திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 5, 2023

திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'

காவல்துறை கவனிக்குமா?

கலி. பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

'தினமலர்'  என்னும் நாளேடு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்மீது வன்முறையைத் தூண்டும் வண்ணம் தொடர்ந்து எழுதிக் கொண்டுள்ளது.

'தினமலர்' குழுமத்தைச் சேர்ந்த 'காலைக் கதிர்' ஏடும் அதே வேலையைச் செய்து வருகிறது.

ஆஷ்துரையைக் கொல்ல ஒரு வாஞ்சிநாதன், காந்தியாரைக் கொல்ல ஒரு கோட்சே போல வீரமணிக்கும் ஒருவன் தோன்றுவான் என்று பொருள்படும்படி இந்த ஏடுகள் எழுதி வருகின்றன.

இது குறித்து ஆதாரத்தோடு காவல்துறைத் தலைமை இயக்குநரிடம் (டிஜிபி) புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இதுகாறும் எடுக்கப்படவில்லை என்பதால் அதற்கு அடுத்த கட்டத்திற்கு 'தினமலர்' எகிறியிருக்கிறது.

தமிழர் தலைவர் ஒரு பெரும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இந்தக் கால கட்டத்தில், "இது உங்கள் இடம்" என்ற பகுதியில் (4.2.2023 - 'தினமலர்' - பக்கம் 8) வெளிவந்துள்ள கடிதம் அருகில் வெளியிடப்பட்டுள்ளது.

மதுரையில் திராவிடர் கழகத்தின் சார்பில்  "சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தக் கோரும் மாநாடு" (27.1.2023) நடைபெற்றது. 

'என் தலைவர் தளபதி மீதோ, ஆசிரியர் மீதோ கை வைத்தால், உயிருக்குக் குறி வைத்தால் அவன் கையை வெட்டுவேன்' என்றார் தி.மு.க. பொருளாளர் மானமிகு டி.ஆர். பாலு எம்.பி.,

இது சட்டப்படி குற்றமாகாது - ஒரு வினைக்கு எதிர்வினையே - தற்காப்பே!

இதை மய்யமாக வைத்து "சிறீவில்லிப்புத்தூரில் வீரமணி ஆண்டாள் பற்றி அவதூறாகப் பேசி விட்டு, திரும்பும்போது தி.க.வினர் போல கருப்புச் சட்டை அணிந்து, கருப்புக் கொடியேந்தி வீரமணியின் காரை நிறுத்தினர். அவர்களை தன் கட்சியினர் என நினைத்து காரிலிருந்து இறங்கி வந்தார். 50 பேரும் வீரமணியை "அடித்து உதைத்தனர்?" என்று 'தினமலரில்' ஒரு கடிதம் வெளி வந்துள்ளது. (4.2.2023).

உண்மையில் நடந்தது என்ன? ஆசிரியர் வீரமணி தாக்கப்பட்டது உண்மைதான். ஆனால் நடந்ததை பொய்யும் புரட்டுமாக வெளியிட்டுள்ளது 'தினமலர்'.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் வீரமணி சிறீவில்லிப்புத்தூர் அருகில் உள்ள மம்சாபுரம் திராவிடர் கழகத் தலைவர் திரு. ஓ.எம். பாலன் அவர்களின் பெரியார் மருத்துவமனையைத் திறக்கச் செல்லும் வழியில்தான் இந்த வன்முறை திட்டமிட்டு நடந்தது.


ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பினார் ஆசிரியர். தலையிலும், உடலிலும் பல பாகங்களிலும் கண்ணாடிச் சிதறல்கள்! உடல் காயங்கள்!!

ஆனாலும் தன் கடமையை - பணியை நிறுத்தவில்லை தமிழர் தலைவர். மம்சாபுரம் சென்று மருத்துவமனையைத் திறந்து வைத்துப் பேசிவிட்டு, ஏற்கெனவே திட்டமிட்டு இருந்தபடி சிறீவில்லிப்புத்தூர் பொதுக் கூட்டத்திற்குச் சென்றார். மின் வெட்டுக் காரணமாக இரவு 1.30 மணி தொடங்கி இரவு 2.30 மணி வரை தன் வீர முழக்கத்தை ஒலித்துதான் விடை பெற்றார்.

முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். தொலைப்பேசி மூலம் திருச்சியில் இருந்த ஆசிரியரின் உடல்நலனை விசாரித்தார்.

பிறகு சென்னை வந்த ஆசிரியர் சில மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக் கொண்டு, தான் இதற்கு முன் ஒத்துக் கொண்டிருந்த வெளியூர் பொதுக் கூட்டத்திற்குச் சென்றே தீருவேன் என்பதில் உறுதியாக இருந்தார். 

தோழர்கள் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. இந்தத் தகவலைக் கேட்டறிந்த தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் யாரும் எதிர்பாராத நிலையில் நேரடியாகவே தலையிட்டு ஆசிரியர் பயணத்தைத் தடுத்தாட் கொண்டார்.

உண்மைகள் இவ்வாறு இருக்க 'தினமலர்' புதுப்புது ஸ்தலப் புராணப் புரட்டுகளை எழுதித் தள்ளி இருக்கிறது.

தி.க. தலைவர் வீரமணி - ஆண்டாள், கிருஷ்ணன் கடவுள்களைப் பற்றி அருவருக்கத்தக்க முறையில் பேசியதாகக் காரணம் கற்பித்து அதனால்தான் தாக்கப் பட்டார் என்று கதை விடுகிறது.

வன்முறை ஏவப்பட்டதோ மம்சாபுரத் தில், அதற்குப் பின்தான் சிறீவில்லிப்புத்தூர் பொதுக் கூட்டம்.

ஆண்டாளைப்பற்றியும், 'பிரா மணர்'கள்  பற்றியும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் விமர்சித்தார். அதனால் தான் தாக்கப்பட்டார் வீரமணி என்பது எங்கே வந்தது?

அதேபோல 2013இல் பகவான் கிருஷ்ணர் பற்றி அவதூறாகப் பேசிய தற்காக விருத்தாசலத்தில் யாதவ மகா சபையினர் வீரமணியின் காரைத் தாக் கினர் என்று எழுதுகிறது 'தினமலர்' எனும் காகிதமலர்!

உண்மை என்ன வென்றால், விருத் தாசலத்தில் தான் தங்கிய அறையிலிருந்து மாநாட்டு மேடைக்கு வரும் வழியில்தான்  ஆசிரியரின் கார் தாக்கப்பட்டது. அவர் பேசியபின் அல்ல. அப்படி இருக்கும்போது பகவான் கிருஷ்ணர்பற்றி அவதூறாகப் பேசியதற்காக விருத்தாசலத்தில் யாதவ மகாசபையினர் வீரமணியின் காரைத் தாக்கினர் என்று தனக்கே உரித்தான புழு புழுத்த பொய்யை அள்ளிக் கொட்டி யுள்ளது.

"வீரமணி தாக்கப்பட்ட இந்த இரண்டு இடங்களிலும் பலசாலியான, வாய்ச் சொல் வீரரான டி.ஆர்.பாலு மட்டும் இருந்திருந்தால்அய்ந்து பேர்களு டைய கைகளையாவது வெட்டி சிறை சென் றிருப்பார்" என்று 'தினமலர்' கூறுகிறது.

அப்படி நடக்க வேண்டும் என்று 'தினமலர்' விரும்புகிறதோ!

இப்படித் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் மீது அவதூறுக் கூறி, அவர் உயிர்க்கும் குறி வைக்கும் தூண்டுதல் வேலையில் 'தினமலர்' ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது.

காவல்துறை கவனிக்குமா? எங்கே பார்ப்போம்!

'தினமலரில்' வெளிவந்தது - இதோ!

வீரமணி வரலாற்றை புரட்டி பாருங்க பாலு! 

எம்.கலைவாணி, அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 

'திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி மீது, யாராவது கை வைத்தால், அவர்களின் கையை வெட்டுவேன்' என்றும், 'ஹிந்துக்களின் கோவில்களை இடித்து விட்டு, அவர்களின் ஓட்டுகளை பெறும் வித்தை எனக்கு தெரியும்' என்றும், பொதுவெளியில் தெனாவட்டாகப் பேசியிருக்கிறார், தி.மு.க.,வின் பொருளாளரான டி.ஆர்பாலு. 

அந்த பாலுவுக்கு, வீரமணியின் வாழ்க்கையில் நடந்த இரு சம்பவங்களை நினைவுபடுத்த வேண்டிய தருணம் இது... 

தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர்., பதவி வகித்த காலத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி, எம்.எல்.ஏ.,வாக இருந்தவரும், எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியும், அஞ்சா நெஞ்சன் என்று பெயர் பெற்றவருமான தாமரைக் கனி, தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்தார். 

அந்த சூழ்நிலையில்,  1982 ஜூலையில், ஸ்ரீவில்லி புத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய வீரமணி, ஆண்டாள் பற்றியும், பிராமணர்கள் பற்றியும், அருவெருக்கத்தக்க வார்த்தைகளால் விமர்சித்தார். 

உடன் கொதித்தெழுத்த பிராமணர் சமூகத்தினர், எம்.எல்.ஏ.,வாக இருந்த தாமரைக்கனியிடம் முறை யிட்டனர்; அவர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார் தாமரைக்கனி. அன்றைய தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பில், பொதுக்கூட்ட நிகழ்ச்சியை முடித்து விட்டு, வீரமணி திரும்பிக் கொண்டிருந்தார். 

அப்போது, தி.க.,வினர் போல, கருப்புச் சட்டை அணிந்து, கருப்பு கொடியேந்தி வந்த, 50 பேர் வீரமணி யின் காரை நிறுத்தினர்; அவர்களை தன் கட்சியினர் என நினைத்து, காரிலிருந்து இறங்கி வந்தார் வீரமணி. உடன், பேரும் வீரமணியை அடித்து உதைத்தனர். 

இதேபோல, 2013-ல் பகவான் கிருஷ்ணர் பற்றி அவதூறாகப் பேசியதற்காக, விருத்தாசலத்தில் யாதவா மகாசபையினர், வீரமணியின் காரை தாக்கினர். 

வீரமணி தாக்கப்பட்ட இந்த இரண்டு இடங்களிலும், பலசாலியான, வாய்ச்சொல் வீரரான டி.ஆர்.பாலு மட்டும் இருந்திருந்தால், அய்ந்து பேருடைய கைகளையாவது வெட்டி, சிறை சென்றிருப்பார். 

பாவம்... தன் மீது இவ்வளவு பாசம் கொண்ட டி.ஆர்.பாலுவை அப்போதெல்லாம், வீரமணி உடன் அழைத்துச் செல்லாமல் விட்டு விட்டாரே... இனி யாவது, உதை வாங்கும் வகையில், சர்ச்சையாக பேசும் பொதுக்கூட்டங்களுக்கு, டி.ஆர்.பாலுவை, வீரமணி உடன் அழைத்துச் செல்ல வேண்டும். அப்போது தெரியும்... டி.ஆர்.பாலுவின் வீரதீர பராக் கிரமம்.

'தினமலர்' பக்கம் 8 "இது உங்கள் இடம்" 4-2-2023



No comments:

Post a Comment