வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 24, 2023

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

 மராட்டியத்தில் ஒரு மகத்தான அமைதிப் புரட்சி!

மராட்டிய மாநிலத்தில், சமூகப் புரட்சியாளர் களான ஜோதிபா புலே - சாவித்திரிபாய் புலே காலத்திலிருந்து (19ஆவது, 20ஆவது நூற்றாண்டு காலத்தில்) கோலாப்பூர் சமஸ்தானத்தினை ஆண்ட சாகுமகராஜ் என்ற சிவாஜியின் வழித் தோன்றல்  சத்திரபதி சாகு மகராஜ் ஆண்ட சமூகநீதி சுயமரியாதை மண்ணாம் கோலாப்பூரில் ஓர் அமைதிப் புரட்சி நடந்துள்ளது! சனாதனத்தின் அடி வேரில் வெந்நீர் ஊற்றப்பட்ட நிகழ்ச்சி அது!!

சாகு மன்னர் சமூகநீதி, பாலியல் நீதியை அந்த மண்ணில் விதைத்தார். இத்தனை ஆண்டுகளுக் குப் பின்னரும் அது துளிர் விட்டு கிளைத்து செழித்து வருகிறது என்பதற்கு சரியான ஓர் அடையாளம் இதோ! படித்து, வியந்து, மகிழுங்கள்?

'தினத்தந்தி' நாளிதழ் சென்னை பதிப்பு - 24.1.2023 பக்கம் 11இல் (படத்துடன்) உள்ள அந்த செய்தியை அப்படியே தருகிறோம்:

தந்தை விபத்தில் உயிரிழந்த நிலையில் 

தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன் மராட்டியத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

மும்பை, ஜன.24 தந்தை விபத்தில் உயிரிழந்த நிலையில், தாய்க்கு மகனே மறுமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் மராட்டியத்தில் நடந்து உள்ளது. 

தாய்க்கு மறுமணம் 

கணவர் இறந்தவுடன் பெண்களும் உடன் கட்டை ஏறும் பழக்கம் முன்பு இருந்தது. சமூக சீர்திருத்தவாதிகளால் அந்த பழக்கம் ஒழிக்கப்பட்டது. ஆனாலும் குறைந்த வயதில் கணவரை இழந்த பெண்கள் பலர் வாழ்க்கைத் துணை இல்லாமல் தனியாக வாழும் நிலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 

இந்த நிலையில் மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் தந்தையை இழந்த வாலிபர் ஒருவர் அவரது 45 வயது தாய்க்கு மறுமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்து உள்ளது. 

கோலாப்பூரை சேர்ந்தவர் யுவராஜ் செலே (வயது 23). இவரது தந்தை 5 ஆண்டுகளுக்கு முன் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். தந்தையின் மரணத்துக்கு பிறகு தாய் ரத்னா சமூகத்தால் புறக்கணிக்கப்படுவதை கண்டு யுவராஜ் செலே வேதனை அடைந்தார். குறிப்பாக சுப நிகழ்ச்சிகளுக்கு வாலிபரின் தாயை யாரும் அழைப்பது இல்லை.  

இதேபோல தாய் பெரும்பாலான நேரம் வீட்டில் தனியாக இருப்பதை கவனித்த யுவராஜ், தாய்க்கு வாழ்க்கைத் துணை தேவை என்பதை உணர்ந்து கொண்டார். அவர் தனது தீவிர முயற்சிக்கு பிறகு தாயை சமாதானம் செய்து அவரை மாருதி கன்வத் என்பவருக்கு மறுமணம் செய்து வைத்து உள்ளார். தாயின் மறுமணம் குறித்து மகன் யுவராஜ் கூறியதாவது:- 

சமூகம் புறக்கணித்தது 

18 வயதில் தந்தையை இழந்தது எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. ஆனால் அவரின் மறைவு எனது தாய்க்கு பேரிழப்பாக இருந்தது. அவர் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு தனிமையில் தவித்தார். எனது தாய் 25 ஆண்டு களாக தந்தையுடன் திருமண பந்தத்தில் இருந்தார். ஒரு ஆண் மனைவியை இழக்கும் போது, அவர் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என சமூகம் நினைக்கிறது. 

ஆனால், அதே ஒரு பெண் கணவரை இழந்தால் மட்டும் சமூகம் ஏன் அவரும் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என உணர மறுக்கிறது என்பதை நினைத்தால் வியப்பாக உள்ளது. எனவே தான் எனது தாய்க்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்தேன். அதற்கு அவரை கடும் முயற்சிக்கு பிறகு சம்மதிக்கவும் வைத்தேன். 

கோலாப்பூர் போன்ற பாரம்பரியம் மிக்க ஊரில் இதுபோன்ற மறுமணத்திற்கு குடும்பத்தினர், உறவினர்களை சம்மதிக்க வைப்பது எளிதானது அல்ல. 

சிறப்பு வாய்ந்த நாள் 

நண்பர்கள், உறவினர்களுடன் தாய்க்கு பொருத்தமானவரை தேடினேன். நல்வாய்ப்பாக மாருதி கன்வத் குறித்து எங்களுக்கு தெரியவந்தது. அவருடன் மறுமணம் பற்றி பேசினோம். அவர் ஒப்புக்கொண்ட பிறகு திருமணம் முடிவு செய்யப் பட்டது. எனது தாய்க்கு பொருத்தமானவரை தேடி கண்டுபிடித்ததால் அந்த நாள் எனக்கு சிறப்பு வாய்ந்த நாளாக அமைந்தது. இவ்வாறு அவர் மகிழ்ச்சி பொங்க கூறினார். 

மறுமண தம்பதி நெகிழ்ச்சி 

இதுகுறித்து மாருதி கன்வத் கூறுகையில், "நான் கடந்த சில ஆண்டுகளாக தனியாக தான் வாழ்ந்து வந்தேன். ரத்னாவை சந்தித்து அவருடன் பேசிய பிறகு தான் அவரது குடும்பத்துடன் சேர்ந்து வாழ முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன். அவர்கள் உண்மையானவர்கள்" என்றார். 

மறுமணம் செய்த வாலிபரின் தாய் ரத்னா கூறுகையில், "ஆரம்பத்தில் எனக்கு மறுமணத்தில் விருப்பம் இல்லை. எனது கணவரை மறக்க நான் தயாராக இல்லை. ஆனால் பல விஷயங்கள் குறித்து பேசிய பிறகு சமாதானம் அடைந்தேன். வாழ்நாள் முழுவதும் இனிமேல் தனியாகவே வாழப்போகிறாயா என எனக்குள் நானே கேட்டு கொண்டேன். இறுதியில் மறுமணத்திற்கு சம்மதித்தேன்" என்றார். 

விதவை தாய்க்கு மகனே நடத்தி வைத்த திருமணத்துக்கு வந்தவர்கள் சீர்திருத்த கல்யாண தம்பதியை மனதார வாழ்த்தி சென்றனர்."

இதுதான் அந்தச் செய்தி.

சொந்தத்தாய்கூட - தான் வளர்த்து ஆளாக்கிய மகனின் திருமணத்தில்கூட, வாழ்வினில் இணையும் மணமக்களுக்கு முன் வந்து வாழ்த்துக் கூறுவதற்கு உரிமையில்லை. அப்படி மீறி வந்தால் அது 'அபசகுனம்'; என்பதால் மூலையில் அழுது புலம்பும் அவலம்தான் ஹிந்து சனாதன மதம் சமூகம் அந்தத் தாய்க்குத் தந்த கொடுங்கொடை!

அதனை எதிர்த்துத்தான் ஜோதிபாபுலே, சாகு மகராஜ், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், நாராயண குரு போன்றவர்கள் எழுப்பிய புரட்சியினால் நம் மண்ணும் மக்களும் எப்படி பக்குவப்பட்டுள்ளார்கள் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்றாவணம் ஆகும்.

மகன் தனது கணவனை இழந்த அம்மாவுக்கு மறுமணம் செய்து மகிழ்ந்தது எத்தனை அமைதிப் புரட்சி, சுயமரியாதை அறிவுப் புரட்சி.. பெரியார் அம்பேத்கர் எப்போதும் எங்கும் வாழ்கின்றார்கள் என்பது புரிகிறதல்லவா?


No comments:

Post a Comment