சூழல் ஆஸ்கார் விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 18, 2023

சூழல் ஆஸ்கார் விருது

சூழல் ஆஸ்கார் என்று அறியப்படும் எர்த்ஷாட் விருது பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் அவர்களால் 2020இல் தோற்றுவிக்கப்பட்டது. சூழல் பாதுகாப்பிற்கு உதவும் அய்ந்து பிரிவுகளில் இந்த விருதுகள் ரூ.10 கோடி அளவில் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகின்றன. 2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டன.

 இதில் சூழல் பாதிப்பு மற்றும் மறுவாழ்வாதாரம் என்னும் பிரிவில் தெலங்கானாவில் அமைந்துள்ள ஸ்டார்ட் அப் கம்பெனியான கெயிட்டி  (Kheyti)  இம்முறை இந்த விருதைப் பெற்றுள்ளது. சிறு குறு விவசாயிகளுக்கு நீடித்த நிலையான வளர்ச்சிக்கு உதவும் வகையில் உருவாக்கிய பசுமைக்குடில் கண்டுபிடிப்பிற்காக இந்த அமைப்பிற்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.  

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளைச் சந்திக்கும் சிறு, குறு நில விவசாயிகளுக்குக் குறைந்த செலவில் விளைச்சலை அதிகரிக்க, இதன் மூலம் அவர்களின் வருமானத்தை அதிகப்படுத்த கெயிட்டியின் கண்டுபிடிப்பு உதவும். 


இந்தியாவில் சிறு குறு நில விவசாயிகளில் மிக அதிகம் பாதிக்கப்பட்ட பத்து கோடி ஏழை விவசாயிகளுக்கு உதவி செய்வதே தங்கள் இலட்சியம் என்று கெயிட்டியின் தோற்றுநர்களில் ஒருவரும், நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலருமான கவுசிக் கத்த கண்டுலு கூறினார்.

காற்றைத் தூய்மைப்படுத்துங்கள்  (Clean Our air) என்ற பிரிவில் கென்யாவின் முகுரு ஸ்டவ்கள் தயாரிக்கும் நிறுவனம் விருதைப் பெற்றுள்ளது. பெண்கள் அதிகம் வேலை பார்க்கும் இந்த நிறுவனம், நிலக்கரி, மரம் போன்றவற்றைப் பயன்படுத்தி மாசு ஏற்படாத வகையில் எரியும் அடுப்புகளை தயாரித்து வீட்டுக்குள் மாசு ஏற்படுவதைக் குறைக்கிறது. 

உணவுப் பொட்டலமிடுதல் துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக, மட்கக் கூடிய உயிரி பிளாஸ்டிக்கை கடற்பாசிகளில் இருந்து தயாரிக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த நாட்ப்ளா (Notpla) நிறுவனம் கழிவுகளற்ற உலகை உருவாக்குவோம்  (Build a waste free World) என்னும் பிரிவுக்கான விருதைப் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment