இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வரவு விளைவுகளும் - விபரீதங்களும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 13, 2023

இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வரவு விளைவுகளும் - விபரீதங்களும்

முனைவர் க.திருவாசகம்

மேனாள் துணைவேந்தர்:

சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை 

பாரதியார் பல்கலைக்கழகம், 

கோயம்புத்தூர்

தேசியக் கல்விக் கொள்கை 2020இன் பரிந் துரையினை செயல்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு, 100 வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் இந்தி யாவில் நிறுவ மாதிரி சட்ட வரை யறையினை வெளியிட்டுள்ளது. அதன் மீதான இந்திய பல் கலைக் கழகங்களுக்கு கருத்துகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களிற்கு அளிக் கப்படும் சிறப்பு அனுமதி, இந்திய பல்கலைக் கழகங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள சட்டதிட்டம் செயல்பாட்டுமுறைகளுக்கு சமமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனின் முக்கிய நோக்கமாக இந்திய மாணவர்களுக்கு வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்களின் தரமான படிப்பும் மிகக் குறைந்த கட்டணத்தில் கிடைக்கச் செய்வதாக இருக்கும் என்பதாகும்.

கடந்த அய்ந்து ஆண்டுகளில் வெளிநாட்டில் பயிலச் செல்லும் இந்திய மாணவர்களின் எண் ணிக்கை 189% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டுமே 2,39,000 மாணவர்கள் சென்றுள்ளனர். தற்போது ஒரு மில்லியன் இந்திய மாணவர்கள் 85 நாடுகளில் இளங்கலை முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்கின்றனர். இவர்களில் 50 விழுக்காட் டிற்கு மேற்பட்டோர் வடஅமெரிக்காவிலும் பிறர் கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் பயில்கின்றனர். இப்படியான இந்திய மாணவர்களிடம், அவர்கள் வெளிநாட்டுப் பல் கலைக் கழகங்களுக்குச் செல்லும் காரணத்தைக் கேட்டறிந்து அளிக்கப்பட்ட NAASCOM அறிக்கை செப்டம்பர் 2021இன் படி, வெளிநாட்டுப் பல் கலைக்கழகங்களில் பட்டம் பெறுவதற்காக மட்டு மல்ல, படிக்கும் போது அங்கேயே  Internship  கிடைப்பதோடு படிப்பு முடித்தவுடன் வெளிநாட்டிலேயே வேலை கிடைக்கும். அத்தோடு படிப்புக் காலம் முடிந்தாலும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு விசா கிடைக் கிறது. படிக்கும் போது, பகுதிநேர வேலை செய்து, படிப்புக் கட்டணத்தை ஈடு கட்ட முடிகிறது. கிடைக் கின்ற இரண்டாண்டு விசா காலத்தில், பகுதி நேர வேலையோடு, நிரந்தர வேலைவாய்ப்பினையும் பெற முடிகிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்படியான வாய்ப்புக்கள் இந்தியாவில் வரவிருக் கின்ற வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களிலிருந்து பட்டம் பெறுபவர்களுக்கு கிடைக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

அதே வேளையில் 1100 இந்திய பல்கலைக் கழகங்களில் பயிலுகின்ற வெளிநாட்டு மாணவர் களின் எண்ணிக்கை 47,000 மட்டுமே. இவர்களில் 47 சதவிகிதத்தினர் நேபாளம் மற்றும் ஆப்கானிஸ் தான், இலங்கை, வங்கதேசம் போன்ற நாட்டினர். மேற்குலக நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையினரே.

இந்திய பல்கலைக்கழகங்களின் இயலாமையா?

உலகளவில் உயர்கல்வி அளிக்கும் அமைப்பில் அமெரிக்காவிற்கு அடுத்தும், இந்தியாவிற்கு முன்னதாக இருக்கும் நாடுகள் சைனாவும் ஜப் பானும் ஆகும். இது நாள்வரை இவ்விரு நாடுகளும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை தங்கள் நாட் டில் நிறுவ தனித்து இயங்க அனுமதியளிக்கவில்லை. தங்கள் நாட்டுப் பல்கலைக் கழகங்கள் வெளி நாட்டுப் பல்கலைக் கழகங்களோடு இணைந்து படிப்பும், ஆராய்ச்சியும் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளனர். அந்த நாட்டு மாணவர்கள் ஒரு செமஸ்டர் அல்லது ஒரு ஆண்டு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் சென்று படித்து வர வழிவகை செய்துள்ளனர். அதற்கான காரணங் களாக அவர்கள் சொல்வது, தங்கள் நாட்டுப் பல்கலைக்கழகங்களின் தரத்தை மேலைநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு மேலாக உயர்த்துவது, தங்கள் நாட்டில் பல்கலைக்கழகங்களிலேயே குறைந்த கட்டணத்தில் படிக்கச் செய்து, வெளி நாடுகளில் வேலைபெறத் தகுதி பெறச் செய்தல் என்கின்றனர். அவர்களின் இத்தகைய நோக்கங் களில் வெற்றி பெற்று வருகின்றனர்.

சைனா மற்றும் ஜப்பானைப்போல், இந்திய பல்கலைக் கழகங்களை வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு நிகராக தரத்தினை உயர்த்தி, அளிக்கப்படுகின்ற பட்டங்கள் வெளிநாடுகளில் வேலை பெறும் தகுதி யுடையதாக்கினால் பல இலட்சம் மாணவர்கள் பல நாடுகளுக்கு செல்வது குறையும். அத்தோடு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை இந்தியாவில் நுழையவிடும் இந்திய அரசின் நோக்கமும் மாற்றியமைக்கப்படும்.

விளைவுகள் மற்றும் வினாக்கள்

இந்திய பல்கலைக்கழகங்கள் UGC, AICTE, ICAR, NMC, PCI, DGS, NAAC, NIRF, NBA ஆகிய வற்றின் கட்டுப்பாடுகளின்படி இயங்குகின்றன. தனியார் மற்றும் நிகர் நிலைப் பல்கலைக் கழகங் களுக்கென்று பிரத்தியேக சட்ட  வரைமுறைகளும் உள்ளன. வரவிருக்கின்ற வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு முழுச் சுதந்திரம் என்று சொல்லப் பட்டுள்ள நிலையில் எந்த வகையில் அப்பல் கலைக்கழகங்கள் உயர்கல்வி நிறுவன அமைப் புகளின் கீழ் வருகின்றன என்று குறிப்பிடப்பட வில்லை. அதன் விளைவாக இந்திய உயர் கல்வியின் ஒழுங்குமுறை அனைத்து தரப்பிலும் அனைத்து அளவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆதலால் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங் களுக்கும், இந்திய பல்கலைக் கழகங்களுக்கான சட்ட  நடைமுறைகள் அமல்படுத்தப்பட வேண் டியது அவசியம்.

இருமை /இரட்டைநிலை கல்விச் சூழல்

தேசியக்கல்விக்கொள்கை 2020இல், காலனித் துவப் பாடத்திட்டக்  கட்டமைப்பை நீக்கம் செய்யவும், குறிப்பாக சமூக அறிவியல் மற்றும் மனிதநேயப் பாடங்களை படித்தல் மற்றும் படிப்பித்தல் முறையும் அமையவேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை யெல்லாம் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு கட்டாயம் என சொல்லப்படவில்லை. அதே தறு வாயில் அறிவியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் (Unethical Practice) நெறிமுறையற்ற பழக்கங் களைத் தவிர்க்கும் பொருட்டு அதற்கான பாடத் திட்ட அமைப்பில், இந்திய மக்களின் உடற்கூறு களுக்கு தகுந்தாற்போல் உருவாக்கப் பட்டுள்ளது. இதனைப் போல்தான் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள், தங்கள் பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை.

கல்வி அளிப்பது இலாபம் பெறவே

UGCஇன் வழிகாட்டுதலில், வெளிநாட்டுப் பல் கலைக் கழகங்கள் தாங்கள் கட்டணமாகப் பெறும் வருமானத்தை எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி தங்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்லலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால் வெளி நாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு இலாபம் (Profit) அடைதலுக்கு வழிவகுத்து, இந்திய கல்வி நிறுவனங்களின் (not for profit) இலாபத்தின் நோக் கத்திற்கானதல்ல என்ற நோக்கத்திற்கு எதிராக அமைகின்றது. இந்த நிலை, வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள், படிப்பு மற்றும் ஆராய்ச்சிக் கட்டணம் நிர்ணயிப்பதில் சுதந்திரம் என்பதால், மாணவர்கள் மிகப்பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும். அத்தோடு இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் முன்னேயே வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற (Supreme Court) தீர்ப்புகளுக்கு எதி ரானதாக அமைந்து, மேலும் பல வழக்குகள் வந் தடையும் நிலையாகிவிடும். ஆதலால், அதற்கான நிதிக்கட்டுப்பாட்டு முறைகளை, வல்லுநர்களைக் கொண்டு தயார் செய்து, அவை வெளிப் படைத்தன்மை உடையதாக சட்டம் கொண்டு வரப்படவேண்டும். இல்லையெனில், இந்தியக் கல்விச் சூழல் வியாபாரம் செய்வதற்கும், பொருள் ஈட்டுவதற்கும் இலாபம் பெறுவதற்கும் வெளி நாட்டினருக்கு வழி வகுத்து விடும்.

எந்த நூறு பல்கலைக்கழகங்கள்

ஒழுங்கு முறையில், உலகளாவிய தரவரிசையிலுள்ள முதல் நூறு பல்கலைக் கழகங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் பாடத்திட்ட அடிப்படையிலும் அந்த முதல் நூறு பல்கலைக் கழகங்கள் தேர்வு செய்யப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. இப்படியான அனுமதியில் ஒரு பாடத்தில் மட்டும் தரமுள்ள பல்கலைக்கழகங்கள் ஒட்டு மொத்தத்தில் தரமில்லாத பல்கலைக் கழகங்களும் இடம் பெறவாய்ப்புள்ளது. அப்படி யான பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் அந்தப் பாடங்களை மட்டுமே அளிக்க அனுமதிக்கப்படுமா அல்லது பிற பாடங்களையும் நடத்த அனு மதிக்கப்படுமா என்று சொல்லப்படவில்லை. உலகில் சிறந்த பிற பல்கலைக்கழகங்களும் அனுமதிக்கப்படும் என்று குறிப்பிட்டு, அவை எந்தத் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப் படவுள்ளன என தெரிவிக்கப்படவில்லை.

கல்வி தரும் நோக்கம் வேறுபட்டது

இந்தியக் கல்வி சமூக கலாச்சார மதிப்போடு கூடிய பழைமையானது. அதே வேளையில் வெளி நாட்டு கல்வி வியாபார நோக்கத்தை உள்ளடக் கியது. இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் நோக்கமும் (Vision) செயல்பாட்டுத்திறனும் (Mission) தனிமனித நலம், இந்திய மதிப்பு மற்றும் நெறி முறைகளை மேம்படுத்துவதாக இருக்கிறது. அதனைப்போல வெளிநாட்டு உயர்கல்வி நிறுவ னங்கள் சிறந்த இந்தியக் குடிமகன்களை உருவாக் கக் கூடிய நெறிமுறைகள் கொண்டதாக இந்திய வளர்ச்சிப் பாதைக்கு வழிவகுப்பதாக இருக்க வேண்டும். ஆனால், வழிகாட்டுதலில் பொதுவாக இந்திய நெறிமுறைகள் வழங்கும் கல்வியாக இருக் கும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. எவ் வாறு அந்த முறைகள் செயல்படுத்தப்பட வேண் டும் அதனை எப்படி மேற்பார்வை செய்யப்படும் எனக் குறிப்பிடப்படவில்லை. 

கல்வித்திட்டங்களும் பாடங்களும்

வரையறையில், இந்தியாவிற்கு வரவுள்ள வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்கள் இளநிலை, முதுநிலை, முனைவர், முதுமுனைவர், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.  NEP2020 அறிக்கையின்படி உயர்கல்வியின் ஆராய்ச்சியின் வெளிப் பாடுதான் மிக முக்கியமாக தேவைப்படுகின்றது. ஆதலால், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இளநிலை, பட்டயம் மற்றும் சான்றிதழ் பாடங் களைத் தவிர்த்து ஆராய்ச்சியினை மேம்படுத்தும் முதுநிலை மற்றும் முனைவர் படிப்புகளைத் தரச் செய்தல் வேண்டும். இப்படியான பல்கலைக் கழகங்களில் அளிக்கப்படும் பட்டங்கள் இந்தியா வில் மட்டுமல்லாது அனைத்து வெளிநாட்டு தகுதியுடையதாகும்.

வேலைவாய்ப்புகளுக்கும்

அனைத்து நாடுகளிலும் நுழைவு விசா பெறுவதற்கு ஏதுவாகவும் இருக்கச் செய்ய வேண்டியது அவசியமாகிறது. மருத்துவம் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட படிப்புகள் UGC கீழ் அல்லாமல், தேசிய மருத்துவ ஆணையத்தில் (National Medical Commission) மற்றும் இந்திய விவசாய ஆராய்ச்சி குழுமம் (Indian Council of Agricultural Research) ஆகிய அமைப்பின் கீழ் வருகின்றது. இதன் சம்பந்தமான படிப்புகள் வழங் குவது தொடர்பாக எதுவும் வரையறையில் குறிப் பிடப்படவில்லை. அத்தோடு ஒவ்வொரு பாடத் திற்கு மதிப்பெண் மதிப்பீடு (Credit Assignment) விவரணையாக்கம் (Mapping) வெளிநாட்டுப் பல் கலைக்கழக மதிப்பெண்கள் மாற்றப்படும் முறைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

முறைப்படுத்தப்பட 

வேண்டிய சட்ட வரையறை

• இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் நோக்க மாக அனைத்து அளவிலான மக்களுக்கும், மலி வுக் கட்டணத்தில் (Affordable price) தகுதியான கல்வியினை அளிப்பதாக இருக்கிறது. இதனை வர விருக்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் உறுதிசெய்யும் முறையில் மாற்றம் செய்ய வேண் டும். மாணவர்கள் சேர்க்கையில் முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டு எந்த நாட்டு மாணவர்களையும் எந்த எண்ணிக்கையிலும் சேர்த்துக் கொள்ளலாம் என்று உள்ளது. பிற நாட்டு மாணவர்கள் இந்தியாவில் அதிக அளவு பயில வருவது மகிழ்ச்சியானாலும் இந்திய மாணவர்கள் பெரிய எண்ணிக்கையில் பயன் பெறுவது போல், குறிப்பிட்ட சதவிகித மாணவர் சேர்க்கை இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கப்படவேண்டும். 

இந்திய பல்கலைக்கழகங்களில் UGC நிர்ணயித்துள்ள கல்வித்தகுதி, அனுபவம், ஆராய்ச்சி அளிப்பு அடிப்படையில்தான் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். சட்ட வரையறையில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் UGC குறிப் பிட்ட தகுதியுடையவர்களையும், அத்தோடு குறிப் பிட்ட சதவிகிதம் இந்திய ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும் என்பது அவசியம். அத்தோடு நியமிக்கப்படவுள்ள வெளிநாட்டு ஆசிரியர் களுக்கும் இந்திய ஆசிரியர்களுக்கும் ஊதியம் மற்றும் பிற சலுகைகளில் எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லாமல் இருத்தல் வேண்டும்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு முதலில் பத்து ஆண்டுகள் அனுமதியளிப்பது என் பதனை மாற்றி, வரையறையில்  குறிப்பிடப்பட்டுள்ள எந்த வகையான கூறுகளையும், அப்பல்கலைக் கழகங்கள் மீறினாலும் எந்த ஆண்டிலும், அனுமதி திரும்பப் பெறப்படும் என்று மாற்றி அமைக்க வேண்டும். அப்போதுதான் இந்திய கல்வி அமைச்சகத்தின் மேற்பார்வையில் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களும் தரத்தோடும் இந்திய மாணவர்களுக்கு நன்மை தருவதாகவும் அமையும்.

• ஆரம்பத்திலேயே 100 பல்கலைக் கழகங் களுக்கு அனுமதி என்றில்லாமல், ஒரு மாநிலத் திற்கு ஒரு வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் என்று அதிக அளவாக 50 பல்கலைக்கழகங்களை முதல் அய்ந்து ஆண்டுகளுக்கு ஒரு பரீட்சார்த்த முறையில் அனுமதி அளிக்கவேண்டும். அப்போது தான் இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார்  பல் கலைக்கழகங்கள் தங்களின் வளர்ச் சியிலும் பொருளாதாரரீதியாக எந்த சரிவுகளும் இல்லாமல் உயர் கல்விப் பணியினை தொடர ஏதுவாகும்.

UGC இந்த வரையறையினை சட்டமாக்கும் முன்பாக, இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் பயிலுகின்ற மாணவர்கள், பணியாற்றுகின்ற ஆசிரி யர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்திய பல் கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணவர்கள், பணியாற்றும் இந்திய மற்றும் வெளிநாட்டு ஆசிரி யர்களின் கருத்தினைப் பெற்று, தகுந்த மாற்றங் களை ஏற்படுத்தினால் Setting up and Operation of Campuses of Foreign Higher Education Institutions in India Regulations, 2023  இந்திய உயர்கல்வியின் அனைத் துத்தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக அமையும்.











No comments:

Post a Comment