ராகுலுக்கு பாதகமில்லை சாதகம் தான்: நிபுணர்கள் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 25, 2023

ராகுலுக்கு பாதகமில்லை சாதகம் தான்: நிபுணர்கள் கருத்து

 புதுடில்லி, மார்ச் 25- மக்களவையில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட ராகுல் மீதான நடவடிக்கை எதிர்க்கட்சிக ளுக்கு சாதகமாக அமைய வாய்ப்பிருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பிரிவு பேராசிரியர் ஜோயா ஹசன் கூறுகையில்,  இந்த நேரத்தில் ராகுலுக்கும் காங்கிரசுக்கும் இது பெரிய அடியாக தோன்றலாம். ஆனாலும், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த நட வடிக்கையை சாதகமாக மாற்ற முடியும். இப்போது ராகுல் ஒரு ஹீரோவாகவும், இரக்கமற்ற அரசியல் அமைப்பிற்கு பலியாகிவிட்டார் என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

ஆனாலும், உயர் நீதிமன்றத்திடம் இருந்து ராகுலுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை என்றால் அதுவும் சிக்கலாக மாறும். அடுத்த மக்களவை தேர்தலில் போட்டியிட முடியாமல் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டால் அது அவருக்கு பின்னடைவாக இருக்கும்’’ என்றார்.

அரசியல் அறிவியல் பேராசிரியை சுசீலா ராமசாமி கூறுகையில், ‘‘ராகுலின் தகுதி நீக்கம் அவர் மீது பொது மக்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்தக் கூடும். இந்த விவகாரத்தை பா.ஜ. பெரிது படுத்தாமல் இருந்திருக்க வேண்டும். இது இப்போது காங்கிரசுக்கு சாதகமான விளைவை ஏற்படுத்தக் கூடும்’’ என்றார். 

காங்கிரஸ் மேனாள் தலைவர் சஞ்சய் ஜா கூறுகையில், ‘‘அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் பா.ஜ. ஒன்றிணைத்துள்ளது.ஒவ்வொரு அரசியல் கட்சியும் இந்த மிருகத்தனமான ஆட்சியைத் தோற்கடிப்பதற்கும், 2014 முதல் ஏற்பட்டிருந்த இந்தியாவின் இருண்ட காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் செயல்பட வேண்டிய நேரம் இது’’ என கூறி உள்ளார். இந்த நடவடிக்கை ராகுல் மீது அனுதாபத்தை ஏற்படுத்தும் என்றே பலர் கூறி உள்ளனர். 

No comments:

Post a Comment