அன்னை மணியம்மையார் நினைவு நாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 17, 2023

அன்னை மணியம்மையார் நினைவு நாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

 எந்த நோக்கத்துக்காக தந்தை பெரியாரிடம் வந்து சேர்ந்தாரோ - அந்த நோக்கத்தை நிறைவேற்றியவர் அன்னை மணியம்மையார்!

அன்னை மணியம்மையாரை இன்னும் அதிகமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும் - கொண்டு செல்வோம்!

பிறவிப் பேதத்தை ஒழிப்பதுதான் தந்தை பெரியார் கொள்கை; 

அது ஒரு சமூக விஞ்ஞானம், வளரக்கூடியது-உலகிற்கே தேவையானது!

சென்னை, மார்ச் 17 தந்தை பெரியார் தொண்டின் அருமைக் கருதி அவருக்குத் தொண்டாற்றவேண்டும் என்ற நோக்கோடு தந்தை பெரியாரிடம் வந்து சேர்ந்தவர் அன்னை மணியம்மையார் - அந்தப் பணிகளை மிகவும் சிறப்பாகவே செய்தவர் - தந்தை பெரியாருக்குப் பிறகும் அவர் உருவாக்கிய இலட்சிய இயக்கத்தைக் கட்டிக் காத்தவர், வளர்த்தவர். தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கக் கொள்கை என்பது ஒரு சமூக விஞ்ஞானம் - அது வளரக்கூடியது - உலகிற்கே தேவையானது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அன்னை மணியம்மையார் பிறந்த நாள் - நினைவு நாள் - தோள்சீலைப் போராட்ட 

200 ஆம் ஆண்டு விழா கருத்தரங்கம்

நேற்று (16.3.2023) மாலை 6 மணியளவில் சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற அன்னை ஈ.வெ.ரா.மணியம்மை யார் 104 ஆம் ஆண்டு பிறந்த நாள் - 45 ஆம் ஆண்டு நினைவு நாள் - தோள்சீலைப் போராட்டம் 200 ஆம் ஆண்டு விழா கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நிறை வுரையாற்றினார்.

அவரது நிறைவுரை வருமாறு:

மூன்று பெரும் நிகழ்ச்சிக்குத் தலைமை

திராவிடர் கழக மகளிரணியினரால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள மூன்று பெரும் நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்று இருக்கக் கூடிய கழகப் பிரச்சார செயலாளரும், உயர் நீதிமன்ற வழக்குரைஞருமான அன்பிற்கும், பாராட்டு தலுக்கும் உரிய அருமைத் தோழர் அருள்மொழி அவர்களே,

இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய கழகத் துணைப் பொதுச்செயலாளர் மானமிகு பொறியாளர் ச.இன்பக்கனி அவர்களே,

தொடக்கவுரையாற்றியிருக்கின்ற திராவிட மகளிர் பாசறையின் மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை அவர்களே,

கருத்துரை வழங்கியுள்ள திராவிடர் கழகத்தின் மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி அவர்களே,

பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர்  வீரமர்த்தினி அவர்களே,

மனதில் பட்டதை பயப்படாமல் துணிந்து சொல்லக்கூடிய ஓர் ஆற்றல் வாய்ந்த பேராசிரியர்

சிறப்பாக உரையாற்றி அமர்ந்துள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்- கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும், மனதில் பட்டதை யாருக்காகவும் பயப்படாமல் துணிந்து சொல்லக்கூடிய ஓர் ஆற்றல் வாய்ந்த பேராசிரியராக இருக்கக்கூடிய கொள்கையாளர் அருமைத் தோழர் சி.சுந்தரவள்ளி அவர்களே,

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில செய லாளர் அருமைத் தோழர் ஜி.மஞ்சுளா அவர்களே,

இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கின்ற சென்னை மண்டல மகளிரணி செயலாளர் இறைவி அவர்களே, நன்றியுரை கூறவுள்ள சென்னை மண்டல திராவிட மகளிர் பாசறையின் செயலாளர் த.மரகதமணி அவர்களே,

கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, பொருளாளர் குமரேசன் அவர்களே,

மற்றும் இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர்களே, சகோதரிகளே, நண்பர்களே, தாய்மார்களே, தோழர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாராட்டத்தகுந்தது; 

வாழ்த்துதலுக்குரியது!

நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்து மகளிரால் சிறப் பான எழுச்சிமிகுந்த ஒரு கருத்தரங்கமாக நடைபெற்று இருப்பது பாராட்டத்தகுந்தது; வாழ்த்துதலுக்குரியது.

பல அருமையான கருத்துகளை மிகத் தெளிவாகத் துல்லியமாக, துணிவாக எடுத்து வைத்திருக்கிறார்கள். அதையொட்டியே சில கருத்துகளை நானும் இங்கே பதிவு செய்யவேண்டும் என்று விரும்புகிறேன்.

நீண்ட காலம் வாழவேண்டும் என்பது முக்கியமல்ல!

அன்னை மணியம்மையார் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு என்பது 60 ஆண்டுகளுக்குள் அடங்கிவிட்ட காலகட்டத்தில் எவ்வளவு பெரிய புரட்சியை சாதித்திருக்கிறார் என்பது வியப்புக்குரிய தாகும். நீண்ட காலம் வாழவேண்டும் என்பது முக்கியமல்ல; வாழ்ந்த காலத்தில் அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள்; எப்படி அவர்கள் வழிகாட்டியாக இருந்தார்கள்; எப்படி புரட்சி வரலாற்றை வைத்தார்கள் என்பதுதான் மிகவும் முக்கியம் வாய்ந்தது.

அந்த வகையில், அன்னை மணியம்மையார் அவர் கள், மக்கள் மத்தியில் இன்னும் அதிகமாகக் கொண்டு சேர்க்கப்பட வேண்டிய ஒரு வரலாற்றுப் பெட்டகம்.

எத்தனையோ அம்சங்கள் இருக்கின்றன; அவற்றைத் தனித்தனியே பிரித்து விவாதிக்கவேண்டும். அதிலும் எங்களைப் போன்றவர்களைவிட, இங்கே இருக்கக்கூடிய மகளிர் தோழர்கள் பகுத்துப் பகுத்து ஆய்வு செய்ய வேண்டியதற்கு ஏராளமாக இருக்கின்றன அன்னையார் அவர்களுடைய வாழ்க்கையில்.

எனக்கு மிகுந்த மனநிறைவு ஏற்பட்டது

இங்கே உரையாற்றிய ஒவ்வொரும் அருமையாகச் சொன்னார்கள். நான் அதைப்பற்றியெல்லாம் ஒவ் வொன்றையும் எடுத்து எடுத்து விளக்கிச் சொன்னாலே நேரம் போதாது. எனக்கு மிகுந்த மனநிறைவு ஏற்பட்டது. அருமையாக உணர்ந்திருக்கிறார்கள்; இந்த வேகம், இந்த விவேகம் ஒருபோதும் யாராலும் அடக்கப்பட முடியாதது. இது நீண்டப் பயணமாக இவர்களாலே முன்னெடுத்துச் செல்லப்படும். அதற்குரிய ஆயுதக் கிடங்காக இந்தக் கருத்தரங்கம் இருக்கிறது. அதனுடைய பாசறைகளாகத்தான் இங்கே அமர்ந்திருக்கின்றவர்கள் இருக்கிறார்கள்.

பொது வாழ்க்கைக்குப் 

பெண்கள் வருவதே அபூர்வம்!

அன்னை மணியம்மையார் அவர்களிடத்தில் அவருடைய வாழ்க்கைப் பாதையிலிருந்து எதை, யார் எந்தக் கோணத்தில் பெற்றுக் கொண்டிருக் கிறார்கள் என்பதுதான் மிகவும் முக்கியமானது.

பொது வாழ்க்கைக்குப் பெண்கள் வருவதே அபூர்வம். அப்படியே வந்தால், எவ்வளவு கொச் சைப் படுத்த முடியுமோ, அவ்வளவு அசிங்கப் படுத்துவது, ஆபாசப்படுத்துவது என்பது இருக் கிறதே, அதில் ஆணாதிக்கத்திற்கு ஒரு தனி சுவை. அவ்வளவு அற்பத் தனமான நோக்கத்தை அவர்கள் இன்னமும் மறந்துவிடவில்லை.

அதிலும் இப்பொழுது சனாதனம் தன்னுடைய சங்க நாதத்தை செய்துகொண்டிருக்கின்ற இந்தக் கால கட்டத்தில், அது இன்னும் கூர்ந்து கவனிக்கப் பட வேண்டியது மட்டுமல்ல; கிள்ளி எறியப்பட வேண்டியது, வேரோடும், வேரடி மண்ணோடும் என்று சொல்லக்கூடிய அளவில், இருக்கக்கூடிய காலகட்டம் இந்தக் காலகட்டம்.

இவர்கள் பேசுவதைக் கேட்டாலே, 

நாங்கள் இளமையைப் பெறுகிறோம்

அதற்கு ஆயுதக் கிடங்காக மிக அருமையாகப் பயன்படக் கூடியதாகத்தான் இந்தக் கருத்தரங்கம் அமைந்திருக்கின்றது என்பதில், எங்களுக்கு முழு மனநிறைவு ஏற்படுகிறது. எனவே, எங்களைப் போன்ற வர்கள் பேசவேண்டும் என்ற அவசியமில்லை. இவர்கள் பேசுவதைக் கேட்டாலே, நாங்கள் இளமையைப் பெறு கிறோம். நாங்கள் இன்னமும் எங்களுடைய வேகத்தை விரைவுபடுத்தவேண்டும் என்று நினைக்கின்றோம். வயதைப்பற்றியெல்லாம் கவலையில்லை; உணர்வைப்பற்றித்தான் கவலை.

நாம் செய்யவேண்டிய வேலைகள் எப்படியிருக் கின்றன? நம்முடைய எதிரிகள் எப்படி ஆயத்தமா கிறார்கள்? என்பதுதான் மிக முக்கியம்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் இங்கே அழகாகச் சொன்னார்கள். சுந்தரவள்ளி  இந்த அரங்கத் திற்குப் புதியவர் அல்ல.

பெண்களைக் கொச்சைப்படுத்தக் கூடிய எந்த அமைப்பாக இருந்தாலும், அவற்றைத் தூக்கி எறியவேண்டும்!

தோள்சீலைப் போராட்டம் என்று சொல்லும்பொழுது, அது எந்தெந்த காலகட்டத்தில், எப்படி எப்படியெல்லாம் நடந்தது என்கிற வரலாற்றுக் குறிப்புகளைவிட, அடிப் படையான செய்தி என்னவென்றால், சனாதனம் ஒழிக்கப்பட நடத்திய போராட்டம்; சனாதனத்தினுடைய வேர் எங்கெல்லாம் இருக்கிறதோ, 200 ஆண்டுகள் ஆனாலும், 2000 ஆண்டுகள் ஆனாலும், மனுதர்மக் காலமாக இருந்தாலும், பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தார்கள் என்று எழுதுகிற பகவத் கீதையாக இருந்தாலும், பெண்களைக் கொச்சைப்படுத்தக் கூடிய எந்த அமைப்பாக இருந்தாலும், அவற்றைத் தூக்கி எறியவேண்டும் என்கிற துணிச்சல் வந்தாலொழிய பெண் சமுதாயத்திற்கு உண்மையான விடுதலை ஒருபோதும் வராது.

சுயமரியாதை இயக்கத்தினுடைய 

முதல் இலட்சியம், பிறவி பேதத்தை அகற்றுவது!

தந்தை பெரியாருடைய சுயமரியாதை இயக்கத் தினுடைய பாலபாடம், ஒரு வாக்கியத்திலேயே தன்னுடைய கொள்கையை அமைத்துக் கொண் டது.

அதிலிருந்துதான் அன்னை மணியம்மையார் அவர்கள்; அதிலிருந்துதான் இத்தனை வீராங் கனைகள். அதிலிருந்துதான் இத்தனை தொண்டு, தியாகங்கள் வந்திருக்கின்றன.

அந்த ஒன்று என்ன?

சுயமரியாதை இயக்கத்தினுடைய முதல் இலட்சியம், பிறவி பேதத்தை அகற்றுவது; மனித னுக்கு சுயமரியாதையை உண்டாக்குவது. சுயமரி யாதை என்பது மனிதர்களுக்கு மட்டுமே இருப்பது.

மனிதர்களிடம் மனிதத்தைத் தேடியதுதான் சுயமரியாதை இயக்கம்!

மனிதர்களிடம் மனிதத்தைத் தேடியதுதான் சுயமரி யாதை இயக்கம். இதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

மனிதர்கள் இருக்கிறார்கள், உருவத்தால். உண்மை யான மனிதம் இருக்கிறதா? இந்தக் கேள்வியைக் கேட்டுத்தான் தந்தை பெரியார், தன்னுடைய சுயமரி யாதை இயக்கத்தைத் தொடங்கினார்.

மனிதம் என்றால் என்ன?

அதுதான் சகோதரத்துவம் -

அதுதான் சமத்துவம் -

அதுதான் சுதந்திரம்.

இது யாருக்கு என்று வரையறை செய்யலாமா?

அங்கேதான் தந்தை பெரியாருடைய சிந்தனை - ஒரு ஒப்பற்ற சுய சிந்தனையாக இருக்கிறது.

விசித்திரமான தலைவர் 

தந்தை பெரியார்!

அவர் எந்தப் புத்தகத்தையும் பார்த்து இந்த முடிவிற்கு வரவில்லை. அவருடைய வாழ்நாளில், அவர் கொள் கையை வகுத்துக் கொண்டதையெல்லாம் பார்த்தீர்க ளேயானால், விசித்திரமான தலைவர் தந்தை பெரியார்.

கொள்கைகளை முன்னால் அமைத்தமையால் அதுவே அவருக்கு வாழ்க்கைத் தடமாக ஆகிவிட்டது. இயக்கம் பின்னாலே, அதற்கு வாய்ப்பாக அமைந்து விட்டது.

பல பேர் கட்சியை ஆரம்பிப்பார்கள்; கொள்கையைப் பின்னாளில் சொல்கிறேன் என்பார்கள்.

கொள்கைகளே வாழ்க்கை நெறி!

ஆனால், தந்தை பெரியாருடைய இயக்கம் அப்படி யல்ல. கொள்கைகளே வாழ்க்கை நெறி. 

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன்,

அமைப்பிற்காக, அலங்காரத்திற்காக, அழகிற்காக, பெருமைக்காக, அய்யாவைப் பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல நண்பர்களே! உண்மை யைச் சொல்லவேண்டும் என்பதற்காகத்தான் - உங்கள் மனதில் பதிய வேண்டும்.

பெரியாரை இன்னும் நாங்களே படிக்கவேண்டும்; இன்னும் பெரியாரை சுவாசிக்கவேண்டும்.

பெரியாரை வாசிப்பவர்கள் இப்பொழுது பெருகிக் கொண்டிருக்கிறார்கள். சுவாசிப்பவர்கள் பெருக வேண்டும்.

அந்த சுவாசிப்பவர்கள் என்று சொல்லும்பொழுதுகூட, அது மிக ஆழமானது.

நான் பல மேடைகளில் இதை சொல்லியிருக்கிறேன்; இருந்தாலும், இந்த நேரத்திலும் சொல்லவேண்டிய அவசியம் இருக்கிறது; திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும் என்கிற அவசியத்தால்.

பெரியாரை நாம் 

எப்படி புரிந்துகொள்கிறோம்?

பெரியாரை நாம் எப்படி புரிந்துகொள்கிறோம் என்பதில் ஒரு கேள்வி என்னவென்றால், நம்முடைய பக்குவத்தைப் பொறுத்தது.

நான் 15 வயதில் புரிந்துகொண்ட பெரியாரும்,

25 வயதில் புரிந்துகொண்ட பெரியாரும்,

55 வயதில் புரிந்துகொண்ட பெரியாரும்,

85 வயதில் புரிந்துகொண்ட பெரியாரும்,

95 வயதில் புரிந்துகொள்ள வேண்டிய பெரி யாரும்,  நம்முடைய வயதையும், பக்குவத்தையும், அனுபவத்தையும் பொருத்ததாகும். அத்தனை ஆண்டுகள் இருக்கப் போகிறோமோ இல்லையா என்றால், எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் இருக்கலாம்; அது அறிவியனுடைய துணை.

இரண்டு விஷயம்தான். நம்முடைய மனது; இன்னொன்று விஞ்ஞானம்.

எந்தெந்த பாகத்தில் பழுது ஏற்படுகிறதோ, அந்தப் பாகத்தை சரி செய்து வண்டியை ஓட்டிக் கொண்டே போகலாம் என்பதுதான் அறிவியலின் கண்டுபிடிப்பு. முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு ஒரு பயலுக்கும் இந்த ஒலிபெருக்கிக்கூட தெரியாது.

பெரியார் அவர்கள் மிகத் தெளிவாக ஒன்றைச் சொல்கிறார், 1909 ஆம் ஆண்டு.

‘பெரியார்’ திரைப்படத்தில்...

இன்றைக்கு 2023 ஆம் ஆண்டு. நூறு ஆண்டுகளுக்கு முன்பாக - அப்பொழுது எந்த இயக்கத்தையும் தொடங் காத பெரியார் - தன்னுடைய பழக்கவழக்கங்களில், தன்னுடைய குடும்பம் வைதீகக் குடும்பமாக இருப்பதில், திருமணம் செய்து கொடுத்த பெண் குழந்தையின் கணவன், காலரா நோயினால்  இறந்துபோக, அந்தப் பெண்ணைக் கொச்சைப்படுத்துகிறார்கள். ‘பெரியார்’ திரைப்படத்தில் இந்தக் காட்சியை நீங்களெல்லாம் பார்த்திருப்பீர்கள்.

அந்தப் பெண்ணை இளம் கைம்பெண்ணாக்கி, கொடுமைப்படுத்தும்பொழுது, அந்தப் பெண், தந்தை பெரியார் அவர்களுடைய காலைப் பிடித்துக்கொண்டு கதறி, ‘‘மாமா, என்னை இப்படி ஆக்கிவிட்டீர்களே?’’ என்று கேட்பதை, பெண் ஏன் அடிமையானாள்? என்ற புத்தகத்தில் எழுதியிருப்பார்.

அந்தப் பெண்ணை தூக்கி நிறுத்தும்பொழுதே, அந்தப் பெண்ணுக்குப் புது வாழ்வு கொடுத்தே தீருவேன் என்ற உணர்வோடு தூக்கி நிறுத்தினேன் என்று எழுதியிருப்பார்.

இது பெரியாருடைய எழுத்திலே இருக்கும்.

அந்தத் துணிச்சல். ‘விதவைத் திருமணம்‘ என்பதை அவர் ஒரு பெரிய புரட்சி செய்கிறேன் என்று செய்ய வில்லை.

அவருடைய தாய் - தந்தையர் எதிர்க்கிறார்கள்; குடும்பத்தினர் எதிர்க்கிறார்கள்; உறவினர்கள் எதிர்க் கிறார்கள். யார் வேண்டுமானாலும் எதிர்ப்புத் தெரிவி யுங்கள்; அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை என்றார்.

செய்திறன் என்பது மிகவும் முக்கியம்.

இந்தப் பெண்ணை சிதம்பரத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று இன்னொருவர் மூலம் அனுப்பி வைக்கிறார். மாப்பிள்ளையை இன்னொருவர் அழைத் துக் கொண்டு அங்கே வருகிறார். அவர்களது மண விழாவிற்கு ஏற்பாடு செய்தார்.

123 ஆண்டுகளுக்குமுன்பு 

தந்தை பெரியாரின் புரட்சி!

123 ஆண்டுகளுக்குமுன்பு, தான் செய்தது புரட்சி என்று அவர் நினைக்கவில்லை.

இதுதானே மனித வாழ்க்கைக்கு மிக முக்கியம்.  நான் என்ன பெரிதாக செய்துவிட்டேன். இப்படித்தானே மனிதர்கள் இருக்கவேண்டும் என்று செய்தார்.

அப்பொழுதுதான் அவருக்குப் புரிகிறது. இது போன்றவற்றை யார் தடை செய்வது? இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்கிறார்.

சனாதனம், இதுதான் ஆரியம்; இதுதான் ஜாதி; இதுதான் வருணாசிரம தர்மம் என்று தெரிந்தவுடன், அதை ஒழிப்பதைத் தவிர, எனக்கு வேறு வேலை கிடையாது என்று இறங்கி, சுயமரியாதை இயக்கம் என்ற ஓர் அமைப்பைப் பின்னாளில் உருவாக்குகிறார், இந்தக் கொள்கைகளை வைத்து.

சுயமரியாதை இயக்கம் தொடங்கியபொழுது, இன் னொன்றையும் கவனிக்கவேண்டும்.

பிறவி பேதம் என்றால் என்ன?

பிறவி பேதம் என்ற ஒருவரியில் எவ்வளவு ஆழமான செய்திகளை வைத்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.

பிறவி பேதம் என்பதற்கு விளக்கம் சொல்கிறார்,

உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்கிற பேதத்தை ஒழிப்பது தான் சுயமரியாதை இயக்கத்தினுடைய லட்சியம். மிக எளிமையானது.

உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்பதை பல பேர் எப்படி புரிந்துகொண்டார்கள் என்றால்,

உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி

தொடக்கூடிய ஜாதி - தொடக்கூடாத ஜாதி

எட்டி நிற்கவேண்டிய ஜாதி - கிட்டே வரவேண்டிய ஜாதி.

இப்படியாக ஜாதியைப்பற்றி மட்டும்தான் அவர்களு டைய மனதில் பதிந்தது.

ஆண் உயர்ந்தவர் - பெண் தாழ்ந்தவர் என்பதும் பிறவி பேதம்தான்!

ஆனால், தந்தை பெரியார் அவர்கள் இன்னொன்றை சமமாகப் பிரித்துச் சொன்னார்.

ஆண் உயர்ந்தவர் - பெண் தாழ்ந்தவர் என்கிற பேதம் இருக்கிறதே, அதுவும் பிறவி பேதம்தான் என்றார்.

ஆண் - பெண் என்பதில் என்ன வேறுபாடு இருக்கிறது; எதற்காக வேறுபாடு இருக்கவேண்டும் என்று பெரியார் கேட்டார்.

சனாதனம் மீண்டும் உருக்கொள்கிறது

நம்முடைய நாட்டில், மூடநம்பிக்கைகள் எல்லாவற் றையும் தாண்டிய கொடுமையான செய்தி என்னவென் றால், சனாதனம். இப்பொழுது சனாதனம் மீண்டும் உருக்கொள்கிறது.

இந்த காலகட்டத்தில்தான், பெரியாருடைய தத்துவங் கள் மேலும் மேலும் தேவைப்படுகின்றன.

எப்படி ஒரு போர் நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுது, புதிய புதிய போர் ஆயுதங்கள் நமக்குத் தேவையோ; பேராயுதங்கள் தேவையோ அப்படிப்பட்ட காலகட்டத்தில்தான், இந்த அமைப்புகளும், போராட் டங்களையும் நாம் நினைவுப்படுத்திக் கொள்ளவேண்டி இருக்கிறது; இந்த சாதனையை செய்யவேண்டி இருக்கிறது.

இன்று ஆணாதிக்கம் முடிந்துவிட்டதா? 

ஜாதி ஒழிந்துவிட்டதா?

எதிர்த்து நாம் களங்காணவேண்டிய 

காலகட்டம் இது

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பணி நியமனம் செல்லாது என்று திட்டமிட்டு ஒரு சூழ்ச்சியை செய்கிறார்கள். தங்களுக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பை, சட்டத்தில் சந்துபொந்துகளை உருவாக்கிப் பயன் படுத்திக் கொள்கிறார்கள். அவர்களை எதிர்த்து நாம் களங்காணவேண்டிய காலகட்டம் இது.

களத்திற்கு தயாராகவேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற செய்திகளை நான் சொல்கிறேன். வரலாற்றுக் கதைகளையெல்லாம் சொல்லி, இந்த ஜாதி இப்படி இருந்தது; இந்த ஜாதி இவ்வளவு மோசமாக இருந் தது என்று சொல்வார்கள். அப்போது எங்கள் ஜாதியை குறைத்து மதிப்பிட்டார்கள் என்று சொல்கிறார்கள். இருப்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். 

நாங்கள் எல்லாம் 

ஸ்கேன் மிஷின் போன்றவர்கள்

சுயமரியாதைக்காரர்களாகிய நாங்கள் எல்லாம் ஸ்கேன் மிஷின் போன்றவர்கள். உடலில் இருப்பதை அப்படியே காட்டும். இது ஓவியக் கலை அல்ல; நாங்கள் நிழற்பட நிபுணர்கள் அல்ல. கொஞ்சம் ‘டச்‘ செய்து கொடுங்கள் என்று சொல்வதற்கு.

‘டச்‘ செய்ய முடியாது. டச்சே செய்ய முடியாது. செய்யக் கூடாது.

உடலை ஸ்கேன் செய்து பார்த்தால்தான், சிகிச்சை அளிக்க முடியும். அந்த நோயிலிருந்து விடுபட முடியும்.

நாம் உண்ணுவதை யார் முடிவு செய்வது?

அது நம்முடைய உரிமை அல்லவா!

ஜாதியக் கொடுமையைவிட, பெரிய கொடுமை என்னவென்றால், ஒரு பெண்ணுக்கு அவருடைய உடல்மீது உரிமை உண்டா?

பெரியார் யார்மீதும் கோபப்படவில்லை; எந்த ஜாதியின்மீதும் அவருக்கு வெறுப்பில்லை

பெரியார் இதைத்தான் கேட்டார்; அவர் மனிதாபி மானி. பெரியார் யார்மீதும் கோபப்படவில்லை; எந்த ஜாதியின்மீதும் அவருக்கு வெறுப்பில்லை. வெறுப்பு அரசியல் இல்லை; விருப்பு சமூகக் கொள்கை அது.

ஒருமுறை பேட்டியெடுக்கும்பொழுது என்னிடம் ஒருவர் கேட்டார்.

நீங்கள் பார்ப்பனீயத்திற்கு எதிரானவரா? என்று.

ஆமாம் என்றேன்.

ஏன்? என்று கேளுங்கள், அதற்குப் பதில் சொல்கி றேன் என்றேன்.

சொல்லுங்கள் என்றார் அவர்.

‘‘மனிதனை விரும்புகிறவன் நான். பார்ப்பனீயம் என்பது மனிதநேயத்திற்கு விரோதம். சனாதனம் என்பது  மனிதநேயத்திற்கு விரோதம்’’ என்றேன்.

Why are you Anti-Brahmin- கேள்வி.

எனது பதில்: I am Pro Human   என்று பதில் அளித்தேன்.

 200 ஆண்டுகளுக்கு முன்பு 

இங்கே என்ன நிலை?

தோள்சீலை வரிப் போட்டார்கள் என்றெல்லாம் பேசுகிறோமோ, 200 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே என்ன நிலை?

இங்கே ஒரு பெரிய அறிஞர் இருக்கிறார்; ஆர்.எஸ்.எஸ். கிளை அமைப்பு நடத்துபவர்; அவர் சொல்கிறார், வெள்ளைக்காரர்களுக்கு முன்பு ஜாதி இல்லை; அவர் களால்தான் ஜாதி வந்தது என்கிறார். அதற்கு முன்பு இருந்தவர்கள் நூற்றுக்கு நூறு சதவிகிதம் படித்தார்கள் என்று சொன்னார்கள்.

ஆனால், உண்மை நிலை என்ன?

தந்தை பெரியாரும், ஜோதிபாபூலேவும், சாகு மகராஜ் போன்றவர்கள்.

‘‘ஹோம் ரூல் என்று கேட்காதீர்கள்; இப்பொழுது பிராமின் ரூல், சனாதன ரூல்தான்’’ என்று தெளிவாகக் கூறி, அந்தப் பார்ப்பனீய சனாதனத்தை வேரறுக்கப் போராடினார்கள்.

சுயமரியாதை ராஜ்ஜியம் வேண்டுமா? 

சுகராஜ்ஜியம் வேண்டுமா?

உண்மையான சுயமரியாதை ராஜ்ஜியம் வேண்டுமா? சுயராஜ்ஜியம் வேண்டுமா? என்றால், சுயமரியாதை ராஜ்ஜியம் வந்தால்தான், அது சுகராஜ்ஜியமாக இருக்க முடியும் என்று எடுத்துச் சொன்னார்கள்.

1802 ஆம் ஆண்டு, 200 ஆண்டுகளுக்கு முன்பு, வெள்ளைக்காரர்கள் வந்து ஒரு சட்டத்தை நிறை வேற்றுகிறார்கள்.

அது என்ன சட்டம் தெரியுமா?

இது எங்களுடைய சொந்த சரக்கு அல்ல. ஆதாரத் தோடு சொல்கிறோம்.

அபிநவ் சந்திரசூட் என்பவர் எழுதிய புத்தகம்!

அபிநவ் சந்திரசூட் என்பவர் ஹார்வர்டு வழக்குரை ஞராக இருந்தவர். 

‘‘Republic of Religion: The Rise and Fall of Colonial Secularism in India’’,  Chandrachud, Abhinav என்ற புத்தகத்தில் அதிர்ச்சியடையக் கூடிய ஒரு செய்தி என்னவென்றால்,

பெண் குழந்தை பிறந்தால், கங்கையில் தூக்கி எறிந்துவிட வேண்டும்; கழுத்தை முறித்துவிடவேண்டும்.

திராவிடம் எப்படி உயர்ந்தது - ஆரியம் எப்படித் தாழ்ந்தது என்பதைப் பாருங்கள்.

பெண் குழந்தை பிறந்தவுடன், கங்கை நதியில் தூக்கி வீசிவிடவேண்டும்; கங்கை நதியில் இருக்கின்ற சுறா மீன்கள், அதை சாப்பிடவேண்டும்.

இதை கேட்கும்பொழுதே நம்முடைய உணர்வுகள் எப்படி கொந்தளிக்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள்.

தேச பக்தியைவிட, 

எனக்கு மனித பக்தி அதிகம்!

இப்படி ஒரு மனிதாபிமானமற்ற  சனாதனம் தேவையா?

நல்ல வாய்ப்பாக வெள்ளைக்காரர்கள் வந்தார்கள். 

தேச பக்தி இல்லாதவர்கள்தான் வெள்ளைக்காரர் களை வரவேற்கிறார்கள் என்றார்கள்.

உன்னுடைய தேச பக்தியைவிட, எனக்கு மனித பக்தி அதிகம்.

உன்னுடைய தேச பக்தி என்னுடைய மனித பக்திக்கு விரோதமானது என்று சொன்னால், அந்த தேச பக்திக்கு நான் கட்டுப்படவேண்டிய அவசியமில்லை.

யார் எனக்கு நண்பன்?

தந்தை பெரியார் சொன்னார், ‘‘10 ஆயிரம் மைல் களுக்கு அப்பால் இருக்கின்ற ஒருவன் வருகிறான்; 2 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற ஒருவன் வருகிறான். என்னைத் கட்டித் தழுவுகிறான்; கைகுலுக்கு கிறான். ஆனால், என் பக்கத்து வீட்டில் இருப்பவன் தொடமாட்டேன் என்கிறான், கிட்டே வந்தால் தள்ளிப் போகிறான்.

10 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருப்பவன் ஹலோ என்று சொல்லி, கைகுலுக்குகிறானே, இவன் எனக்கு நண்பனா? பக்கத்து வீட்டுக்காரன் நண்பனா?’’ என்று கேட்டார்.

‘‘அவன் அந்நியனா? இவன் அந்நியனா?’’ என்று கேட்டார்.

எங்களுடைய பார்வை குறுகலான பார்வை அல்ல; உலகப் பார்வை!

மனித பக்தி என்பது அதுதானே. எங்களுடைய பார்வை குறுகலான பார்வை அல்ல. உலகப் பார்வை.

‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்.’’ இப்படிப்பட்ட அகன்ற பார்வை, விரிந்த பார்வை.

அந்த அடிப்படையில் வரும்பொழுது, 1802 ஆம் ஆண்டு இப்படி ஒரு சட்டத்தை அவர்கள் செய்தார்கள்.

எங்கள் மதத்தில் தலையிடுகிறீர்கள் என்று சொன்னார்கள். மதத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.

1802 ஆம் ஆண்டு பெண் குழந்தைகளைக் கங்கையில் போட்டார்கள்.

தந்தை பெரியார் அவர்களின்

 ஆராய்ச்சி முன்னுரை

உங்கள் யாருக்காவது சந்தேகம் இருந்தால், ‘‘காம ராஜர் கொலை முயற்சி சரித்திரம்’’ என்கிற நூலில், தந்தை பெரியார் அவர்கள் ஆராய்ச்சி முன்னுரையில் எழுதியிருப்பார்.

இந்திய சமூக வரலாற்றுக் குறிப்பை வரலாற்றுப் பேராசிரியர் சத்தியநாத அய்யர் எழுதியிருப்பார். அதில், வங்காளத்தில் பெண் குழந்தை பிறந்தால், கழுத்தைத் திருகி வயலுக்குள் போட்டால், பயிர் நன்றாக முளைக்கும் என்று இருந்தது.

இதையெல்லாம் தடை செய்தது எது?

வெள்ளைக்காரர்கள் வந்த பிறகுதான்.

1829 ஆம் ஆண்டு, பெண்களை உடன்கட்டை ஏற்றும் பழக்கம் ஒழிக்கப்பட்டது.

லார்டு ஹேஸ்ட்டிங்ஸ் என்பவர்தான் அதை ஒழித்தார்.

1856 ஆம் ஆண்டு, விதவைத் திருமணம் சட்டத்தால் ஏற்கப்பட்டது.

1870 ஆம் ஆண்டு, பெண் சிசுவைக் கொல்லுவது தடை செய்யப்பட்டது.

1872 ஆம் ஆண்டு சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ், கலப்புத் திருமணம் அனுமதிக்கப்பட்டது.

1892 ஆம் ஆண்டு குறைந்தபட்சத் திருமண வயது 12 ஆக உயர்த்தப்பட்டது.

1921 ஆம் ஆண்டு, சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சியில், பெண்கள் வாக்காளர்களாகும் உரிமை முதன்முதலாக இந்தியாவில் வழங்கப்பட்டது.

1929 ஆம் ஆண்டு, குழந்தைப் பருவத்திலேயே திரு மணம் செய்வதற்குத் தடை சட்டம் இயற்றப்பட்டது.

1937 ஆம் ஆண்டு, பெண்கள் ஓர் எல்லைக்குள் உட்பட்டு, சொத்துரிமை பெற்றனர்; ஆனால், அது நீடிக்கவில்லை. பிறகுதான், அம்பேத்கர் அவர்கள் இந்து சட்டத்தில், முயற்சி செய்தார்கள். அவரே வெளியேறும் படி மனக்கிளர்ச்சியை உண்டாக்கினார்கள். அவர் விட்டுச் சென்ற பணியை, திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்ற மன்மோகன்சிங் தலைமையில் 2006 ஆம் ஆண்டு அமைந்த ஆட்சியில் அச்சட்டம் நிறைவேற்றப் பட்டது.

செங்கல்பட்டு முதல் சுயமரியாதை 

மாகாண மாநாட்டுத் தீர்மானம்

அதற்கு முன்பே, தந்தை பெரியார் பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினார்.

அப்பொழுது கலைஞர் 5 வயது குழந்தை. 

கலைஞர் அவர்கள் முதலமைச்சராகி, அவருடைய ஆட்சியில் 1989 இல் பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

சனாதனத்திற்கும், திராவிடத்திற்கும் நடைபெறுகின்ற போர்!

இவையெல்லாம் சனாதனத்திற்கும், திராவிடத்திற்கும் நடைபெறுகின்ற போர்.

தன்மானத்திற்கும், அடிமைத்தனத்திற்கும் நடைபெறு கின்ற போர்.

எனவே, அந்த அடிப்படையில் நாம் சிந்திக்கின்ற நேரத்தில், இன்னமும் அந்த சனாதனம் இருக்கிறது.

வெள்ளைக்காரனா மனுதர்மத்தை எழுதினான்? வெள்ளைக்காரனா பகவத் கீதையை எழுதினான்?

வெள்ளைக்காரன் வந்ததினால்தான் ஜாதி வந்தது என்று சொல்கிறார்களே, வெள்ளைக்காரனா மனுதர் மத்தை எழுதினான்? வெள்ளைக்காரனா பகவத் கீதையை எழுதினான்?

இதற்குப் பதில் சொல்ல வேண்டாமா?

எதை வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகலாமா?

தந்தை பெரியார் அவர்கள் தமது வாழ்நாளில் பெரிய அளவிற்குத் தண்டனை பெற்றதே - இன்றைய ஆட்சி ஏன் ஒழியவேண்டும் என்று தலைப்பிட்டு செய்தி எழு தியதால், அதற்காகவே சிறைக்குப் போனவர் என்கிற வரலாறு, இந்தத் துக்கடாக்களுக்கெல்லாம் தெரியாது.

இன்றைக்குப் பெண்ணுரிமை என்று சொல்லும் பொழுது, அந்தப் போர் இன்னமும் முடிவிற்கு வரவில்லை.

ஜாதி, தீண்டாமைகள் பல ரூபத்தில் இன்றைக்கு வந்து கொண்டிருக்கின்றன.

சனாதனம் என்பது ஒரு வகை நோய்!

கரோனா தொற்று பல ரூபங்களில் இன்றைக்கும் வருகிறது. அதுபோல, சனாதனம் என்பது ஒரு வகை நோய்!

6 மாநிலங்களில் கரோனா தொற்று மீண்டும் பரவு கிறது என்று சொல்கிறார்கள். நம்முடைய தமிழ்நாட்டிலும் பரவி வருகிறது என்று சொல்கிறார்கள்.

இந்த நோய்க்காவது தடுப்பூசி உண்டு. ஆனால், சனாதன நோய்க்குத் தடுப்பூசி என்பது, சுயமரியாதை இயக்கம், இந்தக் கொள்கை என்பதைத் தவிர வேறு எதுவும் கிடையாது.

இப்படியெல்லாம் சனாதனத்தினுடைய கொடுமை கள் நடந்திருக்கின்றன. ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டித்தாண்டி தான் வந்திருக்கின்றோம்.

தந்தை பெரியாரிடம் 

கேட்கப்பட்ட 10 கேள்விகள்!

தந்தை பெரியார் அவர்களின் 95 ஆம் ஆண்டில் அவரிடம் 10 கேள்விகள் கேட்கிறார்கள்.

அதில், பெண்கள் - ஆண்கள் உடை பற்றி உங்கள் கருத்து என்ன?

‘‘உடைக்குப் போய் ஏன் பணத்தை செலவு செய்ய வேண்டும்? ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே உடை வேண்டும். ஒரே உடை இருந்தால், குழந்தைகளுக்கு விதவிதமாக உடை வாங்கவேண்டிய செலவு மிச்சமாகும்.

ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று ஒரு வீட்டில் இருந்தால், ஒரே உடை வாங்கினால்,  ஒருநாள் அந்தக் குழந்தை, இன்னொரு நாள் இந்தக் குழந்தை அந்த உடையை அணிந்து செல்லலாமே’’ என்றார்.

பெரியார் ஒரு பயன்கருதி இருக்கக் கூடிய பகுத்தறிவாளர்!

நாகரசம்பட்டியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் உரையாற்றும்பொழுது சொன்னார்,

‘‘பெண்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். தலைமுடியை நீள நீளமாக வைத்துக்கொண்டு, அதற்காக எண்ணெய் செலவு, நேரச் செலவு ஆகிறதே, அப்படியில்லாமல்,  தலைமுடியை பாப் கட்டிங் போன்று இருந்தால், உங்களுக்கும் வசதியாக இருக்கும். அடுத்த வேலையைப் பார்க்கலாம் அல்லவா’’ என்றார்.

ஆகவே, பெரியார் ஒரு பயன்கருதி இருக்கக் கூடிய பகுத்தறிவாளர்.

சனாதனம் எல்லாவற்றிலும் 

உள்ளே புகுந்துவிட்டது!

எதுவும் பயன் கருதி இருக்கவேண்டும்; நேரம் முக்கியம், உழைப்பு முக்கியம்; செல்வம் முக்கியம் என்று வரும்பொழுது, சனாதனம் என்பது இருக்கிறதே, எல்லாவற்றிலும் உள்ளே நுழைந்துவிட்டது.

இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லி, தமிழ்நாட்டிலேயே அந்த வியாதியை உள்ளே நுழைத்துவிட்டார்கள்.

வாய்விட்டு எல்லோரும் சிரிக்கவேண்டும்!

மனிதநேயத்திற்கு விரோதமாகச் சொல்கிறார்கள். ‘‘வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்’’  என்பது பழமொழிதான். அது சாதாரண பழமொழிதான். ஆகவே, வாய்விட்டு எல்லோரும் சிரிக்கவேண்டும் அல்லவா! அதில் என்ன குறுக்கே கோடு போடுவது?

‘‘பொம்பள சிரிச்சா போயிற்று; புகையிலை விரிச்சா போயிற்று’’ என்ற பழமொழி எப்படி வந்தது?

பெண் குழந்தைகள் என்றால், எப்பொழுதும் நோயோடுதான் இருக்கவேண்டுமா? சிரித்தாலே தண்டனை என்றால், அது என்ன நியாயம்?

பெண்களை மிருகமாக - அடிமையாக வைத்திருக்கவேண்டும் என்று நினைத்தார்கள்!

கலைவாணர் என்.எஸ்.கே. சொல்வார், மிருகங்களுக் கெல்லாம் சிரிக்கத் தெரியாது என்று. பெண்களை மிருக மாக வைத்திருக்கவேண்டும் என்று நினைத்தான்; அடி மையாக வைத்திருக்கவேண்டும் என்று நினைத் தான்.

அதைத்தான் கலைவாணர் கூறினார்.

அப்படிப்பட்டவர்களை மனிதர்களாக ஆக்குகின்ற இயக்கம்தான் இந்த இயக்கம்.

அதற்கு வழிகாட்டிதான் அன்னை மணியம்மையார் அவர்கள்.

மணியம்மையார் அவர்களுடைய தியாகம், அவர் களுடைய துணிவு, அவர்களுடைய தெளிவு மிக முக்கியமானது.

அவர் எதைப்பற்றியும் கவலைப்படவில்லையே. அவரை எவ்வளவு விமர்சனம் செய்திருப்பார்கள். எதற்காகவாவது அவர் பதில் சொல்லியிருப்பாரா?

நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள்; என்னுடைய வேலையை நான் செய் வேன் என்று சொல்லி அவருடைய பணிகளைத் தொடர்ந்து செய்தார்.

இன்றைக்கும் இன எதிரிகள் அதைக் கண்டு ஆத்திரப்படுகிறார்கள்!

இங்கே அழகாக சொன்னார் அருள்மொழி அவர்கள், எந்த இலக்குக்காக வந்தாரோ, அந்த இலக்கை அடைந்தார். அதுதானே இன்றைக்கு அசைக்க முடியாத அளவிற்கு இருக்கிறது. இன்றைக்கும் இன எதிரிகள் அதைக் கண்டு ஆத்திரப்படுகிறார்களே!

பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்காது என்றார்கள்.

பிறகு சொன்னார்கள், மணியம்மையாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்காது என்று.

இப்பொழுது என்ன சொல்கிறார்கள்? வீரமணிக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்காது என்கிறார்கள்.

இப்படியே சொல்லிக் கொண்டே இருங்கள்; இது ஆயிரங்காலத்துப் பயிர்! 

சுயமரியாதைத் தத்துவம் என்பது 

சமூக விஞ்ஞானம்!

விஞ்ஞானத்தை எப்படி நீங்கள் அழிக்க முடியாதோ, அதுபோல சுயமரியாதைத் தத்துவம் என்பது இருக் கிறதே, மனிதநேயம் - மனிதநேயம் என்பது சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் - இது ஒரு சமூக விஞ்ஞானம் - வளரக் கூடியது - உலகிற்கே தேவையானது.

சனாதனம் என்பது ஓர் அஞ்ஞானம்.

சனாதனம் வெற்றி பெற வாய்ப்பில்லை.

சமூக விஞ்ஞானமான சுயமரியாதைக் கருத்துதான் வெற்றி பெறும்.

நம்முடைய நாட்டில், வர்க்கத்தையே நிர்ணயம் செய்வது வருணம்தானே.

சூத்திரனுக்குக் கூலிக் கொடுத்தேனும், கூலி கொடுக்காமலும் வேலை வாங்கலாம்; எந்தப் பொருளை பிராமணன் மற்றவர்களுக்குத் தானமாகக் கொடுத்தாலும், அவன் பொருளைத்தான் தானமாகக் கொடுக்கிறானே தவிர, மற்றவை இல்லை - மனுதர்மம்.

பெண்களுக்கு எந்தக் காலத்திலும் சுதந்திரம் இல்லை - மனுதர்மம்.

அனைவருக்கும் அனைத்தும் என்ற தத்துவம்தான் சமூகநீதி!

மனித தர்மம் என்று சொல்லும்பொழுது, சமதர்மம் என்று வரும்பொழுது எல்லாருக்கும் எல்லாமும்; அனைவருக்கும் அனைத்தும் என்ற தத்துவம்தானே சமூகநீதி.

அந்த சமூகநீதிதானே சுயமரியாதையினுடைய விளைவு. 

ஒரு மனிதனுக்கு சுயமரியாதை சிந்தனை வந்தால், ஏன் ஒருவன் மேலே இருக்கவேண்டும்? ஏன் ஒருவன் கீழே இருக்கவேண்டும்? என்கிற கேள்வி கேட்பதுதானே.

கேள்வி கேள், நம்பாதே என்று சொல்வது திராவிடம்.

‘புனிதம்‘, ‘தீட்டு’ என்பதெல்லாம் புரட்டு என்று சொல்லிவிட்டு, இதை சிந்தித்துப் பார்! எதற்கும் இடம் கொடுக்காதே, ஏன் என்று கேள் என்று சொல்லிவிட்டு,

கடைசியாக ஒன்று சொன்னார் பாருங்கள், எந்தத் தலைவரும் சொல்லாத அளவிற்கு - அதுதான், அன்னை மணியம்மையார் அவர்கள், 

‘‘சுதந்திரமாகச் சிந்தித்துப் பார்!

யார் சொல்வதையும் நம்பாதே!’’ என்றார்!

அப்படிப்பட்டவருடைய சிந்தனையின் காரண மாகத்தான் நண்பர்களே, இன்றைக்கு இவ்வளவு பெரிய மாற்றங்கள் சமுதாயத்தில் வந்து கொண்டிருக்கிறது.

தந்தை பெரியாருக்குத் தொண்டு செய்து, அவரை வாழ வைக்கவேண்டும் என்று நினைத்தார்.

தோள்சீலை போராட்டம் மற்றவை பற்றியெல்லாம் இங்கே சொன்னார்கள். இன்றைக்கு அதைவிட மோச மான காலகட்டம் ஓன்று இருக்கிறது - மனிதர்களே நடமாட முடியாது.

மாட்டை அரவணைக்கச் சொல்கிறார்கள்!

மாட்டை அரவணைக்கிறார்கள்;

மாட்டை அரவணைத்தவன் மருத்துவமனைக்குப் போயிருக்கிறான் என்பது வேறு விஷயம்.

எவ்வளவு காட்டுமிராண்டித்தமான சூழலுக்கு இந்த சனாதனம் நம்மை ஆக்கியிருக்கின்றது என்பதற்கு உதாரணம், மாட்டைக் கட்டிப்பிடி என்கிறான்.

சரி, மாட்டைக் கட்டிப் பிடி, அது உன்னுடைய ஆசை. அதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை.

அதில்கூட, பசு மாட்டை மட்டும் கட்டி பிடிக்க வேண்டுமாம்; எருமை மாடு என்ன செய்தது? காளை மாடு என்ன செய்தது?

காளை மாட்டைக் கட்டியவன்தான் திராவிடன்.

வீரத்தினுடைய அடையாளம் - அதுதான் ஜல்லிக் கட்டு.

பசு மாடு, பசு மாடு என்கிறாயே, எருமை மாடும்தான் பால் கொடுக்கிறது. கெட்டித் தயிர் வேண்டும் என்றால், எருமைப் மாட்டுப் பால்தான் கெட்டித் தயிருக்கு வேண்டும்.

மாட்டையே பிரித்தவன், ஆட்களில் பிரிக்க மாட்டானா?

பகுத்தறிவுக்கு விரோதமாக எது இருந்தாலும், அதைத்தான் சனாதனம் நம்புகிறது!

ஆகவேதான், எந்த வகையிலும் பகுத்தறிவுக்கு விரோதமாக எது இருந்தாலும், அதைத்தான் சனாதனம் நம்புகிறது.

ஏனென்றால், நம்பு! நம்பு என்பது சனாதனம்!

கேள்வி கேள், கேள்வி கேள்; நம்பாதே என்று சொல்வது பகுத்தறிவு, சுயமரியாதை!

இந்த இரண்டும் மோதிக்கொண்டுதான் இருக்கும். அதில் வெற்றி பெறப் போவது சுயமரியாதை.

போராட்டம் பல வடிவங்களில் வந்தாலும், எப்போதும் ஆயத்தமாக இருப்போம்!

காரணம், அது சமூக விஞ்ஞானம். இதைக் காலம் நிர்ணயிக்கும். இதற்கிடையே போராட்டம் பல வடிவங் களில் வந்தாலும், அதற்கு எப்போதும் ஆயத்தமாக இருப்போம்; அதை சந்திப்போம்!

இதுதான் இந்தக் கருத்தரங்கத்தினுடைய முக்கிய செய்தி என்று சொல்லி, வந்திருக்கின்ற அனைவருக்கும் நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

வாழ்த்துகள்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரை யாற்றினார்.


No comments:

Post a Comment