மணமக்களே உங்கள் பெற்றோரை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 27, 2023

மணமக்களே உங்கள் பெற்றோரை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்!

திருச்சி துறையூர்  சண்முகம் - மாலினி மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்

துறையூர், ஜன.27  மணமக்களே உங்கள் பெற்றோரை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அ.சண்முகம் - க.மாலினி மணவிழா

திருச்சி - துறையூரில் 22.1.2023 அன்று  தனலட்சுமி - அன்பழகன் இணையரின் செல்வன் அ.சண்முகத் திற்கும், மா.கதிரேசன் - ராஜேஸ்வரி இணையரின் செல்வி க.மாலினிக்கும் வாழ்க்கை இணையேற்பு விழா வினைத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நடத்தி வைத்து வாழ்த்துரை யாற்றினார்.

அவரது வாழ்த்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

தந்தை பெரியாரும், 

திராவிடர் இயக்கமும்தான்...

ஆகவே, தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் ‘‘படி, படி, படி’’ என்று மக்களைப் படிக்க வைத்தார்கள். அப்படி படிக்க வைத்ததினுடைய விளைவுதான் இன்றைக்கு நம் நாட்டில் பெண்கள் அதிக அளவில் படித்திருக்கிறார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற நிலை உண்டா?

இங்கே நான் பார்க்கிறேன், தாய்மார்களும், சகோதரி களும் அமர்ந்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தனலட்சுமி அம்மையாரின் தலைமையில் நடைபெறுகிறது.

முதலில் அவர்களைப் பாராட்டவேண்டும். ஏனென்று சொன்னால், இந்தக் கொள்கைக்கு, இந்த முறைக்கு ஒப்புக் கொண்டிருக்கிறார்களே, அதற்காக. அவர்களுக்குக் கொஞ்சம் தயக்கம் இருக்கத்தான் செய்யும்; அதிலொன்றும் தவறில்லை. இந்த மணமுறை எப்படி இருக்குமோ? என்று நினைத்திருப்பார்கள்; இப்பொழுது கொஞ்சம் தெளிவடைந்திருப்பார்கள்.

சமஸ்கிருதத்தில் சொல்லுகிற மந்திரம் யாருக்காவது புரியுமா?

நான் இங்கே நம்முடைய தாய்மொழியான தமிழில் பேசுவதால், அனைவருக்கும் புரிகிறது. அய்யர் வந்து இந்த மணவிழாவினை நடத்தி வைத்திருந்தால், அவர் சொல்லுகிற மந்திரம், சமஸ்கிருதத்தில் சொல்லுகிற மந்திரம் என்னவென்று இங்கே இருக்கிற ஒருவருக்காவது புரியுமா? உங்களுக்குத்தான் புரியவில்லை சரி;  மந்திரம் சொல்லுகின்ற அவருக்காவது புரியுமா? என்றால், அவ ருக்கும் புரியாது. முழுவதும் சமஸ்கிருதத்தில் சொல்லுவார்.

வைதீக உணர்வு படைத்த தாய்மார்களே ஒப்புக்கொள்ளமாட்டார்கள்

இன்னுங்கேட்டால், பார்ப்பனர் சமஸ்கிருதத்தில் சொல்கின்ற  மந்திரத்தின் அர்த்தத்தை தமிழில் மொழி பெயர்த்துச் சொன்னால், இவர்களைப் போன்றவர்களே, வைதீக உணர்வு படைத்த தாய்மார்களே ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.

என்ன காரணம்?

‘‘சோமஹ ப்ரதமோ விவேத கந்தர்வ

விவிதே உத்ரஹ  த்ருதியோ அக்னிஸடே

பதிஸ துரியஸதே மனுஷ்ய ஜாஹ’’

இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.

‘‘நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன்  உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய்.’’ இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.

இதை தமிழில் சொன்னால் யாராவது அனுமதிப் பீர்களா? இது எவ்வளவு கொச்சைப்படுத்தக் கூடியது.

ஆனால், இங்கே நடைபெறுவது  வாழ்க்கை இணையேற்பு விழா.

ஆணுக்கும் - பெண்ணுக்கும் சம வாய்ப்பு!

ஆணுக்கு என்னென்ன உரிமை உண்டோ, அத்துணை உரிமையும் பெண்ணுக்கு உண்டு என்று சொல்லக்கூடிய மணவிழா இந்த மணவிழா.

இரண்டு பேரும் சமம்; இதுதான் சம வாய்ப்பு. ஆண் படிக்கவேண்டுமா? பெண்ணும் படிக்கவேண்டும். ஆணுக்கு சொத்துரிமையா? பெண்ணுக்கும் சொத் துரிமை இருக்கவேண்டும். ஆணுக்குப் பதவியா? பெண்ணுக்கும் சமமான வாய்ப்பு இருக்கவேண்டும்.

இதை சொல்லக்கூடிய இயக்கம்தான் திராவிடர் இயக்கம். அதைச் சொல்லிக் கொடுத்த தந்தைதான் நம்முடைய அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள்.

இன்றைக்கு ஏன் இளைஞர்கள் எல்லாம் அய்யா பின்னால் இருக்கிறார்கள்?

ஏன் இந்த ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் பெரியாருடைய பிறந்த நாளினை, சமூக நீதி நாளாக அறிவித்தார்கள்?

முழுக்க முழுக்க இதனுடைய அடிப்படை சமத்துவம் - எல்லோருக்கும் சம வாய்ப்பு.

சண்முகம் அவர்களுடைய தாயார், இவரை வளர்த்து, ஆளாக்கியிருக்கிறார். ஒரு கெட்ட வாய்ப்பாக அவருடைய தந்தை இல்லை. அவர் இல்லையென்றாலும், இந்த மணவிழா, தனலட்சுமி அம்மையார் தலைமையில் நடைபெறுகிறது.

கைம்பெண் ஒருவர் மாலை எடுத்துக் கொடுக்க, என் மகனின் மணவிழா நடந்தது!

என்னுடைய மகன் திருமணம் கலைஞர் தலை மையில், கைம்பெண் ஒருவரை அழைத்துத்தான் மாலையை எடுத்துக் கொடுக்கச் சொன்னேன்.

ஏனென்று கேளுங்களேன், தாய்தானே முன்னால். அர்த்தமுள்ள இந்து மதம் என்று நீங்கள் சொல்கிறீர்களே, அந்த இந்து மதம், பெண்களை மதித்திருக்கிறதா? மகனை வளர்த்த விதவைத் தாயையே, மணவிழாவின் போது முன்னால் வரக்கூடாது என்று சொல்கிறார்கள். வைதீக சிந்தனை உள்ளவர்களாக இருந்தால், அந்தத் தாய் முன்னால் வரக்கூடாது என்பார்கள்.

வைதீக திருமணத்தில் என்ன செய்வார்கள்? தாலியை ஒரு தேங்காயில் சுற்றி, அதை ஒரு தட்டில் வைத்து, எல்லோரிடமும் ‘‘கும்பிடுங்கள், கும்பிடுங்கள்; ஆசீர்வாதம் செய்யுங்கள்! ஆசீர்வாதம் செய்யுங்கள்!’’ என்று ஒரு ரவுண்டு வருவார்கள்.

மணவிழாவிற்கு வந்தவர்களும் அந்தத் தட்டைத் தொட்டுக் கும்பிட்டுக் கொண்டே வருவார்கள்; அப்படி வரும்பொழுது, அந்த அம்மாவின் நெற்றியில் பொட்டு இல்லையென்றால், அந்த அம்மாவைத் தாண்டிக் கொண்டு, அடுத்தவரிடம் தட்டை நீட்டுவார்கள்.

அந்த சமயத்தில், அந்த அம்மையாரின் மனநிலை எப்படியிருக்கும்? மனம் எந்தளவிற்கு நொந்து போயிருக்கும்? என்று நினைத்துப் பாருங்கள்.

ஹிந்து மதத்தைப் புரிந்துகொள்வீர்!

சொந்த பிள்ளையின் மணவிழாவிற்குக் கூட எதிரில் வரக்கூடாது என்று சொல்வதுதான் ஹிந்து மதம் என்றால், இந்த மதத்தைவிட ஒரு கொடுமையான அமைப்பு வேறு இருக்குமா? என்பதை நீங்கள் எண் ணிப்பார்க்கவேண்டும்.

நாங்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் வெறுப்ப வர்கள் அல்ல; தனிப்பட்ட முறையில் நாங்கள் யாருக்கும் எதிரிகள் அல்ல. எல்லோரையும் நேசிப்பவர்கள்; விரும்புபவர்கள்.

புரட்சிகரமான அறிவுத் திருமணம் - 

கொள்கைத் திருமணம்!

இன்றைக்கு ஓர் எடுத்துக்காட்டாக நடக்கின்ற, சண்முகம் - மாலினி ஆகியோரின் மணவிழாவிற்கு, ஒரு சிறப்பான அம்சம் என்னவென்றால், மணமகனின் தாயார் தலைமை தாங்கக் கூடிய அளவிற்கு வந்தி ருக்கிறார் என்றால், அவருடைய முன்னிலையில் இந்த மணவிழா நடைபெறுகிறது என்றால், இதுதான் பாராட்ட வேண்டிய, புரட்சிகரமான அறிவுத் திருமணமாக இருக்கக்கூடிய கொள்கைத் திருமணமாகும்.

அதைவிட மிக முக்கியம் என்னவென்றால், இதை ஏற்றுக்கொண்ட மணமகளின் பெற்றோர் மிகவும் பாராட்டப்படத்தக்கவர்கள்.

இந்த மணவிழாவில் நீங்கள் இருவருமே பொருத்த மான மணமக்கள். நீங்கள் வாழ்க்கைத் துணை யேற்கிறீர்கள். நீங்கள் நல்ல வண்ணம் ஒருவருக்கொருவர் சிறப்பாக வாழவேண்டும்.

மணமக்களுக்கு வேண்டுகோள்!

நான் எப்பொழுதுமே இளைஞர்களுக்கு, மணமக் களுக்கு அறிவுரை சொல்வதில்லை. இந்தக் கால இளை ஞர்களுக்கு அறிவுரை தேவையில்லை; அவர்களும் கேட்பதற்குத் தயாராக இருக்கமாட்டார்கள்.

அதற்குப் பதிலாக வேண்டுகோளாகத்தான் வைப் பேன்.

என்னவென்றால், அன்புள்ள மணமக்களாக இருக் கக்கூடிய சண்முகம் அவர்களே, மாலினி அவர்களே! நீங்கள் இருவரும் படித்தவர்கள், பட்டதாரிகள்; நீங்கள் இருவரும் பொறுப்பான பதவிகளில் இருக்கக் கூடியவர்கள். 

எதிர்காலத்தில் நீங்கள் நிறைய அளவிற்கு உயர் வீர்கள்; நல்ல வளமாக வாழவேண்டும் என்று விரும்பு கிறோம்; வாழ்வீர்கள், அதிலொன்றும் சந்தேகமேயில்லை.

ஆனால், வாழ்வில் நீங்கள் எவ்வளவுதான் உயர்ந் தாலும், எவ்வளவு பெருமை பெற்றாலும், உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் என்னவென்றால், உங்கள் தாய் - தந்தையர் செய்த, உங்களுக்கென தந்த உழைப்பை நீங்கள் மறந்துவிடாதீர்கள்.

உங்கள் பெற்றோருக்கு நன்றி காட்டுங்கள்! அந்தப் பெற்றோருடைய தியாகம், உழைப்பு, பாசம் அதுதான் உங்களை பட்டதாரிகளாகவும், நல்ல வேலை வாய்ப் பைப் பெற்றவர்களாகவும் ஆக்கி நல்ல வாழ்க்கைத் துணையைப் பெறக்கூடிய அளவிற்கும் வந்திருக்கிறது.

எனவே, அந்தப் பெற்றோரிடம் அன்பைக் காட்டுங்கள்.

தன்முனைப்பு இல்லாமல் இருக்கவேண்டும்

இரண்டாவதாக, மணமக்களாகிய நீங்கள் தன் முனைப்பு (ஈகோ) இல்லாமல் இருக்கவேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழவேண்டும்.

அறிஞர் அண்ணா அழகாகச் சொன்னார்,

விட்டுக் கொடுப்பவர்கள், கெட்டுப்போவதில்லை;

கெட்டுப் போகிறவர்கள், விட்டுக் கொடுப்பதில்லை

என்று.

இதை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் மணமக்களாகிய நீங்கள். அப்படி நினைவில் வைத்துக் கொண்டீர்களேயானால், வாழ்க்கையில் எந்தவிதமான சங்கடங்களும் வராது.

மணமக்களே, எளிமையாக வாழுங்கள்; சிக்கனமாக வாழுங்கள்.

இல்லறத்தில் இருந்துகொண்டே செய்வது தொண்டறம்!

இல்லறத்திற்குப்  துறவறம் என்று சொல்வார்கள்; அய்யா அவர்கள்தான், திராவிடர் இயக்கம்தான் - இல்லறத்தில் இருந்துகொண்டே செய்வது தொண்டறம்  என்றாக்கினர்.

எனவே, தொண்டு செய்யவேண்டும்.

தன்பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு என்று இருக் கக்கூடாது; இன்றைக்கு சண்முகத்திற்கு ஏன் இவ்வளவு செல்வாக்கு; இளைஞர்களின்மேல் ஈர்ப்பு வருகிறது - ஏன் மணிவண்ணன்மேல் இவ்வளவு பெரிய ஈர்ப்பு இளைஞர்களுக்கு இருக்கிறது?

காரணம் என்ன?

அவர்கள் தொண்டு செய்கிறார்கள்; தொண்டறச் செம்மல்களாக இருக்கிறார்கள் என்பதுதான் மிகவும் முக்கியமானது.

எனவே, உங்கள் வாழ்க்கை எவ்வளவு சிறப்பானது; வரவு - செலவுக்கு உட்பட்டு உங்கள் மணவிழாவினை சிறப்பாக நடத்திக் கொள்கிறீர்கள்.

இந்த மணவிழா முறை என்பது மிக மிக முக்கியமானது.

விட்டுக் கொடுப்பதில் தவறேதும் இல்லை

மணவிழா என்பது இரு குடும்பங்கள் இணைவது. அவர்கள் நம் வழிக்குவந்து, ஓரளவிற்கு விட்டுக் கொடுத்து, இந்த மணமுறை நடந்தால், நாம் அவருக்குக் கொஞ்சம் விட்டுக் கொடுப்பதில் தவறேதும் இல்லை.

அவர்களுடைய மனநிறைவு இருக்கவேண்டும். இரண்டு குடும்பங்கள் இணைகின்றன. போகப் போக ஒருவருக்கொருவர் இருக்கின்ற சங்கடங்கள் எல்லாம் மாறும்.

அந்த வகையில், இந்த மணவிழாவில், மாலைகளும் உண்டு; தாலியும் உண்டு. அதைப்பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை.

மணமகன் சண்முகத்திற்கு ஒரு மூலையில் நெருடல் இருக்கலாம்; ஆனால், மணமக்களின் குடும்பத்தினர் இவ்வளவு தூரம் விட்டுக் கொடுத்து வந்திருக்கும்பொழுது, இவர் விட்டுக் கொடுப்பதில் தவறு இல்லை.

திருமணம் முடிந்த பிறகு, அது உங்கள் இரண்டு பேருடைய உரிமையாகும்.

பெண் பிள்ளைகள் இப்பொழுதுதான் படிக்க வந்திருக்கிறார்கள்; அவர்களை வெளியில் தைரியமாக அனுப்புகிறார்கள்.

நூறு ஆண்டுகளுக்குமுன்பு பெண்கள் படிப்பதற்கே அனுப்பமாட்டார்கள்.

இங்கே பாருங்கள், ஏராளமான தோழர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். மகளிர் எல்லாம் நாற்காலியில் வசதியாக அமர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, கிராமப் பகுதிகளில் இதுபோன்று ஆண்கள் நிற்பதும், பெண்கள் நாற்காலியில் அமர்ந்திருந்தால், விட்டுவிடுவார்களா, சாதாரணமாக?

‘‘இந்தப் பெண்ணுக்கு எவ்வளவு திமிர் பார்?’’ என்பார்கள்.

‘‘செருப்புப் போட்டு நடந்தால் எவ்வளவு திமிர் பார்?’’ என்பார்கள். செருப்பை, அவர்களுடைய பாதுகாப்பிற் காகப் போடுகிறார்கள், அதிலொன்றும் தவறில்லை.

பெண்ணினத்தினுடைய விலங்குகளை  உடைத்தவர்தான் அறிவாசான் தந்தை பெரியார்

இப்படியெல்லாம் அடிமைப்படுத்தி வைத்திருந்த பெண்களை, அந்தப் பெண்ணினத்தினுடைய விலங்கு களை  உடைத்தவர்தான் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள்.

இன்றைக்கு அதற்குச் சிறப்பு செய்கின்ற இயக்கம்தான் திராவிட இயக்கம் - அதைப் பாதுகாத்துக் கொண்டு போவதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி!

இவை அத்தனையும் சிறப்பாக இருக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். 

எனவே, இந்த மணவிழா ஓர் அற்புதமான கொள் கைத் திருவிழா.

என்னிடம் தேதி வாங்கியது மணவிழாவிற்காகத்தான். மணிவண்ணன் அவர்கள், ‘‘ஞாயிற்றுக்கிழமையாக இருக்கவேண்டும்; அப்பொழுதுதான் ஆசிரியர்கள் எல்லாம் வருவதற்கு வசதியாக இருக்கும்’’ என்று சொன்னார்.

என்னுடைய சுற்றுப்பயண தேதியை தலைமை நிலையத்தினர்தான் முடிவு செய்வார்கள்; என்றாலும், அப்பொழுது பொதுச்செயலாளரை நான் அழைத்துச் சொன்னேன், ‘‘சண்முகம் மிகவும் கஷ்டப்பட்டவர்; அவர் விரும்புகிற தேதியை நீங்கள் கொடுங்கள்; அதற்காக மற்ற நிகழ்ச்சிகளை மாற்றிக் கொள்ளலாம்’’ என்றேன்.

அழைப்பிதழ் கொடுப்பதற்காக நம்முடைய ஆரோக் கியராஜ், தனலட்சுமி அம்மையார், மணிவண்ணன் ஆகியோர் கார் வைத்துக்கொண்டு சென்னைக்கு வந்து என்னை சந்தித்து அளித்தார்கள்.

அப்பொழுதுகூட நான் கண்டித்துக் கேட்டேன், ‘‘எதற்காக இவ்வளவு தூரம் செலவு செய்து வந்தீர்கள்; அஞ்சலில் கூட அழைப்பிதழை அனுப்பியிருக்கலாமே? நான்தான் வருகிறேன் என்று தேதி கொடுத்திருக்கிறேனே’’ என்றேன்.

‘‘உங்களை சந்தித்தால், எங்களுக்கு மகிழ்ச்சி’’ என்று சொன்னார்கள்.

சிக்கனம் வேறு - கருமித்தனம் வேறு!

ஏனென்றால், அய்யா அவர்கள், மிகச் சிக்கனமாக இருந்தவர். 

சிக்கனம் என்பது, வரவிற்கு உட்பட்டு செல வழிப்பதுதான் சிக்கனம்.

தேவையானவற்றிற்குச் செலவழிப்பதற்குப் பெயர் தான் சிக்கனம்.

சிக்கனம் வேறு; கருமித்தனம் என்பது வேறு. இரண் டிற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ளவேண்டும். சிக்கனத்தையும், கருமித்தனத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்வார்கள் சிலர்.

தேவைக்கு செலவழிப்பதற்குப் பெயர் சிக்கனம்.

தேவைக்கே செலவழிக்காததற்குப் பெயர் கருமித் தனம்.

தேவைக்குமேல் செலவழிப்பதற்குப் பெயர் ஆடம்பரம்.

ஆடம்பரமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. அதே சமயத்தில் கருமித்தனமாகவும் இருக்கவேண்டிய அவசியமில்லை.

மேடையில் கேக் வைத்திருந்தார்கள்!

அந்த வகையில், இந்த மணவிழா ஒரு மாநாடுபோல் நடைபெற்று இருக்கிறது. இங்கே வந்து பார்த்தால், மேடையில் கேக் வைத்திருக்கிறார்கள். என்னுடைய 90 ஆவது பிறந்த நாளுக்காக என்று சொன்னார்கள்.

என்னுடைய பிறந்த நாளன்றே வீட்டில்கூட கேக் வெட்டி கொண்டாடமாட்டேன்.

பிறந்த நாள் என்ன, பிறந்த நாள்? அதுவும் மற்ற நாளைப் போல சாதாரண நாள்தான், என்னைப் பொறுத்தவரையில்,

கலைஞர் அவர்கள்தான், முதன்முதலில் என்னுடைய பிறந்த நாளன்று, பொது நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்ளவேண்டும் என்று சொல்லி, அதற்கான ஏற்பாடுகளை அவரே செய்தார்.

அதேபோன்று இன்றைக்கு நம்முடைய  முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

எல்லோரும், 90 வயது, 90 வயது என்று சொன்னார்கள். ஒரு கேக்கையும் வைத்திருக்கிறார்கள்.

நியாயமாக இந்தக் கேக் மணமக்களுக்காக வைத் திருக்கவேண்டும். ஆகவேதான், நான் முதலில் அதை வெட்டியவுடன், மணமக்களுக்குக் கொடுத்தேன். மணமகன், மணமகளுக்கு கேக் ஊட்டினார்.

இங்கே தோழர்கள் எனக்கு வயது 90 வயது, 90 வயது என்று சொன்னார்கள்.

எனக்கு வயது 19 என்று நினைத்துக் கொண்டிருக்கின்றேன்!

எனக்கு சங்கடமான ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் எனக்கு 90 வயது என்று என்னை வாழ்த்து கிறீர்கள்; ஆனால், நான் எனக்கு வயது 19 என்று நினைத் துக் கொண்டிருக்கின்றேன். இன்னும் வேலை செய்ய வேண்டும்; வேலை செய்யவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால், நீங்கள் 90, 90 என்று சொல்வதினால், எனக்கு வயதாகிவிட்டது என்று சொல்வதுபோன்று இருக்கிறது.

பரவாயில்லை, உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி!

இந்த மணவிழாவினை நடத்தி வைப்பதற்கு முன்பு, அவர்களுடைய பெற்றோர்களுக்கு சிறப்பு செய்து, அதற்குப் பிறகு, மணமக்களை உறுதி மொழி ஏற்கச் செய்து, இந்த மணவிழாவினை நடத்தி வைக்கிறேன்.

மணமக்களின் பெற்றோரைப் பாராட்டவேண்டும்; மணமகனின் அம்மா தனலட்சுமி அம்மையார் ஆனா லும், அதேபோன்று மணமகளுடைய பெற்றோர் கதிரேசன் - ராஜேசுவரி ஆகியோரும் பாராட்டுதலுக்கும், வாழ்த்துதலுக்கும், பெருமிதத்திற்கும் உரியவர்கள்.

மணமகளின் பெற்றோருக்குப் பாராட்டு!

அவர்களுக்குத் தலைமைக் கழகத்தின் சார்பில், இந்தப் பெருமையை செய்கிறோம். இது ஓர் எடுத்துக் காட்டான கொள்கைத் திருவிழா என்கிற காரணத்தினால்.

(மணமக்கள் பெற்றோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்துப் பாராட்டுகளைத் தெரிவித்தார்).

வாழ்க மணமக்கள்!

வாழ்க பெரியார்! 

வளர்க பகுத்தறிவு!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த் துரையாற்றினார்.


No comments:

Post a Comment