கோபிசெட்டிபாளையம், திருப்பூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 5, 2023

கோபிசெட்டிபாளையம், திருப்பூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை!

 ''பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்பதுதான் திராவிட மாடல்!

'திராவிட மாடல்' ஆட்சியின் நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின்!


திருப்பூர், பிப்.5 சமூகநீதி பாதுகாப்பு, 'திராவிட மாடல்' விளக்கப் பயணத்தின் இரண்டாம் நாளில் கோபிசெட்டி பாளையம், திருப்பூரில் நடைபெற்ற எழுச்சிகரமான கூட்டங்களில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கோபிசெட்டிபாளையம்

சமூகநீதி பாதுகாப்பு, 'திராவிட மாடல்' விளக்கப் பரப்புரைக் கூட்டங்களின் இரண்டாம் நாளில் கோபிசெட்டி பாளையத்தில், திருப்பூர் சாலை சீயோன் திரையரங்கம் அருகில் 4.2.2023 அன்று மாலை சரியாக 5 மணிக்குத் தொடங்கியது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ந.சிவலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வழக்குரைஞர்  நம்பியூர் மு.சென்னியப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம்,  மாவட்ட காப்பாளர் இரா.சீனிவாசன், மாவட்ட  ப.க. தலைவர் சீனு.தமிழ்ச்செல்வி, மாவட்ட அமைப்பாளர் கருப்பண்ணசாமி, கோபி ஒன்றிய தலைவர் கருப்புசாமி, ஒன்றிய செயலாளர் சிவக்குமார், நகர் தலைவர் பூபதி நாதன், நகர செயலாளர் அருண்குமார், ப‌.க. மாவட்ட செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக மாநில கிராமப்புற பிரச்சாரக்குழு அமைப்பாளர் அதிரடி அன்பழகன் தொடக்க உரையாற்றினார். முன்னதாக திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினரின் பகுத்தறிவு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு புலம்பெயர் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி பரப்புரை பயணம் மேற்கொள்ளும் கழகத் தலைவரை வாழ்த்தி சில மணித்துளிகள் பேசினார்.

இறுதியாக தமிழர் தலைவர் பேசினார். பொதுவாக தொடங்கும் போது பேசுகின்ற இடத்தைப் பற்றியும், அங்கிருக்கும் தோழர்களை நினைவுபடுத்திப் பேசுவதும் அவரது வழமை. அவ்வாறே கோபிசெட்டிபாளையத்திற்கு நான் புதியவனல்ல என்றும், கே.பி.கருப்பண்ணன், ஜி.பி.வெங்கிடு ஆகியோரையும் நினைவுபடுத்தி பேசினார்.

மேலும் அவர் திராவிட மாடலின் பரிமாணத்தைக்குறிப்பிட, திராவிட மாடல் ஆட்சியின் பயனை நாம் ஒவ்வொருவரும் அனுபவித்து இருக்கிறோம் என்றவர், ஏன், பா.ஜ. கட்சித் தலைவர் அண்ணாமலை இருக்கிறாரே அவர்கூட திராவிட இயக்கத்தால் பயன்பெற்றவர்தான் என்று எதிர்முகாமிலிருந்தே எடுத்துக்காட்டி மிகச்சுருக்கமாக மக்களுக்கு விளங்க வைத் தார். அத்தோடு, மக்களுக்கு இதை திரும்பத்திரும்ப உணர்த்த வேண்டும். அதற்குத்தான் இந்தப்பயணம் என்று பயணத்தின் நோக்கத்தையும் சேர்த்துச் சொன்னார். இதற்கு நேர் எதிரான ஆரிய மாடல் பற்றி குறிப்பிட்டார். ஜாதி அடுக்குமுறை பற்றி அம்பேத்கர் சொன்னதை சுட்டிக்காட்டிப்பேசினார். அதனால் ஏற்பட்ட எதிர்விளைவுகள் பற்றி குறிப்பிட்டு, அதில் ஒன்றாக அண்ணா தி.மு.க. இன்று அடமான தி.மு.க.வாக இருப்பதை வருத்தத்துடன் எடுத்துரைத்தார். ஆனால் மாற்றி மாற்றி பேசும் பா.ஜ.க.வால் ஈரோட்டில் நிற்கமுடியவில்லையே? ஏன்? என்று கேள்வி எழுப்பி, திராவிட இயக்கம்தானே என்று பதிலையும் சொன்னார். ஒன்றிய அரசின் வரவு செலவு கணக்கு தாக்கல் குறித்து தனது விமர்சனத்தை பதிவு செய்தார். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதுதான் 'திராவிட மாடல்'! நாங்கள் பேசுவது மண்ணுக்கல்ல, மக்களுக்கன உரிமையை என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

இந்த பரப்புரை கூட்டத்தில் தி.மு.க.தலைமை செயற்குழு உறுப்பினர் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், தி.மு.க.மாநில நெசவாளரணி துணை செயலாளர் வெ.மணிமாறன் வி.சி.க. மாவட்ட செயலாளர் அம்பேத்கர், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி, த.பெ.தி.க.மாவட்ட தலைவர் குணசேகரன், பு.இ.மு. பொறுப்பாளர் ரமேசு, ம.ம.க. பொறுப்பாளர் ஹக்கீம், மாவட்ட தி.மு.க.விவசாய அணி துணை அமைப்பாளர் டி.சி.மணி, நகர் அமைப்பாளர் சீனு.மதிவாணன், மாவட்ட இளைஞரணி தலைவர் புளியம்பட்டி ஆ.பிரபு, மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரசாந்த்குமார், மண்டல மாணவர் கழக செயலாளர் த.சிவபாரதி, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மா.சூர்யா, மாவட்ட மாணவர் கழக செயலாளர் த.எழில்அரசு  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் மண்டல இளைஞரணி செயலாளர் வெற்றிவேல் நன்றி கூறினார்.

முன்னதாக திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினர் வழங்கிய இசை அரங்கம் நிறைவுற்று - அதைத் தொடர்ந்து முனைவர் அதிரடி க. அன்பழகன் பேசிவிட்டு திருப்பூர் புறப்பட்டுச்சென்றார். அதேபோல் கூட்டம் முடிந்ததும் ஆசிரியர் தலைமையிலான பயணக்குழு திருப்பூர் புறப் பட்டது. திருப்பூர் எல்லை சென்றதும் காவல் துறையினர் உதவியுடன் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் உரிய நேரத்திற்கு திருப்பூருக்கு  சென்றடைந்தது குழு. 

திருப்பூர்

திருப்பூர்  அரிசிக்கடை வீதி வீ.சிவசாமி நினைவு மேடையில் நடைபெற்ற, இப்பரப்புரை கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் யாழ்.ஆறுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குமரவேல் அனைவரையும் வரவேற்று பேசினார். அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் இல.பாலகிருட்டிணன், ப.க மாவட்ட தலைவர் குமாரராசா, ப.க. பொறுப்பாளர் நளினம் நாகராசு, மாநகர தலைவர் கருணாகரன், ப.க.தலைவர் அவினாசி இராமசாமி, மாநகர செயலாளர் செல்வம் , மாநகர அமைப்பாளர் ஆசிரியர் முத்தையா, மாநில இளைஞரணி அமைப்பாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாநில கிராமப்புற பிரச்சாரக்குழு அமைப்பாளர் அதிரடி அன்பழகன் தொடக்க உரையாற்றினார். அதைத்தொடர்ந்து புலவர் செந்தலை கவுதமன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் உரையாற்றினர்.

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர், தனக்கு பாதுகாப்பு என்ற பெயரில் காவல்துரையினர் மக்கள் உள்ளே வருவதை தடுப்பதையறிந்து அதை கடிதோச்சி கடிந்துகொண்டார். நடப்பது திராவிட மாடல் ஆட்சியின் நாயகர்; சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு..க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சி நடக்கிறது. எங்கள் வயதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை! உடல்நிலையைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை! தமிழ்நாட்டு மக்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று கூறிவிட்டு, இப்போது தமிழ்நாடு என்று கூறுவதே கூடாது என்ற நிலை இருப்பதைத் தொட்டுக்காட்டினார். தொடர்ந்து திராவிட மாடல் பற்றி குறிப்பிட வந்தவர், 1935 ஆண்டில் தந்தை பெரியார் என்ன வார்த்தைகளைப் பயன்படுத்தினாரோ அதையேதான் முதலமைச்சர் 'திராவிட மாடலு'க்குப் பயன்படுத்தியுள்ளார் என்பதைக்கூறி, அனைவருக்கும் அனைத்தும் என்ற அந்த வார்த்தைகளையும் குறிப்பிட்டார். சனாதனத்தைப் பற்றி குறிப்பிட வந்தவர், ஆளுநரைக் குறிப்பிட்டு, மசோதா வெளிவராவிட்டால் அதற்குரியவர் வெளியேறவேண்டிவரும் என்றார். சேது சமுத்திரத்திட்டம் குறித்த தற்போதைய பா.ஜ.க. அரசின் நிலைப்பாடுகளை சுட்டிக்காட்டி பேசினார். இது துரோணரின் காலமல்ல, ஏகலைவன்கள் விழித்துகொண்ட காலம் என்றார். பெரியார்தான் வெற்றி பெறுவார். மக்களும் விழிப்போடு இருக்கவேண்டும் என்று கூறி உரையை நிறைவு செய்தார். 

இந்த பரப்புரை கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு அரசின் பாவேந்தர் விருதாளர் புலவர் செந்தலை கவுதமன், திருப்பூர் மாநகர மேயர் தினேஷ்குமார்,  தி.மு.க. இலக்கிய அணி மாவட்ட பொறுப்பாளர் பல்லடம் இளங்கோ, மாவட்ட தி.மு.க.வழக்குரைஞர் அணி அமைப்பாளர் தாராபுரம் செல்வராசு, இ.யூ.மு. லீக் பொறுப்பாளர் சையது முஸ்தபா, த.பெ.தி.க. ஒருங்கிணைப்பாளர் அங்க குமார், வி.சி.க.துணைப் பொதுச்செயலாளர் துரைவளவன், ஆசிரியர் துரைசாமி, சி.பி.எம்.மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், துணை மேயர் பாலசுப்பிரமணியம், ம.தி.மு.க.மாமன்ற உறுப்பினர் நாகராஜ், வி.சி.க.மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன், த.வி.க.பொதுச்செயலாளர் செங்கோட்டையன், த.பெ.தி.க. மாவட்ட தலைவர் முத்துக்குமார், சட்டத்துறை மாநில துணைத்தலைவர் வழக்குரைஞர் திருப்பூர் பாண்டியன், தி.மு.க.பொறுப்பாளர் நாச்சிமுத்து, மாவட்ட மகளிரணி தலைவர் யாழ் ஈசுவரி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ம.மகுடீஸ்வரி, மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் க.திவ்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முடிவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் திலீபன் நன்றி கூறினார்.

பரப்புரை கூட்டத்தின் முதல் நிகழ்வாக அறிவியல் விளக்க நிகழ்ச்சியாளர் திண்டுக்கல் ஈட்டி கணேசன் வழங்கிய மந்திரமா? தந்திரமா? எனும் செய்முறை விளக்கம் நடந்தது.

மேடைக்கு வந்திறங்கிய கழகத் தலைவரை மேளதாளம் முழங்க பயனாடைகளை தோழர்களும், மகளிரணி தோழியர்களும் அணிவித்து வரவேற்று மகிழ்ந்தனர்.

திருப்பூரில் நிகழ்ச்சி முடிந்து புறப்பட்டு கோயமுத்தூர் மாநகரில் நுழைந்தவுடன், கோவை தோழர்கள் பயணக்குழுவை வழிநடத்தி காந்திபுரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள தமிழ்நாடு விடுதிக்கு அழைத்துச் சென்றனர். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வண்டியைவிட்டு இறங்கியதும், 30 க்கும் மேற்பட்ட இருபால் தோழர்கள் ஆசிரியரைக் கண்டு அவருடன் ஒளிப்படம் எடுத்துக்கொள்ள வேண்டுகோள் விடுத்தனர். ஆசிரியர் உடனடியாக சம்மதித்தார். ஒளிப்படம் எடுத்துக்கொண்ட பிறகு விசாரித்தபோது, அவர்கள் கருநாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து கோவை வந்து மறுநாள் (5.2.2023) ஈசா பவுண்டேசன் செல்லவிருப்பதாக குறிப்பிட்டனர். ஆசிரியர் மிகவும் எளிமையாக இருக்கிறார். அவரைப்பற்றி கூடுதல் தகவல்கள் சொல்லமுடியுமா என்று கேட்டனர். திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் ஆசிரியர் அவர்களின் முக்கிய சாதனைகள் பற்றி குறிப்பிட்டார். வியப்புடன் விடைபெற்றனர். 

நாடா? அக்ரஹாரமா?

1901 ஆம் ஆண்டில் பார்ப்பனரல்லாதவர்களில் படித்தவர்கள் வெறும் 1% தான். அதனால் கிளார்க்கிலிருந்து குடியரசுத் தலைவர் வரையிலும் பார்ப்பனர்தான் இருந்தாங்க. இன்றைக்கு 69% இடஒதுக்கீடு நமக்கு இருப்பதற்கு யார் காரணம்? எப்படி வந்தது? திராவிடர் இயக்கத்தினால்தானே? தந்தை பெரியாரால்தானே? பெரியார் மறைந்த போது மயிலாப்பூரில் இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்கள். அவர்கள் தப்புக்கணக்கு போட்டு விட்டார்கள். பெரியாருக்குப் பிறகு தமிழர் தலைவர் ஆசிரியர் பெரியாரை விட வீரியமாக இயக்கத்தை நடத்துகிறார். 10 வயதில் பேசத் தொடங்கி 90 ஆம் வயது வரையில் களத்தில் நிற்கிறார். இப்படித்தான் கலைஞரோடு தி.மு.க. அவ்வளவுதான் என்று நினைத்தார்கள். ஆனால், ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் - கருணாநிதி என்று சொல்லக்கூடிய நிலை வந்திருக்கிறது. பெரியாருக்குப் பின் ஆசிரியர்! கலைஞருக்குப் பின் ஸ்டாலின் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். அதைக்கண்டு ஆரியம் அலறுகிறது. 

- அதிரடி அன்பழகன்

  கோபிசெட்டிபாளையம் -   4-2-2023

 

ஆப்பிரிக்காவில் திராவிட மாடல்!

சமூகநீதியை எல்லா வகையிலும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், சமூகநீதி என்றால் ஏதோ அது ஏழைகளுக்கு மட்டுமான விசயம்தான். நாமெல்லாம் ஆண்ட பரம்பரைன்னு நம்மள உசுப்பேத்தி நம்மை அதிலிருந்து பிரிக்கிற சூழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கிறது. திருக்குறள் போன்ற உயர்ந்த கருத்திலக்கியங்களை கொண்ட நாம் குடி வந்தேறி ஆரியர் வருகைக்குப்பிறகு, கல்வியை இழந்தோம். ஒரு குறிப்பிட்ட சமுதாயம் மட்டும் எல்லா வேலை வாய்ப்புகளையும் பெற்றிருந்தார்கள். ஏன் இந்த பாகுபாடு என்று கேட்டால், நீங்களெல்லாம் உங்க குலத்தொழிலைச் செய்யுங்கள் என்று சொன்னார்கள். அதைத்தான் மனுஸ்மிருதியும், வர்ணாஸ்ரம தர்மமும் சொல்லியிருக்கிறது. ஆகவே நீங்கள் குலத்தொழிலைச் செய்யுங்கள் என்கிறார்கள். இதை எதிர்த்துப் போராடி எங்களுக்கு உரிமை இருக்கிறது என்று கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் நமக்கான உரிமையை பெற்றிருக்கிறோம். அதுதான் சமூகநீதி! இதை நாம் உணரவில்லை. ஆனால் தெரிந்தோ தெரியாமலோ அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இதை பெற்றுத்தந்தவர்தான் தந்தை பெரியார்! பெற்றுத்தந்த இயக்கம்தான் திராவிடர் இயக்கம்! இதன் விளைவு இங்கு மட்டுமல்ல, லண்டன் நகரத்தில் மேனாள் பிரதமர் டோனி பிளேயர் என்பவர், இன்ஸ்டிடியூட் ஃபார் மேனேஜ்மென்ட் என்ற ஒரு அமைப்பை நடத்துகிறார். உலகம் முழுவதும் உள்ள அரசியல் சிந்தாந்தங்களை ஆய்வு செய்து, எது சிறந்தது என்பதை ஆய்வு செய்த பிறகு, அந்த அமைப்பு என்ன சொல்கிறது என்றால் ஆப்பிரிக்காவில் இருக்கக் கூடிய மிகவும் பின்தங்கி இருக்கிற நாடுகள் தமிழ்நாட்டில் இருக்கும் திராவிட மாடலை பின்பற்றினால் அந்த நாடுகள் மேலே வரும் என்று குறிப்பிட்டிருக்கிறது.

- கார்த்திகேய சிவசேனாபதி

  கோபிசெட்டிபாளையம் -   4-2-2023


இந்தப் பயணம் வெல்லும்!

சூலூருக்கு என்னை அழைக்க வந்த இளங்கோ, தேவதாஸ், கர்ணன் போன்றவர்களெல்லாம், உங்களை நாங்கள் கருஞ்சட்டையில் பார்த்ததே இல்லை என்றார்கள். உண்மைதான். ஆசிரியர் அவர்கள் தலைமையில், 1978 இல் தந்தை பெரியார் நூற்றாண்டு விழா கள்ளக்குறிச்சியில் நடைபெற்றபோது கருஞ்சட்டை அணிந்திருந்தேன். அதற்குப் பிறகு இன்றைக்குத்தான் இந்த திருப்பூர் திராவிடவியல் பரப்புரை நிகழ்ச்சியில் அணிந்து வந்திருக்கிறேன். இது என்றைக்கும் எனக்கு மறக்காது. ஆசிரியர் அவர்கள் 80 ஆண்டுகளுக்கு முன்னாள் இந்த திருப்பூரில் பேசியிருக்கிறார் என்பது இந்த திருப்பூருக்குத் தெரியாது. இந்த ஆண்டு திருப்பூர் 3000 பொங்கல் வைத்து சாதனை படைத்திருக்கிறது. எந்த இனம் தனது பண்பாட்டை மறக்காமல் இருக்கிறதோ அந்த இனம்தான் அதிகாரத்திற்கு வரும். இதுதான் திராவிடவியம்! இங்கே ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் இருக்கிறார். பெண்களுக்கு ஓட்டுரிமை கொடுத்து அழகு பார்த்த இயக்கம் திராவிட இயக்கம்! சொத்துரிமை கொடுத்து அழகு பார்த்த இயக்கம் திராவிட இயக்கம்! இப்போது அமைச்சராக்கி அழகு பார்க்கிற இயக்கம் திராவிட இயக்கம்! எப்பேர்ப்பட்ட இயக்க வரலாற்றைக் கொண்ட ஆசிரியர் இங்கே வந்திருக்கிறார். அண்ணா நினைவு நாளில் தொடங்கிய இப்பயணம் அன்னை மணியம்மையார் பிறந்தநாளில் கடலூரில் நிறைவு பெறுகிறது. இந்தப் பயணம் வெல்லும்! நாளைய வரலாறு இதைச் சொல்லும்! இந்த பயணம் முடியும் போது உணர்ச்சி பிறக்கும்! எழுச்சி பிறக்கும்!

- புலவர் செந்தலை கவுதமன்

  திருப்பூர் - 4-2-2023

--------------------



No comments:

Post a Comment