காலநிலை மாற்றம் - கவனம்! கவனம்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 28, 2023

காலநிலை மாற்றம் - கவனம்! கவனம்!!

உலகமெங்கும் காலநிலை மாற்றம் கடும் நெருக்கடியை உருவாக்கி வருகிறது. அமெரிக்கா முதல் ஆப்பிரிக்கா வரை பல்வேறு தீவிர காலநிலை நிகழ்வுகள் புவியைப் பந்தாடி வருகின்றன. புவியின் வெப்பநிலை உயர்வை தொழிற்புரட்சி காலத்துக்கு முந்தைய வெப்பநிலையிலிருந்து 1.5 டிகிரி வெப்ப உயர்வுக்குள் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் நிலமை கைமீறிச் சென்று கொண் டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புவியின் வெப்பநிலை உயர்வு 1.2 டிகிரியைத் தொட்டுவிட்டதாக இந்த மாதம் (ஜனவரி 2023) அய்ரோப்பிய ஒன்றியத்தின் விண்வெளி ஆய்வு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. 

புவியின் சராசரி வெப்பநிலையில் ஏற்படும் இம்மியளவு வேறுபாடுகூட கடும் விளைவுகளை உருவாக்க வல்லது. 1.5 டிகிரி வெப்பநிலை உயர் வானது 6 விழுக்காடு பூச்சியினங்களின் அழிவுக்குக் காரணமாக இருக்குமென்றால் கூடுதலாக 0.5 டிகிரி வெப்பநிலை உயர்வு அதாவது 2.0 டிகிரி வெப்ப உயர்வில் மூன்று மடங்கு கூடுதலாக 18 விழுக்காடு பூச்சியினங்கள் அழிந்து போகும். இப்படியிருக்க, இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் வெப்ப உயர்வு 3 அல்லது 4 டிகிரியையும் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வெப்பமண்டலப் பகுதியான தமிழ் நாட்டில்,  பருவகாலத்தைப் பொறுத்து 20-25 டிகிரியிலிருந்து 35-40 டிகிரி வரையில் வளிமண்டல வெப்பம் வேறுபடுகிறது. வெப்பநிலையில் இவ்வளவு வேறுபாடு நிலவும்போது 0.2 அல்லது 0.5 வேறுபாடு ஏன் குறிப்பிடத்தகுந்தது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இங்கு 1.2 அல்லது 1.5 டிகிரி வெப்பநிலை உயர்வு என்று சொல்லப்படும் எண்கள் ஒட்டுமொத்த உலகின் சராசரி வெப்ப நிலை உயர்வைக் குறிக்கின்றன. இவை சில இடங்களில் மிகக்குறைவாகவும் சில இடங்களில் மிக அதிகமாகவும் இருக்க லாம்.

இங்கேதான் நாம் தமிழ்நாட்டில் சமீபத்தில் பார்க்கும் உதகைக் குளிரை பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது. காலநிலை மாறுபாடு என்பது பொது வாக உலக வெப்பமயமாதலைக் குறித்தாலும், அது கடுங்குளிரையும்கூடக் கொண்டுவரக்கூடியதே. ஓரிடத்தில் குளிர் அதிகரிப்பதையும் இன்னொரு இடத்தில் வெப்ப அதிகரிப்பையும் சரா சரியாக்கிப் பார்த்தால் ஒட்டுமொத்தமாக 1.5 டிகிரி வெப்ப உயர்வு என்பது எத் தனைத் தீவிரமானது என்பதை உணர முடியும். இந்தப் பின்னணியில்தான் உலகில் வெப்ப அலைகளைவிட குளிரலைகளால் அதிக மக்கள் உயிரிழக்கப் போகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிப்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது. 

சமீபத்தில் தமிழ்நாட்டில், சென்னை உட்பட பல பகுதிகளில் குளிர்கால மானது வழக்கமான குளிரைவிட அதிக மாக வாட்டியெடுத்ததை உணர முடிந் தது. பலரும் சென்னை ஊட்டிபோல இருக்கிறது என்று குதூகலித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரவச மடைந்ததையும்கூட பார்த்தோம். கோடையில் கடும் வெப்பத்தையும் குளிர்காலத்தில் இதமான வானிலையும் பெறும் நமக்கு ஊட்டி போன்ற குளிர் பேரானந்தம் கொடுக்குமென்பது இயல்பாகவே புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால், கெடுவாய்ப்பாக ஒரு பேரழிவை முன்னறிவிக்கும்  பிறழ்வாக அதை பெரும்பான்மை மக்கள் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

கடும் குளிர் வாட்டும்போது நாம் கனமான கதகதப்பான உடைகளை அணிந்துகொள்கிறோம். வெயில் வதக்கும்போது கதவைத் தாளிட்டு ஏசி போட்டுக்கொள்கின்றோம். ஆனால், தீவிரமான - வழக்கத்துக்கு மாறான குளி ருக்கும் வெயிலுக்கும் எந்த பாதுகாப்புமின்றி நம் உணவு உற்பத்தி சாலை களான விளைநிலங்கள் திறந்துகிடக் கின்றனவே அவைபற்றி எண்ணிப் பார்த்தோமா?

காலநிலை மாற்றத்தினால் இந்தியா வில் அரிசி உற்பத்தியானது 27.5 விழுக் காடு  குறையவிருக்கிறது என்கிறது அய்பிசிசி அறிக்கை. ஒருபுறம் வறு மையில் பலகோடி மக்கள் வாழும் நிலையில் உணவு உற்பத்தி ஏறக்குறைய 30 விழுக்காடு குறைவது, குறிப்பாக முக்கிய உணவாக அரிசியை உட் கொள்ளும் தென்னிந்தியாவை எத்தனைத் துயருக்கு ஆழாக்கப்போகிறது என்று கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது. 

உதகையில் சமீபத்தில் ஏற்பட்டிருக்கும் வழக்கத்துக்கு மாறான தீவிரப் பனிப்பொழிவை எல்லாரும் சிலாகித்து கொண்டாடுவதைப் பார்க்க முடிகிறது. அய்ரோப்பிய நாடுகளில் திரைப்படங் களில் மட்டுமே பனிப்பொழிவை பார்த்திருக்கும் நமக்கு, நம் மாநிலத்துக்கு உள்ளேயே எட்டும் தூரத்தில் இருக்கும் உதகையில் வெண்பனிப்பொழிவைப் பார்க்கும்போது ஆர்வமூட்டுவதாகவே இருக்கிறது. எனினும், உதகையை வெறும் கேளிக்கைக்கான சுற்றுலாத் தலமாகப் பார்த்துப் பழகிவிட்ட நமக்கு அதைத்தாண்டி சிந்தனை எதுவும் நீளாதது வியப்பில்லைதான். 

உதகையில் கடந்த சில நாட்களில், குதூகலம்தரும் குளிருக்குப் பின்னே அதைத் தாங்கமுடியாது ஏராளமான விவசாயப் பயிர்கள் கருகிப்போயிருக் கின்றன. என்னதான் குளிர்விரும்பிப் பயிர்களாகவே இருந்தாலும் இந்தத் தீவிரப் பனிப்பொழிவை அவற்றால் தாக்குபிடிக்க முடியவில்லை. காரட்டோ, பீட்ரூட்டோ இல்லாதுபோனால் உலகம் அழிந்துபோகாதுதான். ஆனால், அவற் றோடு கத்தரியும், வெண்டையும் ஏன் வெங்காயமும்கூட அழிந்துபோனால் நாம் என்ன செய்யப்போகிறோம்? 

இது ஒரு வருட நிகழ்வு அல்ல. கடந்த எட்டு ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டின் வெப்ப நிலையைவிட அதிகமான வரலாறு காணாத வெப்பம் பதிவாகியிருக்கிறது. இதுவரையிலும் காலநிலை மாற்றத் துக்கு எதிராக களத்தில் எந்த உருப் படியான மாற்றங்களும் நிகழ்ந்துவிடாத நிலையில், இது இன்னும் அடுத்தடுத்த ஆண்டுகளில் தீவிரமாகவே அதிக வாய்ப்பிருக்கிறது. ஆய்வுகளும் அதையே சொல்கின்றன. தீவிர கால நிலை நிகழ்வுகள் எண்ணிக்கையிலும் தீவிரத்திலும் அதிகரித்து வருகின்றன. 

உலகம் வெப்பமயமாதல் என்பது ஏசியில் வெப்ப நிலையை 20 டிகிரியில் வைப்பதா அல்லது 25 டிகிரியில் வைப்பதா என்பதைப்போன்று எளிதாகக் கடந்துசெல்லக்கூடிய விஷயம் அல்ல. இது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையேயான பிரச்சினையாக இருக்கிறது. முன்பெல்லாம் எதிர்காலத் தலை முறைபற்றி நாம் பேசிவந்தோம். இப்போது, நம் தலைமுறையே இந்த ஊழியிலிருந்து தப்பிப்பிழைக்க முடி யுமா என்ற அய்யம் எழுந்திருக்கிறது. 

உதகையின் கடுங்குளிர் நமக்கு உணர்த்தும் செய்தி மிகவும் சூடானது. ஆபத்து வெகு அருகில் இல்லை; உண்மையில் அது நம்மை விழுங்கத் தொடங்கிக்கொண்டிருக்கிறது. புவியின் பாதுகாப்பை உணர்த்தும் இயற்கை அரண்கள் மீழாநிலையை (Tipping points) எட்டிக்கொண்டிருக்கின்றன. நாம் எத்தனை விரைவாக விழித்துக் கொள்கிறோமோ அத்தனை அதிகமாக பிழைத்துக்கொள்ளும் சாத்தியமிருக் கிறது. விழித்துக்கொள்வது மட்டுமல்ல; சரியான செயலை செய்வதும் அத்தியா வசியமாகியிருக்கிறது. 

மரங்களை நட்டு புவியைக் குளிர் விக்கும் காலத்தை எல்லாம் எப்போதோ நாம் கடந்துவிட்டோம். கண்ணுக் கெட்டும் தூரம்வரையில் நம்மைக் காக்கும் எந்த நம்பிக்கையான தொழில் நுட்பங்களும் இருப்பதாய் தெரியவில்லை. இன்றைய சூழலில், காலநிலை மாற்றத்துக்குக் காரணமான நமது பொருளாதார உற்பத்தி முறையை மாற்றியமைப்பதைத் தவிர நாம் பிழைத்திருக்க நம்முன் எந்த சாத்தியங்களும் இல்லை.

 - ஜியோ டாமின், பூவுலகின் நண்பர்கள்

No comments:

Post a Comment