உமாபாரதி - பிரக்யா சிங்கின் வன்முறைப் பேச்சுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 3, 2023

உமாபாரதி - பிரக்யா சிங்கின் வன்முறைப் பேச்சுகள்

பி.ஜே.பி. நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் போன்றே பெண் சாமியாரும், மத்தியப் பிரதேச பி.ஜே.பி.யில் முக்கிய முகமுமான உமாபாரதியும், எதையாவது பேசி வெளிச்சத்துக்கு வருபவர்.

கருநாடகாவில் பிரக்யா பேசும்போது, "காய்கறி வெட்டும் கத்தியாவது வைத்துக் கொள்ளுங்கள். கத்தியை கூர் செய்து கொள்ளுங்கள்.இஸ்லாமி யர்களை அந்தக் கத்தியால் தாக்குங்கள்" என்று பேசியதால் அவர்மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. (எல்லாம் ஒப்புக்குத்தான்!).

பிரக்யாவின் இந்தக் கருத்துக்கு உமா பாரதி வரவேற்பு தெரிவித்திருந்தார். "சிவமேகாவில்  ஹிந்துத்துவவாதிகள் தொடர்ச்சியாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்... அதனால்தான், ஹிந்துக்களை ஆயுதங்களை வைத்திருக்குமாறு பிரக்யா சிங் சொல்லியிருக்கிறார்.. பிரக்யா சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? இராம பிரான்கூட தன்னுடைய பட்டத்தைத் துறந்து வனவாசம் புறப்பட்ட போது கூட, 'கடைசி வரை ஆயுதத்தை வைத்திருப்பேன்' என்று உறுதியேற்றார். ஆயுதங்கள் வைத்துக் கொள்வதில் தவறு இல்லை. ஆனால், வன்முறை எண்ணம் கொண்டிருப்பதுதான் தவறு" என்று கூறியிருந்தார் உமாபாரதி

தற்போது அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில், . "ஹிந்துமதம், ஹிந்துத்துவா மற்றும் கடவுள் இராமர் ஆகியவற்றுக்குப் பா.ஜ.க. காப்புரிமை எதுவும் பெறவில்லை.. அது பா.ஜ.க.வுக்கு மட்டும் சொந்தமானதோ, உரிமையானதோ கிடையாது.. கடவுள் இராமர், அனுமன், ஹிந்து மதத்தின் மீது யார் வேண்டுமானாலும் பற்று வைக்கலாம், நம்பிக்கை கொள்ளலாம்.

ஆனால் வித்தியாசம் என்னவென்றால், நாங்கள் வைத்திருக்கும், எங்கள் கட்சி வைத்திருக்கும் நம்பிக்கை அரசியல் ஆதாயம் கடந்தது. இராமர், தேசியக் கொடி, கங்கை நதி, பசு ஆகியவை மீது எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது பாஜக கிடையாது.. இது இயல்பாகவே எனக்குள் ஏற்கெனவே இருக்கிறது. கடவுள் இராமர், அனுமன், ஹிந்து மதத்தை யார் வேண்டுமானாலும் பின்பற்றலாம், நம்பிக்கை வைக்கலாம். இவற்றுக்கு பாஜக ஏதும் காப்புரிமை பெறவில்லை. மத்தியப் பிரதேச மாநிலத்தில் மதுவைத் தடை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். பாஜக என்ன கட்டளையிடுகிறதோ, என்ன கோடு போடுகிறதோ, அதை மட்டுமே செய்வேன்" என்று அறிக்கையில் கூறி உள்ளார்.

உமாபாரதி என்பவர் ஒரு கட்டத்தில் பா.ஜ.க. என்பது பார்ப்பன ஆதிக்கக் கட்சி என்று சொன்னவர்தான் - இவர் மட்டுமல்ல - உ.பி. கல்யாண் சிங்கும் அவ்வாறே கூறியதுண்டே!

ம.பி. முதல் அமைச்சர் பதவியை உமாபாரதி யிடமிருந்து பறித்ததன் பின்னணி என்ன?

"அயோத்தியில் பாபர் மசூதிக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாது, வெறும் கரசேவைதான் என்று நீதிமன்றத்தில் உத்தரவாதம் கொடுத்தவர்" உ.பி. மாநில முதல் அமைச்சராக இருந்த கல்யாண்சிங்.

அந்த உத்தரவாதம் காற்றில் பறந்துவிட வில்லையா? பி.ஜே.பி. பெருந் தலைவர்களை நம்பி மோசம் போனேன் என்று பின்னாளில் புலம்பவில்லையா!

மாலேகான் குண்டு வெடிப்புப் புகழ் பிரக்யாசிங்தாக்கூர் சிறையிலிருந்து பிணையில் வெளிவந்து தேர்தலில் நின்று நாடாளுமன்ற உறுப்பிரானது எப்படி?

இராமன் கையில் வைத்திருந்த வாள் வாளா இருப்பதற்கா? சூத்திரன் தவமிருந்தான் - அது வருணதர்மத்துக்கு எதிரானது என்று கூறி தவமிருந்த சூத்திரன் சம்பூகனை வாளால் வெட்டிக் கொல்லவில்லையா!

பார்ப்பனர்களால் சூடுபட்டும் உமாபாரதி களுக்குப் புத்தி வரவில்லையே - வெட்கக்கேடு!


No comments:

Post a Comment