‘‘தந்தை பெரியாரை உங்களுக்குத் தெரியுமா?'' உச்சநீதிமன்ற நீதிபதி எழுப்பிய கேள்வி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 31, 2023

‘‘தந்தை பெரியாரை உங்களுக்குத் தெரியுமா?'' உச்சநீதிமன்ற நீதிபதி எழுப்பிய கேள்வி!

 வாயடைத்து உட்கார்ந்த ஒன்றிய அரசு வழக்குரைஞர்

புதுடில்லி, மார்ச் 31 ”தந்தை பெரியாரைப்பற்றி உங்களுக் குத் தெரியுமா?'' என்று கேட்டு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒன்றிய அரசு வழக்குரைஞரைத் திணற அடித்தார்.

"முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. வெறுப்பு எனும் தீய வளையத்தில் தேசம் சிக்கிக் கொண்டுள்ளது. இதற்குத் தீர்வு அரசியலிலிருந்து மதத்தை வெளியேற் றுவது மட்டுமே" என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் 29.3.2023 அன்று நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வு முன்னர் வெறுப்புப் பேச்சு தொடர்பாக மகாராட்டிரா அரசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநிலத்தில் நிகழும் வெறுப்புப் பிரச்சாரங்கள் பற்றி நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்குப் பதி லளித்த ஒன்றிய அரசின் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, "கேரளா, தமிழ்நாட்டில் நடந்திருந்த சில நிகழ்வுகள் பற்றியும் இந்த நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் திமுக செய்தித் தொடர்பாளர் ஒருவர், 'அனைத்துப் பிராமணர்களும் அழிக்கப்பட் டாலே சமத்துவம் மலரும்' என்று பேசுகிறார். அவர் மீது எவ்வித வழக்கும் பதிவாகவில்லை. அந்தக் கட்சிகூட அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் இன்னும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராகத் தான் இருக் கிறார். அதேபோல் கேரளாவில் குழந்தை ஒன்று 'ஹிந்துக்களும், கிறிஸ்துவர்களும் தங்களின் இறுதிச் சடங்கிற்கு ஆயத்தமாக வேண்டும்' என்று சொல்ல வைக்கப்பட்டு அது காணொலியாகப் பதிவு செய்யப் பட்டு பரப்பப்பட்டுள்ளது. குழந்தையின் அந்தப் பேச்சு நம்மை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குகிறது" என்றார்.

அதற்கு நீதிபதி ஜோசப், "நாங்களும் அதை அறி வோம்" என்றார். அப்போது சொலிசிடர் ஜெனரல், "அப்படியென்றால் ஏன் இந்த நீதிமன்றம் அதைப் பற்றி தாமாக முன்வந்து விசாரிக்கவில்லை" என்று கேள்வி எழுப்பினார்.

அரசியலிலிருந்து மதத்தைப் பிரிக்கவேண்டும்!

அதற்குப் பதிலளித்த நீதிபதி கே.எம்.ஜோசப், "இந்த தேசம் வெறுப்பு எனும் தீய வளையத்தால் சூழப்பட் டுள்ளது. இதற்கு ஒரே தீர்வு அரசியலில் இருந்து மதத்தை தள்ளிவைப்பது மட்டுமே! அரசியலில் இருந்து மதம் அப்புறப்படுத்தப்படும் அந்தத் தருணம் இந்த வெறுப்புப் பேச்சுக்கள் எல்லாம் தடைபடும்" என்றார்.

ஆனால், சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘இல்லை. அரசியலுக்கும், வெறுப்புப் பேச்சுக்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை'' என்றார். நீதிபதியும் விடு வதாக இல்லை. "நிச்சயமாக வெறுப்புப் பேச்சுக்களுக்கும், மதம் மற்றும் அரசியலுக்கும் தொடர்பு இருக்கிறது. அர சியல்வாதிகள் மதத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்" என்று நீதிபதி ஜோசப் கூறினார்.

நீதிபதி பி.வி.நாகரத்னம் கூறுகையில், "சகோதரத் துவம் என்ற நன்மதிப்பில் வெறுப்புப் பேச்சுக்கள் விரி சல்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த வெறுப்புப் பேச்சுக் களை மதம் சார்ந்த சில அமைப்புகள் உருவாக்குகின்றன.

வாஜ்பாயியும், நேருவும் பேசும்போது கிராமப்புற மக்கள் அதை செவிகொடுத்து கேட்பார்கள். ஆனால், இந்தக் காலத்தில் எவ்வித ஞானமும் இல்லாத சிறிய அமைப்புகள் எல்லாம் வெறுப்புப் பேச்சுக்களை கட்ட விழ்த்துவிடுகின்றன. இவர்கள் இந்தியாவை எங்கே இழுத்துச் செல்கிறார்கள்? வெறுப்புப் பேச்சுக்களுக்காக ஒவ்வொரு நபர் மீதும் அவமதிப்பு நடவடிக்கை எடுத் தால் இந்த நீதிமன்றம் தான் எதை நோக்கிச் செல்லும். பேச்சு சுதந்திரத்திற்கு ஏதும் கட்டுப்பாடு இல்லையா? மதிநுட்பம் இல்லாவிட்டால் இந்த தேசத்தை உலகின் நம்பர் 1 தேச தரத்திற்கு இட்டுச்செல்ல முடியாது. சகிப் பின்மை, அறிவின்மை, கல்வியின்மையால் மதி மயக்கம் ஏற்படும். இதை அகற்றுவதில் நாம் முதன்மை கவனம் செலுத்த வேண்டும். சமூகம் ஒட்டுமொத்தமும் இத் தகைய வெறுப்புப் பேச்சுக்களைப் புறக்கணிக்க உறுதி ஏற்க வேண்டும்" என்றார்.

வல்லரசாகும்முன் சட்டத்தை மதிக்கவேண்டும்!

அப்போது நீதிபதி ஜோசப், "வல்லரசாகும் முன்னர் நாம் சட்டத்தை மதிக்க வேண்டும். வெறுப்புப் பேச்சுக்கள் என்பவை கண்ணியத்தின் மீதான தாக்குதலாகும். கண்ணியத்தின்மீது தொடர்ச்சியான தாக்குதல் நடக்கும் போதுதான், 'பாகிஸ்தானுக்குச் செல்லவும்' போன்ற வெறுப்புப் பேச்சுக்கள் வெளியாகும். அவர்கள் தாமாகவே முன்வந்து இந்தத் தேசத்தை தேர்வு செய்தவர்கள். அவர்கள் உங்களின் சகோதரர்கள், சகோதரிகள். நீங்கள் பள்ளிக்கூடத்திலேயே 'இந்தியர்கள் அனைவரும் எனது சகோதர, சகோதரிகள்' என உறுதிமொழி ஏற்றீர்கள் என்பதை மறக்க வேண்டாம். எனக்கு 65 வயதாகிறது. நான் பழைமையானவனாக இருக்கலாம். இன்னும் 4 மாதங்களில் ஓய்வு பெறப் போகிறேன். ஆனால் 75 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் நம் தேசத்தின் பயணத்தைத் தொடங்கிய போது, நம் இலக்கு சட்டத்தை மதிக்கும் தேசமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே! ஆகையால், வெறுப்பு எனும் கீழ் நிலைக்கு நாம் இறங்கக் கூடாது" என்றார்.

தந்தை பெரியாரைப்பற்றித் தெரியுமா?

இந்த விசாரணையின் போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘கேரளாவில் இந்துக்களுக்கு எதிராகப் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக நிர்வாகி, பிரா மணர்களை அழித்தொழிக்க வேண்டும் என பேசி யிருக்கிறார் என சுட்டிக்காட்டியதுடன், உச்சநீதிமன்றம் தாமாகவே வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக விசாரிக்க வேண்டும்'' எனவும் வலியுறுத்தினார். அப் போது நீதிபதி கேஎம் ஜோசப், ‘‘தந்தை பெரியாரை உங்களுக்குத் தெரியுமா?'' என கேள்வி எழுப்பினார். இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது..


No comments:

Post a Comment