பி.ஜே.பி. குஜராத்தில் வெற்றி பெற்றாலும் - இமாச்சலப்பிரதேசத்திலும், இடைத்தேர்தல்களிலும் பெற்ற தோல்வியை மறைப்பானேன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 9, 2022

பி.ஜே.பி. குஜராத்தில் வெற்றி பெற்றாலும் - இமாச்சலப்பிரதேசத்திலும், இடைத்தேர்தல்களிலும் பெற்ற தோல்வியை மறைப்பானேன்?

பொது எதிரி யார்? கொள்கை எதிரி யார்? என்பதை உணர்ந்து எதிர்க்கட்சிகள் ஒன்றுபடாவிட்டால், வரலாறு மன்னிக்காது!

பி.ஜே.பி. குஜராத்தில் வெற்றி பெற்றாலும் - இமாச்சலப்பிரதேசத்திலும், இடைத்தேர்தல்களிலும் பெற்ற தோல்வியை மறைப்பானேன்? பொது எதிரி யார்? கொள்கை எதிரி யார்? என்பதை உணர்ந்து எதிர்க்கட்சிகள் ஒன்றுபடாவிட்டால், வரலாறு மன்னிக்காது! என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அண்மையில் குஜராத், இமாச்சலப்பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடை பெற்று நேற்று (8.12.2022) முடிவுகள் வெளியாகியுள்ளன.

குஜராத்தில் நடைபெற்ற தேர்தலில், தொடர்ந்து ஏழாவது முறையாக பா.ஜ.க.  வெற்றி பெற்றுள்ளது.

156 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை 7 ஆவது முறையாக அமைக்கும் வாய்ப்பை அங்கு பா.ஜ.க. பெற்றிருக்கிறது.

இமாச்சல் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க.வை ஆட்சி பீடத்திலிருந்து அப்புறப்படுத்தி, நல்லதொரு வெற்றியைப் பெற்று சாதனை படைத் துள்ளது.

மொத்தம் 68 இடங்களில் 40 இடங்களைப் பெற் றுள்ளது காங்கிரஸ்; 25 இடங்களை மட்டும் பா.ஜ.க. பெற்று, தோற்றுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் போட்டியால் யாருக்குப் பலன்!

குஜராத் சட்டமன்றத்தில் காங்கிரஸ் 17 இடங்களை மட்டும் பெற்று எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது. புதிதாக களத்திற்கு வந்த ஆம் ஆத்மி கட்சி அங்கே மிகப்பெரிய தடபுடலோடு முதலமைச்சர் வேட்பாளரையே அறி வித்து, ஆர்ப்பாட்டம் செய்து, ஹிந்துத்துவா மற்றும் சில கவர்ச்சிகர அறிவிப்பு வித்தைகளைச் செய்தும், வெறும் 5 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது என்றாலும், இங்கே வாங்கிய வாக்குகள்மூலம் அது ஒரு மாநில கட்சி என்ற தகுதியைத் தாண்டி, தேசிய கட்சி (National Party) என்ற அந்தஸ்தைப் பெற அது உதவியுள்ளது.

குஜராத் அரசு மக்களின்- வாக்காளர்களின் அதிருப் திக்கு (Anti Incumbency) ஆளாகி இருந்ததை உணர்ந்து, நேரிடையாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சியான மோடி அரசு தனது தேர்தல் உத்திகளை, வித்தைகளை - வெகுவாக தலைகீழாக மாற்றிக் கொண்டது!

இலவசங்களால் நாடே கெட்டு விட்டது என்று தொடர்ந்து இதோபதேசம் செய்த பிரதமர் மோடி - பா.ஜ.க. - குஜராத்திலும், இமாச்சலப்பிரதேசத்திலும் ‘யு-டர்ன்' அடித்து, சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள இலவசங்களை அறிவித்து, இந்த வெற்றியைப் பெற்றுள்ளது!

அதுபோல, அதன் வெற்றிக்கு ஆம் ஆத்மி கட்சி ஹிந்துத்துவா முத்திரையை வெளிப்படையாக அறி வித்து, காங்கிரசின் வாக்குகளைப் பிரித்து, பா.ஜ.க. வெற்றி பெற பெரிதும் உதவியுள்ளது!

ஆனால், டில்லி மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது - ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

‘‘இல்லை, நாங்கள் பா.ஜ.க.வை - மோடி அரசை உண்மையாகவே எதிர்க்கிறோம்'' என்பது ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாடானால், மோடி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. எதிர்ப்பைப் பிளந்து, பா.ஜ.க. வெற்றிக்கு மறை முகமாக உதவிட அது ஒருபோதும் - வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் துணை போகக்கூடாது; போகமாட்டோம் என்று பகிரங்க மாகவே தெரிவித்து, ஒரு நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.

இடைத்தேர்தலில் பி.ஜே.பி.யின் 

படுதோல்வி எதைக் காட்டுகிறது?

குஜராத் வெற்றியை வெளிச்சம்போட்டுக் காட்டி, இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை இழந்த பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அதை ‘வசதியாக' மறைத்தோ, மறந்தோ, ஊடகங்களைப் பயன்படுத்தி மோடி அலை இருப்பது போல ஒரு பிரச்சாரத்தைச் செய்யும் உத்திக்கு உடனே தாவிவிட்டனர்!

உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், ராஜஸ் தான் போன்ற மாநிலங்களில் - மொத்தம் 7 இடங்களில் நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற இடைத்தேர்தல் களில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., 5 இடங்களில் தோல்வி அடைந்துள்ளது!

பீகாரில் ஜனதா தளம், உத்தரப்பிரதேசத்தில் ராஷ் டிரீய ஜனதா  தளம், சமாஜ்வாடி, ஒடிசாவில் பிஜு பட்நாயக் கட்சி, சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆகிய கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த இடங்களில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அடைந்த தோல்விகள் எதை உணர்த்துகின்றன?

பா.ஜ.க. அரசின் - ஆர்.எஸ்.எஸ். அரசின் அதிகார செல்வாக்கு கீழிறக்கத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது என்பதைத்தானே!

நாட்டில் எங்கும் ‘மோடி அலை' வீசுகிறது என்பது உண்மையில்லை; குஜராத் வெற்றி போன்ற பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். வெற்றிகூட பிரதமர் மோடி அலையால் என்பதைவிட, பிரதமர் மோடி வலையால் கிடைத்த பெரும் வெற்றி என்பதே சரியானதாக இருக்க முடியும்! வெறுப்பு அரசியல்மூலமும் விளைச்சல் கிடைத்திருக்கக் கூடும்!

தேர்தலில் வெற்றி பெற பி.ஜே.பி. கையாளும் வித்தைகளும்,சட்டமீறல்களும்!

காங்கிரஸ், இமாச்சலப் பிரதேசத்தில் பெற்ற வெற்றியை அப்படியே புறந்தள்ளி, இடைத்தேர்தலில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ஏற்பட்ட தோல்விகளை மறைத்துவிட்டு, வித்தைகளைப் புரிந்துகொண்டு, குஜராத் வெற்றி என்ற போர்வையை மட்டுமே போர்த்திக்கொண்டு வருகிறார்கள்.

இந்திய மாநிலங்களின் பலவற்றிலும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆட்சிகளே என்பதுகூட ஒரு திட்டமிட்ட மாயையான பிரச்சாரம்தான்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், ஆட்சி அமைக் கும் வாய்ப்பை 8, 9 மாநிலங்களில் எப்படி பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பெற்றது? குதிரைப் பேரங்கள், ஆட்சிக் கவிழ்ப்புகள், ஆளுநர்களைப் பயன்படுத்தி நடத்திய வித்தைகள் - இவற்றின்மூலம்தானே மாநில ஆட்சிகள் பா.ஜ.க.விற்குக் கிடைத்துள்ளன!

நேரிய ஜனநாயக வழியில் - மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைத்தது இல்லையே!

பண பலம், பத்திரிகை பலம் மட்டுமா? தேர்தல் ஆணையர்கள் நியமனம்பற்றி உச்சநீதிமன்றமே சுட்டிக் காட்டி, குட்டு வைப்பது எதனைக் காட்டுகிறது!

2024 இல் இதனை சரிகட்ட, மேலும் பல அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளைக் கையாள பா.ஜ.க. மூலம் ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது!

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை - வரலாறு மன்னிக்காது!

எதிர்க்கட்சிகள் ஒற்றுமையின்மை அல்லது அவர் களைப் பிரித்தாளும் வித்தைகள்தான் இப்போது ஆர்.எஸ்.எஸின் மூலபலம்! மக்கள் பலம் அல்ல!! அல்லவே அல்ல!!!

இவர்களின் தந்திரங்களை மக்கள் புரிந்துகொண்டு, ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வை அகற்றுவதற்கு தயாராகி விட்டனர்.எதிர்க்கட்சித் தலைவர்கள் தயாராகிவிட் டனரா? என்பதே ஜனநாயக காப்பாளர்களின் முக்கிய கேள்வியாகும்!

எதிர்க்கட்சித் தலைவர்கள், மக்களின் எதிர்ப்பு, உச்சநீதிமன்றம் போன்றவை சுட்டிக்காட்டலை மக்களிடம் எடுத்துச் செல்லும் கடமை - இவற்றிலிருந்து தவறிவிடக் கூடாது!

சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம், நாளும் காணாமற் போகிறது; பெருத்த மெஜாரிட்டிமூலம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி குரல்களே வெளியே வர வாய்ப்பற்ற சூழல் இவற்றிற்கு விடை கண்டு விடியல் தேட வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர்களின் ஒற்றுமை இதில் முக்கியம்.

இன்றேல், வரலாறும், நமது எதிர்க்கட்சித் தலை வர்களை ஒருபோதும் மன்னிக்காது!

பொது எதிரி, கொள்கை எதிரி யார் என்பதை எதிர்க்கட்சிகள் உணர்ந்து செயல்படவேண்டும்!

பொது எதிரி - கொள்கை எதிரி யார்? ஜனநாயகம் காக்கப்படவேண்டிய அவசரத் தேவை - இவை மட்டும்தான் இலக்காகத் தெரியவேண்டுமே தவிர, பிரதமர் நாற்காலி அல்ல என்ற தெளிவுடன் தங்களது பிரச்சார உத்திகளை, கொள்கைகளை எதிர்க்கட்சித் தலைவர்கள் அமைத்துக் கொள்ளல் அவசரம், அவசியமாகும்!!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

9.12.2022

No comments:

Post a Comment