இதோ பெரியாரில் பெரியார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 27, 2023

இதோ பெரியாரில் பெரியார்!

பட்டுக்கோட்டைஅழகிரிசாமி

13.12.1947ஆம் நாள் அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் தளபதி கே.வி.அழகிரிசாமி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரை

 அன்புமிக்க தலைவர் அவர்களே, தோழர்களே, தாய்மார்களே! பெரியார் அவர்கள் படத்தைத் திறந்து வைப்பதென்றால் அது லேசான வேலை அல்ல என்பதான எண்ணங் கொண்டு அப்படிப்பட்ட கஷ்டமான வேலையை எனக்கு அளிக்க வேண்டு மென்று கருதியே, எனக்குப் பெரியார் அவர்களின் படத்தைத் திறந்துவைக்கும் பணியை, வரவேற்புக் கமிட்டியினர் அளித்திருக்க வேண்டுமென்று நான் கருதுகிறேன். அதெப்படிக் கஷ்டமென்று நீங்கள் நினைக்கக் கூடும்.

நான் பெரியாரை நன்கு அறிவேன்

சாதாரணமாக நாம் சிற்றுண்டிச் சாலைக்குச் செல்வோமானால் அங்குள்ள நம் தோழர், இது சூர்யகலா, இது சந்திரகலா, இது பாதுஷா, இவை இனிக்கும். இது சவ் சவ், இது கவ் கவ் இவை புளிக்கு மென்றால், நமக்கு முன்னாடியே இவை அறிமுகமாகாத பண்டங்களாயிருப்பதால் புளிக்குமோ தித்திக்குமோ என்று சந்தேகிக்க இடமிருக்கலாம். ஆனால், இது லட்டு, இது ஜிலேபி, இவை கசக்கும் என்று கூறினால் நாம் சும்மா இருப்போமா? “அட போடா போ, எனக்குத் தெரியும் லட்டு தித்திக்குமென்று" என உடனே சந்தேக மின்றி கூறி விடுவோம். காரணம் இப்பண்டங்களை நாம் நன்கு அறிந்திருப்பதால், அதே போல் பெரியாரைப் பற்றி நான் நன்றாய் அறிந்தவனாதலால் 30 ஆண்டு களாக நான் நெருங்கி அறிந்திருக்கும்போது அவரைப் பற்றி நானென்ன கஷ்டப்பட்டுக் கூறவேண்டியிருக்கும்? அன்றியும் அவரைப்பற்றி உங்களிடம் பேசுவதென்றால் அது கொல்லன் தெருவில் ஊசி விற்ற கதையாகத்தான் முடியும்.

அறிவை அளக்க அறிவுமானி உண்டா?

நவமணிகள் என்று கூறப்படும் மரகதம், மாணிக்கம், வைடூரியம், பச்சை, நீலம் கெம்பு, புஷ்பராகம், கோமேதகம் முதலியவற்றிற்கும், பவளம், முத்து இவைகளுக்கும், அவற்றின் ஒளி, நிறை இவற்றைக் கொண்டு ஓரளவுக்கு மதிப்புக் கூறிவிடலாம். ஆனால் அறிவின் உச்சியையோ, சிந்தனையின் சிகரத்தையோ, பகுத்தறிவின் எல்லையையோ ஒருவனால் அள விட்டுக் கூறமுடியுமா? அதற்கு ஒரு அளவுகோலோ துலாக்கோலோ உண்டா? ஏதாவது மீட்டர் தான் உண்டா? தோழர்களே சிந்தித்துப் பாருங்கள்! ஆலோ சித்துக் கூறுங்கள்! அறிவை அளக்க எங்காவது அறிவு மானி உண்டா? அப்படி இருக்க அறிவின் ஜ்வாலையா கவும், சிந்தனையின் பெட்டகமாகவும், ஆற்றலின் சிகரமாகவும், எல்லை காணமுடியாத பகுத்தறிவின் இருப்பிடமாகவும் இருந்துவரும் பெரியாரை நாம் எந்தக் கோல் கொண்டு மதிப்பிட்டுப் பார்ப்பது? வயது ஏற, ஏற திறனும் ஏறிக் கொண்டேதான் போகிறது. கோகலே ஹாலில் ஒரு சாண் நீண்டதென்றால் சேலத் தில் ஒரு முழம் நீளுகிறது. சேலத்தில்தான் ஒரு முழம் என்றால், திருவண்ணாமலையில் ஒரு கெஜம் நீளு கிறது. இப்படியாக இவரது பகுத்தறிவும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டேதான் வருகிறது.

பகுத்தறிவும் அன்பும் வகுத்த வழி 

இத்தகைய ஒரு பகுத்தறிவின் காரணமாகத்தான் என்னைப் போன்ற அடங்காப்பிடாரிகளும்கூட, அவரை நாடி வரவேண்டியிருக்கிறது. அவரது தெளிந்த பகுத்தறிவுத் தேனின் ருசியை ஏற்கெனவே அனுபவித்ததன் காரணமாகத்தான், அந்த ருசியில் மயங்கித்தான், இன்று மதுதேடி அலையும் வண்டு களைப்போல், நாம் இங்கு கூடியுள்ளோம். ஒளி கண்டு மயங்கிக் கிடக்கும் விட்டில் பூச்சிகளைப்போல், நாமும் அவரது கருத்துக்கள் என்னும் பிரசங்கத்தேனையுண்டு இன்று திளைத்திருக்கிறோம். அவரது பகுத்தறிவு, நுண்ணிய நுண்ணறிவுக்கும் மிக நுண்மையானது. ஆகவேதான் நம்மைப் பிற நாட்டவரோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நம்மை விட "அதிர்ஷ்டசாலிகள்?" இவ்வுலகில் வேறொரு மக்கள் கூட்டம் இருக்கமுடியாது உண்மையாகத்தான் கூறுகிறேன். 

பொல்லாத கொடிய விரியன் என்று கூறத் தோன்றுகிறது.. பாம்புகள் நம்மை ஆட்சிபுரிந்து வரும் போது, ஒரு பக்கம் இவ்வற்பர்களின் அடக்குமுறைத் தொல்லையும், மற்றொரு பக்கம் அன்பர்களின் பட்டி னிக் கூப்பாடும் நம்மை வாட்டிவரும் போது. பெரியா ரைப் போன்ற உருவங்கள் நம்மிடையே இருந்து சற்று ஆறுதல் ஊட்டி வருவதால்தான் நாம் உயிரோடு இந்நாட்டில் வாழ முடிகிறது. இன்றேல் நாம் என்றோ இறந்திருப்போம் அல்லது இந்நாட்டை விட்டேனும் எங்காவது ஓடிவிட்டிருப்போம். ஆம். பெரியார் ஒரு வர்தான் நம்மை இந்நாட்டோடு இணைத்து வைத் திருக்கிறார். அவரது பகுத்தறிவும் அன்பும் தான். நம்மை அவர்பால் இழுத்து அவர்வழிச் செல்லத் தூண்டுகிறது. அன்னாரையோ அல்லது, அன்னாரது இயக்கத்தின் வளர்ச்சியையோ சரிவர அறிந்திருக்க மாட்டார்கள். இந்தப் பதவி வேட்டை உருவாரங்கள். ஆகவேதான் சில சந்தர்ப்பங்களில் அவரை எதிர்த்து விஷமம் செய்து பார்க்கிறார்கள்.

எண்ணினார் பனகல், 

இயற்றினார் பெரியார்

இவர் தமது இயக்கத்தை ஆரம்பித்த காலம் 1925 அல்லது 1926 ஆக இருக்கவேண்டுமென்று நினைக்கி றேன். அந்தக் காலத்தில் நம் மாகாண அமைச்சராக இருந்தவர், நமது மதிப்பிற்குரிய பனகல் அரசர் ஆவார்கள். அவர் தலைசிறந்த அறிவாளி, கைதேர்ந்த ராஜதந்திரியும்கூட, அவர் “பொதுப்பணம் ஏராளமாகக் கோவில்களில் வீணாக்கப்படுகிறது, அனைத்தும் பார்ப்பனின் வாழ்வுக்கே உபயோகப்பட்டு வருவதோடு, நம் மக்கள் வேறு-மடையர்களாக்கப்பட்டு வருகிறார்கள்; அதைக் கட்டுப்படுத்த கோவில்கள் தம் வரவு செலவுக் கணக்குகளைச் சர்க்காருக்குக் காட்ட வேண்டும் என்று சட்டம் செய்யத் தீர்மானித்தார். அப்படிப்பட்ட ஒரு சட்டம் செய்வதற்கு அவசியம் பொதுமக்கள் ஆதரவு வேண்டும். அவருடைய அன்றைய ஜஸ்டிஸ் கட் சியோ, மிட்டாதார், மிராஸ்தார், ஜமீன்தார் இவர்களின் கூட்டமாக இருந்ததால் தன் கட்சித் திட்டத்திற்கு மக்கள் ஆதரவு கிடைப்பது கஷ்டமென்று கண்டு கொண்டார். அத்திட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவை யாராவது திரட்டிக் கொடுத்தால் நலமாக இருக்குமென்று கருதி, அப்பணியை யாரிடம் ஒப்புவிப்பதென்று யோசிக்கலா னார். அவருடைய யோசனைக்குப் பெரியார் ஒருவர் தான் பிடிபட்டார். பெரியாரிடம் வந்து இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து பெரியார்அவர்களுடன் கலந்து பேசினார். காங்கிரசிலிருந்த போதே வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காகவும். சமுதாயச் சீர்திருத்தத்திற்கா கவும் பாடுபட்டு, அதன் காரணமாக அதைவிட்டு வெளியேறி விலகியிருந்த பெரியார் அவர்களும் அவரது வேண்டுகோளுக்கு இணங்கித் தமிழ்நாடெங் கனும் இப்பொல்லாத பிராமணியத்தை எதிர்த்துப் பிரச் சாரம் செய்யத் துவங்கினார். "சாமிக்கு அரிசி பருப்பு ஏன் படைக்க வேண்டும்? அந்தச் சாமி சாப்பிடுவதாக எந்த டாக்டராவது சர்டிபிகேட் எழுதிக் கொடுப்பாரா? அப்படியிருக்க சாமிக்கென்று கூறிச் சோம்பேறிப் பார்ப்பனர்கள்தானே அதை உண்டு வயிறு வளர்க் கிறார்கள். பாடுபட்டு பட்டினி கிடக்கும் நீங்கள்தானே அதற்கும் படி அளந்து வருகிறீர்கள்” என்கின்ற பல்லவி யைத் துவக்கி, "சாப்பிடட்டும்! தொலைந்து போகிறார் கள். அதற்குக் கணக்காவது காட்டி தொலைக்கட்டுமே! கணக்கில்லாவிட்டால் அவர்கள் பொது சொத்துக் களையெல்லாம் நாளா வட்டத்தில் தமது சொந்தச் சொத்தாக்கிக் கொள்வார்களே! நீங்கள் அழ, அழ, அவர்கள் உங்களைக் கொள்ளையடிப்பதா?” என்பதாக இன்னும் இப்படிப் பல விஷயங்களைக் கிளப்பி ஆங்காங்கு கர்ஜித்து வந்தார். அந்தச் சமயம் பார்ப்பனர் “ஜஸ்டிஸ் கட்சி சாமிகள் தலையில் கைவைத்துவிட்டது” என்று விஷமம் செய்து, மக்களை ஜஸ்டிஸ்கட்சி மீது வெறுப்படையச் செய்து இருந்தனர் என்றாலும் பெரியார், பேச்சைக் கேட்ட பிறகு சட்டம் அவசியம் தான்; கணக்கு வழக்கு கவனிக்க வேண்டியதுதான் என்று கருதிக் கொண்டார்கள். பனகல் அரசருக்கும் இந்து மத பரிபாலனச் சட்டம் இயற்றுவது சுலபமாக முடிந்தது.

எதிர்ப்பின் விளைவு சுயமரியாதை இயக்கம்

அந்த இந்து மத எதிர்ப்புப் பிரசாரத்தில் சேர்ந்த வர்கள் தான், நாங்கள் ஏழெட்டுப் பேர்கள். சட்டமியற்று வதற்கு ஆதரவு தேடித் தந்ததும், பெரியார் அவர்கள் சிந்திக்கலானார். அவர் பெரிய தூரதிருஷ்டியுடையவர். ஆதலால் யோசித்துப் பார்த்தார். இந்த 'ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களோ பணக்காரர்கள்: பணத்தைக் காப் பாற்ற தம் பதவியை நீடிக்க எதையும் செய்ய இவர்கள் துணிவார்கள். இவர்களை நம்பி நம்மால் என்ன செய்ய முடியும்? இவர்களது வேலை முடிந்ததும் நம்மை இவர்கள் கைவிட்டு விடுவார்களானால் நாம் என்ன செய்வது; நாம் மக்களிடையே செய்த இவ்வளவு பிரச் சாரத்தையும் வீணாக்குவதா? கூடாது! கூடாது! தனி இயக்கம் ஒன்று கண்டே தீரவேண்டும். அவ்வியக்கத் திற்கு என்ன பெயர் கொடுப்பது' என்று சிந்தித்தார். தம் ஆபீஸ் அகராதிகளையெல்லாம் புரட்டிப் பார்த் தார். அப்போது கண்டெடுத்த வார்த்தைதான், 'சுயமரி யாதை' என்பது. அப்போது தோற்றுவித்ததுதான் சுய மரியாதை இயக்கமும் ஆகும்.

சுயமரியதை வளர்ப்பினால் 

தோன்றிய பேருண்மைகள் 

அவ்வியக்கத்தின் மூலம் பிராமணியத்தை தாக்க ஆரம்பித்தோம். அவர்கள் சாஸ்திரத்தை ஆதாரமாக காட்டினார்கள். அதை ஆராய்ந்து பார்த்து, அதை ஆரியம் தமக்காக எழுதி வைத்துக் கொண்டதென் றோம்! பரசாரார் வாக்கு மனுவாக்கு என்று கூற ஆரம் பித்தார்கள். அவற்றிற்கும் தக்க மறுப்புகள் கூறினோம். புராணங்களையும் உபநிஷத்துக்களையும் காட்ட ஆரம்பித்தார்கள். அவற்றையும் ஆராய்ந்து பார்த்து அவற்றிலுள்ள புரட்டுகளை எடுத்துக்கூற ஆரம்பித் தோம். முடிவில் கடவுளை ஆதாரமாகக் காட்ட ஆரம்பித்ததும், “நிறுத்து! தம்பி அதைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது; எமக்கும் ஒன்றும் தெரியாது" என்று பதில் கூறினோம்! இவற்றையெல்லாம் எங்களுக்குக் கூறித்தந்தவர் பெரியார்தான். சுயமரியாதைத் தத்துவத் தையே நமக்கும் நமது இவ்வுலகத்திற்கும் அளித்தவர் பெரியார் தான். சுயமரியாதை இயக்கத்தைத் தோற்று வித்ததும் அவரேதான். அந்தப் பெருமையில் பங்கு கொள்ள வேறு யாருக்கும் எவ்வித உரிமையும் கிடையாது.

அவர் தமது சுயமரியாதைத் தத்துவத்தின் மூலம், நமக்கு எதையும் எளிதாக்கித் தந்தார். நமது அறியா மையை அகற்றி நமக்குப் பகுத்தறிவு ஊட்டினார். நமது ஏழ்மையையும் தாழ்மையையும்கூட மறக்கச் செய்தார். ஏழை பணக்காரன் என்பதில்லை. தொழிலாளி முதலாளி என்பதில்லை! அனைவரும் தோழனுக்குத் தோழன்தான் என்ற மனப்பான்மையை ஊட்டினார்; அதை வளர்த்தார். ஜமீன்தாரர்களை முரட்டுப் பணக் காரர்கள் என்றார். கடவுள் வெறும் உருளைக்கல் என்றார். பிராமணியம் அந்தக் கடவுளுக்குத் தூண். அத்தூணைச் சுக்கு நூறாக்கினால்தான் நாம் இன்ப வாழ்வு வாழ முடியும் என்றார். இவற்றைக்கூறிட ஒரு சிறிதும் அஞ்சினாரில்லை. யாரோ ஒரு அன்பர் சற்று முன் அஞ்சா நெஞ்சம் படைத்த அழகிரிசாமி என்று என்னைப் பாராட்டினார். எனக்கு அஞ்சா நெஞ்சத்தை அளித்தவர் பெரியார்தான். அவர் எனது அறிவிலிட்ட வித்துத்தான் என்னை அஞ்சா நெஞ்சமுடையவனாக் கியது. அவரது அஞ்சா நெஞ்சத்துக்கு ஒரு சான்று கூறுகிறேன் கேளுங்கள்.

பெருந்தன்மைக்கு எல்லை பெரியார்!

ஒரு சமயம் விருது நகரில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தில் பெரியார் அவர்கள் ஆரியத்தையும், ஆரியத்தின் சிஷ்ய கோடிகளையும் மிகக் கடினமாகத் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தார். நானும் அவர் அருகில் மேடை மீதிருந்தேன். பெரியாரின் பேச்சைக் கேட்டு ஆத்திரமடைந்த தோழர் ஒருவர், கனல் கக்கும் கண்களோடு தம் கத்தியை உருவிக் கொண்டு பெரியா ரைக் குத்திவிட ஓடிடோடி வந்தார். வந்தவரைக் கண்டு அஞ்சி ஆடாமல், அவரது கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் பெரியார். அவரை ஒரு நாற்காலியில் அமர்த்தி ஆத்திரம் அடங்கச் செய்தார். அதன்பின் என்ன செய்தார்? அவரைப் போலீசினிடம் ஒப்புவித்தாரா? அதுதான், இல்லை. அவரை வெளியில் விட்டால் கூட்டம் அவரைக் கொன்றுவிடும் என்பதைப் பெரியார் அறிவார். ஆகவே அவரைத் தக்க பாது காப்போடு வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவ்வளவு பெருந்தன்மை படைத்திருப்பதால்தான் அவரைப் பெரியார் என்று நாம் அழைக்கிறோம்.

அச்சத்தை ஓட்டி 

அறிவை வளர்த்தவர் பெரியார்!

கடவுளென்றால் அதெல்லாம் “வெறும் புருடா" என்று கூறினார். "மதம் மடமையின் விருந்தென்று" புகன்றார். “புராணம் ஒரு ஏமாற்றுவித்தை” என்றார். “பிராமணியம் ஒரு படுமோசப் பாதகம்' என்றார். “சாஸ்திரங்களைக் குப்பை" என்று குறித்தார். எதைக் கண்டு நாமெல்லாம் அஞ்சினோமோ. எதற்கு நாமெல் லாம் அடிபணிந்திருந்தோமோ, எதை நம்மவர்கள் சிலர் பெருமை என்றுகூட நினைத்து வந்தார்களோ, அவற்றையெல்லாம் அறிவு கொண்டு விளக்கி நமது வாழ்க்கையை ரொம்ப இலகுவாக்கினார்.

படித்தவர் - படியாதவர்கள், ஜமீன்தாரர்கள் - குடியானவர்கள், உத்யோகஸ்தர்கள் - குமாஸ்தாக்கள், பணக்காரர்கள் - ஏழைகள் ஆகிய சகலரையும் காணும் நமது கண்களையும் ஒரே மட்டமாக்கினார். எம்.பி. பி.எஸ். டாக்டரையும் நமது அம்பஷ்ட வைத்தியரையும் அவர்களது படிப்பைக் கொண்டல்ல. அவர்களது அனுபவத்தைக் கொண்டு, அவர்களது செயலாற்றும் திறனைக்கொண்டு கணக்கிடும்படி செய்தவர் அவர் தான். “எப்படி பெரிய ரோட்டு உருளையானது. ரோட் டில் பரப்பப்பட்டுள்ள சிறுகல். பெருங்கல் அனைத் தையும் தன் பளுவால் சரிமட்டமாக்குகிறதோ, அப்படித் தம் அறிவுருளையால் அனைத்தையும் சமமாக்கித் தந்தார்" நமது அறிவின் தந்தை பெரியார். முகத்து ரோமத்தை நீக்க உதவுவது கூரிய கத்தி, அதைக் கூர்மைப்படுத்தித் தருவது சாணைக்கல். அதே போல் பகுத்தறிவுதான் நமது மடைமையைப் போக்கும் கத்தி. அப்பகுத்தறிவுக்குச் சாணைக்கல் போல் உதவி செய்வதுதான் கல்வி. ஆகவே கல்வியைக் கல்லடா தம்பி! அது அறிவைக் கூர்மைப்படுத்தும் தம்பி என்று நமக்குக் கூறினார். நெடுங்காலமாகவே நாம் நமது அறிவை உபயோகப்படுத்தாததால் அது மழுங்கி விட்டது. ஆதலால் அதைக் கல்வியென்னும் சாணைக் கல்லால் தீட்டுடா தம்பி! என்று கூறினார்.

நலிவை ஒழித்து நமக்கு 

வாழ்வளித்தவர் பெரியார்! 

படித்தவர் என்றால் ஒன்றும் பிரமாதம் இல்லை. படித்து விட்டால் மட்டும் ஒருவன் அறிவாளியாகிவிட மாட்டான். அறிவாளிகள் எல்லாம் படித்துத்தான் அறிவாளிகள் ஆனார்கள் என்று கூறுவதற்கும் இல்லை. அல்லது படித்திருப்பதினாலேயே ஒருவன் சகல காரியங்களிலும் நிபுணன் ஆகிவிடமுடியாது. நன்றாகப் படித்துள்ள ஒரு நீதிபதி, ஒரு நல்ல நாற்காலி மேஜையைச் செய்துவிட முடியாது. அது தச்சன் தொழில், ஆகவே அவன்தான் அதைத்திறம்படச் செய்வான். அந்த நாற்காலி செய்ய முடியாததால், அந்த நீதிபதியை அறிவற்றவன் என்று கூறிவிடமுடியுமா? அந்தத் தச்சனையே நாம் ஒரு உளியடித்துக் கொடு என்றால், அதைத் திறம்பட அவனால் செய்து தர முடியுமா? அவனால் செய்து தர முடியாது? உளி செய்பவன் கருமான். அவனுக்குத் தான் உளி செய்யும் பக்குவம் தெரியும். ஆகவே அவனவனுக்கு அந்தந்தத் தொழிலில் தேர்ச்சியுண்டு என்று கூறலாமே தவிர, ஒருவன் மற்றவனைவிட அறிவில் உயர்ந்தவன் என்றோ, தாழ்ந்தவன் என்றோ நம்மால் கூற முடியாது. வேண்டுமானால் கவனித்துப் பாருங்கள்.

நமது எத்திராஜும் வக்கீல் படிப்புப் படித்தவர்தான். நமது வெங்கடரத்தினமும் வக்கீல் படிப்புப் படித்தவர் தான் ஆனால், அவர் நாளொன்றுக்கு ரூ 2000, 3000 வாங்குகிறார். இவர் ஒரு பெட்டீஷனுக்கு ரூ 0-8-0 பீசுக்குக் கோர்ட்டில் லாட்டரி அடிக்கிறாரே, படிப்புத் தான் அறிவானால், இவர்களிருவரும் சரிவிகிதத்தி லன்றோ பணம் சம்பாதிக்க வேண்டும். இதற்கெல்லாம் அவர்களின் படிப்பல்ல, அறிவுதான் மூலக்காரணம் என்பதை அறிய முடிகிறதா? இல்லையா? இப்படி எல் லாம் விளக்கிக்கூறி, பகுத்தறிவுதான் உலகை ஆளும் என்று காட்டி நமக்கு வாழ்வளித்தவர் பெரியார்தான்.

தேவையை எண்ணு! 

செலவையும் சிக்கனமாக்கு!

செழுமையில் ஆசைப்படாதே! உன்னுடைய தேவையை அனாவசியமாக அதிகரித்துக் கொள் ளாதே! மற்றவர்களின் ஆடம்பரத்தைக் கண்டு. அவ்வாடம்பரத்தில் மோகம் கொள்ளாதே! இன்று வெறும் ஆசைக்கென்று விருப்பப்படும் பொருளானது நாளைக்கு அடைய முடியாமற் போனால் நமக்குத் துன் பத்தையே விளைவிக்கும்! ஆனதால் அவசியமில்லாத பொருளைத் தேவையென்று கருதிவிடாதே! எளிய வாழ்க்கை நடத்து! ஏமாந்து போகாதே! என்று எச்சரிக்கை செய்து நம் வறுமையை மறக்க வழிசெய்து தந்தவரும் பெரியார்தான்.

அவரது பொருளாதார சிக்கனமும் சற்று அலாதி யானதுதான். முழுக்கைச் சட்டையில் மோகம் கொள் ளாதே! நாலு முழுக்கைச் சட்டைகளுக்கு வேண்டிய துணியில், 5 அரைக்கைச் சட்டைகள் தைத்துக் கொள் ளலாமே! வேலை செய்யவும் சவுகரியமாயிருக்குமே! என்று கூறிச் சட்டை தைத்துக் கொள்வதில்கூடச் சிக்கனத்தை அனுஷ்டிக்கும்படி செய்வார். அதனால் தான் அவர் எப்போதும் அரைக்கைச் சட்டைகளை அணிந்து வருகிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

அவரது சிக்கனத்திற்கு மற்றோர் உதாரணம் கூறுகிறேன் கவனித்துக் கேளுங்கள். அவர் ஒரு சமயம் கும்பகோணம் சென்றிருந்தபோது தோழர் சின்னத் தம்பி வீட்டிற்கு விருந்துண்ணச் சென்றிருந்தாராம். அவர் வீட்டில் ஒரு ரேடியோ இருக்கக் கண்டு என்ன விலைக்கு வாங்கினீர்கள் என்று கேட்டாராம். அவர் ரூபாய் எண்ணூறுக்கு வாங்கியதாகச் சொன்னாராம். அதைக் கேட்தும் அவர் பாத்தீங்களா, இந்த திருட்டுப் பசங்க செய்கிற வேலையை! சாதாரண நாட்டுக் கள்ளிப் பலகையில் இந்தப் பெட்டியைச் செய்தால், இன்னும் 200 ரூபாய் குறைய விற்கலாமே! இந்தப் பளபளப்புக்காக நாமும் 200, 300 அதிகம் தர வேண்டியிருக்கிறதே! விலை சரசமாயிருந்தால் இன்னும் அதிகம் பேர்கூட வாங்கச் சவுகரியமாக இருக்குமே! என்று கூறினாராம். மலர் மாலை அணிவதும் வாழை இலையிலுண்பதும் மக்கள் உழைப்பை மதிக்கும் செயலன்று.

இப்படி எதற்கெடுத்தாலும் சிக்கனந்தான். ஆம்! மண்ணும் விண்ணும்கூட இவருக்குச் சிக்கனம் செய்யப்பட வேண்டியவை தான். காரணமின்றி அவர் நமக்குச் சிக்கனம் போதிக்கவில்லை. சிக்கனம் அனைவருக்கும் அவசியமானது; அதுவும் நம்மைப் போன்ற ஊதாரி மக்களுக்குச் சிக்கனக் கருத்து மகா மகா அவசியமானது. எதையும் வேஸ்ட் செய்வதுதான், வீண்செய்வதுதான் நமது பழக்கம். பாருங்கள்! இந்த மேஜைமீது குவிந்து கிடக்கும் இம்மலர் மாலைகளால் யாருக்கு என்ன லாபம்? இம்மாதிரி எத்தனை மாலைகள் அன்றாடம் பழாகின்றன? நம் நாட்டில் மாலை அணிவித்தல் என்ற அர்த்தமற்ற சடங்கால், தினம் எத்தனை ஆயிரம் ரூபாய்கள் பாழாகின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா? இதற்காக எத்தனை பேருடைய உழைப்பு, எத்தனை ஏக்கர் பூமிகள் வீணாக்கப்படுகின்றன என்பதுபற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா?

அடுத்த அதிசயம் என்னவென்றால், வேறெந்த நாட்டிலும் இல்லாத வாழை இலையில் உண்பதென்ற பழக்கம் நம் நாட்டில் இருந்து வருகிறது. கோப்பையில் சாப்பிடுவது அநாசாரம். வாழை இலையில் உண்பது நமக்குப் பெருமை. இப்பெருமைக்காக லட்சக்கணக் கான ரூபாய் பெறுமான இலைகள், அன்றாடம் வீதியில் எறியப்பட்டு வீதியை அசிங்கப்படுத்தி வர வேண்டி யதா? பகுத்தறிவுக் கொண்டு சிந்திக்க வேண்டாமா நீங்கள்? வாழைத் தோட்டங்கள் இல்லையானால், அவ்விடங்களில் எவ்வளவு அவசியமான உணவுப் பொருள்கள் பயிரிடக்கூடும்? வாழைக்காயென்ன அத்யாவசியப் பொருளா? வாழையிலை அறுப்பதால், வாழைக்காய் அதிகம் காய்க்கப்படுவதில்லை. ஆகவே இலைக்கென்று தனித்தோட்டங்கள் சிலர் வைத்து வருகிறார்கள். வாழையுற்பத்தி குறைக்கப்பட வேண் டும். மலர்கள் உற்பத்தியும் குறைக்கப்பட வேண்டும். மக்களும் வாழையிலையில் உண்ணும் பழக்கத்தைக் கைவிட்டுத் தட்டுகளில் உண்ண வேண்டும். மலர் மாலை அணிவித்தலை விட்டுத் துணி மாலையாவது நூல் மாலையாவது அணிவித்தல் வேண்டும். மற்றவர் கள் செய்யாவிட்டாலும், பகுத்தறிவுப் பாதை வழிச் செல்லும் நாமாவது, நாசகரமான இப்பழக்கங்களைக் கைவிடல் வேண்டுவது முக்கியம். இவற்றையெல் லாம்கூட நமக்கு விளக்கிக்காட்டியவர் பெரியார்தான்.

இதை நான் கூறாவிட்டாலும் நமது சரித்திர ஆசிரியர்கள் கூறுவார்கள். நமது தற்கால ஆசிரியர்கள் கூறாவிட்டாலும் பிற்கால ஆசியர்களாவது, இந்நாட்டில் பகுத்தறிவொளியை வீசியவர் பெரியார் என்பதை மறக்காமல் பொறிப்பார்கள். அவர்கள் பொறிக்க மறந்து விடுவார்களானால், அவர்களைச் சரித்திர ஆசிரியர்கள் என்று உலகம் மதிக்காது.

(தொடரும்)


No comments:

Post a Comment