ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 11, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி : அதானி முறைகேட்டால் பொருளாதாரம் சீரழிந்து வரும் நிலையில், பொருளாதாரத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி, பங்கு வர்த்தகக் கண்காணிப்பு அமைப்பு(செபி), இதர நிதித் துறை அமைப்புகள் கடுமையாக உழைக்கவேண்டும் என்கிறாரே நிர்மலா சீதாராமன்?

- ஆறுமுகம், திருவள்ளூர் 

பதில் : அதானிகளின் அதிசய வளர்ச்சியால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டைகளை அடைக்க - நாங்கள் முயற்சி செய்யோம்; மற்ற அமைப்புகள் அந்த ஓட்டைகளை அடைக்க முன்வாருங்கள் என்று கூறுவது நியாயமா?

“வேலிகளே பயிரை மேய்ந்த நிலையில் பயிரைப் பாதுகாக்க ஓடிவாருங்கள்’’ என்ற வேலிகளின் விண்ணப்பம் விசித்திரம் - வேடிக்கை விந்தை அல்லவா? 

---

கேள்வி : கடுமையான சிறுபான்மையின வெறுப்பை பொதுவெளியில் தொடர்ந்து வெளிப்படுத்திய பாஜக பெண் பிரமுகரை நீதிபதியாக நியமிப்பதில் தவறில்லை என்று  ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகிறாரே?

- வெற்றிவேல், வேளச்சேரி

பதில்  : அவர் மட்டுமா கூறினார்; “அசல் அநியாயம் அப்பீலில் அதுவே காயம்” என்பதுபோல உச்சநீதிமன்றத் தீர்ப்பும் அமைந்துவிட்டதே!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதனை எழுப்பிடுவது நல்லது! நியாயத்தைக் காப்பாற்ற தொடர் போராட்டமாக மக்களிடையே நடைபெறுவதை எவரும் தடுக்க முடியாது!

கேள்வி  : “ஜாதி எல்லாம் பார்ப்பனர்கள் தான் கொண்டுவந்தார்கள் , கடவுளால் உருவாக்கப்படவில்லை” என்று மோகன் பாகவத் வடக்கே பேசி உள்ளாரே?

- முருகேசன், வேலூர்

பதில்  : அவர் தலையில் தூக்கிக் கொண்டாடும் பகவத் கீதையில் உள்ள சுலோகங்களில் இரண்டு அவ்விதமாக உள்ளனவே - அதற்கு என்ன பதில்?

1. “சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்’ (நான்கு வர்ணங்களை நானே உண்டாக்கினேன்.) 2. பெண்களும், சூத்திரர்களும் பாப யோனியில் பிறந்தவர்கள்.

இப்போது ஆர்.எஸ்.எஸ்.க்கு ஏற்பட்ட கொள்கை நெருக்கடி. எனவே மழுப்பல் - திசைதிருப்பல்!

---

கேள்வி  : அதானி விவகாரத்தில் பெரும்பான்மை ஊடகங்கள் மவுனம் சாதிக்கின்றனவே?

- சிவசுப்பிரமணியன், விருதாச்சலம்

பதில்  : பல ஊடகங்கள் வாய் மூடவில்லை. வாயை மெல்ல இனிப்பு அனுப்புங்கள்; அந்த ஊடகங்கள் எல்லாம் முதலாளிகளின் ‘ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்’ தானே - எப்படிப் பேசுவர்? புரியவில்லையா! 

---

கேள்வி  : “நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் மருத்துவம் பற்றி ஏ பி சி டி கூட அறியாதவர்கள்” என்ற புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் கருத்து குறித்து?

- காவேரி, சேலம்

பதில்  : நம் மருத்துவமணிகளிடம் விவாதிக்க இந்த புது அவதார ஆளுநர் தமிழிசை தயாரா? டாக்டர் ரவீந்திரநாத் - அவரது துணைவியார் மருத்துவர் சாந்தியிடம் பேச வைக்கிறோம் - விவாதிக்க வரத் தயாரா?

--- 

கேள்வி  : நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய நிதி குறித்த விவரம் கேட்டால் அண்ணாமலையிடம் கேட்கச் சொல்கிறாரே ஒன்றிய அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர்?

- குமரன், காஞ்சி

பதில் : பொறுப்புள்ள அமைச்சரின் பதிலாக இது ஒரு போதும் கருதப்பட மாட்டாது! அவர் அந்தப் பொறுப்பிலிருந்து வெளியேறிட மட்டும் தகுதியானவர் போலும்!

---

கேள்வி : ஒன்றிய பட்ஜெட்டில் முதியோர் ரயில் சலுகைப்பயணம் ரத்து, முதியோர் ஓய்வு ஊதியம் உயர்வு இல்லை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை குறைப்பு  - இந்தப் பணத்தை மிச்சப்படுத்தி என்ன செய்யப்போகிறார்கள்?

- கன்னியப்பன், திருச்சி

பதில் : மில்லியன் டாலர் கேள்வி இது! அதானி, அம்பானி, டாட்டா, பிர்லாக்களுக்கு உதவிடக் கூடும்!

---

கேள்வி : பழநி கோயில் கருவறைக்குள் நுழைந்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளாரே?

- வீராசாமி, மதுரை

பதில்  : அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்” என்றார். ஆனால், காஞ்சிபுரம் கோயில் கருவறைக்குள் அர்ச்சகர் தேவநாதன்கள் என்ன மாதிரி பக்திப் பரவசத்தில் இருந்தனர் என்பதை அறிந்த திருமதி வானதி அவர்கள் என்றாவது அதனைக் கண்டித்து இருக்கிறார்களா? இந்த அரசியல் பரமபத விளையாட்டு, அவருக்குப் பயன்படாது! 

---

கேள்வி : பணியாளர் தேர்வு ஆணையத்தின் 2021-2022ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையின்படி, ஒன்றிய அரசின் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையில் தமிழர்கள் வெறும் 4.5 சதவீதம் மட்டுமே என்று புள்ளிவிவரம் கூறுகிறதே?

- ரவி, நாகர்கோவில்

பதில் : ஒன்றிய அரசில் சமூகநீதி, மாநில உரிமைகள் எப்படி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன என்பதற்கான அடையாளமே இது!

---

கேள்வி :  தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர்களுக்கு விமானத்தில் அவசர கால கதவு இருக்கை மறுக்கப்படுகிறதே?

- உமாசங்கர், பெங்களுரு

பதில் : சிறந்த ‘குடி’மக்கள் அவர்கள் என்பதற்கான அடையாளமாக இருக்குமோ? விளக்கம் தந்து காப்பாற்ற அண்ணாமலைகள் இருக்கிறார்கள் என்பது பல நேரங்களில் அப்பிரமுகர்களுக்குக் கைகொடுக்கிறதே என்பதற்கான தடுப்பு உத்தியாக ஒருவேளை இருக்குமோ!


No comments:

Post a Comment