சாமியார்கள் ஜாக்கிரதை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 23, 2023

சாமியார்கள் ஜாக்கிரதை!

சாமியார்கள் எத்தகைய மோசடிப் பேர் வழிகள் என்பதற்கு நித்தியானந்தா, ராம்தேவ் போன்றவர்களே போதுமானவர்கள்.

நித்தியானந்தா தானே நிறுவியதாகக் கூறிக் கொள்ளும் கைலாசா நாடு, அமெரிக்காவின் 30 நகரங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாகத் தகவல் வெளியானது.

இந்தியாவில் பாலியல் வழக்குகளில் சிக்கி தப்பி ஓடி, தலைமறைவான நித்தியானந்தா, உலகின் முன்மாதிரி நாடாகப் பார்க்கப்படும் அமெரிக்காவிலேயே 30 நகரங்களுடன் ஒப்பந்தம் செய்து சாதித்தது எப்படி என்ற கேள்வி அந்நாட்டையே உலுக்கியது.

தன்னைத் தானே கடவுள் என்று கூறிக்கொள்ளும் சாமியார் நித்தியானந்தா மீதான சர்ச்சைகளுக்குப் பஞ்சமே இல்லை. பிரபல நடிகையுடன் இவர் இருப்பதைக் காட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தின.

இதன் பிறகு பெங்களூருவை அடுத்த பிடதியில் இருந்து முழு நேரமாக இயங்கத் தொடங்கிய நித்தியானந்தா, மதுரை ஆதினத்தின் வாரிசாக அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த சர்ச்சை ஓய்வதற்குள், பாலியல் வல்லுறவு, பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளில் சிக்கிக் கொண்டார். இதனால், எழுந்த நெருக்கடி காரணமாகத் தலைமறைவான அவர், 2019ஆம் ஆண்டு நாட்டை விட்டே தப்பிச் சென்றார். அதுமுதல் அவர் எங்கே இருக்கிறார் என்பது இதுவரை தெரிய வரவில்லை.

தலைமறைவாக இருந்த நித்தியானந்தா 2019ஆம் ஆண்டின் இறுதியில் ஹிந்துக்களுக்கு என 'கைலாசா' என்ற தனிநாட்டை உருவாக்கி இருப்பதாக திடீரென அறிவித்தார்.

கைலாசாவின் இணையதளமாகக் குறிப்பிடப்படும் (https://kailaasa.org)   இணைய முகவரியில் காணப்படும் அந்தத் தளத்தில் கைலாசா என்பது எல்லைகள் இல்லாத தேசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் சொந்த நாட்டில் முறைப்படி இந்துத்துவத்தைக் கடைப்பிடிக்க முடியாத நிலையில் உலகம் முழுவதும் வாழும் ஹிந்துக்களுக்கான நாடு இது என்றும் கூறிக் கொண்டார்.

அவரது இருப்பிடம் எங்கே என்று இதுவரை அறியப்படாத நிலையில், இந்த இணையதளம் வாயிலாக நித்தியானந்தாவின் போதனைகள் அடங்கிய காட்சிப் பதிவுகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. வேடதாரி நித்தியானந்தா எங்கே இருக்கிறார்? அவர் உருவாக்கியதாகக் கூறிக்கொள்ளும் கைலாசா நாடு எங்கே இருக்கிறது என்பது புரியாத கேள்வி.

அந்த வேளையில்தான், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரத்துடன் கைலாசா நாடு 'சிஸ்டர் சிட்டி' ஒப்பந்தம் செய்து கொண்டதாக கடந்த ஜனவரி 12ஆம் தேதி காட்சிப் பதிவுகள் மற்றும் ஒளிப்பட ஆதாரத்துடன் செய்தி வெளியானது.

அந்த காட்சிப் பதிவில் நெவார்க் நகரத்தில் உள்ள சிட்டி ஹாலில் அந்நகர பிரதிநிதிகளுடன், கைலாசா பிரதிநிதிகள் கையெழுத்திடும் காட்சி இடம் பெற்றிருந்தது. இதன்மூலம் கைலாசாவை இறையாண்மை பெற்ற நாடாக அமெரிக்கா அறிவித்துள்ளதாக நித்தியின் சீடர்கள் பெருமிதம் தெரிவித்து வந்தனர்.அடுத்து வந்த நாள்களில், அய்.நா. ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் கைலாசா பிரதிநிதிகள் உரையாற்றிய காட்சிப் பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியானதும், "நித்தியானந்தா உண்மையிலேயே கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி விட்டாரோ?  கைலாசா தனி நாடு உண்மைதானோ?" என்ற சந்தேகம் எதிர்ப்பாளர்கள் மத்தியிலும் உருவானதுதான் வேடிக்கை!

இதையடுத்து உண்மையறிய களத்தில் இறங்கிய பி.பி.சி.க்கு மின்னஞ்சல் வாயிலாக அய்.நா. பதில் அளித்தது.

"பொது விவாதங்கள் என்ற தலைப்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ஆர்வமுள்ள எவரும் பங்கேற்க முடியும்" என்று இந்த  குழுக்களை, மேற்பார்வையிடும் அய்.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் ஊடக அதிகாரி விவியன் குவோக் தெரிவித்தார்.

இரு கூட்டங்களிலும் கைலாசா பிரதிநிதிகள் பதிவு செய்த கருத்துகள் சற்றும் பொருந்தாத வகையில் இருந்ததால் அவற்றை நிராகரிப்பதாக அவர் பதில் அளித்திருந்தார். இதன்மூலம், நித்தியானந்தா கூறிக் கொண்டபடி, கைலாசாவை தனிநாடாக அய்.நா. அங்கீகரிக்கவே இல்லை என்பது நிரூபணமானது.கைலாசாவுக்கு அய்.நா. அங்கீகாரம் என்ற நித்தியானந்தாவின் கூற்று பித்தலாட்டமானது என்று நிரூபணமான நிலையில்தான், அடுத்த அதிர்ச்சி தரும் தகவல் அதே அமெரிக்காவில் இருந்து வந்துள்ளது.

அதாவது, நித்தியானந்தாவின் கற்பனை தேசமான 'கைலாசா'வுடன் நெவார்க் நகரம் மட்டுமல்ல, 30-க்கும் மேற்பட்ட அமெரிக்க நகரங்கள் 'சிஸ்டர் சிட்டி' ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக பி.டி.அய். நிறுவனம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தது.

கைலாசாவுடன் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாகக் கூறப்பட்ட அமெரிக்க நகரங்கள் மேற்கே பசிபிக் கடற்கரை முதல் கிழக்கே அட்லாண்டிக் கடற்கரை வரை விரவிக் கிடக்கின்றன. வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள ஜாக்சன்வில்லே நகரமும் அவற்றில் ஒன்று.

"எங்கள் பிரகடனம் ஒன்றும் அங்கீகாரம் அல்ல. ஒரு விண்ணப்பத்திற்கான பதில்தான் அது. அந்த விண்ணப்பத்தில் இருந்த விவரங்களை நாங்கள் சரிபார்க்கவில்லை," என்று ஜாக்சன்வில்லே நகரம் விளக்கம் அளித்துள்ளது.

இதேபோல், கைலாசாவுடன் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்து கொண்ட முதல் நகரமான நெவார்க்கும் தற்போது பின்வாங்கியுள்ளது. இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தாவால் ஏமாற்றப்பட்டதை நெவார்க் சிட்டி ஹால் ஒப்புக் கொண்டுள்ளது. கைலாசா என்ற நாடே இல்லை என்பதைக் கண்டுபிடித்ததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக நெவார்க் மேயர் அறிவித்துள்ளார். 

நித்யானந்தாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இதனை எழுத வில்லை.சாமியார்களின் யோக்கியதை - இன்று உலகமே காறி உமிழும் அளவுக்கு அம்பலமாகி வருவதை அம்பலப்படுத்தத்தான்.

 வெட்கக்கேடு! காவிகளா, காலிகளா என்று கேட்கும் நிலைதானே இன்று!


No comments:

Post a Comment