Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பிற இதழிலிருந்து...
January 12, 2023 • Viduthalai

கவர்னர் வட்டாரத்தின் கவனத்துக்கு

'முரசொலி' தலையங்கம்

அரசாங்கத்தால் எழுதித் தரப்பட்ட அறிக்கையைப் படிக்காமல் அதில் உள்ள கருத்துகளை நீக்கியும் - புதிய கருத்துகளைச் சேர்த்தும் ஆளுநர் தனது உரையைப் படித்ததும் - அரசால் தயாரித்து வழங்கப்பட்ட அறிக்கையே அதிகாரப்பூர்வமானது என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தீர்மானம் நிறைவேற்றியதும் - இந்தியா முழுமைக்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

'தமிழ்நாட்டுக்கு என்ன பெயர் வைக்கலாம்?' என்ற அவரது ஆராய்ச்சியானது, இதுவரை ‘அரசியல்’ எதிர்ப்பை மட்டுமே எதிர்கொண்டு வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்களுக்கு 'மக்கள்’ எதிர்ப்பையும் அதிகம் சேர்த்துக் கொடுத்துவிட்டது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அவரது நடத்தையானது வேண்டாத்தனமாகவே அனைத்துத் தரப்பினராலும் கண்டிக்கப்படுகிறது. இதற்கு நேரடியாக விளக்கம் அளிக்க முடியாமல் ஒரு அறிக்கையைத் தயாரித்து, ‘கவர்னர் மாளிகை வட்டாரத் தகவல்' என்ற தலைப்பில் இரகசியமாக உலவ விட்டுள்ளார்கள். இது 'தினத்தந்தி (10.1.2023) நாளிதழில் வெளியாகி இருக்கிறது. தங்களிடம் நேரடியாக பதில் இருந்தால் நேரடியாகவே சொல்லலாம். அதை விடுத்து வட்டாரத் தகவல் என 'வட்டாரமே' தகவலை எதற்காக பரப்பவேண்டும்?

1. ஆளுநரின் அறிக்கையை நீக்குகிறேன் என்று அவ்வையாரின் வரியையும் பாரதியாரின் வரியையும் நீக்கிவிட்டார்களாம். திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகையில் இதனைவிட நல்ல வரிகள் எல்லாம் இருக்கிறதே, அதனை இவர்கள் ஏன் சேர்க்கவில்லை என்று கேட்டால் அது எவ்வளவு விதண்டாவாதமோ அவ்வளவு விதண்டாவாதம் இது. ஏன் பாரதி கவிதையைச் சேர்த்தீர்கள் என்பது அல்ல பிரச்சினை. அதிகாரப்பூர்வ உரையில் இல்லாததை ஏன் சேர்த்தீர்கள் என்பதுதான் கேள்வி!

2. ஏற்க முடியாத கருத்துகளை நீக்கச் சொன்னோம் என்கிறது அந்த அறிக்கை. அந்த உரையை முழுமையாக ஏற்றுக் கொண்டு வாசிக்க இருப்பதாக 7 ஆம் தேதியிட்ட கோப்பில் கையெழுத்துப் போட்டிருக்கிறாரே ஆளுநர். ஏற்க முடியாத கருத்துகள் இருந்தால் அதனை முழுமையாக திருப்பி அனுப்பி இருக்கலாமே?

3. சுவாமி விவேகானந்தரை நினைவு கூர்ந்தார் ஆளுநர், அதனை எதற்காக நீக்கினார்கள் என்று கேட்கிறது அந்த அறிக்கை. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் பெயரை எதற்காக ஆளுநர் நீக்கினார்? அதற்கு முதலில் பதில் சொல்லட்டும். அதன்பிறகு விவேகானந்தர் விவகாரத்தைப் பார்ப்போம். 'திராவிட மாடல்' கசக்கிறது என்றால், விவேகானந்தர் எதனால் இனிக்கிறது?

4. அரசாங்கத்தைப் புகழ்ந்து பேசும் வரிகளைத் தவிர்த்தார் என்கிறது அந்த அறிக்கை. இது உண்மைக்கு மாறான தகவல். அரசாங்கத்தைப் புகழ்ந் தும், முதலமைச்சரை வெகுவாகப் புகழ்ந்தும் உள்ள வரிகள் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளன. ஆளுநர் எதைத் தவிர்க்கிறார் என்றால் தமிழ்நாட்டை, திராவிட மாடலை, சமூகநீதியை, தமிழ்நாட்டுத் தலைவர்களைத் தவிர்க்கிறார். திராவிட இயக்கத் தலைவர்களை மட்டுமல்ல, பெருந்தலைவர் காமராசரையும் பிடிக்கவில்லை. அண்ணல் அம்பேத்கரையும் பிடிக்கவில்லை. சில வாரங்களுக்கு முன்னால் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் மீது பாசம் இருப்பதைப்போல பேசியவர்தான் இந்த ஆளுநர். 'ஜின்னாவைப்போல அம்பேத்கரையும் மாற்றப் பார்த்தார்கள் பிரிட்டிசார்'என்று பேசியவர்தான் ஆளுநர். இப்போது அம்பேத்கர் பெயரையும் தவிர்க்கிறார் என்றால் அவரது உள்ளார்ந்த ஈடுபாடு அம்பேத்கருக்கு எதிரானது என்பதை இதன் மூலமாக அறியலாம்.

5. ஆட்சியின் கொள்கையைப் பேச முடியாது என்கிறது அந்த அறிக்கை. அரசாங்கத்தின் கொள்கையைப் பேசுவதுதான் ஆளுநரின் அறிக்கை. செயல்திட்டங்களை நிதிநிலை அறிக்கையும், மானியக் கோரிக்கைகளும் சொல்லும். இந்த அடிப்படை அறிவுகூட அந்த அறிக்கையை உலவவிட்டவருக்கு இல்லை.

6. இந்த மாநிலம் அமைதியாக இல்லை' என்கிறது அந்த அறிக்கை. இந்த மாநிலம் அமைதியாக இல்லை என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்? இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் அய்ந்து வெடிகுண்டு சம்பவங்களை ஆளுநர் மாளிகை அறிக்கையாகக் கொடுக்கட்டும். பார்க்கலாம். எதற்காக இத்தகைய அவதூறு அறிக்கையை ஆளுநர் மாளிகை வெளியிடுகிறது. இந்த மாநிலம் அமைதியாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லையா? அமைதியைக் குலைக்க முயற்சிப்பவர்கள் யார்?

7. இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஏதோ மாநில அரசின் முயற்சியால் மட்டுமே விடுவிக்கப்பட்டதாக உள்ள வரிகளை எப்படி ஏற்க முடியும்? என்று கேட்கிறது அந்த அறிக்கை. பழனிசாமி ஆட்சியைவிட வேகமாக மீனவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள் என்றால் அதற்கு இன்றைய மாநில அரசின் அழுத்தம்தானே காரணம். 'நான் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவன்கூட கைது செய்யப்பட மாட்டான்' என்று 2014 தேர்தலுக்கு முன்னால் இராமநாதபுரம் பொதுக்கூட்டத்தில் சொன்னவர் மோடி இந்த எட்டு ஆண்டுகளில் இந்திய மீனவர் எவரும் கைதாகவில்லையா? கொல்லப்படவில்லையா? இதுவும் மோடி அரசின் சாதனையா? சொல்வாரா ஆளுநர்?

8. சட்டசபை உறுப்பினர்கள் ஆளுநரைச் சுற்றி நின்று உரையை வாசிக்கவிடாமல் முழக்கமிட்டு கேரோ செய்தனர். இது இதற்கு முன் நடக்காத ஒன்று என்கிறது அந்த அறிக்கை. ஆளுநருக்கு எதிராக முழக்கமிடுவது ஜனநாயக உரிமை ஆகும். அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கமிட்டு, வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். எனவே, இது காணாத காட்சி அல்ல.

9. “சபை மரபை மீறி முதலமைச்சர் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார்” என்கிறது அந்த அறிக்கை. ஆளுநருக்கு எதிராக எந்தத் தீர்மானமும் கொண்டுவரவில்லை. 'அரசின் அதிகாரப்பூர்வ உரையை அவைக்குறிப்பில் ஏற்ற வேண்டும்' என்பதே முதலமைச்சரின் தீர்மானம் ஆகும். இதுவும் சபை மரபை மீறிய செயல் அல்ல, சபை விதியைத் திருத்தி அந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

10. ஆளுநரின் உரை என்பது அரசாங்கத்தின் உரையாகும். அரசாங்கம் தயாரித்த உரையை அவர் வாசித்தாரா இல்லையா? ஏன் வாசிக்கவில்லை? வாசிக்க மனமில்லை என்றால் அவரே முன்வந்திருக்கக் கூடாது. வருகை தந்து, வாசிக்க மறுத்ததும், மாற்றி வாசித்ததும், சேர்த்து வாசித்ததும் சட்டசபையின் மாண்புக்கு குந்தகம் விளைவிப்பது என்பதை கவர்னர் வட்டாரம் முதலில் உணர வேண்டும்.

அறிவியல் தேர்வில் புவியியல் ஏன் எழுதினாய் என்று கேட்டால், 'புவியியலை சரியாகத்தானே எழுதியிருக்கிறேன்' என்றானாம் ஒரு புத்திசாலி. அந்த வகைதான், இந்த வகை!

நன்றி: 'முரசொலி'  12.1.2023


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காந்தியாரின் 76 ஆவது நினைவு நாள் இன்று!
January 30, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
பதிலடிப் பக்கம்
January 27, 2023 • Viduthalai
Image
அதானி நிறுவன ஊழல்
January 28, 2023 • Viduthalai
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்திய மதுரை திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 28, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn