தந்தை பெரியார் எப்படி அலுக்காமல் உழைத்தாரோ - அதேபோல இந்த மண்ணின் விடுதலைக்காக - இந்த மனிதர்களின் விடுதலைக்காக ஆசிரியர் அவர்கள் ஒவ்வொரு நாளும் பயணம் செய்துகொண்டிருக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 20, 2022

தந்தை பெரியார் எப்படி அலுக்காமல் உழைத்தாரோ - அதேபோல இந்த மண்ணின் விடுதலைக்காக - இந்த மனிதர்களின் விடுதலைக்காக ஆசிரியர் அவர்கள் ஒவ்வொரு நாளும் பயணம் செய்துகொண்டிருக்கிறார்

திருப்­பத்­தூ­ர்  முப்பெரும் விழாவில் கவிஞர் கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. 

திருப்பத்தூர், டிச.20 தந்தை பெரியார் எப்படி அலுக் காமல் தொடர்ந்து உழைத்தாரோ அதேபோல இந்த மண்ணின் விடுதலைக்காக இந்த மனிதர்களின் விடு தலைக்காக நம்மைப் பிடித்துக் கொண்டிருக்கக்கூடிய அந்தக் கயிறுகளை எல்லாம் அறுத்து விட வேண்டும் என்ற அந்த முனைப்போடு ஆசிரியர் அவர்கள் ஒவ்வொரு நாளும் எழுதிக் கொண்டும், பேசிக் கொண்டும், பயணம் செய்து கொண்டும் இருக்கிறார்.  அவர்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என கனிமொழி கருணாநிதி எம்.பி. பேசியபோது குறிப்பிட்டார்.

கடந்த 17.12.2022 அன்று மாலை திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில், திராவிடர் கழகம் சார்பில், சுயமரியாதைச் சுடரொளி ஏ.டி.கோபால் நூற்றாண்டு விழா, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் 90 ஆவது பிறந்த நாள், 60 ஆண்டுகள் 'விடுதலை' நாளேட்டின் ஆசிரியர் பணியை பாராட்டி சந்தா வழங்கும் விழா என “முப் பெரும் விழா” நடைபெற்றது.

இதில், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், தி.மு.க.  நாடாளுமன்றக் குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, ஏ.டி.கோபால் நினைவு புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்தார்.

இந்தக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் 

ஆசிரியர் கி.வீரமணி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாடு காங்கிரஸ் மேனாள் தலைவர் ஈ.வி.கி.ச.இளங் கோவன், வி.சி.க. துணைப் பொதுச்செய லாளர் -சட்ட மன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், பெரியார் பன்னாட்டு மய்ய தலைவர் சோம.இளங் கோவன், ம.தி.மு.க. அரசியல் ஆய்வு மய்ய செயலாளர் செந்திலதிபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேசியதாவது:

“என்னுடைய தந்தையின் வீட்டிற்கு வந்த அதே மகிழ்வோடு உங்களின் முன்னால் நின்று கொண்டி ருக்கிறேன். எப்போதும் எனக்கு வழிகாட்டியாக எந்த நேரத்திலும் எனக்கு ஒரு ஆலோசனையோ தேற்று தலோ,  வழிகாட்டுதலோ தேவைப்படும்போது நான் திரும்பிப் பார்க்கக் கூடிய ஒருவராக என் வாழ் நாளெல்லாம் வரித்துக் கொண்டிருக்க கூடிய ஒருவர்தான் ஆசிரியர்.

தலைவர் கலைஞர் அவர்கள் ஏதாவது விவாதிக்க வேண்டும் என்றால், கொள்கை அளவில் முடிவு எடுக்க வேண்டும் என்றால், இனமானப் பேராசிரியரை எப்படி அழைத்துப் பேசுவாரோ,  அதேபோல நமது ஆசிரிய ரையும் அழைத்து அவருடைய கருத்தைக் கேட்காமல் எதையுமே செய்தது கிடையாது. அப்படிப்பட்ட உறவு, அப்படிப்பட்ட நட்பு அவர்களுக்கு இடையிலே. அதுவும் கருத்தியல் அடிப்படையிலான,  கொள்கை அடிப்படையிலான  இந்த நட்பு ஒன்றுதான் இறுதிவரை உறுதியாக இருக்கக் கூடிய ஒரு உறவு.

ஆசிரியரின் சட்டத் தெளிவு!

சில சமயங்களில் ஆசிரியரிடம் பேசிக்கொண் டிருக்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.  எந்த அளவிற்கு அவருக்கு சட்டங்களைப் பற்றி, சட்ட நுணுக் கங்களைப் பற்றி ஓர் ஆழ்ந்த அறிவு.  அதுவும் நம் முடைய சமூக நீதியை காக்கக்கூடிய எந்தவித சட்டமாக இருக்கட்டும். எந்த நேரத்திலே கேட்டாலும் தூக்கத்திலே எழுப்பிக் கேட்டாலும் சொல்வார் என்று சொல்வார்களே; அதுபோல எழுந்து உட்கார்ந்து நமக்கு ஆழமான விளக்கத்தை, ஆணித்தரமான விளக்கத்தைத் தரக்கூடிய ஒருவர்தான் ஆசிரியர். ஏனென்றால் தன் வாழ்வு முழு வதையுமே பெரியாரின் கருத்துகளை, கோட்பாடுகளை, அவர் முன்னெடுத்து இருக்கக்கூடிய போராட்டங்களை தொடர்ந்து எடுத்துச்செல்வது என்று தன்னை தக வமைத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒருவர்தான் நம் முடைய ஆசிரியர்.

சவாலான தருணங்களில் 

நான் நினைக்கும் வார்த்தைகள்!

ஆசிரியர் எனக்கு மிக முக்கியமான ஒரு கருத்தைச் சொல்லித் தந்திருக்கிறார். பள்ளிக்கூடத்திலே நான் சிறுமியாக படித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலே திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து பல தோல்வி களைச் சந்தித்து வந்த நேரம் அது. அப்போது எனக்கு மனம் சோர்வாக இருந்தது. சுற்றி இருக்கக்கூடிய அனை வரும் சோர்வாக இருந்த அந்த நேரத்திலே. அடுத்த நாள் பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டும். ஏதாவது கேலி பேசி விடுவார்களோ என்ற அச்சம். அந்த நேரத் தில் வீட்டில் இருந்த தலைவர் கலைஞரை பார்க்க ஆசிரியர் வந்தார்.

அப்போது தலைவர் கலைஞர் ஆசிரியரிடம், ‘கனி ரொம்ப வருத்தமா இருக்கு. நாளைக்கு பள்ளிக்கூடம் போகும்போது யாராவது கேலி பேசுவார்களோ அப்படின்னு கவலைப்படுது’ என்று சொன்னபோது...  ‘பொது வாழ்க்கை என வந்துவிட்ட பிறகு தனிப்பட்ட மானம் என்பது அவசியமற்ற ஒன்று. அது தவறான எண்ணம். பொது வாழ்க்கை என  வந்துவிட்டால் நான் என்ற எண்ணத்தை தூக்கி எறிந்துவிட்டு இந்த சமூகத்தின் மீது மட்டுமே அக்கறை காட்ட வேண்டும்’ என்று சொன்ன அந்தத் தலைவனின் வார்த்தைகளை அப்போது ஆசிரியர் என்னிடம் கூறினார்.

’நாம்  யார் நாம் எதற்காக இந்தப் பயணத்தை எடுத்துச்செல்கிறோம் என்பது மட்டுமே முக்கியம். வெற்றி - தோல்வி என்பது முக்கியம் கிடையாது’ என்பதை அன்று எனக்கு சொன்னார் ஆசிரியர். இன்று வரை ஒவ்வொரு முறையும் என்னுடைய அரசியல் பயணத்தில் நான் சந்திக்க கூடிய ஒவ்வொரு சவாலின் போதும் அந்த வார்த்தைகளைத் தான் நான் நித்தம் நினைத்துக் கொள்கிறேன்.

பரம்பரைப் பகையின் அரசியல் வடிவம்

இந்தக் காலகட்டம் என்பது இங்கே பேசிய ஆளூர் ஷாநவாஸ் குறிப்பிட்டுச் சொன்னதைப் போல, இந்த நாட்டிற்கே ஒரு சவாலான காலகட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

எப்படி ஒரு கொள்கையின் அடிப்படையில் நாம் ஓர் அரசியலைக் கட்டி எழுப்பி இருக்கிறோமோ.  எல்லோருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கக்கூடிய, ஆண், பெண், ஜாதி, மதம் என்ற வித்தியாசங்கள் இல்லாத, அனைவரையும் உள்ளடக்கிய, சுயமரியாதை தரக்கூடிய, ஓர் உலகத்தை உருவாக்க நாம் எத்தனிக் கிறோம். அதே கொள்கைகளுக்கு நேர் எதிராக ஒரு கொள்கை கோட்பாட்டை வைத்துக்கொண்டு அதைச் சுற்றி ஓர் அரசியலை நமக்கு எதிரணியிலே நிற்கக்கூடி யவர்கள் தகவமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருமுறை அம்மையார் ஜெயலலிதா அவர்கள் சொன்னார்களே ‘பரம்பரைப் பகை’ என்று, அந்தப் பரம்பரைப் பகையின் முழு வடிவமாக அவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்.  நாம் பேசுவது சமூகநீதி. அவர் கள் பேசுவது சமூக அநீதி. ‘‘எல்லாம் எங்களுக்கு மட்டும்தான். எங்களைச் சேர்ந்தவர்கள் தான் கோவி லுக்கு உள்ளே போக உரிமை இருக்கிறது, நான் சொல்வது தான் மதம்,  என்னைச் சார்ந்தவர்கள் தான் படிக்க வேண்டும், பதவியில் இருக்க வேண்டும், சட்டங்களை இயற்ற வேண்டும், ஆட்சியிலே இருக்கவேண்டும், எல்லாம் எங்களிடம் இருந்துதான் வர வேண்டும்.  உங்களுக்கு இந்தச் சமூகத்திலே கருத்துச் சொல்லக்கூடிய உரிமை இல்லை, எதுவும் கிடையாது. 300 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சமூகம் எப்படி இருந்ததோ, அதே சமூகத்தை மறுபடியும் கட்டி எழுப்பிவிட வேண்டும்’’ என்பதுதான் அவர்களுடைய கனவு.

பெண்ணா? மறுபடியும் சமையலறைக்குள்ளே போ...  காலை வெளியில் எடுத்து வைக்காதே...  வெளியில் எடுத்து வைத்தாய் என்றால் என்ன நடந்தாலும் அது உன்னுடைய தவறு.  உன்னுடைய உடையிலே தவறு.  நீ நின்ற இடத்தில் தவறு.  நீ வெளியே வந்ததே தவறு.  நீ படித்தது தவறு.  நீ கையில் செல்போன் வைத்திருந்தது தவறு என்று சொல்லக் கூடியவர்கள் இன்று மத்தியிலே ஆட்சியிலே இருக்கிறார்கள்.

அவர்களுக்கென்று தனி இட ஒதுக்கீடு!

அய்.அய்.டி.க்குள் சென்றீர்கள் என்றால் இட ஒதுக்கீடு இருக்கிறது என்ற பெயர்தான். நம் பிள்ளைகள் நல்ல மதிப்பெண் எடுத்து ‘ஜெனரல் கேட்டகிரி’யில் வந்தால் அதில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அவர் களுக்கென்று ஒரு இட ஒதுக்கீட்டை உருவாக்கி வைத் திருக்கிறார்கள். அதாவது ‘ஜெனரல் கேட்டகிரி’ என்பது அவர்களுக்கே சொந்தம். நீங்கள் என்ன மதிப்பெண் எடுத்தாலும் அதற்குள் போக முடியாது என்ற நிலை. இப்படி பல இடங்களில் ஒரு நிலையை அவர்கள் உருவாக்கி வைத்திருக்கிற சூழ்நிலையிலும் இப்போது 10 சதவீத இட ஒதுக்கீடும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிலையை நாம் பார்க்கிறோம்.

மருத்துவக் கல்லூரிகளில் நம் பிள்ளைகள் போய் படிக்க முடியாதபடி புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருகிறார்கள். ஒரு மாணவன் இருந்தாலும் அங்கே பள்ளிக்கூடம் நடக்க வேண்டும் என்பதுதான் நம் கொள்கை. அந்த ஒரு மாணவிக்கோ, ஒரு மாண வருக்கோ கல்வி மறுக்கப்படக் கூடாது என்பதுதான் ‘திராவிட மாடல்'. எல்லா பள்ளிக்கூடங்களையும் இழுத்து மூடி விட்டு ஒரே இடத்தில் எல்லா மாண வர்களையும் அழைத்துக் கொண்டு வந்து...

‘வந்தால் வா, வராவிட்டால் போ, நீ படிப்பதைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை' என்று சொல்லக்கூடிய புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருவதுதான் அவர்களுடைய கொள்கை..

இந்த இரண்டுக்கும் ஏதாவது ஒரு சம்பந்தம் இருக்க முடியுமா? நாம் நிற்கக் கூடியது ஒரு விளிம்பு. அவர்கள் இருக்கக் கூடியது இன்னொரு எல்லை.  நாம் நம்பக் கூடியது பெரியார் நம்பிய மனிதநேயம்.  மனிதர்கள் அத்தனை பேரும் சமம்.  இந்த நிலைப்பாட்டை உடைத்து அழித்துவிட வேண்டும் என்பதற்காகவே உருவாக்கி இருக்கிற சித்தாந்தத்தை அவர்கள் இன்று அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொருவராக தேடிச் செல்ல வேண்டும்

அவர்கள் முன்வைக்கக்கூடிய அரசியல் என்பது  ஓட்டுக்கான அரசியல் மட்டும் இல்லை, அதைத் தாண்டி அவர்களின் கருத்துகளை இந்த மண்ணிலே விதைத்து விட வேண்டும்.  நாடு முழுவதையும் மீண்டும் ஒரு அடிமைத் தனத்துக்குள் கிடத்தி விட வேண்டும் என்ற எண்ணத்தோடும், முனைப்போடும் அவர்கள் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே, நம்முடைய வெற்றி என்பது ஒரு அரசியல் வெற்றி மட்டுமல்ல... அதைத் தாண்டி இங்கே இருக்கக் கூடிய ஒவ்வொருவரும்.. அவர்கள் எப்படி ஒவ்வொரு கோவிலாக ஒவ்வொரு விக்கிரகமாக தேடித் தேடி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்களோ... அதே போல நாம் ஒவ்வொரு வீடாக, ஒவ்வொரு இளைஞராக, ஒவ்வொரு இளம்பெண்ணாக, ஒவ்வொரு சகோதரியாக, ஒவ்வொரு சகோதரனாக, ஒவ்வொரு தாய்மாராக, தேடிச்சென்று அவர்களைச் சந்தித்து நம்முடைய கருத்துகளை நம்முடைய விடுதலையை, இந்த இனத்தின் 'விடுதலை'யை நாம் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும்.

‘‘பெரியாரைப் போன்ற உழைப்பு’’

இந்த வயதிலும் அயராத உழைப்பு. நாங்கள் எல்லாம் ஒரு வேலையை முடித்துவிட்டு ஊருக்குச் சென்று விடுகிறோம். ஆனால், இவர் ஒரு ஊரில் ஒரு வேலையை முடித்துவிட்டு இன்னொரு ஊர், அடுத்த ஊர், அடுத்த ஊர் என்று சென்று கொண்டிருக்கிறார். தந்தை பெரியார் எப்படி அலுக்காமல் தொடர்ந்து உழைத்தாரோ அதே போல இந்த மண்ணின் விடுதலைக்காக இந்த மனிதர் களின் விடுதலைக்காக நம்மைப் பிடித்துக் கொண்டி ருக்கக்கூடிய அந்தக் கயிறுகளை எல்லாம் அறுத்து விட வேண்டும் அந்த முனைப்போடு ஆசிரியர் அவர்கள் ஒவ்வொரு நாளும் எழுதிக் கொண்டும், பேசிக் கொண்டும் பயணம் செய்து கொண்டும் இருக்கிறார்.  அவர்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும்.

இந்த மண்ணின் விடுதலையை, தமிழனின் விடு தலையை, பகுத்தறிவை இந்த மண் முழுதும் விதைத்து விட்டோம் என்ற பெருமையை பார்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment