ரூபாய் 410 கோடியில் தொழில் பூங்காக்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 21, 2023

ரூபாய் 410 கோடியில் தொழில் பூங்காக்கள்

 சென்னை, மார்ச் 21- விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோவையில் ரூ.410 கோடியில் தொழில் பூங்காக்கள்: அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. 

தொழில்துறையில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதுடன் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு முனைப் புடன் உள்ளது. பெண்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தோல் அல்லாத காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அரசு சிறப்பு முன் னுரிமை அளித்து வருகிறது. 

இத்தொழிற்சாலைகள், ஏற்கெனவே செய்யாறு, பர்கூர் ஆகிய இடங்களில் செயல்படுகின்றன. திண்டிவனத்தில் 5,400 பெண்களுக்கும், பெரம்பலூரில் 31,600 பெண் களுக்கும் வேலைவாய்ப்பு தரக்கூடிய 2 தொழிற் சாலைகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டியுள்ளார். 

மேலும், 2 புதிய தொழிற்சாலைகள் ராணிப்பேட்டை யிலும், கள்ளக்குறிச்சியிலும் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் 32,000 பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். எத்தனால் கொள்கை விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதுடன், சர்க்கரை ஆலைகளின் நிதி நிலையையும் மேம்படுத்தும். எத்தனால் உற்பத்திக்காக ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்க இக்கொள்கை வழிவகுக்கும். 

விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் ரூ.410 கோடியில் அமைக்கப்படும். இதனால், சுமார் 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ.50 கோடியில் 1,500 பணியாளர்கள் தங்கும் வசதிகளுடன் தொழிலாளர் குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment