சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் - எனது நினைப்பும்! - (5) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 24, 2023

சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் - எனது நினைப்பும்! - (5)

 சில எண்ண ஓட்டங்கள்: 

45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் - எனது நினைப்பும்! - (5)

அய்யா உருவாக்கிய பெரியார் டிரஸ்ட் மற்றும் அதன் சொத்தின்மீது ஆயிரம் 'கொள்ளிக் கண்'களின் விஷப் பார்வை, அய்யா, அம்மா காலத்திலிருந்தே பாய்ந்தது உண்டு.

அதனால்தான் இயக்கத்தை ஒழிக்க; அது வரையில் முடக்க சந்தர்ப்பம் எதிர்பார்த்திருந்த ஆரியத்திற்கு மிகவும் உதவிடத் தூண்டி விடும் வகையில் வருமான வரித்துறையில் - கழகத்தை விட்டு விலகிய மேனாள் 'விடுதலை' ஆசிரியர் கழகத்தின் பொதுச் செயலாளர், நிர்வாக கமிட்டி தலைவர் பதவி வகித்த திருவாளர்கள் சா. குருசாமி, மேனாள் நிர்வாகக் கமிட்டித் தலைவர் திருச்சி தி.பொ.வேதாசலம் ஆகியோர் கூட்டாக கையெழுத்திட்டு வருமான வரித்துறைக்கே -  "பெரியார் வரி கட்டாமல் ஏய்க்கிறார்; அவர்மீதும் அவர் உருவாக்கியுள்ள டிரஸ்ட் மீதும் உரிய நடவடிக்கை எடுங்கள்" என்று தனியே கையொப்பத்துடன் அனுப்பினர் (ஆதாரம்: குருவிக்கரம்பை வேலு அவர்கள் எழுதிய சா. குருசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு நூல்).

அதை வைத்து ஆரியம் - "வெறும் வாயை மெல்பவனுக்கு அவல் கிடைத்ததுபோல"  பயன் படுத்தி வாழ்வு முழுவதும் திறந்த புத்தகமாகத் திகழ்ந்தவரை, வருமானத்தை மறைத்தார் என்ற ஓர் ஆதாரமற்ற பழி குற்றச்சாட்டை இணைத்து வரி, அபராத வரி என்று இரட்டை வரியோடு 15 லட்ச ரூபாய் வருமான வரி போட்டார்கள்!

ஒவ்வொரு ஆண்டும் வரிக்கு மேல் வரி, அபராதம் (Penal interest) என்று விதித்து அம்மா பொறுப்பேற்ற போது ரூ.60 லட்சமாக்கி, நான் பொறுப்பிற்கு வந்த நிலையில் சுமார் 80 லட்ச ரூபாய் வரை நிலுவை என்று கூறி - நெருக்கடிகால நிலையின் போது, எல்லா சொத்துக்கள், வாட கைகள் எல்லாவற்றையும் வருமான வரித் துறைக்கே "அட்டாச்மெண்ட்' செய்து வைத்து அம்மாவை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கினர்.

நான் 'மிசா'விலிருந்து வெளியே வந்தபோது, வருமான வரித்துறை பெரிய அதிகாரி (அவர் ஒரு சாமர்த்திய பார்ப்பன மேல்  அதிகாரி)யிடம் விவாதித்து வருமான வரித்துறையும், டிரஸ்ட்டும் ஒரு ஒப்பந்த முடிவுக்கு வந்து - வழக்கு இறுதிக் கட்டம் வரும் வரையில், நிறுவனங்களை நடத்திட, ஊதியம் முதலியவற்றை வழங்கிட மாதம் 12 ஆயிரம் ரூபாய் வருமான வரித்துறை பாக்கிக்குக் கட்டுவது என்றும் - வாடகை வசூலை எங்களுக்கு உரிமையாக்கி வாடகை அட்டாச்மெண்டை ரத்து செய்து - சொத்துக்கள் வருமான வரித்துறையின் பொறுப்பிலேயே தொடர்ந்தது. (விற்கவோ - வாங்கவோ முடியாது).

இப்போது பல கட்ட வழக்கு விசாரணை - அதற்கு ஆடிட்டர், வழக்குரைஞர்கள் மூலம் அது தொடர்ந்து, நான் பொறுப்பேற்ற பிறகு 1978லிருந்து அது பல வகையில் கூடுதல் தொகை நிலுவை யாக்கப்பட்டு, மிக சிக்கலான நிலை ஏற்பட்டது.

என் மன நிலை - வார்த்தைகளால் எழுத முடியாத அளவுக்கு துன்பக் கடலாக இருந்தது. கவலைப்படாமல் கண்ணுங் கருத்துமாய் அவற்றை நடத்தி, அதிலிருந்து மீண்டு வருவது எளிதாகப்படவில்லை. என்றாலும் நம்பிக்கை இழக்காமல் போர்க்களத்தில் நிற்கும் வீரன் கடைசி ஒரு சொட்டு ரத்தம் உள்ள வரை போராடுவது அவனது கடமையல்லவா, அதுபோல சந்திக்கத் துணிந்து விட்டோம்!

"சின்னப் பையனை நம்பிவிட்டார்கள் - சிறுபிள்ளை விட்ட வெள்ளாமை வீடு வந்து சேருவது கடினம்" இப்படியெல்லாம் விமர்சித்து மகிழ்ந்த 'வில்லாதி வில்லன்'களுக்கு நம் நாட்டில் ஏது பஞ்சம்? வருமான வரி வழக்குகள் சுமை ஒருபுறம்.  இந்த துரோகத்தவர்களின் உயர்நீதிமன்ற வழக்குத் தாக்கல் மறுபுறம்.

என்றாலும் அய்யா - அம்மா தந்த தைரியமும், உண்மைத் தோழர்கள் வைத்துள்ள பேரன்பும் நம்பிக்கையை எனக்குத் தந்து - தனித் தெம்பூட்டி அமைதியாகச் செயல்பட வைத்தன - எவ்வித படபடப்புமின்றி! 

மூத்தவர்கள் பலரது அனுபவங்களை நாடி, அதன்படி நமது நடவடிக்கைகளை அமைக்க முடிவு செய்து - சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் பி.வி. இராஜமன்னார் அவர்கள் அறிமுகமில்லாதவர் என்றாலும் - அய்யா பெரியார்மீது மிகுந்த அன்பும், மரியாதையும் உடையவர், பல ஆண்டுகளாக அவரிடம் மதிப்பு மிகுந்தவர் என்பதை நான் அறிந்து வைத்திருந்தேன். 

ஒரு நண்பரை அவரிடம் அனுப்பி நிலைமையை விளக்கி அறிவுரை வேண்டினேன்.

அவர் அய்யாவின்மீதுள்ள மிகுந்த அன்பின் காரணமாக எனக்கு  வழக்குகளை உரிய முறையில் நடத்திட, டிரஸ்ட்டிலிருந்து செலவுக்கு ஒரு காசுகூட செய்யாமல், தனியே செலவு செய்து வழக்கு நடத்துவதே  சட்டப்படி சரியானது  என்று முக்கிய வழி முறைகளைக் கூறி அறிவுரை வழங்கினார்.

மக்களிடம் "கையேந்தி" அய்யா அறக் கட்டளையைக் காப்பாற்ற வழக்கு நடத்திட தனியே குழு அமைத்து நன்கொடை வசூலித்து வழக்கினை நடத்திடும் தெளிவும் கிடைத்தது. இது ஒரு நல்ல துவக்கம் ஆயிற்று.

பிறகு அவருக்கு நன்றி கூறினேன். நேரில் அல்ல அனுப்பிய நண்பர் மூலமே!

(வளரும்)


No comments:

Post a Comment