வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 23, 2023

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

 சில எண்ண ஓட்டங்கள்: 

45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் - எனது நினைப்பும்! - (4)

திருச்சியில் என்னைச் சந்தித்து வாழ்த்துக்கூறிய 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியாளர் நண்பர் கோபால் அவர்கள் சொன்னது எனக்கு - மனதிற்கு மிகவும் தெம்பூட்டியாகவும், தயக்கமின்றிப் பணி  தொடர ஒரு நல்ல ஊக்கச் செயலியாகவும் பயன்பட்டது.

"மற்ற அரசியல் கட்சிகளில் புதிதாக தலைமைப் பொறுப்புக்கு வருபவர்கள் எதில், எப்படி முடிவெடுப்பதென்பதில் சற்றுக் குழப்பமாக இருக்கும். அதனால் அவர்கள் முடிவெடுத்து செயல்படுவதில் குழம்புவதோடு, மற்றவர்களை யும் குழப்புவர்கள். உங்களுக்கு உங்கள் இயக் கத்தை எப்படி நடத்தி, என்ன முடிவினை எப்பிரச்சினைகளில் எடுப்பது, என்பதை அய்யா பெரியார் முன்மாதிரியாகவே (Self Precedents)    நடத்திக் காட்டியுள்ளார்; அவை உங்களுக்கு 'Procedure code'  (வழிகாட்டும் சட்டநெறி முறைகள்) மாதிரிகளாக உள்ளன. அவற்றை நீங்கள் கண்ணை மூடிப் பின்பற்றினால் போதுமே!

மேலும் அம்மா மணியம்மையார் அவர்கள் அவற்றை எப்படிப் பின்பற்றி உங்கள் இயக்கத்தை வழி நடத்திடுவது என்பதைச் செயல் மூலம் - இக்கட்டான நெருக்கடி காலத்திலும்கூட நடை முறைப்படுத்தி வெற்றி அடைந்துள்ளதானது மேலும் உங்களுக்கு பலம் ஊட்டுவதாகும். அதைவிட உங்கள் தோழர்கள் கட்டுப்பாடு மிகுந்தவர்கள் - எதையும் எதிர்பாராமல் இயக்கப் பணிகளைச் செய்பவர்கள்.

ஒரு சிலர் உங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பது அவர்களுக்குத் தலைமை கிடைக்க வேண்டும் என்ற ஆத்திரம், பொறாமையால் என்பதை விவரம் அறிந்த பொதுவானவர்கள் அனைவரும் அறிவார்கள்.

பிறகு எதற்கு உங்களுக்குக் கவலை - உங்களது அனுபவமும், அய்யா, அம்மா காட்டிய பாசமும், அவர்களிடம் நீங்கள் வைத்துள்ள மரியாதையும், செயலும், எல்லாத் திறமைகளும் சட்ட ஞானம் உள்பட உங்களுக்குள்ளது. எனவே பெரியார்  தேர்வு என்றால் சாதாரணமாக அது இருக்காது" என்று கூறி ஒருவகையான எனது முடிவற்ற தைரியத்திற்கு முன்னுரை எழுதுவது போல் கூறினார்.

நன்றி கூறி எங்கள் பணியை - பிரச்சாரத்தை புலவருடன் தொடங்கவிருந்த நிலையில், அய்யா டிரஸ்ட்டினை இயங்க விடாமல் செய்து, தமிழ்நாடு அரசே, தனி அட்வகேட் கமிஷன் அமைத்து, வழக்கு முடியும் வரை - தற்போது வீரமணி வசம், அவரின் நிர்வாகத்தின்கீழ் அது இயங்காமல் தடையாணை பிறப்பிக்க, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரிஜினல் சைட் சூட்  (O.S.)  ஒன்றினை டி.எம். சண்முகம், திருவாரூர் கே. தங்கராசு, சிதம்பரம் கு. கிருஷ்ணசாமி ஆகியோர் வழக்கினை தொடுத்த செய்தியும் கிடைத்தது!

நான் பொறுப்பு ஏற்ற (18.3.1978) ஓரிரு வாரத்திற்குள் இந்த சட்ட நடவடிக்கைகள் -இயக்கத்தை தனியே உடைக்கத் தீவிர முயற்சி - இதற்கு எம்.ஜி.ஆர். அரசு மறைமுக ஆதரவு - இத்தகைய வசதிகளுடன் களம் இறங்கினர்!

என்றாலும் நான் அமைதியாக, சட்டபூர்வமாக வழக்குகளை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டுமென ஆழமாக யோசித்து, அனுபவம் நிறைந்த பலரின் அறிவுரையை பெற வேண்டிய முறையில் பெற்று, தானடித்த மூப்பாக எந்த நிலைப்பாட்டினையும் எடுக்காமல், பதற்றமின்றி, நிதானமாக எதிர்கொள்ளும் நடவடிக்கைகளைப் பற்றி சிந்தித்து செயல்படத் துவங்கினேன்.

முன்அனுபவம் இல்லாத எனக்கு - பலரின் கண்ணை உறுத்தும் பெரியார் அறக்கட்டளையை எப்படி தங்கள் கையகப்படுத்துவது,  அய்யா மறைந்து, அம்மா தலைமையேற்று அறக்கட்டளை வருமான வரிச் சிக்கல் உள்பட பல தொல்லைகளிலிருந்து மீள முடியாதபோது  - அம்மாவிடம் அனுதாபத்துடன் இரங்கல் தெரிவித்து விட்டு, "என்ன இருந்தாலும் நீங்கள் ஒரு விதவை தானே (Widow)  உங்களால் எப்படி எல்லாவற்றையும் சமாளிக்க முடியும் என்று தெரியவில்லை. எங்களைப் போன்றவர்களின் அறிவுரை கேட்டு - உதவி பெற்று நடந்து கொள்ளுங்கள்" என்று சற்றும் பண்பற்ற 'விதவை'கள் (Widow)   போன்ற வார்த்தைகளால் அம்மாவைப் புண்படுத்தியபோது, (நான் அருகில் கொதிக்கும் கோபத்துடன் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தவன்)  அந்த பெரிய மனிதர் - (ஒரு வகையில் அம்மாவுக்கு உறவுக் காரரும்கூட!) "அம்மா அப்படி ஒன்றும் நான் தனி ஆள் இல்லீங்க; எனது இயக்கத் தோழர்கள் எனக்கு எப்போதும் கூடவே துணையாக கடைசி வரை நிற்பார்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் உங்கள் யோசனைக்கு நன்றி!" என்று முகத்தில் அறைந்தாற்போல பதில் கூறியவுடன், ஒரு கிலோ அசடு வழிய அந்தப் "பெரிய பெரிய மனிதர்" என்ற போலி அந்தஸ்தில் மறைந்து கொண்டுள்ள  - உண்மையில் சிறிய மனிதர் விடை பெற்றார்.

அவர் ஆறுதல் கூற வந்ததின் உள்நோக்கம் எங்கள் இருவருக்கும் நன்கு துல்லியமாய் விளங்கியது! (அந்தப்படி மற்றொரு வள்ளல் வேடம் போட்ட பெருமகனாரும், கேரளத்தில் எங்கெங்கு வசதி படைத்த பெண்களின் சொத் துக்கள் உள்ளதை அடையாளம் கண்டு அங்கு சென்று தனது ஆதிக்கத்தின் கீழ் அவற்றைக் கொண்டுவர முயன்று புதுவகை ஆதரவு காட்டும் உள்ளொன்று வைத்து புறமொன்று கூறும் உறவு கொண்டவரும் அம்மாவிடத்தில் எப்படி ஆறுதல் உரை கூறினார் என்பது மற்றொரு விசித்திரமான அனுபவப் பாடம் எங்களுக்கு)

அதை ஏன் இப்போது நினைத்து நாம் நமது நேரத்தை, எழுத்தை வீணாக்க வேண்டும் என்பதால் விட்டு விடுகிறேன்.

புகழ் பெற்ற போலி மனிதர்கள் போக்கு அப்படி!

இந்த நிலையில் எனது வழக்கினை எதிர் கொள்ள ஒரு முக்கியமான வரை அணுகி நான் நேரே செல்லாமல் அறிவுரை - மூதுரை கேட்க விரும்பி ஆவன செய்தேன்.

அது பயனுள்ள செயல்முறையை வகுக்க எனக்கு பெரிதும்  உதவியது.  

(மேலும் வரும்)


No comments:

Post a Comment