வடமதுரை காவல்துறையினரின் அரசமைப்புச் சட்ட விரோதப் போக்கு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 3, 2023

வடமதுரை காவல்துறையினரின் அரசமைப்புச் சட்ட விரோதப் போக்கு!

கோவிலில் கிடா வெட்டி வழிபாடு நடத்திய காவல்துறையினர்

இனிமேல் காவல் நிலையங்களுக்குப் பதிலாக கருப்பண்ண சாமியிடம் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பை விடலாமா?

இன்று (31.2023) 'தினத்தந்தி' நாளேட்டில் வந்துள்ள ஒரு செய்தி:

குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக கோவிலில் கிடாவெட்டி போலீசார் வழிபாடு

திண்டுக்கல், ஜன 3. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே அய்யலூரில் பிரசித்தி பெற்ற வண்டி கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் புதிதாக வாகனம் வாங்குவோர் தங்களது வாகனங்களை இந்த கோவிலுக்கு கொண்டுவந்து வழிபாடு செய்துவிட்டு பயன்படுத்த தொடங்குவார்கள்.  இதேபோல் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், இந்த கோவிலில் வழிபாடு செய்துவிட்டு தங்களது பயணத்தை தொடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தநிலையில் வடமதுரை போலீசார் நேற்று முன்தினம் அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோவிலில் பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும் வழிபாடு நடத்தினர். இதில், வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி, வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் மற்றும் போலீசார், குற்றப்பிரிவு, தனிப்படை போலீசார், அவர்களின் குடும்பத்தினர் என ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர். 

2023-ம் ஆண்டில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்கவும், கொலை, கொள்ளை, விபத்து மற்றும் குற்றச்சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டியும் போலீசார் இந்த வழிபாட்டில் ஈடுபட்டனர். முடிவில் அனைவருக்கும் கறி விருந்து வழங்கப்பட்டது.

இதுதான் அந்தச் செய்தி!

முன்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்படி நடந்தமை குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, பிறகு காவல்துறை அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து, இனி இப்படி நடக்காது என்று உறுதியளித்தனர்.

இப்போது இப்படி அதுவும் 'திராவிட மாடல்' ஆட்சியில் என்றால், வேதனையாக உள்ளது.

துறை ரீதியான நடவடிக்கைத் தேவை என்பதை உள்துறை செயலாளருக்கு நாம் கோரிக்கையாக வைக்கிறோம்.

மதச்சார்பின்மை இப்படி காற்றில் பறக்காமல் இருக்க, திராவிடர் கழகம் விரைவில் நீதித்துறையை நாடவிருக்கிறது.

பல காவல்துறை அதிகாரிகள் காவி மனப்பான்மையால், அறிவியல் மனப்பான்மைக்கு விடை கொடுத்து விடுகின்றனர். இப்படிப்பட்ட அவலங்களில் ஈடுபடுவது முறையா?

No comments:

Post a Comment