பிறந்த நாள் மலர் வெளியீட்டு விழாவில் வி.அய்.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 6, 2023

பிறந்த நாள் மலர் வெளியீட்டு விழாவில் வி.அய்.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் உரை

 தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குக் காரணம் கல்வியே!

'' சூத்திரர்கள் '' என்று அழைக்கப்பட்ட நமக்கு 

திராவிடர் அடையாளத்தைச் சொன்னவர் தந்தை பெரியாரே!

'தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' ஆண்டு மலர் - தமிழர் தலைவரின் 90 ஆம் ஆண்டு 

சென்னை, ஜன.6  தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குக் காரணம் கல்வியே!  சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்ட நமக்கு திராவிடர் அடையாளத்தைச் சொன்னவர் தந்தை பெரியாரே! என்றார் வி.அய்.டி. வேந்தர் முனைவர் ஜி.விசுவநாதன் அவர்கள்.

‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ ஆண்டு மலர்- தமிழர் தலைவர் ஆசிரியரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் வெளியீட்டு விழா

கடந்த 30.12.2022 அன்று  மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ ஆண்டு மலர் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் வெளியீட்டு விழாவில், வி.அய்.டி. வேந்தர் முனைவர் ஜி.விசுவநாதன் அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

அவரது  வாழ்த்துரை வருமாறு:

89 ஆண்டுகள் முடித்து 90 ஆவது ஆண்டிலே அடியெடுத்து வைத்திருக்கின்ற ஆசிரியர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்னும் ஒரு வேண்டுகோள் -

ஒரு 10 ஆண்டுகள் கழித்து அவருடைய நூறாவது பிறந்த நாள் விழாவையும் இதேபோன்று நடத்தி, நாமெல்லாம் அந்த விழாவில் கலந்துகொள்ளவேண்டும்.

இந்த அருமையான விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய திரு.குமரேசன் அவர்களே, தொடக்கவுரை யாற்றிய கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

எனக்கு முன்பு இங்கே உரையாற்றிய சென்னை ரஷ்யத் தூதரகத்தின் துணைத் தூதுவர் அவர்களே, பேராசிரியர் சண்முகம் சுந்தரம் அவர்களே, பேராசிரியர் டாக்டர் ஜானகி அவர்களே, 'ப்ரண்ட் லைன்' இதழின் மேனாள் ஆசிரியர் விஜயசங்கர் அவர்களே,

எனக்குப் பின் உரையாற்றவிருக்கின்ற ஆசிரியர் அவர்களே, இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்ற பெரியோர்களே, தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின் றேன்.

நூறு ஆண்டுகளைக் கடந்த 

திராவிட இயக்கம்!

இந்தத் திராவிட இயக்கம் நூறு ஆண்டுகளைக் கடந்து வளர்ந்த வருகின்றது. பல கட்சிகள் இருந்தாலும் அதில் ஆணிவேராக இருப்பது தாய்க்கழகமான திராவி டர் கழகம்தான்.  அதற்குத் தலைமையேற்று, 60 ஆண்டுகளாக ‘விடுதலை’ பத்திரிகைக்கு ஆசிரியராக இருக்கக் கூடியவர் - விஜயசங்கர் அவர்களும் சொன் னார்கள், உலகத்திலேயே இவர் ஒருவர்தான் நீண்ட காலமாக ஆசிரியராக இருப்பவர் என்று - அப்படிப்பட்ட அருமையான பணியாற்றிக் கொண்டிருக்கின்ற, ஓய் வின்றி பணியாற்றிக் கொண்டிருக்கின்ற ஆசிரியர் அவர் களுக்கு நாம் அனைவரும் கடமைப்பட்டு இருக்கின் றோம்.

தந்தை பெரியார் அவர்கள், எந்த அளவிற்கு இந்த நாட்டிற்குப் பயன்பட்டார்கள் என்பதற்கு ஓர் உதாரணம் - ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற ஓர் அய்.ஏ.எஸ். அதிகாரி - அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரோடு நான் பேசிக்கொண்டிருந்தபொழுது கேட்டேன், ‘‘ஏன் உங்களால் தென்னாடு போன்று, தமிழ்நாடு போன்று வர முடியவில்லை?’’ என்று.

அவர் சொன்னார், ‘‘உங்கள் ஊரிலே பெரியார் இருந்தார்; எங்கள் ஊரில் இல்லை; அதுதான் காரணம்‘‘ என்று சொன்னார்.

அதுபோன்று, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்கி, பகுத்தறிவைக் கொடுத்து, படிக்கச் சொல்லி, தமிழனுக்கு, திராவிடனுக்கு ஒரு தனித்தன்மையைக் கொடுத்தவர் தந்தை பெரியார்.

சில பேர் திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே, பயப்படுகிறார்கள். அப்படி சொல்பவர்கள் பெரியார் ஆளாக இருக்கும் என்று ஒரு பயம்.

ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்தேன்!

இங்கே விஜயசங்கர் அவர்களை அறிமுகப்படுத்தும் பொழுது சொன்னார்கள், அவர் கம்யூனிஸ்ட் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்று.

நானும், ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தேன். எங்கள் ஊர் குடியாத்தம். கம்யூனிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த ஊர். நான் அங்கேதான் படிக்கப் போனேன். நான் முதலில் வாங்கிய படமே - ஜோசப் ஸ்டாலின். அந்தப் படத்தை வீட்டில் மாட்டி வைத்திருந்தேன். கம்யூனிஸ்டுகளோடு ஒரு நெருக்கம்.

7 ஆம் வகுப்பு முடித்து, 8 ஆம் வகுப்பு வரும்பொழுது, தந்தை பெரியார் அவர்கள் எங்கள் ஊருக்கு வந்தார்; முதன்முதலாக அவருடைய பொதுக்கூட்டத்தில் அவருடைய உரையை நான் கேட்டு, அன்றையிலிருந்து நான் பொதுவுடைமை பக்கத்திலிருந்து, திராவிடத்தின் பக்கம் வந்துவிட்டேன்.

அதை என்னால் மறக்க முடியவில்லை. என்னுடைய வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதிய ஓர் அம்மையார் கொடுத்த தலைப்பே ‘‘Grand Son of Periyar’’  என்பதுதான். அதுகுறித்து உங்களுக்குச் சொல்லவேண்டும்.

லயோலா கல்லூரியில் நான் எம்.ஏ., படித்துக் கொண்டிருந்தபொழுது, அங்கே சாமியார்கள், எந்த அரசியல் கட்சித் தலைவர்களையும் உள்ளே விடமாட்டார்கள். யாராவது அதற்கு முயற்சி எடுத்தாலும், அதற்குத் தடை போட்டு விடுவார்கள்.

லயோலா கல்லூரியில் நடந்த 

ஒரு சுவையான நிகழ்ச்சி!

அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், அன்றைய லயோலா கல்லூரியில், தரை தளத்தில், முதல் தளம் மட்டும்தான் கட்டடங்கள் இருக்கும். ஒரே ஒரு கட்டடம் மட்டும் கேத்லிக் பிளாக்  என்று பெயர் கொண்ட கட்ட டம் - நான்கு மாடி கட்டடமாகும். எனக்கு அந்த கட்ட டத்தில் இடம் வேண்டும் என்று கேட்டேன்; மூன்றாவது மாடியில் அறை கொடுத்தார்கள். என்னு டைய அறை யில் அமர்ந்து படித்துக்கொண்டிருக்கிறேன்; எங்களு டைய வார்டன், இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரு பாதிரி யார்; பாதர் ரெப்யூனா என்பது அவருடைய பெயர்.

அவர் மூன்றாவது மாடிக்கு வந்து, என்னுடைய அறையின் கதவைத் திறந்தார். உள்ளே வந்தவர், என் அறையில் பெரியார் படத்தைப் பார்த்துவிட்டார். எனக்கு ஒரு பயம் ஏற்பட்டது; என்ன சொல்லப் போகிறாரோ? என்று.

Who is this? என்றார்.

Thats my Grand Father என்று சொன்னேன்.

அதைக் கேட்டதும் அவருக்கு ரொம்ப மகிழ்ச்சி. இந்தப் பையன், தாத்தாவின் படத்தை மாட்டி வைத் திருக்கிறானே என்று.

அதனால்தான் என் வாழ்க்கை வரலாறை ஆங்கிலத்தில் எழுதிய அம்மையார் ‘‘Grand Son of Periyar’’   என்று தலைப்புக் கொடுத்திருக்கிறார்.

நான் பகுத்தறிவுக் கொள்கைக்கு வந்ததற்கு என் ஆசிரியரே காரணம்!

நான் பகுத்தறிவுப் பாதைக்கு வருவதற்கு என்னுடைய ஆசிரியர் காரணம். நான் 3 ஆம் வகுப்பு, 4 ஆம் வகுப்புப் படிக்கும்பொழுது ஓர் ஆசிரியர் வந்தார்;  எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு, அன்ட் டிரெயின்ட் டீச்சர் என்று போடுவார்கள்.

என்னுடைய அம்மா, என் நெற்றியில் பட்டை, பட்டையாக விபூதி போட்டு அனுப்புவார்கள். கேட்டால், ''முதலியார் பையன்லாம் விபூதி போடாமல் போகக் கூடாது; நீரில்லா நெற்றி இருக்கக்கூடாது'' என்று சொல்வார்கள்.

நான் அப்படி நெற்றியில் விபூதி போட்டுக்கொண்டு வகுப்பறையில் அமர்ந்திருந்தேன். என்னுடைய ஆசிரி யர் என்னைப் பார்த்து, ‘‘எழுந்திருடா'' என்று சொன்னார்.

நான் எழுந்தேன்.

‘‘என்னடா, நெற்றியில்?'' என்றார். ஆசிரியர் அரங்க நாதன் என்பவர், இப்பொழுதும் உயிரோடு இருக்கிறார்.

நான் சொன்னேன், ‘‘விபூதி'' சார் என்றேன்.

‘‘அது விபூதி இல்லையடா, சாணம்'' என்றார்.

‘‘இல்லை, சார், இது விபூதிதான்'' என்றேன்.

‘‘உனக்கு சந்தேகம் இருந்தால், உன் அம்மாவைப் போய் கேட்டுப்பார்'' என்றார்.

அதை நான் மறக்காமல், மாலையில் வீட்டிற்குப் போனதும், என் அம்மாவிடம், ‘‘என்னுடைய வாத்தியார், விபூதியை சாணம் என்று சொல்கிறாரே?'' என்றேன்.

அவங்க பேசாமல் இருந்தாங்க.

‘‘எனக்கு உண்மை தெரியவேண்டும்; சொல்'' என்றேன்.

‘‘அவர் சொன்னது உண்மைதான்; அதிலிருந்துதான் வருகிறது'' என்றார் என் அம்மா.

அன்றையிலிருந்து விபூதி போட்டுக் கொள்வதையே விட்டுவிட்டேன். இது நடந்தது 70 ஆண்டுகளுக்கு முன்பு.

ஆகவே, ஆசிரியர்கள் நினைத்தால், நாட்டில் நிறைய பேரை பகுத்தறிவாளர்களாக மாற்றிவிட முடியும்.

நான், நம்முடைய ஆசிரியரை கேட்டுக்கொள்வது என்னவென்றால், ஆசிரியர்களையெல்லாம் மாற்றுவ தற்கு ஏதாவது வழி செய்யுங்கள். ஒன்று, அப்பா, அம்மா பிள்ளைகளை மாற்றவேண்டும். அல்லது ஆசிரியர்கள் தான் இளைஞர்களை மாற்ற முடியும்.

நம்முடைய நாட்டிற்கு நிறைய பகுத்தறிவாளர்கள் வேண்டும். அதனுடைய விளைவுதான், நாம் முன்னேறியிருக்கின்றோம்.

ஒரு காலத்தில் அண்ணா சொன்னார், ‘‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது''  என்று.

அரசியல் ரீதியாக அது உண்மை.

ஆனால், பொருளாதார ரீதியாக வடநாட்டைச் சேர்ந்தவர்களைவிட, தென்னாட்டைச் சேர்ந்தவர்கள் பல மடங்கு நாம் மேலே வந்துவிட்டோம்.

தமிழ்நாட்டு வளர்ச்சிக்குக் காரணம் 

கல்வி வளர்ச்சியே!

அதற்குக் காரணம், இங்கே கல்விக்கு முன்னுரிமை கொடுத்ததுதான். கல்விக்கு முன்னுரிமை மட்டுமல்ல, தம்முடைய தாய்மொழியோடு ஆங்கிலத்திற்கும் முன் னுரிமை கொடுத்திருப்பது, நம்முடைய தென்மாநிலங்கள் தான். அதனுடைய விளைவாகத்தான், நாம் கல்வியிலும், பொருளாதாரத்திலும் முன்னேறியிருக்கின்றோம்.

ஆனால், இது ஒரு கூட்டாட்சி நாடு. இதில் எல்லோரும் முன்னேறாமல், நாடு முன்னேற முடியாது. இதையும் ஒன்றிய அரசினர் உணரவேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.

இந்தத் திராவிட இயக்கத்தைப்பற்றி சொல்லும் பொழுது, பல பேர் இவர்கள் கடவுளுக்கு விரோதிகள், ஆண்டவனுக்கு விரோதிகள், கோவிலுக்கு விரோதிகள் இப்படி எதையாவது சொல்லி, அதை வைத்து, மூடநம் பிக்கையைப் பரப்பி, தாங்கள் வளர முடியுமா? என்றெல்லாம் பார்க்கிறர்கள்.

இந்தத் திராவிடம் என்பது தந்தை பெரியார் கண்டுபிடித்தது அல்ல. அதைப் பயன்படுத்துவதுபற்றி அவர் எடுத்துச் சொன்னார்.

இங்கே எனக்கு முன் உரையாற்றியவர்கள் சொன்ன தைப்போல, சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள், தங்களை பார்ப்பனரல்லாதார் என்று எழுத ஆரம்பித்தார்கள். 

அதற்குத் தந்தை பெரியார் அவர்கள், எதற்கு எதிர்மறையாகச் சென்று பார்ப்பனரல்லாதார் என்று எழுதுகிறீர்கள்; திராவிடர் என்று எழுதினால், சரியாக இருக்குமே என்றார். அதுதான் திராவிடர்கள்.

(தொடரும்)


No comments:

Post a Comment