இறக்குமதி கடவுள்களும் பக்தி வியாபாரமும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 5, 2023

இறக்குமதி கடவுள்களும் பக்தி வியாபாரமும்

நேற்று தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இருந்தேன். திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில்,  1008 பால்குடங்களைச் சுமந்து, பெண்கள் ஊர்வலம் போனார்கள். சாய்பாபா சிலைக்குக் காவி உடை வண்ணம் தீட்டி, பல்லக்கில் சுமந்து கொண்டு போனார்கள்.  இப்படி ஒரு காட்சியை என் வாழ்நாளில் முதன்முறையாகப் பார்த்தேன். எனக்கு   பத்துக் கட்டளைகள் என்ற உலகப் புகழ் பெற்ற ஆங்கிலத் திரைப்படம்தான் நினைவுக்கு வந்தது.  கடவுளைப் பார்த்து விட்டு வருவதாகக் கூறி மோசே, மலைக்கு மேலே ஏறிச் சென்றார்.  நீண்ட நாட்களாகக் கீழே வரவில்லை. கீழே காத்திருந்த மக்கள், பொறுமை இழந்து, தங்களிடம் இருந்த தங்கத்தை எல்லாம் போட்டு உருக்கி, ஒரு விலங்கு சிலையைச் செய்து, அதைத் தெய்வமாக ஆக்கி, பல்லக்கில் சுமந்து ஊர்வலமாக வருவார்கள். ஆடிப்பாடி, திருவிழா கொண்டாடுவார்கள். அதுபோலத்தான் இப்போது தமிழ்நாட்டு மக்களின் நிலைமை ஆகி இருக்கின்றது. 

ஆண்டு முழுமையும் திருவிழா கொண்டாட, இவர்களுக்கு ஏதேனும் ஒரு கடவுள் தேவையாக இருக்கின்றது.  இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, அய்யப்பன் கோவிலுக்குப் போகின்ற வழக்கம் தமிழர்களிடம் இல்லை.  மதுரையில் அய்யப்பன் சிலையை ஊர்வலமாகக் கொண்டு வந்து விளம்பரம் செய்தனர். அதன்பிறகே, படிப்படியாக அய்யப்பன் வழிபாடு பெருகியது. வீரமணி பாடிய அய்யப்பன் பாடல்கள்,  மூலை முடுக்கெல்லாம் இடைவிடாமல் ஒலித்தன. அதைக் கேட்டவர்கள்,  அய்யப்பன் கோவிலுக்குப் போகத் தொடங்கினார்கள் 

 தமிழ்த் திரைப்பட நடிகர்களை எல்லாம் இருமுடி கட்ட வைத்து நடிகர் நம்பியார் அழைத்துச் சென்றார்.  அந்த நாள்களில், அனைத்து வார ஏடுகள், நாளிதழ்களில், ஒவ்வொரு நடிகராக பேட்டி தந்தது.  அய்யப்பன் புகழ் பாடினார்கள். வேறு செய்திகளே கிடையாது. வில்லன் நடிகர் நம்பியாரை கதாநாயகன் ஆக்கினார்கள். 

அய்யப்பன் புகழ் பாடி எத்தனையோ படங்கள் வந்தன. இத்தகைய விளம்பரங்களால், இன்று அய் யப்பன் கோவிலுக்குக் கோடிகோடியாக வருமானம். அதைவிடக் கொடுமை, 2800 ஏக்கர் காடுகளை அழித்து, அங்கே வான் ஊர்தி நிலையம் கட்ட நிலம் கையகப்படுத்துவதற்கு,  பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி அரசு,  கடந்த வாரம் முடிவு எடுத்து அறிவித்து இருக்கின்றது. 

அருகில் திருஅனந்தபுரம் வான்ஊர்தி நிலையம் இருக்கும்பொழுது, ஓராண்டில் 250 நாட்கள் மூடிக் கிடக்கின்ற கோவிலுக்கு எதற்கு வான் ஊர்தி நிலையம்? என்று கேட்டால், என்னை வசை பாடுவார்கள். 

கடவுள் ஒரு சோளக்கொல்லை பொம்மை என்று கார்ல் மார்க்ஸ் சொன்னார் 

இப்போது வருமானத்தைப் பெருக்க,  பெரிய பெரிய பணக்காரர்கள் வந்துபோக கடவுள் வணி கத்தை வளர்க்கின்றார்கள்.  கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்றெல்லாம்  இனி பாட முடியாது. 

மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளை எல்லாம் அழித்து விட்டால், எதிர்காலத்தில் கேரள மாநிலம் கூடப் பாலை மணல்வெளியாக, பொட்டல் காடாக மாறி விடும். 

மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளார் ஒரு கோவில் கட்டினார். கோடி கோடியாக வருமானம் குவிந்தது. 

1980 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்ஜிஆர் 13 நாள்களாக முதலமைச்சர் பொறுப்பு ஏற்கவில்லை. 

சென்னையில் இருந்து தொடரியில் பயணித்து, கருநாடகத்தின் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்குப் போய், தங்க வாள் கொடுத்து விட்டு வந்தார்.  அதன் பிறகு தான் சென்னைக்கு வந்து முதலமைச்சர் பொறுப்பு ஏற்றார். அவ்வளவுதான். ஒரே நாளில் அந்தக் கோவில் உலகத் தமிழர்கள் இடையே பெயர் பெற்றுவிட்டது. அண்ணா திமுக தொண்டர்கள் எல்லோரும், இலட்சக்கணக்கில் அந்தக் கோவிலுக்குப் படை எடுத்தார்கள். எங்கு பார்த்தாலும் மூகாம்பிகை சுற்றுலாதான். மூகாம்பிகை டீக்கடை, மூகாம்பிகா சலூன் என எல்லாவற்றிற்கும் பெயர் சூட்டினார்கள். 

மூகாம்பிகை என்று சினிமா எடுத்தார்கள். இளைய ராஜா பாட்டுப் பாடினார். அந்தக் கோவில் புகழ் பெற்றது. திருவேற்காடு கருமாரியம்மன் வேடத்தில் கே.ஆர்.விஜயா நடித்தார். அதன்பிறகு, திருவேற்காடு, மாங்காடு கோவில்கள் புகழ் பெற்றன.  ரஜினி காந்த் ராகவேந்திரர் புகழ் பாடினார். உடனே அவரது ரசிகர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு ராகவேந்திரர் பெயரைச் சூட்டினார்கள். அந்தக் கோவிலுக்குப் போய் வருகின்றார்கள்.  அடுத்து அவர் இமயமலை பாபா படம் எடுத்தார். பல ஆயிரம் ஆண்டுகளாக அந்த பாபா இருக்கின்றார்...நான் பார்த்தேன் என்று சொன்னார். நல்லவேளையாக, அவர் எந்தக் குகையில் இருக்கின்றார் என்று சொல்லவில்லை. சொல்லி இருந்தால், பாபா சுற்றுலா புகழ் பெற்று இருக்கும். ஆடி மாதம் தீட்டு. எந்த நல்ல செயலும் செய்யக்கூடாது என்று மற்றவர்களுக்குச் சொன்ன பார்ப்பனர்கள் மட்டும், அந்த மாதத்தில்தான் திருமணம் செய்வார்கள். 

அதை மக்கள் புரிந்து கொண்டார்கள். ஆடிக்கழிவு வந்தது. இன்று எல்லோரும் ஆடி மாதம்தான் பொருட்கள் வாங்குகின்றார்கள். கோவிலைச் சுற்று வது, பிரதோச வழிபாடு எதுவுமே, பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அறவே கிடையாது.  இன்று இலட்சக்கணக்கானவர்கள் நடந்து போகின்றார்கள்.  எல்லாமே விளம்பரம்தான்...எல்லாமே வணிகம்தான்.  

நரசிம்ம பல்லவன்தான், சளுக்கியர்களின் தலை நகரான வாதாபியைச் சூறையாடி, அவர்களுடைய கடவுளாக வணங்கி வந்த பிள்ளையாரைத் தூக்கிக் கொண்டு வந்தார். அதற்கு முன்பு, தமிழ்நாட்டில் பிள்ளையார் வழிபாடு கிடையாது. இப்படியாக, தமிழ் நாட்டுக்கு உள்ளே புதிது புதிதாகக் கடவுளர் வருகின் றார்கள். அதை வைத்து இங்கே நல்ல வணிகம் நடக்கின்றது. பிறகு எப்படி தொழில் வளரும்? அடுத்த கட்டம். இத்தனை நாட்களாக முருகன், அம்மனுக்குப் பால் குடம் எடுத்து ஆடிக் கொண்டு இருந்தார்கள். இப்போது முருகனையும், அம்மனையும் கைவிட்டு விட்டார்கள். 

திடீரென்று சாய்பாபா வந்து குதித்து விட்டார்.   கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்தான், கடவுள் அல்ல என்பதும் இவர்களுக்குத் தெரியவில்லை. அவர் வெள்ளை நிற அங்கி அணிந்து இருந்தார். அதற்கு இப்போது காவி வண்ணம் தீட்டி விட்டார்கள். அதை விடக் கொடுமை, சிவலிங்கம் தலைக்கு மேலே சாய்பாபா சிலையை உட்கார வைத்து ஒரு சிலை பார்த்தேன். சிவனையே சாய்பாபா காலுக்குக் கீழே கொண்டு வந்துவிட்டார்கள். (இவ்வளவுக்கும் அவர் ஒரு முசுலிம்)

இங்கே ஏற்கெனவே இலட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன.   ஆனால், தமிழ்நாடு முழுமையும், புற்றீசல் போல சாய்பாபா கோவில்கள் கட்டி வருகின்றார்கள். எப்படி? 

இதன் பின்னணி என்ன என்பது குறித்து, திராவிட இயக்க அரசு ஆராய வேண்டும். 

அது மட்டும் அல்ல. இப்போது 50 அடி, 100 அடி சிலைகள் வைப்பதில் ஒரு போட்டி ஏற்பட்டு இருக் கின்றது. பெரிய பெரிய பாறைகளை உடைத்து, ஏராளமான சிலைகள் செய்கின்றார்கள்.  அதைத் தடுக்காவிட்டால், தமிழ்நாட்டின் மலைகள் எல்லாம் மொட்டையாகி விடும்.  

புதிது புதிதாகக் கோவில்கள் கட்டுவதை விட, கிராமங்கள் தோறும் சிறு தொழிற்கூடங்கள் கட்டினால், இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்குமே? 

அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டாமா?

முகநூல் : அருணகிரி சங்கரன்கோவில்

ஜனவரி 2023

தகவல்: குடியாத்தம் அன்பு

No comments:

Post a Comment