இலவசம் பற்றி பிஜேபி பேசலாமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 27, 2023

இலவசம் பற்றி பிஜேபி பேசலாமா?

பெண்கள், மாணவர்கள், விவசாயிகளை கவரும் விதமாக நிதி நிலை அறிக்கையில் இலவச அறிவிப்புகளை வெளியிட பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாகவும், காங்கிரசுக்கு பதிலடி கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

கருநாடகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கும் நிலையில்,   இப்பொழுதே பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. வாக்காளர்களை கவரும் விதமாக இலவச அறிவிப்புகளை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றன. 

அதன்படி, காங்கிரஸ் கட்சி சார்பில் இலவச மின்சாரம், ரூ.2 ஆயிரம் உதவித் தொகை, 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனதாதளம் (எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்தால், எல்.கே.ஜி.யில் இருந்து 12-ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும், ஏழை மக்கள் இலவச சிகிச்சை பெறுவதற்காக புதிய மருத்துவ திட்டம் கொண்டு வரப்படும் என்று மேனாள் முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார்.  

சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று கருநாடகத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள ஆளும் பா.ஜனதா கட்சியும் தயாராகி வருகிறது. சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றிக்காகவும், பிரச்சாரத்திற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கருநாடகத்திற்கு அடிக்கடி  செல்கிறார்கள்.  அடுத்த மாதம் (பிப்ரவரி) தாக்கல் செய்யப்பட உள்ள நிதி நிலை அறிக்கையில்  பெண்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகளைக் கவரும் விதமாக பல்வேறு இலவச அறிவிப்புகளை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலவச அறிவிப்புகளுக்கு எதிராக பிரதமர் மோடி சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தாலும், மாநிலத்தில் பா.ஜனதா வெற்றி பெறுவதற்காகவும், காங்கிரசுக்கு எதிராக நிதி நிலை அறிக்கையிலேயே இலவசங்கள் சம்பந்தப்பட்ட அறிவிப்புகளை வெளியிடவும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக வீட்டுக்கு ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை நிதி நிலை அறிக்கையில்  அறிவித்து, அதனை தேர்தலுக்கு முன்பாகவே செயல்படுத்தி, மக்கள் கையில் அத்தொகை கிடைக்கச் செய்ய முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. 

இதன்மூலம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தான் ரூ.2 ஆயிரம் கிடைக்கும் என்ற நிலை மாறி, பா.ஜனதா ஆட்சியிலேயே ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்பதை மக்களிடம் கொண்டு செல்ல தீர்மானித்துள்ளனர். இதுபோல், விவசாயிகள், மாணவ, மாணவிகளுக்கு பயன் அளிக்கும் விதமாக புதிய அறிவிப்புகளை நிதி நிலை அறிக்கையில் அறிவித்து காங்கிரசுக்கு  எதிராக பா.ஜனதாவும் தயாராகி வருவதாகவும், ரூ.3 லட்சம் கோடியில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.  கடந்த ஆண்டு தொழில்வளர்ச்சிக்கூட்டமைப்பின் சார்பில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய  பிரதமர் மோடி - "கட்சிகள் வாக்குகளுக்காக இலவசங்களை தருவதாக வாக்குறுதி தருகின்றனர். இது மிகவும் மோசமான நடைமுறையாகும் இதனால் நாடு முன்னேறாமல் உள்ளது" என்றார்.  அதே போல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் "இலவசங்களால் மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கும் - மக்களும் சோம்பேறிகளாக  மாறிவிடுவார்கள். இதனால் ஒட்டு மொத்த நாடுமே பின்னடைவைச் சந்திக்கும்" என்றார். இந்த நிலையில்  பாஜக ஆட்சியில் இருக்கும் மத்தியப்பிரதேசம், அரியானா வரிசையில் தற்போது கருநாடகா அரசும் இலவசங்களை அறிவித்து வருகிறது.   இதற்கு மோடி என்ன பதில் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.

அரசியலுக்காக முன்பின் யோசனையின்றிக் கொட்டி அளப்பது  சிறுபிள்ளைத்தனமும், கோமாளித்தனமும் கலந்த ஒரு கலவையாகும்.

வறுமைக்கோட்டுக்கும் கீழே கிடந்துழலும் மக்களைப் பற்றி (27.5%) இன்னும் பேசப்படும் நாடு தான் இது. இரவு உணவின்றி தூங்கச் செல்லும் மக்கள் இந்தியாவில் 20 கோடி என்று சொல்லப்படும் ஒரு நாட்டில் இலவசங்களைப் பற்றிக் கேலிப் பேசுவது வெட்கக் கேடு அல்லவா!

அதுவும் அரசியலுக்காக முன்னுக்குப் பின் முரணாக உளறிக் கொட்டுவது கடைந்தெடுத்த அறிவு நாணயமற்றத் தன்மை!

பிஜேபிக்கு இது நூற்றுக்கு நூறு பொருந்தும்!

No comments:

Post a Comment