விவசாயிகளின் கண்ணீர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 28, 2023

விவசாயிகளின் கண்ணீர்

வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுகின்ற எந்த ஒரு விவசாயியும் விதை, உரம் உள்ளிட்ட விவசாய இடு பொருள்களுக்கு பெருமளவிலான பொருட்செலவிட்டும், தம் உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டு, அறுவடைக்குப்பின் இடைத்தரகர்கள், பெருவணிகர்களிடம் சிக்கிக்கொண்டு உரிய மதிப்புடன் விளைபொருள்களுக்கான விலை கிட்டாமல் விழிபிதுங்கி நிற்கின்ற அவல நிலை உள்ளது.

ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக டில்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் ஒரு தொடர் போராட்டமாகவே நாட்டை குலுக்கியது. விவசாயிகளின் வாழ்வாதாரம்குறித்து ஒன்றிய ஆட்சியாளர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை என்பதற்கு உதாரணமாக விவசாயிகளின் தொடர்போராட்டம் அமைந்தது.

மராட்டிய மாநிலத்தில் 512 கிலோ வெங்காயத்தை விற்பனைசெய்ய முன்வந்த விவசாயிக்கு வெறும் 2 ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. அந்த விவசாயி விற்பனைக்கு கொண்டு வந்த 512 கிலோ வெங்காயத்தை, கிலோவுக்கு ரூ.1 என ஏலம் எடுத்துள்ளனர். அதிலும், சந்தைக்கு ஏற்றிவந்த வண்டிக்கூலி கழிக்கப்பட்டு இறுதியாக மொத்த வெங்காயத் திற்கான விலையாக ரூ.2 என காசோலையை கொடுத்துள்ளனர். இதனால் அந்த விவசாயி பெரிதும் மன உளைச்சல், வேதனைக்கு உள்ளானார் என்கிற தகவல் வெளியாகி சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு பரவிவருகிறது.

மராட்டிய மாநிலத்திலிருந்து வேளாண் உற்பத்திப் பொருள்கள் சோலாப்பூர் வேளாண் உற்பத்தி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு ஏலம் விடப்படும். பெரும்பாலான வணிகர்கள் விவசாயிகளின் விளை நிலத்திற்கே சென்று விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு வந்து ஏலம் விடுவார்கள்.

அந்தவகையில் சோலாப்பூர் மாவட்டத்தின் போர்கான் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திர துக்காராம் சவான் தான் அறுவடை செய்த 512 கிலோ வெங்காயத்தை அங்கிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ள சந்தைக்கு கொண்டுசென்றார். அங்கு விடப்பட்ட ஏலத்தில் சவானின் வெங்காயம் தரம் குறைந்து இருப்பதாக கூறி கிலோ ரூ.1க்கு ஏலம் போயுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி சவான், 512 கிலோவுக்கு ரூ.512 என கிடைத்தவரை போதும் என்ற எண்ணத்தில் அந்த பணத்தை பெற நினைத்தார். ஆனால், வெங்காயம் ஏற்றி வந்ததற்கான வண்டிக் கூலி ரூ.509.51 கழிக்கப்பட்டு மீதம் 2 ரூபாய் 49 காசுகள் இருப்பதாக ரசீதைக் கொடுத்ததால் பேரதிர்ச் சிக்கு உள்ளானார் சவான். அந்தப் பணத்தையும் காசோலையாக மட்டுமே கொடுத்துள்ளனர். அந்த 2 ரூபாயையும் உடனடியாக எடுக்க முடியாதாம். 15 நாட்களுக்குப் பிறகே வங்கி மூலமாக பெற முடியும் என்றும் தேதியிட்டுக் கொடுத்துள்ளனர். 

இது குறித்து சவான் கூறுகையில், 'கடந்த 3, 4 ஆண்டுகளாக விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை சுமார் 2 மடங்கு அதிகரித்துள்ளது. இன்று சந்தைக்கு கொண்டு வந்துள்ள 512 கிலோ வெங்காயத்தை விளைவிக்க நான் ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்துள்ளேன்' என வேதனையுடன் கூறினார். வெங்காயத்தை உரித்தால் கண்ணீர் தானே வரும்!

சந்தையில் இந்த வெங்காயத்தை ஏலம் எடுத்த வணிகர், 'இந்த வெங்காயம் தரமற்றதாக இருப்பதால் இவ்வளவு குறைந்த விலையில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தாராம்!

ரூ.40 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்து வெங்காயம் அறுவடை செய்த விவசாயிக்கு ரூ.2 காசோலைகொடுத்த சம்பவம் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை நிறை வேற்றக்கூடிய உன்னதமான விவசாயத்தை 'பாவத் தொழில்' என்று ஒதுக்கிவைத்துவிட்டு, உழைக்காமலேயே அறுவடை செய்கின்ற ஆரிய ஹிந்துத்துவவாதிகளின்  ஆட்சியில் ஆரிய, சனாதனத்தை மேன்மையாகக் கூறுபவர்கள் உள்ள நாட்டில், விவசாயிகளின் நிலை இப்படித்தான் இருக்குமோ! உழைக்கின்ற அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குரியதாகவும், கார்ப்பரேட்டுகள் - பண முதலைகளின் ஆதிக்கம் பெருகிக் கொண்டிருப்பதும் அதனால்தானோ!

எங்கள் ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் இரண்டு பங்கு உயரும் என்று  கூறி ஆட்சிக்கு வந்த 56 அங்குல மார்புள்ள பிரதமர் ஆளும் ஒரு நாட்டில் விவசாயிகளின் முதுகெலும்பு உடைக்கப்படும் அவலத்தை என்ன சொல்ல!

உலக வரலாறு காணாத அளவு இந்திய தலை நகரில் வெயிலிலும், குளிரிலும் இரவு பகலாகப் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்டனவா?

கடைசியில் சாத்தப்பட்டது பட்டை நாமம்தான். புலம்பி என்ன பயன்? 2024 மக்களவைத் தேர்தலில் வாக்குச் சீட்டை ஆயுதமாகப் பயன்படுத்தி நாட்டை ஆளும் கார்ப்பரேட்டு களுக்குச் சிகப்புக் கம்பளம் விரிக்கும் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பினாலொழிய மீட்சியில்லை - இல்லவே இல்லை.

No comments:

Post a Comment