2024 மக்களவை தேர்தலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு முக்கிய பிரச்சினையாக இருக்கும் - அகிலேஷ் யாதவ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 21, 2023

2024 மக்களவை தேர்தலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு முக்கிய பிரச்சினையாக இருக்கும் - அகிலேஷ் யாதவ்

லக்னோ, மார்ச் 21- 2024 மக்களவை தேர்தலில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முக்கிய பிரச்சினையாக இருக்கும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தின் மேனாள் முதலமைச்சரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம்  கூறியதாவது: முன்பு மத்திய அமைப்புகளை (சி.பி.அய்., அமலாக்கத் துறை, வருமான வரித்துறை போன்றவை) காங்கிரஸ் தவறாக பயன்படுத்தியது, தற்போது பா.ஜ.க. அதையே செய்கிறது. 

2024 மக்களவை தேர்தலில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முக்கிய பிரச்சினையாக இருக்கும். காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதாக காங்கிரஸ் உறுதியளித்தது. ஆனால் பின்னர் பின்வாங்கியது. பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். ஆனால் காங்கிரஸ் போலவே, காவிக் கட்சியும் அதை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக முன்மொழியப்பட்ட எதிர்க்கட்சி முன்னணியின் பார்முலாவை நாங்கள் வெளிப்படுத்த மாட்டோம். பா.ஜ.க.வை தோற்கடிப்பதே இலக்கு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment