என்.எல்.சி. பிரச்சினை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 25, 2023

என்.எல்.சி. பிரச்சினை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

சென்னை,மார்ச் 25- என்எல்சி விவகாரத்துக்கு தீர்வு காண உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

என்எல்சி நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்தப் படுதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இது குறித்து சட்டப்பேரவையில் திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இதற்கு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து பேசினார்.

அதில், "என்எல்சி நிறுவனத்தில் தற்போது 1711 காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் நிலம் அளித்தவர்களுக்கு கூடுதலாக 20 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று என்எல்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு ஏக்கருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் உள்ளது. இதை உறுதிசெய்ய உயர்மட்ட குழுவை முதல்வர் அமைத்துள்ளார். விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

ரூ.100 கோடி சிஎஸ்ஆர் நிதியை கடலூர் மாவட்டத்தில் செலவு செய்ய என்எல்சி நிறுவனம் ஒப்புதல் தெரிவித் துள்ளது. 60,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவில்லை. தேவைக்கு அதிகமான நிலங்களை கையகப்படுத்தும் பணியை அரசு ஒருபோதும் மேற்கொள்ளாது" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.

சொத்து வரி செலுத்தாதோர் விவரம் ஏரியா சபைகளில் வெளியிட வேண்டும்

சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னை, மார்ச் 25- சென்னையில் அடுத்த மாதம் முதல் ஏரியா சபைகளை நடத்த வேண்டும். அக்கூட் டங்களில் சொத்துவரி செலுத்தாதோர் விவரங்களை வெளியிட வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப் புகளில் மேயர் அல்லது தலைவர், நிலைக்குழு தலைவர், மண்டல தலைவர் பதவிகள் உள்ளன. வார்டுக்கு தேவையான திட்டங்களை பரிந்துரைப்பது, குறைகளை தெரிவித்து தீர்வு காண்பது போன்ற பணிகளை மேற்கொள்ள வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபைகளை அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் வார்டு கமிட்டிகள் அமைக்கப்படும். கமிட்டியின் தலைவராக அந்த வார்டின் கவுன்சிலர் இருப்பார். 3 மாதத்துக்கு ஒரு முறை அவரது தலைமையில் வார்டு கமிட்டி கூட்டம் நடைபெற வேண்டும் என தமிழ்நாடு அரசு விதிகளை வகுத்துள்ளது.

அரசின் அறிவுறுத்தல் படி, சென்னைமாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் தலா 10 ஏரியா சபைகள் என 2ஆயிரம் ஏரியா சபைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துக்கும், தொடர்புடைய வார்டு கவுன்சிலர் தலைவராகவும், வார்டு உதவி பொறியாளர் செயலராகவும் இருப்பார்கள். ஏரியா சபையை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பான, சபை செயலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்றது. அதில் ஆணையர் பேசும்போது, ‘‘ஏப்ரல் முதல் ஏரியா சபை கூட்டங்களை நடத்த வேண்டும்.

இவற்றில் அப்பகுதியில் நடைபெற்று வரும் பணிகள், வளர்ச்சிப் பணிகள், சொத்து வரி செலுத்தாதோர் விவரங்களை பார்வைக்கு வைக்க வேண்டும். கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை, குப்பையை வகை பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கொசுஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும்’’ என அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் துணை மேயர் மு.மகேஷ்குமார், துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) விஷூ மகாஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பழங்குடியின மாணவர்கள் 

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம், மார்ச் 25- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2022-2023-ஆம் கல்வி யாண்டில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணவர்களுக்கு ப்ரி மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் ஆதார் எண் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்க இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் வங்கியுடன் இணைந்து அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு தொடங்க சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்களை பயன் படுத்தி மாணவர்கள் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு தொடங்கி பயன்பெறுமாறும் கேட்டு கொள்ளப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7,899 மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு இல்லாமல் இருந்ததாகவும், கடந்த 10 நாட்களாக பள்ளிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 1,427 மாணவர்களுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 ஆயிரத்து 472 மாணவர்களுக்கு வரும் 25-ஆம் தேதிக்குள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு தொடங்கப்பட வேண்டும்.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அஞ்சலக ஊழியர்கள் பள்ளிகளில் முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும். அஞ்சலக வங்கிக் கணக்கு தொடங்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பெற்றோர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment