நான் கண்ட அழகர்சாமி - எஸ்.வி.லிங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 26, 2023

நான் கண்ட அழகர்சாமி - எஸ்.வி.லிங்கம்

ஜில்லா போர்ட் தலைவர் பன்னீர்ச் செல்வம் அவர்கள் 1927-ஆம் ஆண்டிலிருந்து சுயமரியாதைக் கொள்கைகளைப் பெரிதும் ஆதரித்து வந்தார். பட்டுக்கோட்டையில் தோழர் மாரிமுத்து என்ற ஆதித் திராவிட உபாத்தியாயர் தாலுகா போர்ட் உறுப்பினராக நியமனம் செய்யப் பட்டார். இவர் எங்கள் கூட்டங்களுக்கு வருவார். தோழர் நாடிமுத்து அவர்கள் அப்போது தான் பல இலட்சம் பெறுமான சொத்துக்குச் சொந்தக்காரராகி தாலுகா போர்ட் தலைவராக வந்தார். அது வரை தாலுகா போர்டில் ஆதித் திராவிடரே கிடையாது. தாலுகா போர்டின் முதல் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர், தா.போ. உறுப்பினர்களில் பிரபுக்களாக உள்ள பலர், தோழர் நாடிமுத்து அவர்களைக் கலந்து பேசினார்கள். ஒரு பறையன் நமக்குச் சமமாகத் தாலுகா போர்டில் உட்காருவதா என்று கேட்டார்கள். அதெப்படி உட்கார முடியுமென்று இரும்புப் பெட்டிகள் முடிவுகட்டி  விட்டன. இதைக் கண்டித்துப் பல கூட்டங்களை நாங்கள் நடத்தினோம். அழகர் சாமிதான் இதற்குத் தலைவர். ஜில்லாவின் மிகப் பெரிய மனிதர்கள் என்று கருதப்பட்டவர்களைத் தைரியமாக எதிர்த்ததால், அழகர்சாமி அனைவராலும் அறியக் கூடிய நிலையை அடைந்துவிட்டார். நாலைந்து முறை தாலுகா போர்ட் கூட்டம் நடை பெற்றது. ஒவ்வொரு கூட்டமும் கதவு சாத்தப்பட்டோ அல்லது வேறு இடங்களிலோதான் நடந்தது. ஆனால், வெளியே கண்டனக் கூட்டங்கள் பலமாக நடந்தவண்ணம் இருந்தன. எங்கள் கூட்டங்களுக்கு 144 போடுவார்கள். தோழர் நாடி முத்து அவர்களின் செல்வாக்குக் குறைய வேண்டுமென்பதற்காக ஜில்லாவெங்கும் பல கூட்டங்கள் போடுவோம். துண்டுப் பிரசுரங்கள் வெளியிடுவோம். இக்காலத்தில்  டாக்டர் சுப்பராயன் அவர்கள் முதல் மந்திரியாக இருந்தார். தோழர் நாடிமுத்து அவர்கள் சென்னைக்குப் போகிறார் என்று தெரிந்தால், நானும் அழகர்சாமியும் அதே வண்டியில் சென்னை செல்வோம். அவர் தம்முடைய செல்வாக்கைப் பயன்படுத்தித் தோழர் மாரிமுத்து அவர்களைத் தாலுகா போர்டிலிருந்து  விலக்க முயன்றார். நாங்களும் மந்திரியைக் கண்டு எங்களின் நியாயமான போராட்ட உரிமையைக் கூறுவோம்.

நிலைமை இவ்வாறு இருக்கும் போது, தோழர் அழகர்சாமி, நம்முடைய போராட்ட முறையை வேறு விதமாக மாற்ற வேண்டுமென்று கூறினார். உடனே ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து, தோழர் மாரிமுத்து வராத தாலுகா போர்ட் கூட்டம் செல்லாதென்றும், தோழர் நாடிமுத்து அவர்கள் மீது நம்பிக்கையில்லை என்றும், அவர்மீது ஏன் நன்னடத்தை ஜாமீன் வாங்கக்கூடாதென்றும் கேட்டோம். இது எவ்வளவு பெரிய தப்பு என்று எங்களுக்கு அக்காலத்தில் தெரியாது. இந்தப் போராட்ட காலத்தில் தோழர் நாடிமுத்து அவர்கள் என்னை அடிக்கடி கூப்பிடுவார். நான் அவர் சொல்வதையெல்லாம் கேட்டபின்னர், ஏதாவது சமாதானம் செய்து வைப்பதாகச் சொல்வேன். எதிரியிடம் போய் இவ்விதம் எல்லாம் பேசுவது கூடாதென்று அழகர்சாமி கண்டிப்பார். முடிவாக, முதலமைச்சர், தோழர் நாடிமுத்து அவர்களின் செயலைக் கண்டித்து, மாரிமுத்து அவர்கள் வராது நடத்தப்பட்ட தாலூகா போர்ட் கூட்டத் தீர்மானங்கள் செல்லுபடியாகாதென்றும், தோழர் மாரிமுத்து அவர்களைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தடைசெய்யும் தாலூகா போர்டை ஏன் கலைக்கக் கூடாதென்பதற்குச் சரியான காரணம் சொல்லும்படியும் முதலமைச்சர் கேட்டிருந்தார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், நியாயமாக ஆதித்திராவிடர் விஷயத் தில் முதல் மந்திரிக்கு அனுதாபம் இருந்ததும், தோழர் நாடிமுத்து அவர்களைப் பற்றி அழகர்சாமி செய்த கிளர்ச்சி வெற்றியடைந்த ததும்தான். போர்டைக் கலைத்தால் பன்னீர்ச்செல்வம் பயப்படுவார் என்று அழகர்சாமி மந்திரியிடம் சொல்லியிருந்தார். இதை வெகு நாள் கழித்துத்தான் எங்களிடம் அவர் சொன்னார். அன்றைய டாக்டர் சுப்பராயன் மந்திரிக்கட்சி, பெரியார் இராமசாமியை ஆதரித்து வந் தது. அதே சமயத்தில், பெரியாரின் முழு நம்பிக்கைக்குப் பாத்திரமான சர். பன்னீர்செல்வத்தை மந்திரி சபை எதிர்த்தது. இந்த நிலையில் அவரவர் மனோநிலையை உணர்ந்து தனது கட்சியைப் பலப்படுத்திக் கொள்வதில் டாக்டர் சுப்பராயன் சமர்த்தாக இருந்தார்.

தோழர் நாடிமுத்து அவர்களை எதிர்த்து, தோழர் மாரிமுத்து அவர்கள் தாலுகா போர்ட் கூட்டங் களுக்கு வரக் கூடிய நிலைமையை உண்டாக்கும் வரையில்தான் மாரி முத்துவுக்கும் நட்பு இருந்தது பின்னர், தோழர் மாரிமுத்து என்ற ஆதித்திராவிட நண்பர், காங்கிரஸ் நாடிமுத்து நண்பராகி இன்று சட்டசபை உறுப் பினராகவும் இருக்கிறார்.

                                                                                 «««

இரயில்வே வேலை நிறுத்தம் 1928-இல் நடைபெற்றது. இதற்குப் பலமாதங்கள் முன்பிருந்தே இரயில்வே தொழி லாளர்களின் துயர்பற்றி நாங்கள் பிரசாரம் செய்துவந்தோம்.

காங்கிரஸ் எஸ்.சீனுவாச அய்யங்கார் கூட்டம் என்று எங்கு இருந்தாலும் அங்கு நாங்களும் இருப்போம். நாகைமணியும், காளியப்பனும் எங்க ளுக்கு முன்பே அங்கு நாற்பது அய்ம்பது பேருடன் இருப்பார்கள். காங்கிரஸ் கூட்டம் நடக்கும். சிறிது நேரமானதும் முக்கியமான பிரசங்கி யார் பேசிக்கொண்டிருக்கும்போது, எங்களில் யாராவது ஒருவர் சந்தேகம் கேட்போம். உடனே பல மூலை களிலிருந்தும் “எங்கள் சந்தேகத்துக்குப் பதில் கூறிய பின் பேச வேண்டும்” என்று கேட்கப்படும். இந்த எதிர்பாராத நிலை கண்டு, கூட்டத்தைக் கூட்டியவர்கள், எங்க ளுக்குக் கூட்டத்தில் நல்ல ஆதரவு இருப்பதாக எண்ணிக்கொண்டு கூட்டத்தைக் கலைத்து விடுவார்கள். அல்லது கூட்டம் கலைக்கப்படும் நிலைமை உண்டாக்கப்பட்டுக் கலைந்து விடும். இச்செய்திகளைப் பத்திரிகைகளில் படிப்பவர்களுக் குக் கோபத்தையும் சந்தேகத்தையும் உண்டாக்கும்.

1927, 1928 ஆகிய வருடங்கள்  ஒரு குழப்பமான காலம். மாகாண காங்கிரஸ் கட்சி வேறு கையிலிருந்து எஸ்.சீனுவாசய்யங்கார் கைக்கு வந்த காலம். ஆங்காங்கே உள்ள காங்கிரஸ் நண்பர்களுக்கிடையே இரு கட்சிகள் இருக்கும். அந்தக் காலத்தில் சீனுவாசய்யங்கார் என் றால் பணமூட்டை என்று பொருள். அதாவது, இன்று பணம் திரட்டு வதே வேலையாகக் கொண்டவர்களைப் பணமூட்டை என்கிறார்கள். அன்று, பணமூட்டை என்பதற்குப்பொருள், தன் கைப்பணத்தைச் செலவு செய்து செல்வாக்குப் பெறுவது என்று இருந்தது. இந்த முறையைப் பின்பற்றித்தான் சீனுவாசய்யங்கார் அவர்கள் காங்கிரஸ் தலைவரானார். அந்தக் காலத்தில் அய்யங்கார் ஆள் என்றால், பணம் வாங்கிக்கொண்டு கூலிக்கு மாரடிக்கிறான் என்று அர்த்தமாகும். ஆதலால், அந்தந்த ஊர்களிலுமுள்ள காங்கிரசாரின் பலவீனத்தை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். அய்யங்கார், பாவலர் கூட்டம் எங்கு நடந்தாலும், நாகை மணியும், காளியப்பனும், அந்தந்த ஊருக்குத் தக்கபடி, போதுமான ஆட்களுடன் நாகை ஓர்க்சாப்பிலிருந்து புறப்பட்டு வந்துவிடுவார்கள். பெரும்பாலும் எங்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பே இருக்காது. இவ்வளவு பேர் கோயமுத் தூர், வேலூர், விழுப்புரம், மதுரை, தூத்துக்குடி முதலிய ஊர்களுக்குப் போய்வர, பணம் கிடையாது. இவர்கள் இரயில்வே டிக்கெட் வாங்குவதில்லை. அதாவது, யூனியன் பிரசாரத்துக்காக வருகிறார்கள் என்று இரயில்வே கம்பெனி நினைத்துக் கொள்ளவேண்டியது. இரயில்வே வேலை நிறுத்தத்தைத் தொடங்கியதிலிருந்து, தோழர் அழகர்சாமியின் கவனம் முழுவதும் நமது கூட்டங்கள் போடுவதிலும், அவர்கள் கூட்டங்களைக் கலைப்பதிலுமே இருந்தது.

சில சமயம் பெரியார் காதுக்கும் இது எட்டிவிடும். ஒரு சமயமாவது இது உண்மையென்று நாங்கள் ஒப்புக்கொண்டதே கிடையாது இத்தகைய சம்பவங்கள் பல பிற்காலத்தில் பெரியவர்களாலெல்லாம் போற்றிப் புகழப்பட்டது. ஆனால், ஒவ்வொரு நெருக்கடியான சமயங்களிலும், தோழர் அழகர்சாமி தனது உயிரைப் பணயம் வைத்தே சந்தேகத்தை நிவர்த்திக்க முயல்வார். கூட்டங்களை நடத்துவதில் அழகர்சாமி அழகான முறைகளைக் கையாள்வார். மன்னார்குடியில் ஓர் கூட்டம். அதில் அழகர்சாமியின் பிரசங்கம். கூட்டத்தில் காற்பாகத்தினர் கேள்வியும் கல்லும் வீசுகிறார்கள். இப்படி முக்கால்மணி நேரம் நடந்தது. நிலைமையை உணர்ந்துகொண்டு அழகர்சாமி, பேசிக்கொண்டே வந்து திடீரென்று நிறுத்தினார். கீழே இறங்கி, அங்கு கிடந்த நாலைந்து கற்களை எடுத்துக்கொண்டு மேடை மீது ஏறினார்.

கற்களை மேஜை மீது வைத்தார். இவைகளைக், கலகம் செய்து கல் வீசியவர்கள் கவனித்து, என்ன செய்யப் போகிறார் என்று பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அழகர்சாமி மேலும் பேசினார். “தோழர்களே! இந்த ஊருக்கு நான் புதியவன். இவ்வூர் வழக்கம் எனக்குத் தெரியாது. பெரிய வைஷ்ணவ ஸ்தலமாக இது இருந்தும், வைஷ்ணவ வகுப்புக்காரனான எனக்கு இவ்வூர்ப் பழக்கம் தெரியாமல் போனது தப்புத்தான். இனி நான் பேசுகிறேன். நீங்களும் கல் போட்டுக் கொண்டே என் பிரசங்கத்தைக் கேளுங்கள்.நானும் உங்கள் மீது கல்லை வீசிக்கொண்டே பிரசங்கமும் செய்கிறேன்” என்றார். உடனே எல்லோரும் கைதட்டி சிரித்தார்கள். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மேலும் நீண்ட நேரம் பேசினார். பொதுமக்களும் அமைதியாக இருந்து - பகைமையை மறந்து பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.


No comments:

Post a Comment