ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 2, 2023

ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!

 *     தமிழ்நாடு  பெயருக்குப் பாடுபட்டவர்கள் ‘‘வெறும் வறட்டுக் கூச்சல்வாதிகளா?''

* அண்ணாவின் ஆதரவுக்கரம் இல்லையென்றால், ‘இந்து' நாளேடு காணாமல் போயிருக்கும்!

* வாயடக்கம், நாவடக்கம், பேனா எழுத்து அடக்கத்தோடு இருங்கள்!

‘தமிழ்நாடு'  பெயருக்குப் பாடுபட்டவர்கள் ‘‘வெறும் வறட்டுக் கூச்சல்வாதிகளா?'' அண்ணாவின் ஆதரவுக்கரம் இல்லையென்றால், ‘இந்து' நாளேடு காணாமல் போயிருக்கும்! வாயடக்கம், நாவடக்கம், பேனா எழுத்து அடக்கத்தோடு இருங்கள்! ஆழந் தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்!   என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மொழி வழி மாநிலங்கள் பிரிந்த பிறகு முந்தைய ‘‘சென்னை மாகாணம்'' (Madras Presidency) ‘சென்னை ராஜ்யம்' என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டது!

இதுகுறித்து தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களும், திராவிடர், தமிழர் இயக்கங்களும் ‘சென்னை ராஜ்யம்' என்ற பெயரை மாற்றி ‘தமிழ்நாடு' என்று அழைக்கவேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

அறிஞர் அண்ணா மாநிலங்களவையில் இதற்காக அன்றைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், பண்டித நேரு காலத்திலேயே வாதாடினார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சிறந்த நாடாளுமன்றவாதியுமான பூபேஷ்குப்தாவும் முக்கிய பங்காற்றினார்.

அதிகாரப்பூர்வமாக ‘தமிழ்நாடு' என்ற பெயரே வழங்கப்பட்டு வருகிறது!

அப்போது அந்நாளைய ஒன்றிய அரசு அதனை ஏற்கவில்லை - பிறகு 1967 இல் அறிஞர் அண்ணா முதலமைச்சரான பிறகு ‘தமிழ்நாடு' பெயர் மாற்றம்பற்றிய ஒருமனதாக ஒரு தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றி, அதனை ஒன்றிய அரசு ஏற்று ஆணையும் பிறப்பித்த பிறகு, அதிகாரப்பூர்வமாக ‘தமிழ்நாடு' என்ற பெயரே வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் ‘தமிழ்நாடு' பெயர் மாற்றம் கோரி முந்தைய அன்றைய ஆட்சியில் தியாகி சங்கரலிங்கனார் சாகும் வரை பட்டினி இருந்து உயிர்த் தியாகமும் செய்தார். இது, இந்தப் பெயர் மாற்றத்திற்குக் கொடுத்த பெரும் விலையாகும்!

தமிழ்நாடே கிளர்ந்தெழுந்தது!

இந்த வரலாற்றை திட்டமிட்டே மறைத்து, திசை திருப்பும் தமிழ்நாடு ஆளுநர் ‘‘‘தமிழ்நாடு' என அழைக்க வேண்டாம்; ‘தமிழகம்' என்று அழைக்கவேண்டும்'' என்று ஒரு குறுக்குச்சால் விட்டார்! தமிழ்நாடே கிளர்ந்தெழுந்தது - பார்ப்பனர்களைத் தவிர, கட்சி, ஜாதி, மதம் பாராது அனைவரும்! சில காவிகள் ஆளுநர் பக்கம் ஈனக் குரலில் பேசினர்.

பிறகு எதிர்ப்பு இமயமாய் ஆனதைப் பார்த்த ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் போன்று அன்றாடம் அரசியல் செய்யும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு பற்றி ஒரு விளக்கம் கூறினார்.

‘இந்து' ஆங்கில நாளேட்டின் ஆசிரியர் 

மாலினி பார்த்தசாரதியின் 'டுவிட்'!

இதனை வரவேற்ற ‘இந்து' ஆங்கில நாளேட்டின், தற்போதைய ஆசிரியரான மாலினி பார்த்தசாரதி என்ற அம்மையார், ஆளுநரின் விளக்கத்தை வரவேற்று, ஒரு ‘டுவிட்டர்' போட்டார்.

வீண் வம்புச் சண்டைக்கு இழுத்துத் 

தனது ‘தேச பக்தியை' பதிவு செய்துள்ளார்?

அது அவரது கருத்துரிமை. ஆனால், அச்செய்தியில் தேவையில்லாமல்,  ‘‘தமிழ்நாட்டை - தமிழ்நாடு என்று அதன் அதிகாரப்பூர்வ பெயரை, ஆளுநர் பயன்படுத்த வேண்டும், மக்களும் பயன்படுத்தவேண்டும்'' என்று வற்புறுத்தி, ஒருமித்த குரல் எழுப்பிய அத்துணைப் பேரையும், வீண் வம்புச் சண்டைக்கு இழுத்துத் தனது ‘தேச பக்தியை' பதிவு செய்துள்ளார்!

இப்படி ‘தமிழ்நாடு' என்றுதான் அழைக்கவேண்டு மென்று கேட்பவர்கள் - முழங்குபவர்களுக்கு வேறு தீனி கிடைக்கவில்லையாம்! அப்படி கூறுவது  அரசியல் கண்ணோட்டமுடையதாம்!! அப்படிச் சொல்பவர்கள் எதையும் சகித்துக் கொள்ள முடியாத அரசியல் உள்நோக்கம் கொண்ட வறட்டுக் கூச்சல் போடும் பேர்வழிகளாம்!

Malini Parthasarathy @MaliniP

A welcome response from TN Governor RNRavi the controversy over his use of the term “Thamizhagam”. Actually intending to compliment the Tamil historical imagination,his words instead became fodder for politically motivated rabble rousers.Intolerance is sadly on the rise here.

இதன் தமிழாக்கம்:

மாலினி பார்த்தசாரதி

‘தமிழகம்' என்னும் சொல்லைப் பயன் படுத்தியதன் விளைவாக ஏற்பட்ட வாத விவாதங் களுக்குத் தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் அளித்த விளக்கம் வரவேற்புக்குரியது. தமிழின் வரலாற்றுச் சிறப்பைப் போற்றிப் புகழத்தான் அவர் உண்மையில் விரும்பியுள்ளார். ஆனால், அரசியல் உள்நோக்கத்துடன் பொது மக்களை எப்படியாவது தூண்டிவிட நினைக்கும் சிலருக்கு அவர் சொன்னதே சுவையான தீனியாகிவிட்டது. சகிப்புத் தன்மையின்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நிதியமைச்சர் 

பழனிவேல் தியாகராஜனின் பதில்!

இதற்குத் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் சொடுக்கித் தந்துள்ள பதில் சரியானது - முகத்திரையைக் கிழித்த பதிலாகும்.

Dr P Thiaga Rajan (PTR) @ptrmadurai

Hmm....fodder for rabble rousers, ah?

சரி, சரி...

Does anyone have a link to the clip this parody-of-a- newspaper-publisher posted of herself joyously plate-banging (with her entire domestic entourage) and chanting the mantra "Go Corona Go", swaying ever-so-lightly to the rhythm?

இதன் தமிழாக்கம்:

டாக்டர் பி.டி.தியாகராஜன் (பிடிஆர்)

தூண்டிவிடும் விஷமிகளுக்குத் தீனியா? சரி... சரி...

‘‘ஒழிந்து போ கரோனா ஒழிந்து போ'' என்று தாள சுதியுடன் தட்டுகளில் ஓசை எழுப்பி, குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து இவர் படு உற்சாகமாகக் குரல் கொடுத்த காட்சியை ‘டுவிட்டரில்' பதிவு செய்தாரே - அந்தப் பதிவை யாராவது வைத்திருக்கிறீர்களா?

‘‘தீனி எங்களுக்கா? நாங்களா வெற்றுக் கூச்சல் போடுவோர்- தாங்கள் தட்டுத் தூக்கி மந்திரம் சொன்னதை மாற்றி, கொஞ்ச நாளைக்கு முன்பு, கரோனா தொற்று ஏற்பட்ட காலத்தின் போது   ‘‘கரோனா போ, கரோனா போ'' என்ற கூச்சல் போட்டதாலா கரோனா ஒழிந்தது'' என்று முகத்தில் அறைந்தாற்போல் பதில் அளித்துள்ளார்!

பொறுப்பற்ற முறையில் எழுதுகிறார்!

இதற்கு முறையான பதில் அளிக்கத் தெரியாது. ‘மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு' ஏட்டின் தற்கால ஆசிரி யரான மாலினி பார்த்தசாரதி அவர்கள் நிதியமைச்சர்மீது தனிப்பட்ட முறையில் பாய்ந்து ‘‘அவர் ஏதோ வசை பாடும் நிதியமைச்சர்'' என்று பொறுப்பற்ற முறையில் எழுதுகிறார்!

Malini Parthasarathy @MaliniP

It's a pity that Tamil Nadu is saddled with an abusive Finance Minister in ptrmadurai who has more time on his hands than he should as custodian of State finances, to be making derisive comments about people he doesn't know such as me. Sorry that you are such a petty troll!


இதன் தமிழாக்கம்:

மாலினி பார்த்தசாரதி

பழி சுமத்தி தூற்றுவதையே வழக்கமாக்கிக் கொண்டுள்ள ஒரு நிதியமைச்சரை தமிழ்நாடு சகித்துக்கொள்ள வேண்டியிருப்பது மிகவும் பரிதாபமான நிலைதான். மாநிலத்தின் நிதி நிலையை கவனிக்கவேண்டிய இவருக்குப் பிறரை இழிவுபடுத்துவதற்கே நேரம் சரியாக இருக்கிறது. என்னைப் போல் அறிமுகம் இல்லாதவர்களை வசை பாடவே இவருக்கு நேரம் போதாது போலிருக்கிறது. மன்னிக்கவும், நீர் ஓர் அற்பமான சிந்தனையாளர்.

தமிழ்நாடு பெயருக்குப் பாடுபட்டவர்கள் 

வறட்டுக் கூச்சல்வாதிகளா?

தமிழ்நாடு பெயருக்குப் பாடுபட்டு, ‘தமிழ்நாடு' எனப் பெயருமிட்டு, ‘வாழ்க தமிழ்நாடு' என்று சட்டப் பேரவையில் முழக்கமிட்ட முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எல்லாம் வறட்டுக் கூச்சல்வாதிகளா?

வரலாறு தெரியாமல் இப்படி ஆப்பசைக்கலாமா மாலினி அவர்களே?

அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் நிதித் துறையில் பெரும் அனுபவம் பெற்று, பதவியை உதறி விட்டு வந்தவர்தான் அவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நிதித் துறையில் தேர்ந்த அனுபவமும், ஆழமும் கொண்டதினால், கடனை அடைத்து, காலி கஜானாவை நிரப்பிக் கொண்டு, கட்டுப்பாடு மீறிய முந்தைய நிலவரக் காளையை ஜல்லிக்கட்டில்  காளையின் திமிலைப் பிடித்து அடக்குவது போன்று அடக்கிச் சாதிக்கும்  ‘திராவிட மாடல்' ஆட்சியின் நிதியமைச்சரல்லவா தமிழ்நாட்டு நிதியமைச்சர்.

நாகாக்க!

அவரை இவ்வளவு கேவலமான வசைமொழி வார்த்தைகளால் அர்ச்சனை செய்வதா?

அவரது கூற்று ‘Petty troll'  - பொய் வியாபாரம் செய்வதா?

அண்ணாவின் ஆதரவுக்கரம் இல்லையென்றால், ‘இந்து' நாளேடு காணாமல் போயிருக்கும்!

முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் ஆதரவுக்கரம் இல்லையானால் - ‘இந்து' ஆங்கில நாளேடு - ‘மெயில்' ஏடு காணாமற் போனதுபோல் போயிருக்கும்  என்ற வரலாறு (1967-68) தெரியாது மாலினி அவர்களுக்கு.

அப்போது இவர் ஒரு ‘சிறுமி'யாக இருந்திருப்பார்!

இப்போது அந்த ‘rabble rousers' என்று நீங்கள் அழைத்து மகிழும் அல்லது சிலரை மகிழ வைக்கும் அம்மையாரே! அந்தத் தலைவர்கள் வரலாற்றை - (அண்ணா, கலைஞர்) புத்தகம் போட்டு வியாபாரம் செய்யும்போது அவர்கள் வறட்டுக் கூச்சல்வாதிகளாகத் தெரியவில்லையா?

என்ன ஆணவம்?

பந்தை அடிக்க முடியாதவர்கள் காலை அடிப்பது போல, தமிழ்நாடு நிதியமைச்சரை அர்ச்சித்தால் அது பதிலாகிவிடுமா?

Dr P Thiaga Rajan (PTR) @ptrmadurai

TN Fiscal measures surged last year after 7 yrs of decline, & will again this year!

I ALSO have a duty to expose (as a cultist) a newspaper owner who says Tamils standing up for Tamil Nadu are "politically motivated rabble rousers"

Who fits the "abusive, derisive, troll" label?

இதன் தமிழாக்கம்:

டாக்டர் பிடி.தியாகராஜன் (பிடிஆர்)

தமிழ்நாடு அரசின் நிதி நிலைமைகள் கடந்த ஏழு ஆண்டுகால சரிவிலிருந்து மீண்டுள்ளது. இந்த மீட்சி வளர்ந்து இந்த ஆண்டும் நீடிக்கும்.

கொள்கைப் பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். தமிழ்நாட்டிற்காக குரல் கொடுக்கும் தமிழர்களை ‘‘பொதுமக்களைத் தூண்டிவிடுபவர்கள்'' என்று கூறுகிறார் ஒரு பத்திரிகை அதிபர். அவருடைய சுய ரூபத்தை வெளிப்படுத்துவதை என் கடமை என்றே கருதுகிறேன் - ‘‘பொதுமக்களைத் தூண்டிவிடும், இழிவுப்படுத்தும், தூற்றும் நபர்'' என்ற பட்டங்கள் எல்லாம் யாருக்கு மிகவும் பொருத்தம் என்று சிந்தியுங்கள்!

வாயடக்கம், நாவடக்கம், 

பேனா எழுத்தடக்கத்தோடு இருங்கள்!

நிதியமைச்சர் மீண்டும் உங்களுக்கு சூடான ஆணித்தரமான பதிலைத் தந்து - வாங்கிக் கட்டிக் கொண்ட பிறகாவது - வாயடக்கம், நாவடக்கம், பேனா எழுத்தடக்கத்தோடு இருங்கள்!

‘‘எனக்கு சில வகையறாக்களின் (Cultist), பத்திரிகை யாளர்களின் யோக்கியதையை அம்பலப்படுத்த வேண்டுமென்பது எனக்குள்ள கடமையும்கூட.

‘தமிழ்நாடு'க்காக வாதாடுபவர்கள் அரசியல் உள் நோக்கம் கொண்ட கூச்சல்வாதிகளா?

Who fits the "abusive, derisive, troll" label?

பொய் புனைச் சுருட்டு வியாபாரமா?''

புரிந்துகொள்ள வேண்டியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மாலினி அம்மையார் அவர்களே, இது தேவையா?

திராவிடர் இயக்கம் வெறும் கூச்சல்வாதிகளாக இருந்தால், அன்று அந்த முதலமைச்சர் அண்ணாவின் ஒத்துழைப்பால் உயிர்வாழும் உங்கள் நாளேடு இப்படியா நடந்து காட்டும்?

இதுதான் உங்கள் பத்திரிகா தர்மமா?

ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்!

‘‘வாழ்க வசவாளர்கள்'' என்ற அண்ணாவின் தம்பி மார்களை அலட்சியமாக எண்ணி ஆழந் தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்!

நாகாக்க!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

2.2.2023

No comments:

Post a Comment