காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 27, 2023

காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை

 *    இன்றைக்கும் ஏன் பெரியார் தேவைப்படுகிறார்?

* ஏன் சுயமரியாதை இயக்கம் தேவைப்படுகிறது?

* ஜாதி நோயைவிட கொடுமையானது உலகத்தில் வேறு எதுவும் இல்லை!

ஜாதியின் முதுகெலும்பை முறித்த இயக்கம் - முறித்துக் கொண்டிருக்கின்றது இந்த இயக்கம்!

சென்னை, மார்ச் 27 ஏன் பெரியார் தேவைப்படுகிறார்? ஏன் சுயமரியாதை இயக்கம் தேவைப்படுகிறது? ஜாதி மறுப்பு மணம் செய்துகொண்ட தன்னுடைய பிள் ளையை, தானே வெறுப்பது மட்டுமல்ல, அவர்களை ஏற்காமல் போனாலும் பரவாயில்லை - அந்தப் பிள்ளைகள் வாழக்கூடாது என்பதற்காக கூலிப்படையை வைத்து கொலை செய்யக்கூடிய அளவிற்கு வந்தால், இந்த ஜாதி நோயைவிட கொடுமையானதை உலகத்தில் வேறு எங்கேயாவது நீங்கள் பார்க்க முடியுமா? என்பதை எண்ணிப் பாருங்கள். அதனுடைய முதுகெலும்பை முறித்த இயக்கம், முறித்துக் கொண்டிருக்கின்றது இயக்கம் தான் இந்த சுயமரியாதை இயக்கம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மணமக்கள்

இ.பெ.தமிழீழம் - கு.இராஜ்குமார்

கடந்த 20.12.2022 அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் இங்கர்சால்  - ‘சுயமரியாதைச் சுடரொளி’ பெரியார் சாக்ரடீசு ஆகியோரின் மகள் இ.பெ.தமிழீழம், தேவனாப் பட்டு கி.குழந்தை - லதா ஆகியோரின் மகன் கு.இராஜ்குமார் ஆகியோருக்கு நடைபெற்ற வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவிற்குத்  தலைமையேற்று மணவிழா வினை நடத்தி வைத்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்த்துரை யாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

அனைவருடைய நெஞ்சங்களிலும் நிறைந்தவர் பெரியார் சாக்ரடீசு

மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும், மன நிறை வோடும் நடைபெறக்கூடிய, மறைந்தும் மறையாதவராக நம் அனைவருடைய நெஞ்சங்களிலும் நிறைந்தவராக இருக்கக்கூடிய, எங்களால் மறக்க முடியாத செல்வமான பெரியார் சாக்ரடீசு - அவருடைய வாழ்விணையர் அருமைத் தோழர் இங்கர்சால் ஆகியோரின் செல்வி பேராசிரியர் இ.பெ.தமிழீழம் அவர்களுக்கும், திரு வண்ணாமலை மாவட்டம் தேவனாம்பட்டைச் சேர்ந்த பாராட்டுதலுக்குரிய அய்யா திருகுழந்தை - லதா ஆகியோருடைய செல்வன் அன்பிற்குரிய அருமைத் தோழர் பேராசிரியர் கு.இராஜ்குமார் அவர்களுக்கும் நடைபெறக்கூடிய இந்த வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து, சிறப்பாக இங்கே வாழ்த்தி, விளக்கவுரையாற்றி, சுயமரியாதை வாழ்வு எவ்வளவு சுகவாழ்வு என்பதை அருமையாக சுருக்கென்று எல் லோர் மனதிலும் பதியக்கூடிய வகையில், எடுத்துரைத் திருக்கக் கூடிய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலிபூங்குன்றன் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் சிறப்பான வகையில், இந்தக் குடும் பத்திற்கு உரியவராக, இன்றைக்கும் திகழக்கூடியவராக இருக்கக்கூடிய திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பாராட்டுதலுக்குரிய சுயமரியாதை வீரர் அய்யா பேராசிரியர் சுபவீரபாண்டியன் அவர்களே,

இந்நிகழ்ச்சியில், மணமக்களுக்கு சிறப்பானதொரு உரையை வழங்கிய, சாக்ரடீசு அவர்களோடு என் றைக்குமே உறவை புதுப்பித்துக் கொண்டேயிருந்த நம்முடைய பாராட்டுதலுக்குரிய ‘நக்கீரன்’ இதழின் ஆசிரியர், துணிச்சல்மிக்க தோழர் கோபால் அவர்களே,

கலைத்துறையைத் தன்வயமாக்கக் கூடிய இனமுரசு சத்யராஜ்

கலைத்துறை என்று சொன்னால், அந்தத் துறையில் மற்றவர்கள் எந்த நிலையில் இருந்தாலும், அவர்கள் அத்துணை பேரையும் ஈர்க்கக்கூடிய அளவில், எந்த நிலையிலும்  தன்னுடைய கொள்கையை விட்டுக் கொடுக்காமல், அந்தத் துறையைத் தன்வயமாக்கக் கூடிய அளவிற்கு ஆற்றல் வாய்ந்தவராகத் திகழுகின்ற நம்முடைய இனமுரசு தோழர் சத்யராஜ் அவர்களே,

அதேபோல, பகுத்தறிவுப் பாவலராக இருந்து இன்றைக்கும்  எல்லோருக்கும் வழிகாட்டிக் கொண்டு ஒரு பெரிய கவிதா மண்டலத்தையே உருவாக்கிக் கொண்டிருக்கக் கூடிய பகுத்தறிவுப் பாவலர் அருமைச் சகோதரர் அறிவுமதி அவர்களே,

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற அய்யா இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் போன்ற இன்னும் எண்ணற்ற கலைத்துறை பெருமக்களே,

ஒரு பெரிய குடும்பமாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு இருக்கிறோம்!

அதேபோல, கல்வித்துறையாளர்களே, பத்திரிகை யாளர்களே, திராவிடர் கழகப் பொறுப்பாளர்களே, தோழர்களே, ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்தால், நேரம் ஆகுமென்பதால், ஒவ்வொரு வரையும் தனித்தனியே அழைத்ததாக அவர்கள் கருதிக்கொள்ளவேண்டும் என்று அன்போடு சொல்லி, இந்த நிகழ்ச்சியில், ஒரு பெரிய குடும்பமாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு இருக்கிறோம். இதைவிட மகிழ்ச்சி, வேறு இருக்க முடியாது.

சாக்ரடீசு அவர்கள் மறையவில்லை, வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லக்கூடிய அளவில், இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவிற்கு ஒரு பெரிய மாநாடுபோல இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக் கின்றது.

உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த மணவிழாவைப்பற்றிய விளக்கத்தை வரவேற்புரையாற்றிய நம்முடைய பிராட்லா அவர்கள் சொன்னார்கள். அதை வழிமொழியக் கூடிய அளவில், கவிஞர் அவர்களும் சிறப்பாக எடுத்துரைத்தார்.

கொள்கைக் குடும்பத்தைவிட, சிறந்த குடும்பம் வேறு இருக்க முடியாது

இந்த மணவிழாவைப் பொறுத்தவரையில், அவர்கள் சொன்னதைப்போல, இந்த மணவிழா, எங்கள் குடும் பத்து மணவிழா, கொள்கைக் குடும்பத்தைவிட சிறந்த குடும்பம் வேறு இருக்க முடியாது.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழியைச் சொல்வார்கள் - நீரை விட கெட்டியானது ரத்தம் என்று சொல்வார்கள். ஆனால், ரத்தத்தைவிட - அதாவது உறவுகளைவிட கெட்டியானது ஒன்று உண்டு - அதுதான் கொள்கை உறவு என்பதே திராவிட இயக்கத்தினுடைய தனித் தன்மை.

அதைத்தான் இந்த மேடையில் இன்றைக்கு நாம் பார்க்கின்றோம். அதைத்தான் தலைமுறை தலை முறையாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

எனவே, அந்த உறவு இருக்கின்ற காரணத்தினால்தான், நல்ல அளவிற்கு மகிழ்ச்சியும் இருக்கிறது.

இங்கே அழகாக சொன்னார் இனமுரசு அவர்கள், “சுயமரியாதை வாழ்வு சுகவாழ்வு” என்று சொன்னார். ஏனென்றால், சுயமரியாதைக்காரர்களுடைய வாழ்க் கையில், சுகவாழ்வு எப்படி அமைகிறது என்று சொல்லுகின்ற நேரத்தில், தன்னுடைய வாழ்க்கைக்குத் தானே பொறுப்பு ஏற்கலாம்.

சுயமரியாதைக்காரர்களின் வாழ்க்கை

“என்னுடைய கைகளில் எதுவுமில்லை” என்று நாங்கள் யாரும் சொல்லுவதில்லை; “என்னுடைய கைகளில்தான் எதுவும் இருக்கிறது என்னுடைய உழைப்பில்தான் எல்லாம் இருக்கிறது; என்னுடைய நாணயத்தில்தான் என் வாழ்க்கை” என்று சொல்லக்கூடிய அளவிற்கு சுயமரியாதைக்காரர்களின் வாழ்க்கை அமைந்திருக்கிறது.

அப்படிப்பட்ட குடும்பம் வீழ்வதில்லை; வாழ்ந்து கொண்டிருக்கிறது.

எத்தனையோ இழப்புகள் - சாக்ரடீசு போன்றவர் களின் மறைவு - தாங்க முடியாத இழப்புகளாக இருந் தாலும்கூட, அவற்றையெல்லாம் தாண்டி, இந்தப் பிள்ளைகள் அன்றைக்கு சிறு குழந்தையாக இருந்து, இன்றைக்குப் பேராசிரியராக என்று சொன்னால், வந்திருக்கின்றார்கள் இந்தக் கொள்கையினுடைய பலம் - அந்த மனத்திண்மைதான் மிகவும் முக்கியமானது.

இங்கர்சால் என்பது ஆணினுடைய பெயராகத்தான் இருக்கும் என்று நினைப்பார்கள்!

பல நேரங்களில், சாக்ரடீசு என்ற பெயருக்கு அடுத்த படியாக, இங்கர்சால் என்று இருப்பதைப் பார்த்தால், மிக வேடிக்கையாக இருக்கிறதே என்று சொல்வார்கள். இங்கர்சால் என்பது ஆணினுடையபெயராகத்தான் இருக்கும் என்று நினைப்பார்கள்.

ஆனால், பெயர் வைக்கும்பொழுது ஆண் என்ன? பெண் என்ன? அந்த பேதமும் கூடாது. ஆகவே, இங்கர்சால் என்று பெயர் வைக்க இந்தக் குடும்பத்தில் முடிவு செய்தவர்கள் காரைக்குடி என்.ஆர்.சாமி வகையறாக்கள்.

இங்கர்சால் அவர்கள் ஆசிரியராக இருக்கிறார். கல்வி அதிகாரி பள்ளிக்கூடத்திற்கு வந்தால்கூட, இங்கர் சால் என்று அறிமுகப்படுத்தும் பொழுது, இங்கர்சால் புடவை கட்டிக்கொண்டிருப்பார் என்று நினைத்திருக்க மாட்டார்.

ரத்தம் சிந்தாத புரட்சி - அமைதிப் புரட்சி!

அப்படிப்பட்ட ஒரு சின்ன செய்தியில்கூட, இந்த இயக்கம் ஓர் அன்புப் புரட்சியை செய்திருக்கிறது - ரத்தம் சிந்தாத புரட்சியை செய்திருக்கிறது - ஓர் அமைதிப் புரட்சியை செய்திருக்கிறது.

முதலாவதாகப் பாராட்டை யாருக்குச் சொல்ல வேண்டும் என்றால், மணமகன் இராஜ்குமார் - அவருடைய பெற்றோருக்குத்தான் சொல்லவேண்டும்.

இந்தக் குடும்பத்தினுடைய பொறுப்பாளன் என்ற முறையில், என்னுடைய பாராட்டை மகிழ்ச்சியை என் சார்பாகவும், என்னுடைய வாழ்விணையர் மோகனா அவர்களின் சார்பாக, எங்கள் குடும்பம் சார்பாக, நம் குடும்பம் சார்பாக அவர்களுக்கு வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னொரு மிக முக்கியமான செய்தி என்னவென் றால், இந்த மணவிழாவில் எங்களைப் பாராட்டுவதைவிட, அவர்களைத்தான் பாராட்டவேண்டும்.

பல நேரங்களில், ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களை அழிக்கக் கூலிப்படையை தேடினார்கள். அமைதிப் படையை அழகாகக் காட்டியவர் இந்த மேடையில் அமர்ந்திருக்கிறார்.

ஜாதி வெறி என்பது மோசமான மனநோய்

ஜாதி மறுப்புத் திருமணங்களை செய்துகொள்ளுபவர் களை, அவர்களது பெற்றோர், பிள்ளைகளின் பாசத்தை மறந்துவிட்டு, கூலிப்படைகளை வைத்துக் கொலை செய்கிறார்கள். ஜாதி வெறி  என்பது இருக்கிறதே. அது மோசமான மனநோய் கொடுமையான நோயாகும்.

ஏன் பெரியார் தேவைப்படுகிறார்?

ஏன் சுயமரியாதை இயக்கம் தேவைப்படுகிறது?

ஜாதி மறுப்பு மணம் செய்துகொண்ட தம்முடைய பிள்ளையை, தாமே வெறுப்பது மட்டுமல்ல, அவர்களை ஏற்காமல் போனாலும் கூடப் பரவாயில்லை - அந்தப் பிள்ளைகள் வாழக்கூடாது என்பதற்காக கூலிப்படையை வைத்து கொலை செய்யக்கூடிய அளவிற்கு வந்தால், இந்த ஜாதி நோயைவிட கொடுமையான ஒன்றை உலகத்தில் வேறு எங்கேயாவது நீங்கள் பார்க்க முடியுமா? என்பதை எண்ணிப் பாருங்கள்.

அதனுடைய முதுகெலும்பை முறித்த இயக்கம், முறித்துக் கொண்டிருக்கின்ற இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம்.

தேவனாம்பட்டு கிராமம் என்பது எங்களுக்கு அறி முகமில்லாத கிராமம் கிடையாது. இங்கே பொதுக்குழு உறுப்பினர் மணி அவர்கள் வந்திருக்கிறார். மண்டல தலைவர் அவர், இப்பொழுது சிவகாசி மணி ஆகி விட்டார்.

இந்த இயக்கத்தினுடைய சிறப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாலிடெக்னிக் படித்த காலத்திலிருந்து அவர் பெரியார் திடலுக்கு உரியவர்; மாணவராக இருந்து பக்குவப்பட்டவர்.

இங்கே சாக்ரடீசு பக்கமே சொல்லிக் கொண்டிருந் தார்கள். ஒரு பக்கமே தராசு தாழக்கூடாது அவர் எவ் வளவு முக்கியமோ, இவரும் அவ்வளவு முக்கியமான வர்தான். விளம்பரம் ஆனவர் அவர், இவர் விளம்பரம் ஆகாமல் அமைதியாக இருக்கிறார். இந்த இயக்கத் தினுடைய சிறப்பே அதுதான்.

திராவிடர் கழகத்தில் இரண்டு வகையான உறுப்பினர்கள்!

ஒருமுறை வெளிநாட்டுச் செய்தியாளர் என்னை பேட்டி கண்டார். அப்பொழுது அவர் ஒரு கேள்வியை கேட்டார்.

இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் எப்படிப்பட்ட வர்கள்?

நான் சொன்னேன், “இரண்டு வகையான உறுப் பினர்கள் இந்த இயக்கத்தில் இருக்கிறார்கள்” என்றேன்.

“ஓ, அப்படியா?” என்றார்.

“ஒன்று கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்கள், மற்றொன்று கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர்கள்” என்று இரண்டு வகையான உறுப்பினர்கள் இருக் கிறார்கள் என்று சொன்னேன்.

கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர்கள் என்று நான் சொல்லி முடித்தவுடன், கேள்வி கேட்ட அந்த அம்மை யார், கையிலிருந்த பேனாவை கீழே போட்டுவிட்டார்.

ரகசிய இயக்கம் நடத்துகிறீர்களா?

பின்பு “அப்படியானால், நீங்கள் ரகசிய இயக்கம் நடத்துகிறீர்களா?” என்று கேட்டார்.

உடனே நான் சிரித்துக்கொண்டே சொன்னேன், “ரகசிய இயக்கம் இல்லை; கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்கள் என்றால், வெளிப்படையாக கருப்புச் சட்டை அணிந்து இயக்கத்தில் இருப்பவர்கள். கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர்கள் என்றால், எந்த அரசியல் கட்சிகளிலும் இருப்பவர்கள்; ஆனால், எங்கள் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள்” என்றேன்.

கலைத்துறையை எடுத்துக் கொண்டீர்கள் என்றால், இனமுரசு சத்யராஜ் அவர்கள் திராவிடர் கழகத்தில் உறுப்பினர் இல்லை. ஆனால், திராவிடர் கழகத்து உறுப்பினராக இருந்தால் என்ன செய்வார்களோ, அதைவிட பல மடங்கு அளவிற்கு செயல்பட்டுக் கொண்டிருப்பவர்.

எதிர்நீச்சல் என்பது பெரியாருடைய தத்துவமாகும்!

அதேபோன்று ‘நக்கீரன்’ கோபால் அவர்கள், அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவராயிற்றே என்று நினைக் காதீர்கள், அது வேற டிபார்ட்மெண்ட்- அவருடைய துணிச்சல் என்பது இருக்கிறதே அது சுயமரியாதை இயக்கத்தினுடைய அம்சமாகும். எதிர்நீச்சல் என்பது பெரியாருடைய தத்துவமாகும். ஒவ்வொருவரிடத்தும் ஒவ்வொரு வகையில் அது இருக்கும். 

சிவகாசி மணி- செல்வி மணவிழா!

ஆகவேதான், இந்த இயக்கம், இந்த கொள்கை என்று சொல்லுகின்ற நேரத்தில், நான்காவது திருமணம் என்று இங்கே சொன்னார்கள்.

அவர்களுடைய ஊரில் என்ன நடந்தது என்றால், 13.10.1985 அன்று மணி அவர்களின் திருமணத்தை, அவருடைய வாழ்விணையர் செல்வியும் வந்திருக் கிறார்கள் - அவர்களுடைய திருமணத்தை நான்தான் நடத்தி வைத்தேன். அவருடைய பிள்ளைக்கும் மண விழாவினை நான்தான் நடத்தி வைத்தேன். அதிலொன் றும் சந்தேகமேயில்லை. 1.9.2000 அன்று செல்வராஜ் - சங்கீதா ஆகியோரின் மணவிழாவினை நடத்தி வைத் தேன். பிறகு திருவண்ணாமலையில் ஒரு மணவிழா இவருடைய குடும்பத்தில்,

இப்படி வரிசையாகப் பார்த்தீர்கள் என்றால், இந்தக் குடும்பத்திற்கும், பகுத்தறிவுச் சிந்தனைக்கும் இவர்தான் முன் ஏறு.

(தொடரும்)


No comments:

Post a Comment