பம்பை நதியா - பக்தர்களைக் கொல்லும் நதியா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 12, 2023

பம்பை நதியா - பக்தர்களைக் கொல்லும் நதியா?

பம்பை நதியில் நீர் குறைவாக ஓடுவதாலும் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து குளிப்பதாலும், சிறுநீர், மலம் கலந்து விடுவதாலும் நீரில் இ-கோலி பாக்டீரியா உருவாகியுள்ளது. இதனால் மகர விளக்கு நாட்களில் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது

கேரள மாநிலத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு  நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் உள்ள பம்பை நதியில் இ-கோலி பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று கட்டுப்பாடுகளால் மக்கள் வருகை குறைவாகவே இருந்தது. இந்த முறை கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால்  கூட்டம் அதிகரித்துள்ளது

இதனால் கேரளா, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து வருபவர்கள் இணைய மற்றும் உடனடி முன்பதிவு முறையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேசமயம்  கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு  சன்னிதானப் பகுதியில் இருந்து உடனடியாக மக்களை வெளியேற்ற காவல்துறை அதிகாரிகள், தன்னார் வலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி மண்டல பூஜை நிறைவடைந் ததைத் தொடர்ந்து அன்று இரவு நடை சாத்தப்பட்டது. அதன்பின்னர் 3 நாட்கள் கழித்து மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் சபரிமலை கோயில் நடை டிசம்பர் 30 ஆம் தேதி திறக்கப்பட்டது. மகரஜோதி தரிசனத்தை காண நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் பக்தர்கள் வீதம் ஜனவரி 14 ஆம் தேதி வரையிலான இணைய முன்பதிவு முடிந்து விட்டது. மேலும் பலர் முன்பதிவு செய்யாமல் வந்து கொண்டிருக்கும் நிலையில், கோயிலுக்கு முன்பதிவு செய்யாமல் வர வேண்டாம் எனவும் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில் சபரிமலையில் உள்ள பம்பை நதியில் மிகவும் குறைந்த அளவே நீர் ஓடுவதால் அதன் ஓட்டம் கிட்டத்தட்ட நின்று போய்விட்டது, இந்த நீரில் ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்ந்து குளித்தவண்ணம் உள்ளனர். மேலும் மலைப்பகுதியில் மலம் கழித்துவிட்டு ஆற்றுநீரில் கழுவுகின்றனர். இதனால்  இ-கோலி பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பம்பை நதியில் உள்ள கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் கேரள சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.

மனித உடலிலேயே இகோலி பாக்டீரியாக்கள் உள்ளன. இது உணவு செரிக்கவும், கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது. இது செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால்  சுகாதாரமில்லாத நீர் உடலினுள் செல்லும் போது ஷிகா என்னும் நச்சுத்தன்மையை உருவாக்குகிறது. இதன் மூலம் உடல் பலவீனப்படுகிறது. இது குடலுக்கு சேதத்தை உண்டாக்கும். கடுமையான சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதோடு உயிருக்கு ஆபத்தான அறிகுறிகளையும் உண்டாக்கும்.

'இந்தியா டுடே' ஏடு (19.12.2007) சபரிமலை பம்பை நதியைப் பற்றி விலாவாரியாக எழுதியதுண்டு. ஆண்டுதோறும் 3 கோடி பக்தர்கள் சபரிமலைக்கு வந்து போகிறார்கள். பம்பை நதியில் 100 மில்லி லிட்டர் நீரில் 3 லட்சம் எம்.பி.என். கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த பாக்டீரியாவின் அளவு 500அய்த் தாண்டினாலே அபாயகரமானது என்கிறது ஆய்வு. இந்த ஆய்வு என்பது மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் வெளியிடப்பட்டதாகும்.

இப்பொழுது சொல்லுங்கள் கடவுள், கோயில், பக்தி, புண்ணிய முழுக்கு என்பது மக்களின் நன்மைக்கா? தீமைக்கா?? 

No comments:

Post a Comment