கம்பம் முப்பெரும் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 3, 2023

கம்பம் முப்பெரும் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன்

 திராவிடக் கட்சி என்று சொல்லிக்கொண்டு மண் சோறு தின்னலாமா?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காங்கிரசுக்கும் தாய், தந்தை பெரியாரே!

சென்னை, ஜன.3  திராவிடக் கட்சி என்று சொல்லிக் கொண்டு மண் சோறு தின்னலாமா? தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காங்கிரசுக்கும் தாய் தந்தை பெரியாரே! என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்.

கம்பம் முப்பெரும் விழா

கடந்த 24.12.2022  மாலை கம்பம் நகரில்  நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன்  சிறப்புரை யாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

பொதுக்கூட்டம் என்றால்...

இந்தப் பொதுக்கூட்டத்திற்கு, பொதுக்கூட்டம் என்று சொன்னால், அது அந்தக் காலத்தில் எப்படி இருந்ததோ பல ஆண்டுகளுக்கு முன்பு, பெரியார் காலத்தில், காமராஜர் காலத்தில், அண்ணா காலத்தில் எப்படி இருந் ததோ, அதேபோல, கலைஞர் காலத்திலும் இருந்தது, இப்பொழுது மு.க.ஸ்டாலின் காலத்திலும் இருக்கின்றது.

ஸ்டாலின் அவர்களுக்குக் கூட்டம் கூடுவது இயற்கை; காரணம், ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளிலேயே பல்வேறு சாதனைகளை செய்து முடித்து, மக்களுக்கு நன்மை செய்த காரணத்தினால், ஒரு ஈர்ப்பு உண்டு; அதனால் ஒரு கூட்டம் உண்டு.

ஆனால், தமிழர் தலைவர் வீரமணி அவர்களின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது என்று சொல்லும்பொழுது, இவ்வளவு பேர் இங்கே வந்திருக் கின்றீர்கள். 5 மணிக்கு வந்த கூட்டம், இன்னும் ஆடாமல், அசையாமல் இருக்கின்றது. ஒரே ஒரு பெரியவர் உணர்ச்சிவசப்படுகின்ற காரணத்தால், அவ்வப்பொழுது கையை ஆட்டுகின்றார், தலையை ஆட்டுகின்றார்; அதை நான் வரவேற்கின்றேன்.

திராவிடத்துச் செல்வங்கள்...

ஆக, இவ்வளவு பெரிய இந்தக் கூட்டம் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மேடையில் இருக் கின்ற தலைவர்கள், உரையாற்றிய தலைவர்கள் அத் துணை பேரையும் பார்த்தீர்கள் என்றால், ஜாம்பவான்கள் மட்டுமல்ல, பேச்சாற்றல் மட்டுமல்ல, சிந்தனையும் உள்ள திராவிடத்துச் செல்வங்கள்!

ஒரு தேசியவாதி, திராவிடத்தைப் பேசக்கூடாதா? தேசியம் என்று சொல்வதும், திராவிடம் என்று சொல் வதும் ஒன்றுதான் என்னைப் பொறுத்தவரையில்.

மனிதன் எப்படி சமமோ, ஏற்றத் தாழ்வுகள் இல் லையோ, ஜாதியின் பெயரால் எப்படி பிரிக்கப்படக் கூடாது என்று சொல்கின்றோமோ, அதேபோல, தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில், இன்றைக்கு இருக்கின்ற வகையில், ஸ்டாலின் அவர்கள் சொன்னார்களே, அதுபோல், இன்றைக்குத் தமிழ்நாட்டில் நடப்பது ஒரு கட்சியின் ஆட்சியல்ல - ஒரு இனத்தின் ஆட்சி என்று சொன்னால், அது மிகையாகாது.

என்னுடைய அருமை நண்பர் பொன்.முத்துராம லிங்கம் அவர்கள் இங்கே பேசினார்.  நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபொழுது, அவரும் சட்டமன்ற உறுப்பினர்.

மிகத் திறமையாக அதே சமயத்தில் கொஞ்சம் குறும்புத்தனத்தையும் சேர்த்து பேசுகின்ற பழக்கத்தை உடைய முத்தரசன் அவர்களுடைய கட்சியைச் சார்ந்த சுப்பராயன் அவர்களும் சட்டமன்ற உறுப்பினர்.

சுப்பராயனும், பொன்.முத்துராமலிங்கம் அவர்களும் சட்டமன்றத்தில் பேசுகின்றார்கள் என்று சொன்னால், நான் உடனடியாக சட்டமன்றத்திற்குள்ளே சென்று, அமர்ந்து அவர்களுடைய பேச்சை ரசிப்பேன். அவ் வளவு திறமையாகப் பேசக்கூடியவர்கள். எதற்காக இந்தப் பீடிகை என்று நீங்கள் எல்லாம் கேட்கலாம்;  பொன்.முத்துராமலிங்கம் அவர்களும் கொஞ்சம் யோசிக்கலாம்.

அதேபோன்று, கம்பம் செல்வேந்திரன் அவர்கள் என்னுடைய அருமை நண்பர். ஆனால், அவருடைய உரையை கேட்கின்ற வாய்ப்பு எனக்கு இல்லாமல் இருந்தது; ஆனால், அண்மையில் தொலைக்காட்சிகளில் நடைபெறுகின்ற விவாத மேடைகளில் மிகச் சிறப்பாகப் பேசிக் கொண்டிருக்கின்றார்.

‘செக்‘காக  இருந்தால், அவர் கொஞ்சம் சந்தோசப்பட்டு இருப்பார்

அடுத்தது, நம்முடைய தங்க.தமிழ்ச்செல்வன், வந்த வுடனேயே நம்முடைய தமிழர் தலைவருக்கு ஓர் அட்டைப் பெட்டியைக் கொடுத்தார்; நான்கூட சொன்னேன், ‘செக்'காக  இருந்தால், அவர் கொஞ்சம் சந்தோசப்பட்டு இருப்பார் என்று. பிறகுதான் தெரிந்தது, அது வேட்டி என்று.

நான் அவரை வேட்டியில் இப்பொழுதுதான் பார்க் கின்றேன். சட்டமன்ற உறுப்பினராக இருந்தபொழுது, தமிழ்நாட்டையே ஒரு கலக்குக் கலக்கியவர். அவர் செல்கின்ற இடமெல்லாம், செய்தியாளர்கள் அவரைத் துரத்திக் கொண்டே போவார்கள்; பெண் செய்தியாளர்கள் உள்பட. அப்படி அவருடைய சொல்லுக்கு ஒரு மரி யாதை இருந்தது.

இங்கே பேசிய நம்முடைய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர் கனியமுதன் அவர்கள் மிக அருமை யாகப் பேசினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தோழர்கள் சட்ட மன்ற உறுப்பினர்களாகட்டும் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களாகட்டும் - விரல் விட்டு எண்ணிடக் கூடியவர்களாக இருந்தாலும், அவர்களுடைய மாவட்ட அமைப்புகளைச் சார்ந்தவர்களாக இருக்கட்டும்; மிக அமைதியாக, தெளிவாக உரையாற்றக்கூடிய அருமை நண்பர்கள்.

அதேபோல், ம.தி.மு.க.வைச் சேர்ந்த வந்தியத்தேவன் அவர்கள். அவருடைய உரையை இன்றைக்குத்தான் கேட்டேன், அற்புதமான உரை.

சிந்தனையிலிருந்து வெளிப்படுகின்ற உயிரோட்டமுள்ள சொற்றொடராக வெளிவருகின்றது

பேச்சு என்பது வெறும் பேச்சு ஜாலங்களாக இல் லாமல், சிந்தனையிலிருந்து வெளிப்படுகின்ற உயி ரோட்டமுள்ள சொற்றொடராக வெளிவருகின்றது; அதைப் பார்த்து நான் வியந்து போனேன்.

அதேபோல, நம்முடைய கம்பம் ராமகிருஷ்ணன் அவர்கள். உண்மையாக இருப்பார்; பேச்சாற்றல் பெற்ற வர் மட்டுமல்ல, மிகச் சிறப்பாக மக்களை ஈர்க்கக் கூடி யவர் என்பது எனக்குத் தெரியும்; காரணம், என்னோடு தேர்தலில், முழுமையாக அவர் பணியாற்றினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய 

முதல் நாடாளுமன்ற உறுப்பினர்

நம்முடைய அருமை நண்பர் அப்துல் சமது உரை யாற்றும்பொழுது சொன்னார், தேனியில், நாடாளுமன்றத் தேர்தலில் மயிரிழையில் தோற்றுவிட்டோம் என்று சொன்னார்; அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால், நாடாளுமன்ற உறுப்பினர் என்பது பல பேருக்குப் புதிதாக இருக்கலாம்; ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய முதல் நாடாளுமன்ற உறுப்பினர் என்னுடைய தந்தையும், திருவண்ணா மலையைச் சார்ந்த தருமலிங்கமும்.

நானும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கின் றேன். முதல் முறை நாடாளுமன்ற உறுப்பினராக வந்தவுடன், சோனியா காந்தி அவர்கள் வழக்கமான நடைமுறையை மாற்றி அதாவது முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக வருகிறவர்கள் அமைச் சராக முடியாது என்பதுதான். என்னை அவர் அமைச்சராக்கினார்.

பணமும் தேனி மண்ணிலே விளைகின்றது

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கரும்புள்ளி ஏற்பட்டது என்பதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. அழகான ஒரு பெண் முகம் நன்றாக இருக்கவேண்டும் என்று சொன்னால், எப்படி ஒரு கரும்புள்ளியை குத்திக் கொள்கின்றார்களோ, அல்லது கைக்குழந்தைக்குத் தாய், ஒரு கரும்புள்ளியை வைக்கின்றார்களோ, அதுபோலத் தான், 40 இடங்களையும் மொத்தமாக வென்றால், ஒரு மாதிரியாக இருக்கும் என்கின்ற காரணத்திற்காக, அது மட்டுமல்ல, தேனியில், அது விளைந்தது, இது விளைந்தது; நெல் விளைகின்றது, சில இடங்களில் கஞ்சாவும் விளைகின்றது என்று தெரியும். ஆனால், அந்த தேர்தலில்தான் நான் பார்த்தேன், பணமும் தேனி மண்ணிலே விளைகின்றது.

திராவிடக் கட்சி என்று சொல்வார்கள் - 

ஆனால், மண் சோற்றைத் தின்பார்கள்

ஆனால், அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. என்னைப் பொறுத்தவரையில், இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலையில், தமிழ்நாட்டைச் சார்ந்த எல்லாக் கட்சிக் காரர்களும், ஆர்.எஸ்.எசைத் தவிர, பா.ஜ.க.வைத் தவிர, இன்னொரு கட்சி இருக்கின்றது - திராவிடக் கட்சி என்று சொல்வார்கள் (அ.இ.அ.தி.மு.க.) - ஆனால், மண் சோற்றைத் தின்பார்கள். அவர்களை திராவிடக் கட்சி என்று ஏற்றுக்கொள்ள முடியாது.

அவர்களைத் தவிர இன்றைக்கு அத்தனை பேரும் ஓரணியில் இருக்கின்றோம் என்று சொன்னால், அதற்குக் காரணம், இந்த பாசிச சக்திகளை, மதச்சார்புள்ள வெறி யர்களை  வீழ்த்தியாக வேண்டும் என்ற எண்ணத்தால், அதற்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்தான் எங்களுடைய தமிழர் தலைவர் மரியாதைக்குரிய வீரமணி அவர்கள்.

80 ஆண்டு கால பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்

அவர்களைப் பொறுத்தவரையில், அவர்களுக்குப் பட்டம், பதவி பெரிதல்ல. 90 ஆண்டு காலம் ஆகின்றது - கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் கால அரசியலுக்குச் சொந்தக்காரர்; அரசியல் என்று சொல்வதைவிட, பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்.

அவர் நினைத்திருந்தால்,  கவுன்சிலர் பதவியென்ன? எம்.எல்.ஏ., பதவியென்ன? அமைச்சர் பதவியென்ன? நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என்ன? டில்லியில், வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த காலகட்டத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சராக வேண்டும் என்று நினைத்திருந்தாலும், அது நடந்திருக்கும்.

எதற்காக இதைச் சொல்கின்றேன் என்றால், ஒடுக் கப்பட்ட மக்கள் நலனுக்காக பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கின்றார். இங்கே உரையாற்றியவர்கள் சொன்னார்கள்; இங்கே உரையாற்றிய முத்தரசன் அவர்கள் சொல்லும்பொழுது, தமிழர் தலைவருக்கு 90 வயதல்ல; 9 வயது என்றார்.

கம்யூனிஸ்டு தலைவர்களோடு 

பழகியவன் நான்!

எதற்காக இதைச் சொல்கின்றேன் என்றால், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் நாள்தோறும் அண்ணாமலைபற்றிய செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால், உண்மையான, மக்களுக்குத் தேவையான கருத்துகளை சிந்தனைத் திறனோடு, ஆழ்ந்த நினைவு களோடு கொஞ்சம் மக்களும் விரும்புகின்ற வகையில், குறும்புத்தனமாக சொல்லக்கூடிய ஒரு தலைவனை நான் இன்று பார்க்கின்றேன் என்றால், அது முத்தரசன் அவர்கள்தான்.

கே.டி.கே.தங்கமணியைப் பார்த்திருக்கின்றேன்; அவருடைய உரையைக் கேட்டு இருக்கின்றேன். நாடாளுமன்ற உறுப்பினராக என் தந்தையார் இருந்த பொழுது, என்னுடைய சிறுவயதில் அவர்தான் என்னை ஆந்திராவிற்கு அழைத்துச் சென்றார்.

பாண்டியன் அவர்களோடு பழகியிருக்கின்றேன்; அவரை வைத்துக் கூட்டமும் நடத்தியிருக்கின்றேன்.

சுப்பராயனோடும், நல்லகண்ணு அவர்களோடும் நான் பழகியிருக்கின்றேன். ஆனால், இன்றைக்கு மக்களை சென்றடையக் கூடிய வல்லமை அத்தனைத் தலைவர்களுக்கும் இருக்கின்றது; இவருக்குக் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றது. ஆனால், இவரை எந்தத் தொலைக்காட்சியும், பத்திரிகைகளும் பெரிதுபடுத்து வதில்லை.

அன்றைக்கு உயர்ஜாதி வெறியர்களுடைய கைகளில் இருந்தன!

அந்தக் காலத்தில், திராவிடர் கழகத்தைச் சார்ந்த வர்களும், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த வர்களும் -அந்தக் கட்சியில் முக்கியமான பொறுப்பில் இருக்கின்றோம் என்பதற்கு அடையாளமாக ஒவ்வொரு தலைவர்களும் பத்திரிகையை நடத்திக் கொண்டி ருந்தார்கள். காரணம், அப்பொழுது தமிழ்நாட்டில் இருந்த பத்திரிகைகள், ஆதிக்க உயர்ஜாதி வெறியர்களுடைய கைகளில் இருந்த காரணத் தினால்தான்.

நான் அண்ணா சாலையில் உள்ள சர்ச் பார்க்  கான்வென்ட் பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில், பள்ளியைவிட்டு வெளியே வரும்பொழுது பார்த்தீர்கள் என்றால், திராவிட முன்னேற்றக் கழகக் கொடிகள் அங்கே கம்பீரமாக பறக்கும். ஒன்று முரசொலி அலு வலகம்; இன்னொன்று தென்னகம்; இன்னொன்று கவிராயருடைய தென்றல் அலுவலகம்.

கவிராயருடைய தென்றல் என்பது, இரண்டு கலராக இருந்தது; மூன்று கலராக மாறிப் போனது.

ஆக, அப்பொழுது தமிழ்ச் சமுதாயம் விழித்துக் கொள்ள வேண்டும் என்றால், தமிழ் மக்களுக்கு சிந்த னைகள் வளரவேண்டும் என்றால், அவர்களுக்குத் தீனி போடவேண்டும்  - அதை நாம் பத்திரிகைகளின் மூல மாக செய்ய முடியும் என்பதை உணர்ந்துதான், அன்றைக்கு அவ்வளவு பத்திரிகைகள் தமிழ்நாட்டில் இருந்தன.

ஆனால், இன்றைக்கு நம்மைச் சார்ந்த பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், தமிழ்நாட்டில் மதச்சார்பின்மை என்று நாம் சொல்கின்றோமே,  அதன்படியான இந்தத் தலைவர்கள் மத்தியில் மதவெறியர்கள் எடுபட முடியுமா?

இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கண்டு பொறுக்க முடியாமல்தான், ஒருவன் வெள்ளைக் காரில் வந்தான், ஹாரனை அடித்தான், ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதால், திரும்பிப் போய்விட்டான். அதை நீங்கள் கவனித்திருக்கமாட்டீர்கள்; இந்தப் பக்கத்தில் உள்ள மக்கள் பார்த்தார்கள்.

எதற்காக இதையெல்லாம் நான் திரும்பத் திரும்பச் சொல்கின்றேன் என்றால், இன்றைக்கு மக்களிடையே செல்ல வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கின்றது; நமக்குச் சொல்லவேண்டிய பல விஷயங்கள் இருக் கின்றன.

இரண்டு நாள்களுக்கு முன்பு, என்னுடைய மனதில் காயம் பட்ட ஒரு விஷயம்.

ஒரு குடும்பத்தைச் சார்ந்த பெண்மணிக்கு 70 வய திற்குமேல் இருக்கும்; படித்தவர், இன்னும் சொல்லப் போனால், பெண் விடுதலையைப்பற்றி பேசக்கூடியவர்; அவரிடம் நான் பேசிக்கொண்டிருந்தபொழுது, மோடிக்கு ஆதரவாகப் அவர் பேசினார்.

என்னங்க, மோடியைப் போய் ஆதரிக்கிறீர்களே, எப்படி? என்று கேட்டேன்.

அவர் சொன்னார், மோடி, லஞ்ச லாவண்யத்திற்கு அப்பாற்பட்டவர் என்றார்.

எனக்கு பகீரென்றது.

ரூ.5 லட்சம் கோடிக்குமேல் கடன்களை தள்ளுபடி செய்தது ஒன்றிய அரசு

4, 5 நாள்களுக்கு முன்புதான் நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசும்பொழுது சொன்னார்கள், 

ரூ.5 லட்சம் கோடிக்குமேல் பெரிய பெரிய வியாபாரி களுக்குக் கொடுத்த கடனை நாங்கள் தள்ளுபடி செய்திருக்கின்றோம் என்று.

அப்படி தள்ளுபடி செய்த பணம் எங்கே போயிற்று என்றால், அது பாரதீய ஜனதா கட்சிக்குத்தான் போனது என்று எல்லோருக்கும் தெரியும்.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத் திலும், 2 கோடி ரூபாய்க்குமேல் செலவு செய்து, பாரதீய ஜனதா கட்சி அலுவலகங்கள் கட்டப்படுகிறதே, அது யாருடைய பணம்? அல்லது இலங்கைக்குப் போன வகையில், ராமன், சீதைக்குக் கொடுத்த பணத்தையா நீங்கள் அள்ளிக் கொடுக்கின்றீர்கள்? மக்களிடம் கொள்ளையடித்த பணம்தானே - இன்னும் மக்களுக்குத் தெரியவில்லை.

சிதம்பரம் அவர்கள் ஒன்றிய நிதியமைச்சராக இருந்தபொழுது, பாகிஸ்தானுக்கு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் இயந்திரத்தை அனுப்பி, அங்கே அச்சடித்த பணத்தை இந்தியாவிற்குக் கொண்டு வந்தார் என்று சொன்னால், அதை ஒரு துளியாவது நம்ப முடியுமா?

நம்ப முடியாத பொய்ச் செய்திகள் பரப்பப்படுகின்றன

இப்படிப்பட்ட பொய்ச் செய்திகள் உயர்மட்டத்தில் பரப்பப்படுகின்றன; அதைப் படித்தவர்களும், விவரம் தெரிந்தவர்களும் நம்புகின்றார்கள் என்று சொன்னால், அதை களையெடுக்கக் கூடிய பொறுப்பு நமக்கு உண்டு என்பதைத்தான் இந்த மேடையில் உள்ள சிந்தனை யாளர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் அந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்துகொண்டிருக்கின்றார்.

என்னைப் பொறுத்தவரையில், பெரியார் அவர்கள் இயற்கை எய்திவிட்டார்; அவருடைய உடல் மறைந்து விட்டது; ஆனால், அவருடைய சிந்தனையும், உழைப் பும் இன்னும் தமிழ்நாட்டில் உயிரோடு இருக்கின்றது; தமிழர் தலைவர் வீரமணி அவர்கள்மூலமாக என்று சொன்னால், அது மிகையாகாது.

தமிழ் இனத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கின்ற தலைவர்கள் இருக்கவேண்டும்

அவரைப் புகழவேண்டும் என்ற ஆசை எனக்குக் கிடையாது. ஆனால், இந்தத் தமிழ்நாடு வாழவேண்டும் என்று சொன்னால், இதுபோன்ற தலைவர்கள் இருந் தாகவேண்டும். அதிலும் தமிழ் இனத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கின்ற ஸ்டாலின் போன்றவர்கள் ஆட்சி செய்கின்றபொழுது, தமிழர் தலைவரைப் போன்ற பெருமக்கள் இருக்கவேண்டும் என்பதைத்தான் உங்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

இன்னும் இவருடைய இளமையைப்பற்றி சொன் னார்கள்; நான் அவரைப் பார்க்கும்பொழுதெல்லாம் பிரியமாகப் பேசுவார்; கையைக் கொடுப்பார்; நானும் கையைக் கொடுப்பேன். இரண்டு, மூன்று முறை கொடுத்தேன், பாசத்தின் உச்சக்கட்டம் அது என்று எனக்குப் புரிந்தது. பிறகு, என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டு, அவர் நடக்க ஆரம்பித்தார்; நான் அவரின் பின்னால் ஓட ஆரம்பித்தேன்.

சிந்தனைகளில் மட்டுமல்ல; செயல்பாடுகளிலும் அந்த வேகம் இருக்கின்றது

எதற்காக இதைச் சொல்கின்றேன் என்றால், அவரு டைய வேகம் அப்படிப்பட்டது. சிந்தனைகளில் மட்டு மல்ல; செயல்பாடுகளிலும் அந்த வேகம் இருக்கின்றது. கண்டிப்பாக தமிழர்களை எவனும் அசைத்துப் பார்க்க முடியாது; காரணம், இதுபோன்ற தலைவர்கள் நம் மிடையே இருக்கின்றார்கள் என்பதை நான் இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

இன்றைக்கு இங்கே இத்தனை பேர் இருக்கின்றோம்; காங்கிரஸ் கட்சி இருக்கின்றது; எங்களுடைய மாவட்டத் தலைவர் முருகேசன் வந்திருக்கின்றார்; போஸ் அவர் கள் இருக்கின்றார்கள். இத்தனை பேரும் ஒரு முனைப்போடு வந்திருக்கின்றோம் என்று சொன்னால், நாட்டிலே நாசகார சக்திகள் வேகமாக ஊடுருவிக் கொண்டிருக்கின்றன; அவற்றை நாம் தூக்கியெறிய வேண்டும்; கூண்டோடு அழிக்கவேண்டும். அதைச் செய்யவேண்டிய உணர்வு இந்தக் காலத்தில் நடை பெற்றே ஆகவேண்டும்.

மேடையில் உள்ள தலைவர்களுக்கு 

என்னுடைய வேண்டுகோள்

2024 ஆம் ஆண்டுதானே, பொறுத்துப் பார்க்கலாம் என்று நினைக்கக் கூடாது. அதனால்தான், மேடையில் உள்ள தலைவர்களுக்கு நான் வேண்டுகோளாக சொல்வது, இன்னும் வேகமாக செயல்படுங்கள். எப்படி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்று ஒரு காலத்தில் வேகமாக செயல்பட்டீர்களோ, எப்படி இந்தியாவில், தமிழ்நாட்டில் சமதர்மக் கொள்கைகள் நிலைநிறுத்தப்படவேண்டும் என்பதற்காக, அந்தக் காலத்திலேயே நீங்கள் கடுமையாக உழைத்தீர்களோ, சேலம் சிறைச்சாலையில் நம்முடைய தோழர்கள் எப்படி கொல்லப்பட்டார்களோ, அந்தக் காலத்திலிருந்து, இன்றைக்கு நீங்கள் இருக்கின்றீர்கள் என்று சொன்னால், இன்றைக்குத் தமிழனுடைய மானம் மட்டுமல்ல; சுய மரியாதை மட்டுமல்ல, தமிழனே இல்லாமல் போகக் கூடிய சூழ்நிலையை உருவாக்கத் துடிக்கிறது பாரதீய ஜனதா கட்சி.

தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டி ருப்பீர்கள். திடீரென்று ‘பூதம்‘ தோன்றுவதுபோல் இருக் கும்; என்னவென்று ஒரு நொடி கொஞ்சம் கண்ணை மூடிப் பார்த்தால், மோடி வந்து, பேசிவிட்டுப் போய் விடுவார்.

திராவிட இயக்கங்களுக்கு மட்டுமல்ல - காங்கிரசுக்கும் தாய் பெரியார்தான்!

பிரச்சாரத்தை எப்படி எப்படியெல்லாம் செய்கின்றார் என்பதைப் பாருங்கள். ஏனென்றால், பிரச்சாரத்திற்கு அவ்வளவு பெரிய பலம். அதேபோன்று நாம் செய்தாக வேண்டும். இதைத் தலைமைப் பொறுப்பு ஏற்று வழிநடத்துகின்ற தன்மை, திராவிட இயக்கங்களுக்குத் தாய்க் கழகமாக இருக்கின்ற திராவிடர் கழகத்திற்கு மட்டுமல்ல -தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் காங் கிரசுக்கும் தாய் யார் என்று சொன்னால், பெரியார்தான்.

எனக்கு உறவு முறை - அவருடைய குடும்பத்தில் பிறந்தவன் என்பதால் நான் சொல்லவில்லை. காங்கிரஸ் என்பது ஒரு காலத்தில், நிலச்சுவான்தாரர்கள், மிகப் பெரிய பணக்காரர்களுடைய கட்சியாக இருந்த கட்சியை - கிராமம் தோறும் தோளிலே கதர் ஆடையைச் சுமந்துகொண்டு சென்று, இந்தக் கட்சியை கிராமத்து மக்களிடம் எடுத்துச் சொன்னவர், திராவிட இயக்கத்தின் தந்தையாக சொல்லப்படுகின்ற தந்தை பெரியார் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அதுதான் வரலாறு.

ஆகவே, அதை நாம் செய்தாகவேண்டும். அவர்கள் எப்படியெல்லாம் பிரச்சாரம் செய்தாலும், அதை முறியடிக்கவேண்டியது நம்முடைய கடமை. அதுவும் இங்கே இருக்கின்ற அத்துணைத் தலைவர்களும் விவரம் அறிந்தவர்கள்.

பாரதீய ஜனதா கட்சியை 

தமிழ்நாட்டிலிருந்து விரட்டவேண்டும்

நீங்கள் உண்மை, நியாயம் என்று மனதார ஏற்றுக் கொண்ட விஷயங்களைத்தான் பேசுகின்றீர்கள். அது தொடரவேண்டும். நாம் பாரதீய ஜனதா கட்சியை தமிழ்நாட்டிலிருந்து விரட்டவேண்டும் என்று சொல்லி, விடைபெறுகின்றேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment