சிறுபான்மையினரை அடையாளம் காண்பதில் சுணக்கம்: உச்ச நீதிமன்றம் அதிருப்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 19, 2023

சிறுபான்மையினரை அடையாளம் காண்பதில் சுணக்கம்: உச்ச நீதிமன்றம் அதிருப்தி

புதுடில்லி, ஜன. 19- நாடு முழுவதும் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களில் உள்ள சிறுபான்மையினரின் நிலை என்ன, அந்த மாநிலங்களில் யார் சிறுபான்மையினராக உள்ளனர் என்பன போன்ற விவரங்களை தெரிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு உள்ளிட்ட 24 மாநிலங் கள், 6 யூனியன் பிரதேச அரசுகள் தங்கள் மாநிலத்தில் சிறுபான்மையினராக உள்ள மக்களின் நிலை குறித்து ஒன்றிய அரசிடம் தகவல்களை அளித்துவிட்டன.

ஆனால், தெலங்கானா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட், அருணாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், லட்சத்தீவு ஆகிய 6 மாநில, யூனியன் பிரதேச அரசுகள் சிறு பான்மையினர் விவரங்கள் தொடர்பான தகவல்களை இதுவரை ஒன்றிய அரசிடம் தெரிவிக்கவில்லை. கடந்த டிசம்பர் 21ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாநில, யூனியன் பிரதேச அரசுகள் இதுதொடர்பான தகவலை தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு நினைவூட்டி இருந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசுக்கு நினைவூட்டலை அனுப்பியிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஏ.எஸ்.ஓகா, ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு 17.1.2023 அன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி கூறும்போது, “24 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேச அரசுகள் தங்கள் மாநிலங்களில் உள்ள சிறுபான்மையினர் விவரங்களை ஒன்றிய அரசிடம் தெரிவித்துவிட்டன. அருணாச்சல் உள்ளிட்ட 6 மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் தகவலை இன்னும் தெரிவிக்கவில்லை” என்றார். அப்போது நீதிபதிகள் கூறும் போது, ‘‘ஏன் இந்த மாநிலங்கள் இன்னும் தகவலைத் தெரிவிக்கவில்லை. இது சரியான செயல் இல்லை. தகவல்களை அளிப்பதில் சம்பந்தப்பட்ட மாநில, யூனியன் பிரதேச அரசுகள் சுணக்கம் காட்டுவது ஏன்? மாநில அரசுகளின் செயல்களில் அதிருப்தி அடைந்துள்ளோம்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்களிடமிருந்து தகவலைப் பெறுவதற்கு நாங்கள் கடைசி வாய்ப்பை ஒன்றிய அரசுக்கு வழங்குகிறோம். பதில் அனுப்பவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் எந்த கருத்தும் தெரிவிக்க வில்லை என எடுத்துக் கொள்வோம்” என்றனர்.

No comments:

Post a Comment