வரலாறு படைத்த மதுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 28, 2023

வரலாறு படைத்த மதுரை

மதுரை  பல்வேறு வகைகளில் வரலாறு படைத்த மாநகரம்! இயக்க வரலாற்றிலும் பொன்னிழைகள் பூத்த அத்தியாயம் இதற்குண்டு.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இதே மதுரையில் சங்கிகளின் மதவெறியால், மாபெரும் வளர்ச்சித் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் முடக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் சக்தியைத் திரட்டி மாநாடு நடத்தி, ஒன்றிய அரசே, இத்திட்டத்தை உடனே செயல்படுத்து என்று குரல் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது!

இதே மதுரையில் தான் 2005ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் நாளன்று அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (யு.பி.ஏ.) அரசின் பிரதமர் மன்மோகன்சிங் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, தி.மு.க. தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்,  ஆளுநர் பர்னாலா முதலிய பெரு நிலையில் உள்ள பெரு மக்கள் அந்நிகழ்வில் பங்கேற்றனர்.

தென் மாநிலம் கொழிக்கப் போகிறது; வேலை வாய்ப்புகள் பல்லாயிரக்கணக்கில் நம் இளைஞர் களுக்குக் கிடைக்கப் போகின்றன. சிறு, குறு துறை முகங்கள் எல்லாம் வளர்ச்சித் திசைப் போக்கில் பெரும் பாய்ச்சல் ஏற்படப் போகிறது என்று குதூகலித்தனர்.

ரூபாய் 2427.40 கோடியில் உருவாக்கப்பட்ட திட்டம் இது.

இதனைச் செயல்படுத்தும் மிகப் பெரிய பொறுப்பு - கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சர் ஆற்றல்மிகு மானமிகு டி.ஆர். பாலு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வாயு வேகத்தில் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

இன்னும் இருபத்து மூன்றே கிலோ மீட்டர் தூரம்தான் பணிகள் பாக்கி.   

பொறுக்குமா 'பூதேவர்களுக்கு' - சு.சாமிகளுக்கு - ஜெயலலிதாக்களுக்கு? அவர்களுக்கென்றே உள்ள உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து, தமிழ்நாட்டு மக்களின் உயிர் மூச்சு குரல் வளையை நெருக்கிக் குலைத்தது.

எந்த மதுரையில் அதன் தொடக்க விழா 2005இல் நடைபெற்றதோ அதே மதுரையில், அதனைச் செயல்படுத்த - அனைத்துக் கட்சியினரையும் தலைவர்களையும் அழைத்து ஒரு மாபெரும் திறந்த வெளி மாநாட்டை நடத்திட வேண்டிய நிலை  திராவிடர் கழகத்துக்கு ஏற்பட்டு விட்டது.

மாநாட்டில் உரையாற்றிய பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் முன்னணியினரும் காலத்தாற் மேற் கொள்ளப்பட்ட திராவிடர் கழகத்தின் பணியையும், அதன் ஒப்பற்ற தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களையும் பல படப் பாராட்டி மகிழ்ந்தனர்.

திராவிடர் கழகம் ஏதோ இப்பொழுதுதான் இத்தகைய மாநாட்டை நடத்துகிறது என்று கருதிவிடக் கூடாது.

எப்பொழுது இத்திட்டத்திற்குத் தடை விதிக்கப் பட்டதோ, அந்தத் தருணம் முதற்கொண்டு பல்வேறு தொடர் சுற்றுப் பயணங்களையும், போராட்டங்களையும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

இராமநாதபுரத்தில் 2007 ஆகஸ்டு முதல் நாளில் இதே நோக்கத்தோடு திறந்த வெளி மாநாட்டை திராவிடர் கழகம் நடத்தியதுண்டே!

சென்னை அமைந்தகரை புல்லாரெட்டி அவென் யூவிலும் மாபெரும் மக்கள் திரள் பொதுக் கூட்டம் நடத்தப் பட்டதுடன், அந்நிகழ்ச்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும் பங்கேற்றுச் சங்கநாதம் செய்தார்களே!

எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆனதுதான் மிச்சம். இதற்குக் காரணம் இடையில் நரியாகப் புகுந்த ஒன்றிய அரசின் அதிகார மய்யத்தின் சங்பரிவாரின் பிதா மகன்தான். (பிஜேபி என்றாலும் ஆர்.எஸ்.எஸின் அரசியல் முக(£)ம் தானே)

இப்பொழுது என்ன நிலைமை? இதே பிஜேபி இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் ராமன் பாலம் இருந்தது என்பதற்கு எந்தவிதத் தரவும் கிடையாது என்று ஆணி அடித்து அறைந்தது போல் கூறி விட்டாரே! பி.ஜே.பி. சங்பரிவாரின் கூட்டத்தினர், சு.சுவாமிகள், அ.இ.அ.தி.முக.வினர் முகத்தை எங்கே கொண்டு போய் வைக்கப் போகிறார்கள்?

2024ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் இருந்து   மக்கள் எழுச்சியோடு - வளர்ச்சித் திட்டங்களில்கூட மதவாதத்தைத் திணிக்கும்  பிஜேபி, சங்பரிவார்களை வெளியேற்றுவதுதான்.

இதுபோன்ற மக்கள் நலத் திட்டங்களுக்கு  உத்தர வாதம் என்ற கோரிக்கைதான் மதுரை திறந்தவெளி மாநாட்டின் உயிர் மூச்சான வேண்டுகோளாகும்!

வீறு கொள்வோம்! வெற்றி பெறுவோம்!!


No comments:

Post a Comment