பழனி கோயில் பற்றிய புரளி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 4, 2023

பழனி கோயில் பற்றிய புரளி

 பழனி கோவில் குருக்கள் என்ற பெயரில் குரல் பதிவு ஒன்று பரவி வருகிறது. 

"பழனியில் அதாவது கோவில் பாரம்பரிய சாஸ்திரங்களை மீறி பிறர் (பார்ப்பனர் அல்லாதார்) கருவறைக்குள் நுழைந்துவிட்டனர். இது மாபெரும் குற்றம். அதை பார்த்துவிட்டு அமைதியாக இருந்த அர்ச்சகர்களின் செயல் தவறானது. அர்ச்சகர்களில் ஒரு சிலர் பணம் என்கிற நோக்கத்தில் செயல்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் கேவலமானது. வருகிற ஆனி மாதம் பழனி கோவில் மூலவர் சிலைக்கு மீண்டும் மருந்து சாத்தப்பட்டு, மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். இதுகுறித்து அர்ச்சகர் சங்கம் சார்பில் கூட்டம் போட்டு கலந்து பேசி அதிகாரிகளிடம் எடுத்துரைத்து செயல்படுவோம்.இதற்கு சம்மதித்து அர்ச்சகர்கள் அனைவரும் ஒன்று சேரவேண்டும். இல்லையென்றால் கருவறையில் நடந்த உண்மைகளை பொது வெளியில் கொண்டுவருவேன். நேர்மையாக செயல் படாமல், துர்சக்திகளை வைத்து செயல்படுவது நமக்கும், நமது சமூகத்திற்கும், உலகத்திற்கும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். அமைச்சர்கள் கருவறைக்குள் நுழையும் போது கையைப் பிடித்து இழுத்து தடுத்து பிரச்சினை ஏற்பட்டது.  ஆனாலும் நம்மில் உள்ள ஒரு சிலரால் அவர்கள் கருவறைக்குள் நுழைந்து விட்டார்கள். எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் நல்லது நடக்க செயல்படலாம்” என்று அந்தக்குரல் பதிவு கூறுகிறது. 

 மேலும் ஹிந்துக்களின் நம்பிக்கையின் மீதான மிகப் பெரிய தாக்குதல் என்றும்  அந்த ஒலிப்பதிவு கூறுகிறது. 

தைப்பூசத்திற்காக பழனி உள்ளிட்ட முருகன் கோவில்களுக்கு மக்கள் சென்றுகொண்டு இருக்கும் போது இந்தக் குரல் பதிவு அனைவரது கைப்பேசிகளுக்கும் சென்றடைகிறது. மேலும் இந்த ஆட்சி; ஹிந்து மத்திற்கு விரோதமான ஆட்சி - இங்கு ஹிந்துக்கள் பெரிதும் வஞ்சிக்கப்படுகின்றனர். வாக்குவங்கிக்காக மட்டுமே ஹிந்துக்கள் விலை போய் விடுகின்றார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.  பழனி கோவில் குடமுழுக்கின் போது சிலைக்கு மருந்துகாப்பு எனப்படும் கவசக்காப்பு பார்ப்பனர் அல்லாதவர்களால் மட்டுமே போடப்படும், அது கடுமையான உடல் உழைப்பு வேலை ஆகும் ஆகவேதான் பாஷாணக் காப்பு போடவும் அதை மேற்பார்வையிடவும் அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் சென்றனர். இது காலம் காலமாக இருக்கும் நடைமுறைதான். 

 ஆனால் ஏதோ இன்று கருவறைக்குள் பார்ப்பனர் அல்லாதோர் நுழைந்துவிட்டனர் என்று வதந்தி பரப்புவதுமட்டுமல்லாது, மறைமுகமாக இந்த ஆட்சி ஹிந்துவிரோத ஆட்சி என்றும் பரப்புரை செய்து வருகின்றனர்.

உண்மையைச் சொல்லப் போனால் இந்தப் பழனி முருகன் கோயில் யாருக்குச் சொந்தம்? திருமூலர் வழிவந்த போகர் என்னும் சித்தரால் நவ (ஒன்பது) பாஷாண மூலிகைகளால் உருவாக்கப்பட்டதுதான் முருகன் சிலை. இன்றைக்கும் பழனி கோயிலின் உட்புறம் உள்ள 'திருச்சுற்றில்' 'போகர் சமாதி உள்ளதைக் காணலாம்.

போகர் மரணம்கூட தில்லை நந்தன், வடலூர் இராமலிங்க அடிகளார் போன்ற மர்மத்தைச் சார்ந்ததே!

போகரால் உருவாக்கப்பட்ட பழனி ஆண்டவன் கோவிலில் போகரின் சீடரான புலிப்பாணியாராலும் அவருக்குப் பின்னரும், அவர் வழி வழி வந்த சீடர்களாலும் பூஜை முதலியன நடைபெற்றன என்பதுதான் வரலாறு. 

கி.பி. 1623 முதல் 1659 வரை மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கனின் தளவாயாக  இருந்த (படைத் தலைவன்) ராமப்பய்யன் என்னும் பார்ப்பான் பழனி கோயிலுக்கு வந்தபோது, அங்குப் பூஜை செய்வோர் பார்ப்பனர் அல்லாத பண்டாரங்கள் என்பதை அறிந்து அவர்களிடம் பிரசாதம் வாங்க மறுத்து, கொங்கு பகுதியிலிருந்து பார்ப்பன அர்ச்சகர்கள் அய்வரைக் கொண்டு வந்து பூஜை செய்ய நியமித்தான் என்ற உண்மை வரலாறு இருக்க, இப்பொழுது பழனி முருகன் கோயில் கருவறைக்குள் பார்ப்பனர் அல்லாத அதிகாரிகள் சென்று விட்டனர் என்று 'குய்யோ முறையோ' என்று பார்ப்பனர்கள் கத்துகின்றனர் - கதறுகின்றனர் என்றால் இந்தக் கொடுமையை என்ன சொல்ல!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் செயல்பாடு இன்னும் வேகமாக நடத்தப்படுவதே இதற்குச் சரியான பதிலடி!

'திராவிட மாடல்' அரசு துவக்கத்தைக் கொடுத்து விட்டது. இன்னும் அது தீவிரமாகும் என்பதில் அய்யமில்லை  - இல்லவே இல்லை.

No comments:

Post a Comment