திருநாகேசுவரம், நன்னிலம் பேரூராட்சிகளில் தமிழர் தலைவர் எழுச்சியுரை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 6, 2023

திருநாகேசுவரம், நன்னிலம் பேரூராட்சிகளில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!

 தமிழ்நாடுதான் தலைமை தாங்க வேண்டும் என்று வடநாடு சொல்கிறது!

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்; 

காவிகளின் பீகார் புரளிக்கு ஆயுள், ஒரே நாள்தான்!



தஞ்சை, மார்ச் 6  ‘சமூக நீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல் விளக்கம்’, ‘சேதுசமுத்திரத் திட்டம் மீண்டும் தேவை’ என்று தமிழ்நாட்டின் மிக முக்கியமான பிரச்சினைகளை விளக்கி தமிழ்நாடு முழுவதும்  நடைபெற்று வரும், பரப்புரைப் பயணத்தில் திருநாகேசுவரம், நன்னிலம் ஆகிய பேரூராட்சிகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு எழுச்சி உரை ஆற்றினார்.

திருநாகேசுவரத்தில் தமிழர் தலைவர்!

திருநாகேசுவரம் கீழ வீதி கடைத்தெருவில், 5.3.2023 அன்று மாலை 5 மணிக்குத் தொடங்கி நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு ‘திராவிட மாடல்' விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் எம்.என்.கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய அமைப்பாளர் ந.சிவக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். தஞ்சாவூர் மண்டலத் தலைவர் மு.அய்யனார், மாவட்ட தலைவர் இர.கு.நிம்மதி, பொதுக் குழு உறுப்பினர் சு.விசயகுமார், மாவட்ட செயலாளர் சு.துரைராசு, மண்டல செயலாளர் க.குருசாமி, தஞ்சாவூர் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மு.கோவிந் தராஜன், ஒன்றிய துணை தலைவர் கு.முருகேசன், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் எம்.திரிபுரசுந்தரி, தி.க.விசயகுமார், ப.கபிலன், மாவட்ட வழக்குரைஞர் அணி  செயலாளர் சா.சக்திவேல்,  மேனாள் மாவட்ட செயலாளர் தி.மில்லர், நகர துணை தலைவர் த.அம்பி காபதி,  நகர துணை செயலாளர் ஆ.சிவானந்தம், பெரியார் கல்வி விழிப்புணர்வு சங்க பொறுப்பாளர் நா.தமிழ்மணி, தெ.சரவணன், ப.தனபால், இரா.கண்ணன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் க.திலீபன், ந.குரு மூர்த்தி, ஆ.ஆசைமணி, குடியரசு, நிம்மதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொடக்க உரையாற்றினார். 

நிறைவாக கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

திராவிட இயக்கத்தின் தனிச்சிறப்பு!

ஆசிரியர் பேசுகையில், “இந்த பரப்புரைப் பெரும் பயணத்தில் இது நான்காம் கட்டத்தின் முதல் கூட்டம் என்ற சிறப்பை பெற்றிருக்கிறது திருநாகேசுவரம். அது போலவே, இது 24 ஆம் நாள்! இது 46 ஆம் கூட்டம்! இது ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த நிலையில் எல்லையற்ற மகிழ்ச்சியோடு வெள்ளமென இங்கே திரண்டு எங்களை வரவேற்று இருக்கிறீர்கள். அது இன்னொரு பக்கம் மகிழ்ச்சி! மீண்டும் வைரஸ் சிறு அளவில் இருக்கிற நிலையில் நான் இங்கே உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்” என்று தொடங்கினார். அடுத்து திராவிடர் இயக்கத்திற்கே உரித்தான ஒரு மகத்தான சாதனையை குறிப்பிட்டுப் பேசினார். அதாவது, ‘திரு நாகேசுவரம் திராவிடர் இயக்க வரலாற்றிலும் சரி, என் னுடைய வாழ்விலும் சரி, மறக்க முடியாத ஒரு ஊராகும்’ என்றார். தொடர்ந்து, ‘78 ஆண்டுகளுக்கு முன்பு, தன்னு டைய 13 ஆம் வயதில், திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் இங்கே உரையாற்ற வந்திருந்த தாகவும், தங்களுக்கு உணவு கொடுக்கக் கூடாது என்பதற்காக உணவுக்கடையை மூடி விட்டதாகவும், இஸ்லாமிய சகோதரர் ஒருவரின் பள்ளிவாசல் பக்கத் திலேதான் தங்கினோம். மாலை நேரத்தில் பெரிய கல வரத்தைச் செய்தார்கள். மண்ணை வாரித் தூற்றினார்கள். எதிர்ப்பு களையும் தாண்டி நாங்கள் பேசினோம். இவ் வளவு எதிர்ப்பு இருந்தாலும் இந்த ஊரில் ஒருவராகவே இருந்து இந்த ஏற்பாடுகளைச் செய்தவர் அய்யா ரமணி அவர்கள் என்றும், நிகழ்ச்சி முடிந்து மாணவர்கள் நாங்கள் குடந்தைக்கு, இங்கிருந்து நடந்தே சென்றோம். திராவிடர் இயக்கம் என்றைக்கும் தோற்காது என்பதை சொல் வதற்குத்தான் அன்றைக்கு எதிர்ப்பைச் சந்தித்த நாங்கள், திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் இன்றைக்கு நீங்கள் வெள்ளம்போல் திரண்டு எங்களை வரவேற்று இருக்கிறீர்கள்’ என்றார். மக்கள் கைகளைத் தட்டி ஆசிரியரின் வரலாற்றுக் கண் ணோட்டத்துடன் கூடிய மதிப்பீட்டை உள்ளன்போடு ஆதரித்தனர். .

தமிழ்நாடுதான் தலைமை தாங்க வேண்டும்!

தொடர்ந்து, திராவிடர் இயக்கம் ‘நேற்று பெய்த மழையில் இன்றைக்கு பூத்த காளான் அல்ல' தோழர் களே! இதற்கு 100 ஆண்டுகள் வரலாறு இருக்கின்றது. அதுவும் எதிர் நீச்சல் அடித்த வரலாறுதான்! அந்த வரலாற்றின் நீட்சிதான் தோழர்களே இன்றைக்கிருக்கும் ‘திராவிட மாடல் ஆட்சி!' என்றதும் கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பு போல், மக்கள் கையொலி ஓசை எழுந்து அடங்கியது! ‘‘ஒரு காலத்தில் ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது' என்று சொல்லிக்கொண்டிருந்தோம். ஆனால், இன்றைக்குத் தமிழ்நாடுதான் தலைமை தாங்க வேண்டும் என்று வடநாடு அழைக்கிறது தோழர்களே!'' என்று தொடர்ந்தார். கைதட்டல் அள்ளியது. இது வொன்று போதாதா? ‘திராவிட மாடல்' அரசின் சாத னையை பறை சாற்ற என்று நிறுத்தினார். மக்கள் உள்ளக் கிளர்ச்சியுடன் தங்களின் கைதட்டல்களைத் தொடர்ந்தனர். 

இதுபோன்றதொரு நிலை முன்பே ஏற்பட்டதை ஆசிரியர் என்ற முறையில் மக்களுக்குப் பாடம் எடுப்பது போல் நினைவுபடுத்தினார். அதாவது, மண்டல் தமது தலைமையிலான அரசமைப்புச் சட்ட அதிகாரம் மிக்க குழுவின்படி, இந்தியா முழுவதும் சுற்றி ஆய்வு செய்து, அறிக்கையை தயார் செய்துவிட்டார். அப்போது மண்டலுக்கு பெரியார் திடலில் மிகப்பெரிய அளவுக்கு கொடுத்த வரவேற்பு நிகழ்ச்சியில், ‘நாங்கள் அறிக்கை யைக் கொடுத்துவிட்டோம். அதை செயல்படுத்த வேண் டிய பொறுப்பு பெரியார் திடலுக்குத்தான் உண்டு’ என்று மண்டல் தங்களிடம் சொன்னதைக் குறிப்பிட்டார். அதேபோல லக்னோ, பஞ்சாப் எல்லையில் இருக்கும் குர்தாஸ்பூர் உள்ளிட்ட இடங்களில் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தி திராவிடர் கழகம் இந்தியாவுக்கே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் 27% இட ஒதுக்கீடு பெற்றுத் தந்ததை எடுத்துரைத்து, வடநாட்டுக்குத் தலைமை தாங்க வேண்டிய தகுதியை நாம் முன்பே பெற்று விட்டோம் என்பதை உறுதி செய்தார். பிறகு 69% இட ஒதுக்கீடு பற்றியும், உயர்ஜாதி ஏழைகள் மூலம் ஆபத்து வந்தி ருப்பதையும் சொல்லி “எப்போதும் நமது ஆயுதங்களை கூர்மை மழுங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று உவமை மூலம் புரியவைத்தார். 

மோடி அரசின் கொடுமைகளை வெளிப்படுத்தி, ஈரோடு கிழக்குத் தேர்தலை நினைவுபடுத்தி, “எப்போதும் ஈரோடு தான் வழிகாட்டும்” என்று சொல்லி மக்களுக்கு நாம் எதிர்க்க வேண்டியது யாரை? ஆதரிக்க வேண்டி யது யாரை? என்பதைக் குறிப்பிட்டார். இறுதியாக சேது சமுத்திரத் திட்டத்தின் அவசியம் பற்றிப் பேசி, அது தாமதமானதற்கு யார் யார் காரணம் என்பதை தவறாமல் குறிப்பிட்டு, உரையை நிறைவு செய்தார்.

கலந்து கொண்ட தோழர்கள்!

இந்தப் பரப்புரை கூட்டத்தில் மயிலாடுதுறை மக்கள வைத் தொகுதி உறுப்பினர் செ.ராமலிங்கம், தமிழ்நாடு அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் 

டி.ஆர்.லோகநாதன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் இரா.முருகன், வி.சி.க. இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் குடந்தை தமிழினி, வி.சி.க. தஞ்சை மண்டல செயலாளர் சா.விவேகானந்தன், சி.பி.அய். மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி, இ.யூ.மு.லீக். மாநில செயலாளர் ஆடுதுறை ஷாஜகான், பேரூராட்சி மன்றத் தலைவர் தாமரைச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் தாராசுரம் வை.இளங்கோவன், ஒன்றிய கழகத் தலைவர் சங்கர், நகர தலைவர் மொட்டையன், ஒன்றிய செயலாளர் முருகானந்தம்,  துபாய் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

முடிவில் நகர செயலாளர் திராவிட பாலு நன்றி கூறினார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து நன்னிலம் நோக்கி பயணக் குழு புறப்பட்டது.

நன்னிலத்தில் தமிழர் தலைவர்!

நன்னிலம் பேருந்து நிலையம் அருகில் மாலை 6 மணிக்கு நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு ‘திராவிட மாடல்' விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வீ.மோகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராசு அனைவரையும் வரவேற்று பேசினார். மண்டல தலைவர் கி.முருகையன், ப.க. ஆசிரியரணி மாநில அமைப்பாளர் இரா.சிவக்குமார், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே. அருண் காந்தி, மண்டல மகளிரணி செயலாளர் சி.செந்தமிழ் செல்வி, திராவிட விவசாய தொழிலாளரணி மாநில செயலாளர் வீரையன், நன்னிலம் ஒன்றிய தலைவர் கலியபெருமாள், ஒன்றிய செயலாளர் தன்ராஜ், ஒன்றிய அமைப்பாளர் பொய்யாமொழி, மண்டல செயலாளர் கிருஷ்ணமூர்த்தி , மாவட்ட அமைப்பாளர் ச.பொன்முடி,  மாவட்ட விவசாய அணி தலைவர் பி.ரெத்தினசாமி, மாவட்ட துணை செயலாளர் கோ.இராமலிங்கம், மாவட்ட மகளிரணி தலைவர் இரா.மகேஸ்வரி, மாவட்ட மகளிரணி செயலாளர் சரசுவதி, ஒன்றிய ப.க. தலைவர் எஸ்.கரிகாலன், சு.ஆறுமுகம், அரங்க. ஈ.வே.ரா. பி.சாமிநாதன், கே.பிளாட்டோ, அ.ஜெ.உமாநாத்,  நாத்திக.பொன்முடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரா விடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் தொடக்க உரையாற்றினார். 

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

கூடிக்கொண்டே வருகின்ற மக்கள் எழுச்சி!

திருநாகேசுவரத்தையும் நன்னிலம்  மிஞ்சி இருந் ததைக் கண்டு ஆசிரியர், ”எங்கு பார்த்தாலும் மக்கள் - எழுச்சியோடு கூடியிருக்கிறீர்கள். நான் இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. மிகச்சிறப்பாக ஏற்பாடு களைச் செய்துள்ள தோழர்களை, நெஞ்சாரப் பாராட்டு கிறோம்” என்றே தொடர்ந்தார். தொடர்ந்து, ”இன்றைக்கு இந்திய அளவில் தமிழ்நாட்டில்தான் ஓர் ஒப்பற்ற ‘திராவிட மாடல்' ஆட்சி நடக்கிறது என்று நாமல்ல, இந்தியாவே சொல்கிறது. அப்படிப்பட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்களில் முதல் முதலமைச்சர் என்று பெயர் எடுத்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இதைவிட தமிழ்நாட்டுக்கு, தமிழர்களுக்கு வேறென்ன பெருமை வேண்டும்?” என்று அழுத்தம் திருத்தமாகக் கேட்டபோது, மக்கள் மிகுந்த எழுச்சியோடு கைகளைத் தட்டி மகிழ்ந்தனர். அந்த முதலமைச்சர் தமது தன்னடக்கத்தின் வெளிப் பாடாக, அண்ணா பதவி ஏற்றபோது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்வியையும், அதற்கு அண்ணா அவர்கள் அளித்த பதிலையே தாமும் சொல்லி, இந்த ‘திராவிட மாடல்' ஆட்சி என்பது நீதிக்கட்சியின் நீட்சி என்பதை நிரூபித்தார். நீதிக்கட்சி பற்றி பேசியதும் அது தொடர்பான சில முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அதாவது, டாக்டர் நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், ‘திராவிட தளபதி' என்று அழைக் கப்பட்ட, தந்தை பெரியாரால் ‘திராவிட லெனின்' என்று சொல்லப்பட்ட சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் போன்ற தலைவர்கள் ஒரு சமத்துவ சமுதாயத்தை அமைக்க முற்பட்டனர் என்று இந்த ‘திராவிட மாடல்' அரசின் முன் பகுதி வரலாற்று நாயகர்கள் சிலரை நினைவுபடுத்தினார். அந்த நீதிக்கட்சி செய்த சாதனைகளை  மக்கள் நன்கு தெளிவுபெறும் வகையில் விவரித்தார்.

காவிகள் புரளியிலேயே எத்தனை நாள் வாழ்வது?

மேலும் அவர், “அய்ந்து பெண் குழந்தைகளை பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பது பழைய மொழி! இன்றைக்கு அய்ந்து பெண் குழந்தைகளை பெற்றால் அரசன், அரணாகவே இருப்பான் - ஆனால், ‘திராவிட மாடல்' ஆட்சியில் பெண்கள் அரசுக் கல் லூரியில் படித்தால் ஒரு குடும்பத்தில் அய்வர் படித்தாலும் அனைவருக்கும் தலா ரூ.1000/- அவர்களின் வங்கிகளில் வரவு வைக்கப்படும்” என நகைச்சுவையோடு சொல்லி, அதில் உள்ள ஆழமான கருத்தையும் விளக்கினார். மக்களும் வாய்விட்டுச் சிரித்தாலும், ஆசிரியர் சொன்ன கருத்தையும் நன்கு உள்வாங்கிக் கொண்டனர். தொடர்ந்து திராவிடர் இயக்கம் பெண் விடுதலைக்கு என்னென்ன செய்தது? அதனால் ஏற்பட்டுள்ள ஆக்கப் பூர்வமான மாற்றங்களை அவாள் நாளிதழான ‘தின மணி'யில் இருந்தே படித்துக் காட்டினார். அதேபோல ‘இல்லம் தேடிக் கல்வி', ‘மக்களைத் தேடி மருத்துவம்' என்று ‘திராவிட மாடல்' அரசின் சாதனைகளை அடுக்கி விட்டு, இப்படிப்பட்ட ஆட்சிக்குத் தான் காவிகள் ஆபத்தை உண்டாக்கப் பார்க்கிறார்கள் என்பதையும் இணைத்துச் சொன்னார். ‘‘அந்த ஆபத்து நேரிடையான தல்ல, அது ‘நீட்’ மூலம் வருகிறது; ’கியூட்’ மூலம் வருகிறது; ‘புதிய தேசியக்கல்வி மூலம் வருகிறது'' என்று சொல்லி, உச்சநீதிமன்றம் நீட் தொடர்பாக சொல்லியிருந்த கருத்தையும் சேர்த்துச் சொன்னார். மேலும் அவர், தமிழ்நாட்டு முதலமைச்சரின் பிறந்த நாள் அன்று பீகாரிலிருந்தும், உத்தரப்பிரதேசத்திலிருந்தும், காசுமீரத் திலிருந்தும் வந்திருந்த தேசியத் தலைவர்கள் தமிழ்நாடு தான் இந்தியாவுக்குத் தலைமை தாங்க வேண்டும் என்று பேசியதையும், காசுமீரத் தலைவர், ஏன் ஸ்டாலின் பிரதமர் ஆகக் கூடாது? என்று கேட்டதையும் பார்த்த சில வயிற்றெரிச்சல் பேர்வழிகள், பீகார் அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் சிண்டு முடியும் வேலையில் ஈடு பட்டதையும், கெட்டிக்காரன் புளுகு தான் எட்டு நாட்கள் நீடிக்குமேதவிர காவிகளின் புளுகு அடுத்த நாளே அவர்களின் முகத்திரையைக் கிழித்து விட்டதாகவும் சொல்லிவிட்டு, “சிலர் புரளியிலேயே வாழலாம் என்று கருதுகிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் எச்சரிக் கையாக இருக்க வேண்டும்.” என்றார். மக்கள் ஆமாம் என்பது போல தலையாட்டியபடியே கைதட்டினர். தொடர்ந்து 2024 தேர்தலில் நாம் என்ன செய்ய வேண் டும் என்பதை கோடிட்டுக் காட்டினார். பா.ஜ.க. ஆட்சி மக்களை ஏமாற்றிய மோடியைச் சாடினார். சேது சமுத் திரத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு செழுமை பெரும் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் காட்டி, தனது உரையை நிறைவு செய்தார்.

கலந்து கொண்ட தோழர்கள்!

இந்த பரப்புரை கூட்டத்தில் தி.மு.க.வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் வே.மனோகரன், குடவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோதி ராமன், தி.மு.க.பேரூர் கழக செயலாளர் பக்கிரிசாமி, நன்னிலம் பேரூராட்சி மன்றத் தலைவர் ராஜசேகரன், ம.ம.க. மாவட்ட செயலாளர் முஜிபுர் ரகுமான், த.வா.க.மாவட்ட செயலாளர் செல்வம், மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் சண் முகசுந்தரம், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் வீரமணி, தி.மு.க. இலக்கிய அணி பொறுப்பாளர் புதுவை தியாகு, சி.பி.அய். ஒன்றிய துணை செயலாளர் செந்தில், காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத் தலைவர் வி.கோபால், மக்கள் அதிகாரம் மாவட்ட அமைப்பாளர் எம். ஆசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் நகர தலைவர் சஞ்சீவி நன்றி கூறினார். 

கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், கழக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன்,பெரியார் வீர விளையாட்டு கழக மாநில தலைவர் பேரா.ப.சுப்பிர மணியம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோர் பங்கேற்றனர்

                                                         .................................

பொதுக் கூட்டமா? மாநாடா?

கும்பகோணம் - காரைக்கால் சாலையில் உள்ள நான்கு வழிச்சாலையில் (ரவுண்டானா) இருந்து ஏறக் குறைய ஒரு மைல் நீளத்திற்கும் மேலாக சாலையின் இரு மருங்கிலும் கழகக் கொடிகள் பட்டொளி வீசிப்பறந்த காட்சியும், வரிசையாக இரு மருங்கிலும் கட்டப்பட்டிருந்த வண்ணப் பதாகைகளும், காண்கின்ற இடமெல்லாம் சுவரொட்டிகளும், ஒருவழியாக மேடைக்கு வந்து விட்டோம் என்றதும் நம்மை வர வேற்கும் பொதுக்கூட்ட அலங்கார வளைவும், நெடுக் கில் மட்டுமே கொடிகள் பறந்தது போய், குறுக்கிலும் கடைவீதித் தெருவையே அடைத்தது போல் கொடிகள் கட்டப்பட்டு இருந்த எழுச்சியும், மேடையே திராவிடக் கோட்டையாகவும், அதன் உச்சியில் கழகக் கொடி காற்றில் படபடத்து ஆடுகிறது என்ற வண்ணம் தோழர்கள் சிறப்பாக அமைத்திருந்த மாட்சியும், மக்கள் திமுதிமுவென கூடியிருந்து ஆசிரியர் வருகிற பாதை நோக்கி பார்த்த வண்ணம் இருந்த காட்சியையும் காண்கையில் இதுவென்ன திராவிடர் திருவிழாவா? பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளா? என்று நம்மை மயக்கம் கொள்ள வைத்துவிட்டன. திருநாகேசுவரம் நிகழ்ச்சியின் ஏற்பாடுகள். இத்தனைக்கும் திருநாகேசு வரம், தஞ்சை மாவட்டத்தின் ஒரு பேரூராட்சி! அவ் வளவு தான்! பேரணிதான் பாக்கி, அதுவும் இருந் திருந்தால் மாநாடுதான்! இந்தத் திருவிழா தடபுடல் களுக்கேற்ப காவல் துறையினரும் குவிக்கப்பட் டிருந்தனர். இத்தனையும் போதாதென்று ஆசிரியர் மேடைக்கு வருகிறபோது வெடி வைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, ஆசிரியர் வருகையை திரு நாகேசுவரம் தோழர்கள் கொண்டாடித் தீர்த்துவிட் டனர். மக்களும், ஆசிரியர் பேசுவதைக் காண கூட்டம் நடக்கும் அந்தக் கடை வீதியையே அடைத்தது போல் ஏராளமாய் திரண்டிருந்தனர். அந்தளவுக்கு விளம்பரம் ஆகியிருந்தது. நான்காம் கட்டத்தின் முதல் கூட்டமே முத்திரை பதித்த கூட்டமாகிவிட்டது.

...................................

88 வயதுக்காரரின் கொள்கைப்பாசம்!

ஆசிரியர் வைரஸ் பரவலுக்கான எச்சரிக்கையுடன் மாஸ்க் அணிந்திருந்தார். முன்கூட்டியே தோழர்கள் ஆசிரியர் மேடையேறியதும் மேடையிலிருந்த அனை வருக்கும் மாஸ்க் கொடுத்து அணிந்து கொள்ளும் படியும், ஆடையைக்கூட போர்த்த வேண்டாம். ஆசிரியரின் கையில் கொடுத்து விடுங்கள் என்றும் கூறியிருந்தனர். பெரும்பாலும் அப்படித்தான் நடந்து கொண்டிருந்தது. இந்த நடைமுறைகளெல்லாம் முடிந்துவிட்ட நிலையில் ஆசிரியர் பேசத் தொடங்கும் போது, வலது கையில் கருப்பு, சிவப்பு கொடி சுற்றிய தடியை ஊன்றியபடியும், இடது கையில் ஒரு துணிப்பையையும் எடுத்துக்கொண்டு ஒரு முதியவர் தடுமாறியபடி மேடையில் ஏற முயன்றார். அங்கே நின்ற தோழர்கள் அவரை விசாரித்த பின்னர் வழிவிட்டனர். தடியை மேடையின் ஒரு ஓரமாக வைத்து விட்டு பையுடன் ஆசிரியரை அணுகினார். அதிலி ருந்து ஒரு பயனாடையை எடுத்து, நாடாளுமன்ற உறுப்பினருக்குப் போர்த்த முயன்றார். அவரோ, மரி யாதை காரணமாக அவரைத்தடுத்து, ஆசிரியருக்கு போடுங்கள் எனக்கெதற்கு என்று தடுக்க முற்பட்டார். அந்த முதியவர் எதுவும் பேசவில்லை. ஆசிரியருக்கு தனியாக ஆடை வைத்திருக்கிறேன் என்பதைப் போல், உடனே பையை கீழே வைத்து, அதிலிருந்து ஒரு கருப்பு வண்ணம் கொண்ட பயனாடையை வெளியில் எடுத்தார். அனைவரின் முகத்திலும் ஓ, ஆசிரியருக்குத் தனித்தன்மையான ஆடையா? என்பது போல் மகிழ்ச்சி படர்ந்தது. கருப்பு ஆடை ஆசிரியருக்கு போர்த்தப்பட்டது. ஆசிரியர் இது போன்ற உள்ளக்கிளர்ச்சி ஏற்படுகின்ற போதெல்லாம் ஆடையை அணிவித்தவருக்கே திருப்பி அணிவித்து விடுவார். இந்த முறையும் அப்படித்தான் செய்தார். அந்த முதியவருக்கு எப்படித்தான் வந்ததோ அந்த வேகம். மின்னல் வேகத்தில் தன் கழுத்திலிருந்த ஆடையை எடுத்து மறுபடியும் ஆசிரியருக்குப் போர்த்தினார். மேடை மட்டுமல்ல, மக்களும் உள்ளக் கிளர்ச்சியை படபடவென கைகளைத் தட்டியும், கலகலவென சிரித்தும் வெளிப்படுத்தினர். பின்னர் தோழர்கள் கவனத்துடன் அவர் மேடையிலிருந்து இறங்க உதவினர். அவருக்கு வயது 88! தி.மு.க.வைச் சேர்ந்தவராம்! பையா ரத்தினம், பெயராம்! பக்கத் திலுள்ள கீழத்தூராம்! ஏதோ ஒரு பெருத்த மனநிறை வுடன் கீழே வந்த அந்த முதியவர் ஆசையுடன் ஆசிரியர் பேசுவதை கேட்க ஆயத்தமானார்.



No comments:

Post a Comment