மதமாற்ற தடை சட்டத்தை எதிர்த்து வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 7, 2023

மதமாற்ற தடை சட்டத்தை எதிர்த்து வழக்கு

 புதுடில்லி, பிப்.7 உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், கருநாடகா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 7 மாநில அரசுகள் மதமாற்ற தடை சட்டத்தை இயற்றி உள்ளன. ஒருவரை மதமாற்றம் செய்வதற்கு முன் அல்லது மதம் மாற்றி திருமணம் செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும் என இந்த சட்டங்கள் கூறுகின்றன. 

திருமணம் உள்பட பல்வேறு ஆசை வார்த் தைகளைக் கூறியும் பெண்களை காதல் வலையில் வீழ்த்தியும் (லவ் ஜிகாத்) மதமாற்றம் செய்வதைத் தடுக்கவே இந்த சட்டங்கள் இயற்றப்பட்டதாக அந்த மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. இந்த சட்டங்களை எதிர்த்து அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களில் பலர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதுபோல உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டம் அரசியல் சாசனம் வழங்கி உள்ள மத சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமையை மீறுவ தாக உள்ளதாக மனுக்களில் கூறப்பட்டுள்ளது. 

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு  விசார ணைக்கு வந்தது. அப்போது இந்த மனுக்கள் குறித்து பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட 7 மாநிலங்களுக்கு தாக்கீது அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதுபோல, உயர் நீதிமன் றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை யும் உச்ச நீதிமன்றத்துக்கே மாற்றி மொத்தமாக விசாரிக்கலாமா என்பது குறித்து பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட மனுதாரர் களுக்கு தாக்கீது அனுப்ப நீதிபதிகள் உத்தர விட்டனர்.


பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதா?

முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் எதிர்ப்பு

 லக்னோ, பிப்.7 பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.   உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய கூட்டம் நடந்தது. அதில், வாரியத்தின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர், நாடாளுமன்ற உறுப் பினர் அசாதுதின் ஒவைசி எம்.பி.யும் கலந்து கொண்டார். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- பொது சிவில் சட்டத்தை அமல் படுத்துவது, தனிநபர் சட்டங்கள் அளிக்கும் உரிமைகளை பறித்து விடும். பல மதங்கள், மொழிகள், கலாச்சாரம் நிறைந்த இந்தியாவுக்கு இச்சட்டம் ஏற்றதல்ல. எனவே, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது. வெறுப்பு பரப்பப்படுவதை கட்டுப்படுத்த உயர்மட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வக்பு சொத்துகளை பறிக்கக்கூடாது. அமைதியாக போராட்டம் நடத்துபவர்களின் வீடுகளை அதிகாரிகள் இடிப்பதை நீதித்துறை தடுக்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



No comments:

Post a Comment