ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 28, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்


கேள்வி 1 : குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு முழு தடை விதிக்க உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவுத் தரச்சட்டத்தில் வழிவகை இல்லை என்று அவற்றின் மீதான தடை  உத்தரவை ரத்து செய்துள்ளதே சென்னை உயர் நீதிமன்றம் ?

 - இன்பத்தமிழன், பிலாக்குறிச்சி

பதில் 1 : வருந்தத்தக்க தீர்ப்பு இது. சட்டப்படி சரியானதாக இருக்கலாம். நியாயப்படி இது ஏற்கத்தக்கது அல்ல. இந்த சட்ட ஓட்டைகளை அடைத்து புது சட்டம் ஒன்றை விரைந்து, அரசுகள் இயற்றி சமூக விரோத - மயக்க 'லாகிரி' வஸ்துக்களைத் தடை செய்வது அவசியம் - அவசரம்.

மக்களுக்காகத்தான் சட்டம்; சட்டத்திற்காக மக்கள் இல்லை.


கேள்வி 2 : மக்கள் பிரச்சினைகளில், தமிழ்நாட்டு உரிமைப் பிரச்சினைகளில் வாயே திறக்காமல் - இடந் தெரியாமல் இருந்த கட்சிகள் தற்போது ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத் தேர்தல் வந்தவுடன் பரபரப்பு அறிக்கைகளை வெளியிடுகின்றனவே? இது எதைக் காட்டுகிறது?

- அ. தமிழ்க்குமரன், ஈரோடு

பதில் 2 : பா.ஜ.க.வின் தமிழ்நாட்டுப் போராட்டங்கள் எதுவானாலும் அவற்றில் தமிழ்நாட்டு உரிமைகளுக்கு என்று போராட்டம் ஒன்றாகிலும் நடத்தியிருக்கிறார்களா? உதாரணம்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை  - கல்லூரி இல்லாமலேயே தேர்வு எழுதி பட்டம் வாங்கும் விசித்திரம் உண்டா?


கேள்வி 3 : தேசிய வாக்காளர் தினத்துக்கு வாழ்த்து சொல்லும் பிரதமர் அறிக்கையைப் புகழும் பத்திரிகைகள் இந்தப் பிரதமர் ஆட்சிக்கு வந்த பின் பணத்தாலும், மிரட்டலாலும் கவிழ்க்கப்பட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் பற்றி ஒரு வரிகூட எழுதுவதில்லையே ஏன்? 

-தமிழ் மைந்தன், சைதாப்பேட்டை

பதில் 3 : அவரது 'மனதின் குரல்' அதைக் கூறவில்லை போலும்!


கேள்வி 4 : புதுச்சேரியில் ரேஷன் கடைகளை மூடிவிட்டு சாராயக்கடை நடத்தும் ஆளுநரையும், அவர்களின் கூட்டணி அரசையும் விமர்சிக்காமல் தமிழ்நாட்டில் மது ஒழிப்பு பற்றி கதறுகிறார்களே பிஜேபியினர் இது சரியா? 

- இளங்கோவன், புதுச்சேரி

பதில் 4 : மது ஒழிப்பில் அவர்களுக்குத் தெம்பும் திராணியும் இருந்தால், புதுச்சேரியில் அதை தேர்தல் திட்டமாக அறிவித்து தேர்தலில் நிற்கத் தயாராக இருக்கிறார்களா? பதில் கூறட்டும்!


கேள்வி 5 : பி.ஜே.பி. தலைவர் தங்கள் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுகவே என்பதும், அதிமுகவின் இரு அணிகளும் கமலாலயத்தின் வாசலில் நிற்பதும் எதைக் காட்டுகிறது?

- க.கார்த்திகேயன், கோவர்த்தனகிரி

பதில் 5 : அடமான தி.மு.க.வான அ.தி.மு.க பா.ஜ.க.விடமிருந்து தங்களது கட்சியை மீட்டெடுக்க முடியவில்லை என்பதையே காட்டுகிறது!

கேள்வி 6 : சமூகத்தில் இருக்கும் மூடநம்பிக்கைகளுக்கு நிகராக மருத்துவத்துறையிலும் உள்ளனவே! இதனை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய அல்லது  தடை செய்ய அரசு முன் வருமா?

- வெற்றிச்செல்வி, வியாசர்பாடி

பதில் 6 : பகுத்தறிவாளர் கழகம் இதற்கென ஒரு தொடர் பிரச்சாரப் பணியை தொடர்ந்து அமைக்க முன்வர வேண்டும். ஏராளமான டாக்டர்கள், பகுத்தறிவாளர்கள். பேசத் தயாராக உள்ளனர். அவர்களைப் பயன்படுத்தி நாடு தழுவிய பிரச்சாரமாக ஒரு வாரம் நடத்த ப.க. தலைமை நிலையத்திடம் அறிவிக்கப்படும்.


கேள்வி 7 : சேதுக் கால்வாய்த் திட்டத்தால் கடுமையான சூழலியல் பாதிப்புகள் ஏற்படும் என்கிறார்களே?

- ஆரோக்கிய சேவியர், செங்கோட்டை (தென்காசி)

பதில் 7 : தவறான கருத்து; அதை அப்போதே அமைச்சராக இருந்த சகோதரர் டி.ஆர்.பாலு விளக்கியுள்ளார். ஆய்வு செய்து தடைகள் இருந்தால் அவற்றைத் தாண்டி செயல்படுத்த முடியும். அதை விரிவாக்கி செய்து முடிக்க பிரச்சாரம் செய்ய வேண்டும்.

கேள்வி 8 :  கலைஞரைக் காட்டிலும் ஸ்டாலின் மிகவும் ஆபத்தானவர் என்று எச்.ராஜா கூறியிருக்கிறாரே?

- மீ.முரளிதரன், மதுரை

பதில் 8 : ஆம். 'துப்பாக்கி வயிற்றில் பீரங்கியோ' என்று ஆரியம் அலறுகிறது! அவரோ அமைதிப் புரட்சிவீரர்! கொள்கை லட்சியப் பணிப் பாதையை தவறாமல் கடைப்பிடிக்கிறார் அவர். அதனால் இப்படிப்பட்ட விமர்சனங்கள் எழுகின்றன.

இதுதான் அவர் சரியான பாதையில் பயணிக்கிறார் என்பதற்கான சரியான அளவுகோல்.


கேள்வி 9 :  சொர்க்க வாசலில் நுழையும் பக்தர்கள் திரும்பி வந்து விடுகின்றனரே?

- இரா.தமிழன்பன், சாத்திப்பட்டு

உண்மை சொர்க்க வாசல் என்றால் அங்கே பக்த கோடிகள் போகவே மாட்டார்கள் என்பது உறுதி! பணம் செலவழித்து, போவது பக்திச் சுற்றுலா. "......" "இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்பதுதான் என்றால் உண்மையில் சொர்க்கத்திற்குப் போக விரும்ப மாட்டார்கள்.

பித்தலாட்டம் இது! "திரும்பி வருவோம்" என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் சொர்க்கம் போகிறார்கள். இல்லையேல் கூட்டம் இருக்காது.

No comments:

Post a Comment