சைக்கிளில் உலகம் சுற்றும் பெண்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 6, 2023

சைக்கிளில் உலகம் சுற்றும் பெண்கள்

சென்னை, ஜன.6 சைக்கிளில் உலகம் சுற்றும் நெதர்லாந்து நாட்டு பெண்கள் சென்னை வந்தனர். அவர்கள் இட்லி, தோசையை விரும்பி சாப்பிடுவதாக பேட்டி அளித்தனர்.  நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டம் நகரை சேர்ந்தவர் கரோலின் வேன்டிஸ் (வயது 61). இவர் தன்னுடன் பள்ளிப்படிப்பு படித்த நெதர்லாந்து நாட்டு தோழிகள் 10 பேரை சேர்த்து ஒரு கல்வி அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார். பல்வேறு நாடுகளுக்கு சென்று மக்களின் வாழ்தார நிலைமை, அங்குள்ள குழந்தைகளின் கல்வி முறைகள் பற்றி விசாரித்து அடித்தட்டு நிலையில் உள்ள குழந்தைகளை தேடிக் கண்டுபிடித்து கல்வி உதவி செய்து வருகிறார். இவர்கள் அந்த நாட்டில் மருத்துவர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், தொழில் நுட்ப வல்லுநர்களாகவும் உள்ளனர்.

 நெதர்லாந்து தோழிகள் 10 பேருக்கும் திருமணமாகி கணவன், மகன், மகள்கள், பேரக்குழந்தைகள் என ஒரு குடும்பமாக அந்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.   உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடாக சென்று சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் தமிழ்நாட்டை தேர்வு செய்த நெதர்லாந்து தோழிகள் சென்னை வந்தனர். பிறகு சென்னையில் இருந்து சைக்கிள் மூலம் பயணம் சென்றால்தான் மக்களின் வாழ்வாதார நிலைகளை அறியவும், பொழுதுபோக்கு மய்யங்களை கண்டுரசிக்கவும் முடியும் என்று எண்ணிய தோழிகள் 10 பேரும், சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சைக்கிள் பயணத்தை தொடங்கி, மாமல்லபுரம் வந்தனர்.

பின்னர் மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி, சேலம் வழியாக மதுரையில் தங்கள் பயணத்தை முடிக்கின்றனர்.  வழி நெடுகிலும் மக்களின் வாழ்வாதார நிலைகளையும், அவர்களின் குழந்தைகளின் கல்வி முறைகள் குறித்து விசாரிக்கிறார்கள். அடித்தட்டு நிலையில், கல்வி பயில முடியாத வசதியற்ற ஏழைக் குழந்தைகளை கண்டறிகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய உள்ளதாகவும், தற்போதுதான் முதன் முதலாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளதாகவும் அவர்கள் கூறினார்கள். தமிழ்நாடு மக்களின் கலாசாரம் பண்பாடு போன்றவற்றை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் சொன்னார்கள். இங்குள்ள சுற்றுலா தலங்களில் உள்ள புராதன சின்னங்கள், பொழுதுபோக்கு மய்யங்கள் ரசிப்பதற்கும், பார்ப்பதற்கும் மிக அழகாக உள்ளதாகவும், தமிழ்நாடு வந்தது நல்ல வாய்ப்பாகும் என்றும் நெதர்லாந்து பெண்கள் தெரிவித்தனர். நெதர்லாந்து தோழிகள் 10 பேரும் 50 வயதை கடந்தாலும் அவர்கள், 18 வயது இளம்பெண்கள் போல மிடுக்கான ஆடை அணிந்து சுறுசுறுப்பாக காணப்படுகின்றனர்.  ஒரு நாளைக்கு 100 கிலோ மீட்டருக்கு சைக்கிள் ஓட்டுவோம். எங்களுக்கு களைப்பு என்பதே வராது. ஓட்டல்களில் சாப்பிட்டு எங்கள் உடல்நலத்தை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால்தான் உணவுப் பொருட்கள், சமையல் எரிவாயு சமையல் கலைருருடன் நடமாடும் ஓட்டல்போன்று ஒரு வேனும் உடன் வருகிறது என்றனர். வழியில் ஏதாவது ஒரு விடுதியில் தங்கும் அவர்களுக்கு நடமாடும் சமையல் வேனில், இருந்து சமையல் கலைஞர் ஒருவர் இட்லி, பூரி, பொங்கல், தோசை என விதவிதமாக தமிழ்நாடு உணவுகளை சமைத்துக் கொடுக்கிறார். அதனை தாங்கள் விரும்பி சாப்பிடுவதாக நெதலர்லாந்து தோழிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.




  

No comments:

Post a Comment