இடைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு - பிஜேபி திணறல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 29, 2023

இடைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு - பிஜேபி திணறல்

சென்னை, ஜன.29 அ.தி.மு.க.வுக்கு 2 தலைவர்கள் சொந்தம் கொண்டாடுவ தால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவெடுக்க முடியாமல் பா.ஜ.க. திணறிவருகிறது. நாளை (30.1.2023) மாவட்ட தலை வர்களுடன் ஆலோசனை நடத்தி அண்ணாமலை முடிவை அறிவிக்க இருக்கிறார்.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ஆம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணி சார்பில், மறைந்த காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக் கப்பட்டுவிட்டார்.

ஆனால், பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க.வில்தான் வேட்பாளரை அறிவிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. ஏற்கெனவே, கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட த.மா.கா. வேட்பாளர் யுவராஜா இடைத்தேர்தலில் பின்வாங்கியதால், அ.தி.மு.க.வே வேட்பாளரை களம் இறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆனால், அ.தி.மு.க.வுக்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சொந்தம் கொண்டாடி வருவதால், யாருடைய தலைமையில் அ.தி.மு.க. இயங்குகிறது என்பது கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கே தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

இதற்கிடையே, இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும், சுயேச்சை சின்னத்தில் வேட்பாளரை போட்டியிட செய்ய எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார். ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளரை களம் இறக்க ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

காங்கிரஸ், தே.மு.தி.க., அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் வேட்பாளரை ஏற்கெனவே அறிவித்துவிட்ட நிலையில், நாம் தமிழர் கட்சியும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேட்பாளரை அறிவிக்கிறது. வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் 2 நாட் களே இருக்கும் நிலையில், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்த சிக்கல், தேசிய அளவில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பா.ஜ.க.வுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. யாருடைய தலைமையில் அ.தி.மு.க. இயங்குகிறது என்பது உறுதியானால்தான், இடைத்தேர்தலில் அவர்களுக்கு ஆதரவு அளிக்க முடியும் என்று பா.ஜ.க. கருதுகிறது. ஆனால், இரு தலைவர்களும் நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என்று கூறி வருவதால், யாருக்கும் ஆதரவை தெரிவிக்க முடியாமல் பா.ஜ.க. திணறிவருகிறது.


No comments:

Post a Comment