் நினைவிடத்திற்குச் சென்றார். பெரியார் நினைவிடத்தின் நுழைவு வாயிலில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனும், கழகத்தின் பொருளாளர் வீ. குமரேசனும் முதலமைச்சருக்கும், மற்றவர்களுக்கும் கொடுப்பதற்காக இனிப்புகளுடன் காத்திருந்தனர். அப்போது கிடைத்த அவகாசத்தில், சுற்றுப்பயணம் குறித்து விசாரித்தார். பெருமைக்குரிய சில தகவல்களை பகிர்ந்து கொண்டேன். அவரும் அதை ஆமோதித்ததுடன், ’சென்ற பயணத்தை விட இந்த பயணத்தில் ஆசிரியருக்கு எல்லா இடங்களிலும் வர வேற்பு சிறப்பாக இருந்தது’ என்று சொல்லிவிட்டு, பயணத்தில் சென்ற எங்களைப் போன்றவர்கள் கவனித்திருக்காத ஒரு பார்வையைக் குறிப்பிட்டார். அதைக்கேட்டதும் அட! என்றிருந்தது நமக்கு! 

புதிய பார்வையும்! புதிய விளைச்சலும்!

அதாவது, ’தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முன்னணித் தலைவர்கள் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் பரப்புரைக்காக சென்றிருப்பதால், ஆசிரியரை எளிதில் அணுக வாய்ப்பில்லாத அடுத்தகட்ட வட்டம், பேரூராட்சி, ஒன்றியம் அமைப்புகளின் தலைவர்கள், ஊராட்சி, பேரூராட்சி உறுப்பினர்கள், தலை வர்கள் உள்ளிட்ட இளைய தலைமுறை அரசியல் பிரமுகர்கள், திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவரை; முக்கிய தலைவரை; 90 வயது இளைஞரை அணுகவும், பேசவும், இப்படிச் சுறுசுறுப்புடன் சுற்றிச் சுழன்று பரப்புரை செய்து வருவதை, சொல்லிக் கேட்டு அல்ல, நேரிலேயே கண்டு, தங்களின் செயல்பாடுகளை அளவிடவும், தாங்கள்  இன்ன மும் எந்த அளவுக்கு திராவிடர் இயக்கக் கொள்கையிலும், அதை மக்கள் பணியிலும் காட்ட வேண்டும் என்று தம்மையே சுய பரிசோதனை செய்து கொள்ளக்கூடிய ஓர் அருமையான வாய்ப்பையும் பெற்றுள்ளனர். உள்ளபடியே இது நல்ல விசயம்!’ என்று பொருளாளர் குறிப்பிட்டிருந்தார். உண்மை தான்! வட்டம், பேரூராட்சி, ஒன்றியப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்ற ஆண், பெண் தோழர்கள் பெரும்பாலும் ஆசிரியரின் கூட்டங்களுக்கு வந்திருந்தனர். அதற்கு அந்தந்த பகுதி கட்சியின் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்டப் பொறுப்பாளர்கள் காரணமாக இருந்திருக்கின்றனர். இதனால், பொதுமக்கள் மட்டுமல்ல, உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் ஆசிரியரின் உரையைக் கேட்டு, தெளிவடையக் கூடிய வரலாற்று வாய்ப்பு அமைந்துவிட்டது. இதன் மூலம் எதிர்கால அரசியல்வாதிகளாக மலரக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கிளைக் கழகப் பொறுப்பாளர்கள், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ''திராவிடர் கழகம், அதன் கொள்கைகள், அதன் அமைப்பு ரீதியான செயல்பாடுகள், நூறாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் நமது நிலை என்ன? அந்த இழிநிலையை திராவிடர் இயக்கம் போராடி, எப்படி மாற்றியது? இன்று பெண்கள் பெற்றுள்ள உரிமைகள் எல்லாம் யாரால் வந்தது? அன்று பெண்களின் நிலைமை எப்படி இருந்தது?'' இதுபோன்ற முக்கிய கருத்துகளை அந்தக் கூட்டங்களின் வாயிலாக அனைவரும் தெரிந்து கொண்டனர். 

”என்ன இது? 90 வயசா இவருக்கு?” “தி.மு.க. செய்துள்ள சாதனைகளை, தி.மு.க. காரங்களே கூட இதுபோல சொல் வதில்லையே?” இவையெல்லாம் கூட்டங்களில் பார்வை யாளர்களால் வியப்புடனும், வெளிப்படையாகவும் பேசப் பட்டவை. நூறாண்டுகளாக செய்துவரும் பரப்புரைகளால்தான் சனாதன சக்திகள், இன்றும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமல் தத்தளிக்கின்றன. அதைத்தான் இந்த புதிய பார்வையும், அதனால் விளையப்போகும் விளைச்சல் களையும் புலப்படுத்துகின்றன. இதுபோன்ற பரப்புரைகளும் அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்கும் அதைத்தானே செய்யப் போகின்றன! இதுதான் ஆசிரியர் மேற்கொண்டுள்ள இந்த மாபெரும் சுற்றுப்பயணத்தின் வெற்றியை அளவிடும், ஒரு சோறு பதம்! 

- உடுமலை வடிவேல்


No comments:

Post a Comment