அரசமைப்புச் சட்டத்தின் குரல் வளையை நெரிக்கும் பிஜேபி அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 15, 2023

அரசமைப்புச் சட்டத்தின் குரல் வளையை நெரிக்கும் பிஜேபி அரசு

ராஷ்ட்ர சேவிகா சமிதியுடன் தொடர்புடைய சம்வர்த்தினி நியாஸ் என்ற அமைப்பு கர்ப்பிணிகளுக்காக 'கர்ப் சன்ஸ்கார்' என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

ராஷ்டிர சேவிகா சமிதி என்பது ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்பின் பெண்கள் பிரிவாகும்.

சம்வர்த்தினி நியாஸின் தேசிய அமைப்புச் செயலாளர் மாதுரி மராத்தே, "கர்ப்பிணிகளுக்காக கர்ப் சன்ஸ்கார் என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தைக்குக் கருவிலேயே கலாச்சாரம் மற்றும் ஒழுக்கம் கற்பிக்கப்படும்’’ எனக் கூறியதாக பி.டி.அய். செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

மகப்பேறு மருத்துவர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் யோகா பயிற்சியாளர்களின் உதவியுடன் கர்ப்ப காலத்தில் கீதை, இராமாயணம் படிப்பது மற்றும் யோகா செய்வது ஆகியவற்றின் மூலம் கருவில் உள்ள குழந்தை களுக்கு நல்ஒழுக்கங்களைப் பயிற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்டு  சம்வர்த்தினி நியாஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளது. டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ராஷ்ட்ர சேவிகா சமிதியால் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சிப் பட்டறையில், 12 மாநிலங்களைச் சேர்ந்த 80 மகளிர் மருத்துவ நிபுணர்களும் பங்கேற்றுள்ளனர்.

"குழந்தையின் இரண்டு வயது வரை கர்ப்பிணிகளுக்கு இந்தத் திட்டம் தொடரும். இதில் கீதை, சவுபாய் இராமாயண வசனங்கள் படிப்பது இருக்கும். கருப்பையில் வளரும் குழந்தை 500 வார்த்தைகள் வரை கற்றுக்கொள்ளும்’’ என மாதுரி மராத்தே பி.டி.அய். செய்தி முகமையிடம் கூறினார்.

உண்மையில் கருப்பையில் வளரும் குழந்தையால் வார்த்தை களையோ அல்லது மொழியையோ புரிந்துகொள்ள முடியுமா?

இது அன்றி அறிவியலுக்கு எதிரான முட்டாள்தனமான வாதம் வேறு எதுவாக இருக்க முடியும்?

“கருவில் வளரும் குழந்தையின் உடல் வளர்ச்சியுடன், அதன் காதுகளும் வளரும். எனவே ஒலி அலைகள் காதுகளைச் சென்றடையும். ஆனால் அந்த ஒலியின் அர்த்தம் குழந்தைக்குப் புரியாது. இப்படியான சூழலில், சமஸ்கிருத அல்லது வேறு ஏதேனும் மந்திரத்தை தாய் சொன்னால் அது எப்படி குழந்தைக்குப் புரியும்?

ஹார்மோன்களின் தாக்கம் தாய் மூலமாக குழந்தை களைச் சென்றடையும். அதாவது மன அழுத்த ஹார் மோனாக இருந்தாலும், மகிழ்ச்சி ஹார்மோனாக இருந்தாலும் அவையே குழந்தையின்மீது தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று அறிவியல் கூறுகிறது

மகாராட்டிராவில் உள்ள நரேந்திர தாபோல்கர் துவக்கிய அமைப்பான அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதியின் நிர்வாகியான  முக்தா தபோல்கர், "கர்ப்பிணிகளுக்கான முகாமில் சத்தான உணவு, நல்ல எண்ணங்கள், மனதை அமைதிப்படுத்துதல் ஆகியவற்றைப் பற்றிய பாடங்களைச் சேர்க்க வேண்டும்" என்கிறார்.

’’கருப்பையில் இருக்கும் குழந்தையால் மொழியைப் புரிந்துகொள்ள முடியாது எனும் போது தாய் மந்திரம் சொல்லுகிறார் என்பது எப்படி குழந்தைக்குத் தெரியும்? தாய் மகிழ்ச்சியாக இருப்பது முக்கியம், அவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பது குடும்பத்தின் பொறுப்பாக இருக்க வேண்டும். அவருடைய உணவு முறைகளில் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் முக்தா தபோல்கர் கூறுகிறார்.

ஆனால், ராஷ்ட்ரிய சேவிகா சமிதி என்னும் ஆர்.எஸ்.எஸ்.சின் பெண்கள் அமைப்பிற்கு இந்த சிந்தனை எங்கிருந்து வந்தது என்றால், கற்பனைக் கதையான மகாபாரதத்தில் சுபத்திரையின் கர்ப்பத்தில் இருந்த அபிமன்யு சக்கர வியூகத்தை உடைக்கும் வித்தையை கேட்டதாக ஒரு சரடு உள்ளது. அதைப் பிடித்துக்கொண்டு இன்று தாயின் கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கும் ஹிந்துத்துவ கருத்துக்களை திணிக்கப்போகிறோம் என்று கிளம்பி உள்ளார்கள்.

இந்தக் கதையை உண்மையாக்கும் முயற்சியில் தான்  கருவில் உள்ள குழந்தை மீது ஒலி மற்றும் இசை என்ன தாக் கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கண்டறிய  உத்தரப்பிரதேசத்தில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் பல கோடி ரூபாய் செலவு செய்து ஆராய்ச்சி தொடங்கப்பட்டுள்ளதாம்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 51-A(h)  மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையையும், கேள்வி கேட்கும் உணர் வையும், மனிதநேயம் மற்றும் சீர்திருத்த உணர்வையும் பரப்புவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்கிறது.

ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையை ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களே காலில் போட்டு மிதித்துத் துவம்சம் செய்கிறார்கள்.

பார்ப்பனீயத்தின்  முதல் திட்டமே மக்களை மூடத் தனத்தில் ஆழ்த்தி, அவர்களை அடிமைப்படுத்துவது தானே!


No comments:

Post a Comment